Search This Blog

21.9.09

பெரியாரின் அருந்தொண்டு

இந்த வருஷ முதலில், சென்னை சுயமரியாதை மகாநாடு, பச்சையப்பன் கல்லூரியில் கூடிற்று. அதைத் திறக்கும் பாக்கியத்தை எனக்கு அளித்தீர்கள்.

... முதன்முதலில், சமதர்ம பிரசுரங்களில், முதன்மையான சிறு புத்தகமென்று சுயராஜ்யம் யாருக்கு என மகுடமிட்டு வெளிவந்தது. முதன்முதலில், சென்னையில், மரியாதையோரின் வீரமொழிகள் நாளும் அம்மகாநாட்டில் நடந்தேறிய வைபவங்களை, நமது நகர தினசரி பத்திரிகைகளும் பொழிந்து வந்தன. அக்கூட்டம் இனிது கூடி, இனிதாகவே முடிவு பெற்றது.

நமது தென்னாட்டிற்குப் பிரதம நகரமாகிய சென்னையில் அன்று முதல் உங்கள் இயக்கம் வேரூன்றி வளர்ந்து வருவதைக் காணலாம்.

அந்த மகாநாட்டில், நான் கண்ட விசேஷம் ஒன்றை உங்களுக்குத் தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. அதாவது, உங்கள் இயக்கத்தைப் பரவச் செய்யும் ஸ்பீக்கர்ஸ் என்று வழங்கும் பிரச்சாரத் தொண்டர்களின் ஆற்றலே ஆற்றல். அநேக இயக்கங்களில் கலந்து உழைத்து வந்துமிருக்கிறேன். ஆனால், சுயமரியாதை இயக்கத்தாரைப் போன்ற பேசும் திறமையுடையவர்கள். மற்ற இயக்கத்தில் மிகச் சிலரே; உங்கள் இயக்கத் தொண்டர்கள் பேசும் திறமையே திறமை.


அந்த வேளையில் எனக்கு ஓர் எண்ணம் கிளம்பியது. இவ்வாற்றலையுடைய மக்கள், ஒரு காலத்தில், அரசியல் துறையில் நுழையுங்காலை, இவர்களை வெல்வார் யார்? என்ற எண்ணம் உள்ளுக்குள்ளேயே உதித்தது. இன்னும் சொல்லுகிறேன்.

இனிவரும் புதிய அரசியல் திட்டத்தை வழங்க, நமது சுயமரியாதையோர், தேர்தலில் தலையிடுவார்களேயாகில், Sweep the Pools என்று சொல்லும் வகையில் முற்றும் அவர் கைக்கொள்ள என்ன தடை?

இவர்கள் முன் யார் நிற்பார்கள்? இவர்கள் முன் யார் இருப்பினும், எந்த மகாசபையாக இருப்பினும், முசுலிம் லீக்காய் இருப்பினும், எந்தக் கட்சியாய் இருப்பினும், சுயமரியாதைத் தொண்டர்கள் முன், பேசும் திறமையில் நிகர் யாருமில்லை என்றே சொல்லலாம்.

... இவைகளின் சிறப்பை யோசிக்குங் காலை, உங்கள் இயக்கத்திற்கு, ஒரு மகத்தான வருங்காலம் இருக்கிறது. அதற்கு There is a great future என்று சொல்லலாம். இனி வருங்காலத்தில் உங்கள் இயக்கம், இந்திய உலகத்திற்குச் சிறந்ததோர் நன்மை பயக்கத்தக்க கருவியாக நிற்கப் போகின்றது. ஆனால், எதிர்கால செல்வாக்கு உங்கள் தளரா வன்மையும், ஆற்றலையும் விடா முயற்சியையும் பொறுத்தது.

.... சுயமரியாதையோருக்கு மதங்கள் ஒழிந்து விட்டதென இன்று கூறலாம். இந்த இயக்கம், முதலில் லூத்தர் மிஷன் மதத்தைப்போல், மதங்களை சீர்திருத்தும் இயக்கமாக ஆரம்பித்து, இன்று கடவுளென்ற பெயரையே, அகராதியிலிருந்து எடுத்துவிடும்போல் தோன்றுகிறது. உங்கள் இயக்கத்தால் தமிழ்நாட்டில், பல்லாயிரவர் வாயில் கடவுளென்ற பெயரைப் பயபக்தியோடு உச்சரிப்பது போய், பரிகாசம் செய்யும் நிலைமையில் வந்துவிட்டது.

கடவுளென்ற ஒருவர் இருப்பாராயின், அவர் என் முன் வருவாராயின் அவர் கழுத்தை அறுப்பேன் என்று ஒரு சுயமரியாதையோர் எழுதுகிறார்! இவ்வித மனப்பான்மை, நமது தமிழ்நாட்டில் இவ்வளவு சீக்கிரத்தில் தோன்றியதற்கு, நமது தோழர் ராமசாமி செய்த அருந்தொண்டு; உழைப்புமே ஆகும்.

---------------ம.சிங்காரவேலர் - " உலக விடுதலைக்கு வழி கடவுள் என்ற வார்த்தை ஒழிய வேண்டும்? "எனும் கட்டுரை குடிஅரசு (13.11.1932) இதழில் வெளிவந்த கட்டுரையில் ஒரு பகுதி.

2 comments:

Chittoor Murugesan said...

கலாமின் மனைவி ‍:1 , 2 என்ற என் பதிவுகளுக்கான மறுமொழிகளுக்கு நான் கொடுத்த மறு மறுமொழி இது.( தங்கள் மேலான பார்வைக்கு )
பாலா & வீரபாண்டியன் அவர்களே !
தங்கள் மறுமொழியிலிருந்து தமிழ் ஓவியா,கோவி.கண்ணன்,தோழர் ஏகலைவன்,தோழர் மதிமாறன் ஆகியோர் இன்னும் பட்டவர்த்தனமான உண்மைகளை போட்டு உடைப்பவர்கள் என்பதை புரிந்து கொண்டேன். இன்னும் என்னில் ஹிப்பாக்ரடிக் சிந்தனைகள் இருப்பதை உணர்கிறேன்.

பி.கு:
மேற்சொன்ன பதிவர்களோடு தாங்கள் குறிப்பிட்ட "நக்சல் தீவிரவாத பதிவர்கள் இருவர். "வலையுலக ஓ என் ஜி சி பெரியார்" காட்டாமணக்கு ஆகியோரின் பதிவுகளையும் தேடிப்பிடித்து படிக்க முடிவு செய்துள்ளேன். மறு மொழிக்கு நன்றி

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி