Search This Blog

30.9.09

பார்ப்பனரல்லாதாருக்கு பெரியார் அழைப்பு

பிராமணரல்லாதாருக்கு ஈ.வெ.ரா. அழைப்பு

காஞ்சிபுரம் தமிழர் மாநாடுகள்

காஞ்சிபுரத்தில் 21-ஆவது ராஜீய மகாநாடு நாளது நவம்பர் மாதம் 21, 22 ஆம் தேதி-களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை நவசக்தி ஆசிரியர் ஸ்ரீமான். திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் அக்ராசனத்தின் கீழ் கூடும்.

அது சமயம் சர்வகட்சியார்களுமடங்கிய பிராமணரல்லாதார் மகாநாடொன்றும் கூடும்.

பிராமணரல்லாதார் முன்னேற்றத்தில் கரிசனமுள்ள தமிழ் நாட்டுப் பிராமணரல்லாதார் அனைவரும் வந்திருந்து, தங்களது முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தைக் காணவும், அதைச் சரிவர அமலுக்குக் கொண்டு வரவும் ஏற்பாடு செய்ய வேணுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இது விஷயத்தில் ஒவ்வொருவரும் தங்கள் ராஜீய அபிப்பிராய பேதங் காரணமாகவாவது, சொந்த அசவுகரியங் காரணமாகவாவது அலட்சியமாய் இருந்துவிடாமல் கண்டிப்பாய் வர வேண்டுமாய் மறுபடியும் வினயத்துடன் கேட்டுக் கொள்கிறேன்.

தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடனாகும். ஏனெனில், தீண்டாதார்களின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் பிராமணரல்லாதார் கடைத்தேற முடியும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் நாடு சுயராஜ்யமடையும். ஆதலால், தீண்டாமை விலக்கிக் கவலையுள்ளவர்களும், தீண்டாதாரென்று சொல்லப்படுபவரும் அவசியம் காஞ்சிபுரத்திற்கு வந்து அதற்கென்று ஓர் மகாநாடு கூட்டி காரியத்தில் பலன் தரத்தக்க திட்டங்களைக் காண வேண்டுமாயும் கேட்டுக் கொள்கிறேன்.

ஈ.வெ. ராமசாமி, ஈரோடு
15.11.1925

வெளியேறினார் ஈ.வெ.ரா.,

தேசிய முன்னேற்றத்திற்கு இந்து சமூகத்தாருக்குள் பற்பல ஜாதியாருக்குள்ளும் பாஸ்பர நம்பிக்கையும் துவேஷமின்மையும், ஏற்பட வேண்டுமாகையால் ராஜிய சபைகளிலும் பொது ஸ்தாபனங்களிலும் பிராமணர், பிராமணரல்லாதார், தீண்டாதார், எனக் கருதப்படும் இம்மூன்று பிரிவினருக்கும் தனித்தனியாக ஜனத்தொகை விழுக்காடு தங்கள் தங்கள் சமூகத்தில் இருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை ஏற்படுத்த வேண்டும் என்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

பிரேரேபிப்பவர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர், ஆமோதிப்பவர் எஸ். ராமநாதன் என்பதையும் தேசிய ஒற்றுமையையும் பற்பல சமூகத்தாரின் நன்மைகளையும் உத்தேசித்து கான்பூர் காங்கிரசில் சட்டசபை தேர்தல்களை காங்கிரஸ் நடத்தும்படி தீர்மானித்த பிறகு, நமது மாகாணத்தில் அத்தேர்தல்களை நடத்தும் பொருட்டு, ஓர் தேர்ந்தெடுக்கும் கமிட்டியை நியமித்து நடத்தி வைப்பது அவசியமாகும் என்று, இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

பிரேரேபிப்பவர் பி. வரதராஜுலு நாயுடு என்பதையும் வாசித்துக் காட்டி சுயராஜ்யக் கட்சியார் தேர்தல்களை நடத்தப் போவதால் இவ்விரண்டு தீர்மானங்களுக்கும் அர்த்தமில்லை என்று சொல்லி இவைகளைதான் ஒழுங்கு தவறானதென்று தீர்மானித்து விட்டதால் இவைகளை பிரேரேபிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஸ்ரீமான், ராமசாமி நாயக்கர் எழுந்து கொஞ்ச நேரத்திற்கு முன்புதானே 25 பேர் பிரதிநிதிகள் கையெழுத்து போட்டால் பிரேரேபிக்கலாம் என்று சொன்னீர்கள்; அதையும் ஒப்புக் கொண்டு 30 பிரதிநிதிகள் கையெழுத்தும் வாங்கிக் கொடுத்தேன். இப்பொழுது திடீரென்று சில பிராமணர்கள் வார்த்தையைக் கேட்டு இப்படி சொல்லுகிறீர்களே, இது என்ன நியாயம் என்று கேட்டார். (இந்த சமயம் சில பிராமணர்கள் உட்கார் உட்கார் என்று கத்தினார்கள்)

நாயக்கர் அவர்களைப் பார்த்து இப்போது தனக்கும் அக்கிராசனாதிபதிக்கும் தான் தப்பு என்று நினைக்கிற ஒரு விஷயத்தின்பேரில் பேச்சு வார்த்தை நடக்கிறதென்றும் மற்றவர்கள் இதில் பிரவேசிக்கவோ கத்தவோ கூடாது என்றும் கூறி அயோக்கியத்தனமாகவாவது அதிகப் பிரசங்கித் தனமாகவாவது யாராவது கத்துவீர்களானால் அவரவர்களுக்குத் தகுந்த புத்தி கற்பிக்க தன்னால் கூடுமென்றும் யார் யாருக்கு தன்னுடைய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள ஆசையிருக்கிறதோ அவர்கள் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டுமென்றும் அக்கிராசனர் தன்னை உட்காரும்படி சொன்னாலாவது வெளியிடம் போகும்படி சொன்னாலாவது தான் உட்காரவோ வெளியில் போகவோ தயாராயிருப்பதாகவும், அய்யங்கார்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு நீங்கள் கத்துவதாலோ கலவரம் செய்வதாலோ ஒரு காரியமும் சாதித்து கொள்ள முடியாது என்றும், கொஞ்சம் ஜாக்கிரதையாய்த்தானே இருங்கள் என்றும் சொல்லி விட்டு அக்கிராசனரைப் பார்த்து என்ன முடிவு சொல்லுகிறீர்கள் என்றும் கேட்டார்.

அக்கிராசனர் ஸ்ரீமான், கல்யாணசுந்தர முதலியார் பதிலளிக்கையில் கையெழுத்து வாங்கி-வரும்படி சொன்ன சந்தர்ப்பத்தில் இருந்த நிலைவேறு; இப்போதைய நிலை வேறு என்றார்.

நாயக்கர் ஒரு மணி நேரத்திற்கு முன்புதானே தாங்கள் கையெழுத்து வாங்கிவரும்படி சொன்னீர்கள். அதற்குள் நிலைமை ஒன்றும் மாறவில்லையே. அய்யங்காருக்கு பயந்து அவருக்கு நீங்கள் அடிமையாய் விட்டதைத்தவிர வேறில்லையே. நீங்கள்கூட இப்படிச் செய்யலாமா? என்று சொன்னார்.

ஸ்ரீமான் முதலியார் நான் யார் சொற்படியும் கேட்கவில்லை. தேச நன்மையை உத்தேசித்து என் மனதில் தோன்றியதை சொல்லுகிறேன் என்று சொன்னார்.

நாயக்கர் நீங்கள் அய்யங்கார் பேச்சைக் கேட்டாலும் சரி, பிராமணர்கள் உங்களை தங்கப் பல்லக்கில் வைத்து, வைரத்தால் கீரிடம் சாத்தி தூக்கிக் கொண்டு சுமந்தாலும் சரி எனக்கு அக்கரையில்லை. உங்கள் யோக்கியதையை சபையோர் அறியவேண்டுமென்பதுதான் என் ஆசை. மற்றபடி இந்தக் கூட்டத்தில் தீர்மானமாகிவிட்டால்தான் பிராமணரல்லாதாருக்கு நன்மை ஏற்படுமென்றாவது இல்லாவிட்டால் ஏற்படாதென்றாவது நான் பயப்படவில்லை.

ஸ்ரீமான் முதலியார்: நான்சொல்வது சரிதானா இல்லையா என்பதை ஸ்ரீமான். வரதராஜுலு நாயுடுவைக் கேளுங்கள் என்று ஸ்ரீமான் நாயுடுவைப் பார்த்து நான் செய்வது சரிதானே என்று கேட்டார்.

ஸ்ரீமான். நாயுடு சரி என்று சொன்னார் (எல்லோரும் சிரித்தார்கள்)

ஸ்ரீமான். நாயக்கர்:- ஸ்ரீமான் நாயுடுவைக் கேட்பானேன். அவரைவிட ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரையே கேளுங்களேன். அவர்தான் உங்களை இப்போது நடத்துகிறார். அடியோடே சரி என்று சொல்லிவிடுவாரே என்று சொல்லி பொதுஜனங்களைப் பார்த்து, நீங்களே இவர்கள் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிக் கூட்டத்திற்கு வெளியில் வந்து விட்டார். கூடவே ஸ்ரீமான்கள், சர்க்கரைச் செட்டியார், எஸ். ராமநாதன், ஆரியா, மேனன் மற்றும் பலரும் புறப்பட்டு விட்டார்கள்.

(குடிஅரசு, 29.11.1925)

0 comments: