Search This Blog

12.9.09

பெரியாரின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாளும் -நமது சிந்தனையும்


செப்டம்பர் 17- தமிழர்களின் தேசியத் திருநாள்!

தமிழர்களுக்கு முகவரி தந்த தந்தை பெரியார் அவர்களின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் வரும் செப்டம்பர் 17.

ஜாதி, மதம், கட்சிகளைக் கடந்து தமிழர்தம் இனத்தின் தந்தை என்று மதிக்கத்தகுந்த தன்மான இயக்கத் தலைவரின் பிறந்த நாள் என்பது தனிப்பட்ட ஒருவருக்குச் சொந்தமான விழாவன்று.

ஒட்டுமொத்தமான தமிழர்களின் விழிப்புக்குக் காரணியாக இருந்தவரின் பிறந்த நாள் என்பது நமது இனத்தின் தேசியத் திருநாள் அல்லவா!

ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பினால் மண் மூடிப்போன திராவிட இனத்தைத் தட்டி எழுப்பி, தன்மான வெளிச்சம்காட்டி உறங்கியது போதும் விழி, எழு! என்று எழுச்சியுறச் செய்த தலைவர் அல்லவா தந்தை பெரியார்!

புத்தர் தோன்றி 2500 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய இரண்டாம் புத்தர்தான் தந்தை பெரியார். ஆரிய வருணாசிரம இந்து மதத்தையும், அதன் கோட்பாடுகளையும், ஈவு இரக்கமற்ற செயல்பாடுகளையும் எதிர்த்து அறிவுப்புரட்சி செய்த ஆண்டகைதான் கவுதமப் புத்தர்.

எல்லா வகையான பார்ப்பன சூழ்ச்சிகளையும் முறியடித்து அரச குடும்பத்திலே பிறந்த சித்தார்த்தன் தம் அறிவுப் பயணத்தால் மக்களை விழிப்புறச் செய்தார்.

செல்வச் செழிப்பிலே பிறந்து வளர்ந்தாலும் அவற்றையெல்லாம் தூக்கி எறிந்து எளிமையின் சின்னமாக மாறி, தம் வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு கொடையாகக் கொடுத்த தன்னிகரற்ற தலைவருக்குப் பெயர்தான் தந்தை பெரியார்.


இன்றைக்கு சமூகநீதி ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட தந்தை பெரியார் அவர்களின் அளப்பரிய தொண்டு புதைந்து கிடக்கிறது.

இன்று பெண்களுக்குக் கல்வி உரிமையும், சொத்துரிமையும் கிட்டியுள்ளன என்றால், அதன் பின்னணி வரலாறு என்பது தந்தை பெரியார் அவர்களைச் சுற்றிச் சுழலக்கூடியது என்பதை மறுக்க முடியுமா?

நாட்டில் இலட்சக்கணக்கில் சுயமரியாதைத் திருமணங்கள் நடக்கின்றன. இப்பொழுது அதற்குச் சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றால், அதற்கான வேர் எங்கிருந்து கிடைத்தது?

பட்டிதொட்டிகளில் எல்லாம் சுற்றிச்சுற்றி, சட்டத்தைப்பற்றிக் கூடக் கவலைப்படாமல் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்த அருமையை எண்ணிப் பார்க்கவேண்டும். 40 ஆண்டு உழைப்பின், திட்டத்தின் தாக்கம்தான் அண்ணா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டமாகும்.

நாட்டில் இன்று நிலை பெற்றிருக்கும் பல்வேறு உரிமைகளுக்கான உத்தரவாதம் தந்தை பெரியார், அவர்தம் இயக்கம் ஆகியவற்றின் பலன் எதிர்பாராப் பெரும்தொண்டு அவர்கள் கொடுத்த கஷ்ட நஷ்டம் என்றும் விலைமதிப்பில்லா ஈகமாகும்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் வாலாட்டிப் பார்க்கும் காவிக் கூட்டத்தை கட்சிகளைக் கடந்து தமிழ்நாட்டு மக்கள் நிராகரிக்கிறார்கள் என்றால், அதற்கு யார் காரணம்? எந்த இயக்கத்தின் பிரச்சாரம் - கருத்து விளக்கம் என்பது சொல்லாமலே விளங்கக்கூடிய உண்மைகளாகும்.


இந்த நிலை நீடிக்க வேண்டுமானால், நாம் இன்று அனுபவித்துவரும் உரிமைகள் நிலைக்கவேண்டுமானால், தந்தை பெரியார் கொள்கைகள் மேலும் பரவவேண்டும் வலுப்பெறவேண்டும். அது ஒன்றுதான் நம் மக்களுக்குப் பாதுகாப்பு அரணாகும்.

பெரியார் பிறந்த நாள் விழா என்பது ஒரு குறியீடாகும். அந்நாளில் தமிழர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கைலாகு கொடுத்துக்கொள்ளவேண்டும். இனிப்புகளை வழங்கிடவேண்டும்; வாழ்த்து அட்டைகளை அனுப்பிடவேண்டும்; விருந்துக்கு மற்ற தமிழர்களை அழைக்கவேண்டும்.

இதனையே ஒரு நிரந்தரமான விழாவாக்கி தமிழர்கள் தேசியத் திருநாள் என்ற முத்திரையைப் பதித்து, தமிழ், தமிழர், தமிழ்நாடு என்கிற உணர்வைப் பகுத்தறிவு நெறியில் வளர்த்தெடுப்பதற்கு தொய்வின்றி நமது வளர்ச்சிகள் மேல்நோக்கிச் செலுத்தப்படுவதற்கு ஒரு புத்தாக்கத் திருவிழாவாக பெரியார் பிறந்த நாள் மலர்ச்சி பெறவேண்டும். முதலில் நமது தோழர்கள் இதற்கு எடுத்துக்காட்டாக இந்நாளை இந்த வகையில் கொண்டாடுவார்களாக!

-------------------"விடுதலை" தலையங்கம் 12-9-2009

0 comments: