Search This Blog

12.9.09

அரசியலில் அதிகாரிகளும் சினிமா கலைஞர்களும்
ஓய்வுக்குப் பின் அதிகாரிகள் பலர் சில அரசியல் கட்சிகளில் நுழைகிறார்கள். சினிமாக்காரர்களும் அரசியலில் ஆவேசமாக நுழைந்து கொண்டிருக்கிறார்கள். இதன் பின்னணி என்ன? பொதுமக்களுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்ற ஆவேசமா? அல்லது குறுக்கு வழியில் அதிகார பதவிப் பீடத்தில் அமரவேண்டும் என்ற தந்திரமா? என்பதுதான் மக்கள்முன் உள்ள கேள்வியாகும்.

தொண்டு செய்யவேண்டும் என்பதுதான் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் நோக்கம் என்றால், அதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. அவர்களின் பழுத்த அனுபவங்கள் அவர்களுக்கு அந்த வகையில் பெரும் உதவியாக இருக்கக் கூடும்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் போதுமான வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. அதிலும் குறிப்பாகக் கிராமப் பகுதிகளில் இதன் அவசியம் அதிகமாகவே இருக்கிறது. ஓய்வு பெற்ற அதிகாரிகள் கிராமப் பகுதிகளை மய்யமிட்டு, கல்வி, வேலை வாய்ப்பு இவைகளில் வழிகாட்டலாம்.

மத்திய, மாநில அரசுகள் கிராமங்களை மய்யமிட்டுத் தொடங்க வாய்ப்புள்ள பல திட்டங்களைப் பெற்றுத் தருவதில் வழிகாட்டியாக இருக்கலாம்.

ஊராட்சி ஒன்றியங்கள் வாயிலாக ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் பலன் அடையும் திட்டங்கள், உதவித் தொகைகள் பெறுவது போன்றவற்றில் போதிய வழிகாட்டுதல்கள் இல்லாமல், அந்தப் பலன்களைப் பெற வாய்ப்பு அற்றவர்களாக அம்மக்கள் இருந்துவருகிறார்கள்.

கிராமங்களிலிருந்து படித்து கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் இருபால் மாணவர்களுக்கும் வங்கிகள்மூலம் கடன் உதவி பெறுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். தொண்டு செய்வது என்ற நல்லெண்ணம் இவர்களுக்கு இருக்குமேயானால், கண்டிப்பாக பல்வேறு வழிமுறைகள் இருக்கினறன.

ஆனால், பெரும்பாலும் இவர்களுக்கு அந்த எண்ணம் இருப்பதில்லை. பெரிய அதிகாரிகள் ஒரு கட்சியில் சேரும்போது அக்கட்சியில் வரவேற்பு இருக்கத்தான் செய்யும். கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சியில் ஊடுருவி ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டால் தேர்தலில் நின்று வெற்றி பெற்று அதற்கடுத்த பதவியை அடையலாம் என்கிற குறுக்குப் பாதையாகத்தான் அரசியலை இவர்கள் கருதுகிறார்கள்.

நடைமுறையில் பார்க்கப் போனால் இதில் இவர்கள் தோல்வி அடைவது பெரும்பாலும் உண்மையாகும். காரணம், அதிகாரிகள் என்ற பெரிய இடத்தில் இருந்தவர்கள். சாதாரண மக்கள் மத்தியிலே இறங்கி வந்து பழகுவதற்கும், பிரச்சினைகளில் தங்கு தடையின்றி ஈடுபடுவதற்கும் அவர்களால் முடிவதில்லை. காரணம் அவர்களின் கடந்தகால உத்தியோக அந்தஸ்தும் சுற்றுச்சார்பும் அத்தகையது.

அதுபோலவே, சினிமாக்காரர்களின் அரசியல் பிரவேசம் என்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. ஒரு வகையில் தமிழ்நாடு இதற்கு முன்னுதாரணமாக இருக்கிறது என்றே கருதவேண்டும்.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராகும் வாய்ப்பு தமிழ்நாட்டில் இருந்ததால், அவரை முன்மாதிரியாகக் கொண்டு நடிகர்கள் பலரும் எச்சில் ஊறி நிற்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். ஒன்றும் திடீரென முதலமைச்சர் ஆகிவிடவில்லை. தி.மு.க.வில் இருந்து திரைப்படங்களில் தி.மு.க. கொடியைக் காட்டி அதன்மூலம் மக்களிடம் ஊடுருவினார். பிற்காலத்தில் தி.மு.க.வின் பொருளாளர் என்கிற அளவுக்குப் பொறுப்பும் வகித்தவர். அதையெல்லாம் மறந்துவிட்டு, சினிமாமூலம் கிடைக்கும் விளம்பரம், ஈர்ப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டு முதலமைச்சர் நாற்காலியில் ஓடிப் போய் உட்கார்ந்துவிடலாம் என்கிற நப்பாசைதான் பெரும்பாலோருக்கும்.

தமிழ்நாட்டில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மிகச் சிறந்த நடிகர்தான். அவரால் அரசியலில் பிரகாசிக்க முடியாமைக்கு என்ன காரணம் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கும் பொறுமை அரசியலில் கணக்குப் போட்டு நுழையப் பார்க்கும் நடிகர்களுக்குத் தேவைப்படுகிறது.

தேர்தலில் நின்று மக்களிடம் வாக்குப் பெற முடியாவிட்டால், மாநிலங்களவை உறுப்பினர் பதவியாவது கிடைக்காதா என்கிற எதிர்ப்பார்ப்பும் பெரும்பாலோரிடம் இருக்கிறது. இத்தகையவர்களிடத்தில் கட்சித் தலைவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும்.

கட்சிக்காக இராப் பகலாக உழைக்கும் எண்ணற்ற தோழர்கள் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கிறார்கள். கடைசிவரை அவர்கள் கொடிகட்டிக் கொண்டுதான் இருக்கவேண்டுமா? பளபளப்பாக நேற்று அரசியலில் திடீரென்று நுழைந்தவர்கள் இன்று பதவி ஏணியில் மேலே செல்லும் நிலையை அனுமதித்தால், நாளடைவில் எந்தக் கட்சிக்கும் தொண்டர்கள் கிடைக்கமாட்டார்கள், எச்சரிக்கை!

--------------------"விடுதலை" 11-9-2009

3 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கிராமங்களை மய்யமிட்டுத் தொடங்க வாய்ப்புள்ள பல திட்டங்களைப் பெற்றுத் தருவதில் வழிகாட்டியாக இருக்கலாம்.//

ஒரு கிராமம் , இரண்டு கிராமம் அல்லது ஒரு ஒன்றியம் மட்டும்தானே முடியும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தொண்டு செய்வது என்ற நல்லெண்ணம் இவர்களுக்கு இருக்குமேயானால், கண்டிப்பாக பல்வேறு வழிமுறைகள் இருக்கினறன.//

நீங்கள் நினைக்கும் அனைத்து வழிகளையும் ஒருங்கினைத்து செயல்படுத்த சிறந்த இடம் அரசியல்தானே ஐயா!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சினிமாக்காரர்களின் அரசியல் பிரவேசம் //

சங்க காலம் முதற்கொண்டு பல ஆட்சி மாற்றங்களில் புலவர்களும் நாடகக் காரர்களும் பெரும் பங்காற்றி இருக்கிறார்கள் ஐயா!