Search This Blog

9.9.09

பெரியார் படத்துக்கு விருது அந்த விருதுக்கே - ஒரு சிறப்பு




முரசொலியின் படப்பிடிப்பு!
விருதுக்கே ஒரு சிறப்பு விருதளித்த பெருமைக்குரிய அறிவிப்பு!


மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில் நடந்த - 2007 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதிலே, மூன்று விருதுகள் தமிழ் மொழித் திரைப்படங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது என்பது பெருமைக்குரியதாகும்.

அனைத்துக்கும் மேலாக, சிகரம் வைத்ததுபோல மாநில மொழிகளில் எடுக்கப்பட்ட சிறந்த படம் என்று பெரியார் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

2007 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த படம் என்று பெரியார் திரைப்படத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என்றாலும், பெரியார் 2007 ஆம் ஆண்டுக்குரிய சிறந்த திரைப்படம் மட்டும்தானா?

ஆட்டன்பரோவின் காந்தி திரைப்படம் வெளிவந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. ஆனால் அப்படம் எப்போதும் இப்போதும் திரையிடப்படும் நாடுகளில் எல்லாம், 1948 இல் கொடியவன் கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான அண்ணல் காந்தியடிகள் உயிரோடு உலவுவது போல, எல்லோரையும் பிரமிப்பிலும், வியப்பிலும் ஆழ்த்தியபடிதான் இருக்கிறது.

இயக்குநர் ஞானசேகரனின் கைவண்ணத்தில் பாரதிக்கு அடுத்து வெளிவந்த பெரியார் படம், முதல்வர் கலைஞரின் அரிய ஆலோசனைகள் நிதியுதவியுடன் திராவிடர் கழகத் தலைவர் - ஆசிரியர் வீரமணியின் அளப்பரிய முயற்சியால் உருவான படம்.

இனமுரசு சத்யராஜ், அய்யாவே மீண்டும் எழுந்து வந்துவிட்டாரோ என்று எல்லோரும் பாராட்டும்படியாக, பெரியாராகவே வாழ்ந்து காட்டினர்; சிவாஜி வேடம் ஏற்று அசத்திக் காட்டிய வி.சி.கணேசனை சிவாஜி என்ற பட்டம் அளித்துப் பாராட்டிய தந்தை பெரியார், இப்போது சத்யராஜின் பெரியார் வேடத்தை நேரில் பார்த்திருப்பாரானால், எப்படி உள்ளம் மகிழ்ந்திருப்பார்; எப்படியெல்லாம் சத்யராஜைப் பாராட்டியிருப்பார்; பட்டம் சூட்டியிருப்பார் என்கிற அளவுக்கு பெரியாராகவே வாழ்ந்து காட்டியிருக்கும் பெரியார் 2007 ஆம் ஆண்டில் மட்டுமல்ல, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சாகாவரம் பெற்ற என்கிறார்களே, அது போல, திரைப்படங்களில் ஒரு தாஜ்மகாலாக, கோகிநூர் வைரமாக - சரியாகச் சொல்வதானால் ஒரு தந்தை பெரியாராகவே, வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மக்கள் மத்தியில் போற்றுதலுக்கும் புகழ்வதற்கும் உரியதாக காலத்தை வென்று நிற்கும் கலைச் செல்வம் ஆகும்.

பெரியார் படத்துக்கு விருது வழங்கியிருப்பது அந்த விருதுக்கே - ஒரு சிறப்பு விருது வழங்கிப் பெருமை சேர்த்திருப்பதாக அமைந்துள்ளது. தமிழ் கூறு நல்லுலகினர் அனைவரும் மகிழ்ந்து பாராட்டத் தக்கதாகும்!

நன்றி: முரசொலி, 9.9.2009

0 comments: