Search This Blog

4.9.09

இந்தித் திணிப்பை எதிர்த்து ராஜ்யசபையில் அறிஞர் அண்ணா முழக்கம் (2)


ஒற்றுமையாக இருக்கவேண்டுமா? ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமா? இந்தித் திணிப்பை எதிர்த்து ராஜ்யசபையில் அறிஞர் அண்ணா முழக்கம் (2)

தமிழ் இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக வரும் வரை மனநிறைவு ஏற்படாது
நமது உள்துறை அமைச்சர் அன்று பேசியபோது நான் ஓர் இந்திக்காரன் அல்லன். எனது தாய் மொழி பஞ்சாபி. பின்னர், குஜராத் மொழியை நான் எனது மொழியாக ஏற்றுக் கொண்டேன். நான் இப்போது இந்திக்கு மாறியிருக்கிறேன் என்று கூறினார். எங்களுக்கு அத்தகைய அனுபவங்கள் இல்லை. ஒரு தாய் மொழி கொண்ட நீங்கள், இரண்டாவது ஒரு மாற்று மொழியை ஏற்றுக் கொள்வதும், மூன்றாவதாக ஒரு மொழிக்காக வாதாடுவதும் உங்களுக்கு வேண்டுமானால் ஒரு நல்ல அனுபவமாக இருக்கலாம். உங்கள் நங்கூரங்களிலிருந்து வெட்டி விடப்பட்டதாக நீங்களே கூறியுள்ளீர்கள். ஆனால், நல்வாய்ப்பாக, எங்கள் நங்கூரங்களிலிருந்து நாங்கள் வெட்டி விடப் படவில்லை. வளமை மிகுந்த பழைமையான தமிழ் என்னும் மொழியைப் பெற்றிருக்கிறேன் என்பதை என்னால் என்றும் மறந்துவிட முடியாது. எனது முன்னோர்கள் பேசிய அந்த தமிழ் மொழி, எமது கவிஞர்களும் புலவர்களும் எண்ணற்ற கவிதைகள், பாடல்கள் இயற்றிய அந்தத் தமிழ் மொழி, பயின்று முடிக்க இயலாத கலை, இலக்கிய அறிவுக் கருவூலங்களைக் கொண்டு விளங்கும் அந்தத் தமிழ் மொழி, இந்திய நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்று என்ற அதற்குரிய இடத்தைப் பெறுகிற வரை என்னால் மனநிறைவு கொண்டவனாக இருக்கவே முடியாது. இந்தியை இந்த அளவுக்கு வறுமை நிலையில் வைத்திருக்கக் கூடாது.

என்.பத்ரா (ஒரிசா): பின் ஏன் ஆங்கிலத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறீர்கள்?

தமிழுக்காக நான்வாதாடும்போது, இந்திக்காக வாதாடும் எனது நண்பர் வாஜ்பேயி பெற்றுள்ள உரிமையை நான் பறிக்கவில்லை; மறுக்கவில்லை. இங்கு அவர் ஆற்றிய இந்தி பேச்சுகளை நான் கேட்டிருக்கிறேன். அவரது பேச்சில் குறைந்த எண்ணிக்கையிலான ஆங்கிலச் சொற்களே இருந்ததையும் நான் கவனித்திருக்கிறேன். மற்றவர்களின் பேச்சில் இந்தி சொற்கள் தாராளமாக தெளிக்கப்பட்டிருந்தன.

இது அல்ல இந்தி. நான் இந்திக்கு வாதாடுவேனேயானால், இந்தியை இந்த அளவுக்கு வறுமை படைத்ததாக என்னால் வைத்திருக்க முடியாது. எனவே இந்தியைப் பற்றி ஆர்வம் கொண்டவர்களாக இருங்கள். எனது நண்பர் திரு நந்தா ஆர்வம் கொண்டவராக இருக்கமுடியாது. அவர் எஸ்பிரண்டோ மொழியை தேர்ந்தெடுப்பார். (முக்கிய அய்ரோப்பிய மொழிகளில் இருந்து, எளிய இலக்கணம் மற்றும் உச்சரிப்புடன், சர்வதேச தகவல் பரிமாற்றத்திற்காக 1887 இல் உருவாக்கப்பட்ட செயற்கை மொழி எஸ்பிரண்டோ மொழி.)
ஆனால் நமது சொந்த மொழி என்று ஒன்றை நாம் பெற்றிருக்கிறோம். எனவே, அந்த மொழி நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இடம் பெறவேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். அதுவரை, ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும். அப்போதுதான் நோக்கமற்ற அல்லது நோக்கத்துடன் கூடிய அநீதி இழைக்கப்படாமல் தடுக்கப்படும். நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும், மக்களின் மனதில் நியாயமான அச்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் வெகு எளிதாக இந்தியைக் கற்றுக் கொள்ள முடியும். இந்தி எழுத்துகளைக் கற்றுக் கொண்டு இந்தி சொற்களை தட்டுத் தடுமாறி பேசும் எனது பேரன்கள், பேத்திகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து காணும்படி இந்த மதிப்பு மிகுந்த அவையினரைக் கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் மொழியை நாங்கள் கற்றுக் கொண்டு சமமற்ற முறையில் உங்களுடன் போட்டி போட வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்?


இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் குழந்தைகள், தங்களின் பெற்றோரிடமிருந்து எளிதாக இந்தி மொழிப் பாடல்களை மனப்பாடமாகக் கற்றுக் கொள்வர். உங்கள் வயல்களில், தொழிற்சாலைகளில், உங்கள் வீடுகளில், குடிசைகளில் என்று ஒவ்வொரு தொழிலிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், ஆயிரம் வழிகளில் நீங்கள் இந்தியைக் கற்றுக் கொள்வீர்கள். புத்தகங்களைப் படித்து இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவை உங்களுக்கு இல்லை. அங்கு பிறந்ததினாலேயே நீங்கள் இந்தியைக் கற்றுக் கொள்கிறீர்கள். பாரம்பரியமான உங்கள் மொழியை கற்றுக்கொண்டு அதில் சமமற்ற முறையில் உங்களுடன் நாங்கள் போட்டி போட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இத்தகைய போட்டிகளை ரோமானியர்கள்தான் நடத்துவார்கள். கொடிய வனவிலங்குகளுடன் ஆயுதம் ஏதுமின்றி போர் புரிய வீரர்களை அரசர்கள் பணிப்பார்கள். எனது அருமை நண்பர் சத்யநாராயணா போன்ற சிலர் அவ்வாறு போரிடவும் செய்தனர். ஆனால் மற்ற வீரர்களை அந்த விலங்குகள் கிழித்துப் போட்டன. இவ்வாறு நடத்தப்படுவதற்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் மீது உங்கள் மொழியைத் திணித்து, அதனை நாங்கள் கற்றுக் கொண்டு உங்களுடன் அதில் போட்டியிட வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்?

இதில்தான் அநீதியே அடங்கியிருக்கிறது. அமைதியாக சிந்தித்துப் பார்த்தால் இந்தியை ஆதரிப்பவர்களே இத்தகைய அநீதியைச் செயல்படுத்தத் துணியமாட்டார்கள். அதனால் நாம் நியாயமாக, நேர்மையாக, நண்பர்களாக நடந்து கொள்வோம். அனைத்துக்கும் மேலாக நாம் ஜனநாயகப் பண்போடு விளங்குவோம்.

திரு. சி.சுப்பிரமணியமும், திரு.ஓ.வி. அழகேசனும்
தமிழ்நாட்டு மானத்தைக் காத்தனர்


தமிழ்நாட்டுத் தலைவர்களின் அறிக்கைகளின் நோக்கத்தைப் பற்றி கேள்வி எழுப்பும் அளவுக்கு இந்தியை ஆதரிப்போரின் உணர்வுகள் சென்றுள்ளன என்பதை நாளேடுகளில் இருந்து நானறிந்தேன். அண்ணாதுரை மட்டுமல்ல, இந்தியை எதிர்ப்பதால் காமராஜரையும் சிறையில் போடவேண்டும் என்று சிலர் கூறியதாக செய்தித் தாள்களில் நான் பார்த்தேன். இப்பிரச்சினைக்காக தங்களது அமைச்சர் பதவிகளைத் துறக்க முன்வந்த திருவாளர்கள் சி.சுப்பிரமணியம் மற்றும் ஓ.வி. அழகேசன் பற்றி தரக்குறைவான கருத்துகளை வேறு சிலர் வெளியிட்டுள்ளனர். நெருக்கடி நிறைந்த இக்காலக் கட்டத்தில் அவர்களின் பதவி விலகல் எத்தகைய நம்பிக்கையை எங்கள் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்; அதை கற்பனை செய்தும் உங்களால் காணமுடியாது. தமிழ்நாட்டுக் காங்கிரசின் பெயரை முழுவதுமாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது எவராவது காப்பாற்றினார்கள் என்றால், அவர்கள் திரு.சுப்பிரமணியமும், திரு.அழகேசனும்தான். அவர்கள் மீது எனக்கு பெருத்த அன்போ, பாசமோ கிடையாது. பலமுறை அவர்களுடன் நான் மோதி இருக்கிறேன். அவர்களும் பல முறை என்னை இடுப்புக்குக் கீழே உதைத்திருக்கிறார்கள். நான் என்ன கூற விரும்புகிறேன் என்றால், சரியான சந்தர்ப்பத்தில் அவர்கள் மேற்கொண்ட இந்த பெருந்தன்மையான செயல் எங்கள் மக்களின் உணர்வுகளை சாந்தப்படுத்தி உள்ளது. அசாமி மொழிப் போராட்டத்தின்போது, நாள்தோறும் ஒரு பக்கம் போராட்டம் நடந்து கொண்டும், மற்றொரு பக்கம் அமைதிக் குழுவினர் கிராமம் கிராமமாகச் சென்று வன்முறையைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டும் இருந்ததை நான் அறிந்தேன்.

கல்மனம் படைத்த பக்தவத்சலம்

சென்னை மாநில முதலமைச்சர் ஏன் எங்களை நம்பவில்லை? அதற்காக மத்திய உள்துறை அமைச்சர் நந்தா அவருக்கு ஒரு பாராட்டு வழங்கினார் அவர் ஒரு பாறை போல நின்றார் என்று பாராட்டினர். உண்மைதான், திரு. பக்தவத்சலம் உண்மையில் ஒரு கற்பாறை போலத்தான், ஆடாமல், அசையாமல், எந்த உணர்ச்சியும் இன்றி நின்றார். அவரைச் சுற்றி இருந்தவர்களெல்லாம் அழுது கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தபோதும், இறந்து போன தங்கள் கணவருக்காக விதவைகள் அழுது கொண்டிருந்த போதும், சுடப்பட்டு மடிந்த தங்களின் மகன்களுக்காக தாய்மார்கள் அழுது கொண்டிருந்த போதும், அவர் கல்லாகத்தான் நின்று கொண்டிருந்தார். இத்தகைய கல்மனம் கொண்ட மனிதர்தான் உங்களுக்குத் தேவையா? அவரை விட சிறந்த மனிதர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர் பாறை போல நின்றார் என்று நீங்கள் கூறும்போது, உங்கள் தத்துவத்தின் மீதே எனக்கு சந்தேகம் வருகிறது. நீங்கள் கருணை நிறைந்த மனத்தினர் என்று எனக்குக் கூறப்பட்டுள்ளது. சாதுக்கள், சன்னியாசிகளின் கூட்டத்துடனேயே எப்போதும் நீங்கள் இருப்பதாக எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய கல்வியறிவும், பயிற்சியும் பெற்ற நீங்கள், 7 வயது சிறுமி, 8வயது சிறுவன், 80 வயது முதியவர் என்று வேறுபாடின்றி 50 பேருக்கு மேல் சென்னை தெருக்களில் சுட்டுக் கொல்லப்பட காரணமாக இருந்த கல்மனம் கொண்ட ஒரு முதல் அமைச்சரைப் புகழ்கிறீர்கள் என்றால், நீங்கள்தான் பக்தவத்சலத்தை விட படுமோசமான கல்மனம் கொண்டவர் என்று கூறுவதைத் தவிர வேறு என்ன கூறமுடியும்? தமிழ்நாட்டில் இவ்வாறு சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டுள்ளது என்று மத்திய அரசு எண்ணிக் கொள்ளவேண்டாம். ஆனால் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படவேண்டும் என்பதையும், வன்முறை தடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஆதரிப்பவன் நான். ஆனால் நாம் இந்த மொழிப் பிரச்சினையை மறுபடியும் பரிசீலனை செய்து, நமதுதேசியமொழிகள் அனைத்தும் ஆட்சி மொழியாக ஆகத் தகுதி பெறும் வரையிலும் ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்ற ஒரு தீர்வை நாம் காண்போம். அவ்வாறு பலமொழிகள் ஆட்சி மொழிகளாக இருக்கும்போது, இயல்பாகவே அவற்றில் ஒரு மொழி இணைப்பு மொழி என்ற இடத்தைப் பெறும்.


(நிறைவு)

------------------------திரு. எஸ். ராமச்சந்திரன் அவர்கள் தொகுத்த அண்ணாவின் ராஜ்யசபை பேச்சுகள் என்ற ஆங்கில நூலிலிருந்து தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

2 comments:

AJAX said...

நீங்கள் எல்லாம் ஹிந்தி -ஐ ஒழித்து விட்டீர்கள் .
என்னை போல் IT துறையில் வேலை செய்வோர் படும் பாடு உங்களுக்கு தெரியுமா... சுமார் 50000 தமிழர்கள் வேலை செய்கிறோம்

ஹைதராபாத் , புனே ,எல்லா இடத்துலயும் எல்லாரும் (மலையாளி ,தெலுகு ) ஹிந்தி பேசுகிறார்கள்.. மலையாளி ,தெலுகு எல்லாரும் அவர்களுக்குள் ஹிந்தி -இல் பேசுகிறார்கள்... தமிழன் மட்டும் முழிக்குறான்..

ஹிந்தி எதிர்த்தவன் பேரன் எல்லாம் டெல்லி- இல் ஹிந்தி பேசி அமைச்சர் ஆகுறான் ....
கடைசியில் நாங்கள் முட்டாளாய் போனது தான் மிச்சம்..
ஹிந்தி கட்டாயம் எல்லோரும் படிக்க வேண்டும்.
கிணற்று தவளை வேலைக்கு ஆவாது..

தமிழ் ஓவியா said...

//ஹிந்தி கட்டாயம் எல்லோரும் படிக்க வேண்டும்.//
உங்களைப் போன்றவர்களுக்கு தேவையிருப்பின் படித்துக் கொள்ளலாம்.
எங்கோ வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும் எனது சகோதரனுக்கு இந்தி எதற்கு?

இந்தியை விரும்பிப் படிப்பது என்பது வேறு. திணிப்பது என்பது வேறு.

குழப்பிக் கொள்ளாதீர்கள் நண்பரே.