Search This Blog

17.9.09

பெரியாரின் சர்வாதிகாரம் கழக இலட்சியத்திற்காக!

என்னுடைய சர்வாதிகாரம் கழக இலட்சியத்திற்காக!
தூத்துக்குடி மாநாட்டில் தந்தை பெரியார்

என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய ஆட்கள்தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட் டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் எனது மதிப்பிற்குரிய நண்பர் பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது. அவர் ஈரோட்டில் எக்சிகியூட்டிவ் எஞ்சினியராய் இருந்தபோது, அவர் எங்கள் வீட்டில் குடியிருந்தார். மாடுகளுக்குச் சுலபமாய் இழுக்கக்கூடிய புதுமாதிரியான கவலை ஒன்று செய்யத் தனக்கு இரண்டு கொல்லர்களைத் தருவித்துக் கொடுக்கும்படி சொன்னார். நான் யோசித்து இரண்டு கெட்டிக்காரக் கொல்லர்களின் அதாவது, துப்பாக்கி செய்யக் கூடியவர்கள் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களை அழைத்து வரும்படி என் காரியஸ்தர் களுக்குக் கூறினேன்.

அப்போது அவர் சொன்னார்: கொல்லன் கெட்டிக்காரன் என்பவர்களை அனுப்பி வைப்பாயானால், அவர்கள் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனப்போட்டி வேலையைக் கெடுத்து விடும். அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்துவார்கள். என் திட்டம் ஆட்டம் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, சொல்வதைப் புரிந்து கொண்டு, அதன்படி வேலை செய்யக்கூடிய, ஒரு படிமானமுள்ள, சொன்னபடி நடக்கக்கூடிய இரண்டு சம்மட்டியும், சுத்தியும் பிடித்துப் பழகிய ஆளை அனுப்பி வைத்தால் போதுமானது. அவர்கள் முட்டாள்களாயிருந்தாலும் சரி; அவர்களைக் கொண்டு சுலபத்தில் வேலையை முடித்து விடலாம் என்று கூறினார்.

புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப்போதுமே இயற்கை தான். ஆகவேதான், நான் நீடாமங்கலம் மாநாட்டின் போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று. யாராவது ஒருத்தன்தான் நடத்தக் கூடியவனாக இருக்க முடியுமே தவிர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தான். தோழர்களே! நான் இப்போது கூறுகிறேன். நீடாமங்கலத்தை விட ஒருபடி மேல் செல்லுகிறேன்.

நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனச்சாட்சி என்பதைக்கூட நீங்கள் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்துவிட வேண்டியது தான். கழகத்தில் சேரு முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு, கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்; என்னுடன் வாதாடலாம். உங்கள் மனச்சாட்சி என்ன கூறுகிறது என்றும், என்னுடைய தன்மை எப்படிப்பட்டது என்றும் நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்!

ஆனால், எப்போது உங்கள் மனச்சாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச் சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியது தான் முறை.

ஒரு எஜமான் வேலைக்காரனைப் பார்த்து, அந்தப் பெட்டியைக் கொஞ்சம் எடப்பா என்று கூறினால், என் மனச்சாட்சி என்னை அதற்கு அனுமதிக்கவில்லையே என்று கூறினால், அது முறையாகுமா? ஒரு டிஸ்டிரிக்ட் சூப்ரண்டெண்ட் சுடு! என்று போலீஸ்காரனுக்கு உத்தரவு போட, அவன் என் மனச்சாட்சி அதற்கு இடங் கொடுக்கவில்லையே என்று கூறினால், அந்த சூப்ரண்ட் கதி என்னாவது? கசாப்புக் கடையில் வேலை பார்க்க ஒப்புக் கொண்டவன், அந்த ஆட்டை வெட்டுடா என்று எஜமான் உத்தரவு விடும்போது, அய்யோ! என் மனச்சாட்சி மாட்டேன் என்கிறதே; நான் என்ன செய்யட்டும்? என்று கூறினால், ஏண்டா மடப்பயலே! முன்னாடியே உனக்கு இது தெரியாமற் போனதேனடா? அப்போது உன் மனச்சாட்சி எங்கேயடா போயிருந்தது? என்று கேட்பானா இல்லையா, அவனை?

ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வதுதான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷமத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படுகிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்குச் சர்வாதிகாரம்தான் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தோழர்களே! நீங்கள் சிந்திக்க வேண்டும். இந்தச் சர்வாதிகாரம் எதற்குப் பயன்படுகிறதென்று? என்னுடைய சர்வாதிகாரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காக, பொது நன்மைக்காகப் பயன்படுத்துகிறேனே ஒழிய, எந்த சிறு அளவுக்கும் எனது சொந்தப் பெருமைக்காகவோ, ஒரு கடுகு அளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன்படுத்திக் கொள்ள-வில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

------------------------1948இல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் பெரியார் தலைமையுரை," குடிஅரசு" 29-.5-.1948.

0 comments: