பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 17 என்பதை உலகத் தமிழர்கள், பகுத்தறிவாளர்கள், மனிதநேயச் சிந்தனையாளர்கள் நினைவு கூர்ந்து, இந்நாளை எழுச்சியூட்டும் நாளாக, பகுத்தறிவுச் சிந்தனை மணம் பரப்பும் நாளாக முற்போக்கு எண்ணங்கள்தம் செயல்களின் புறப்பாட்டு நாளாகக் கருதுகிறார்கள் _ கொண்டாடுகிறார்கள்.
ஆனால், இன்றைய நாளை விசுவ கர்ம நாளாகக் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். கபோதிகள் உண்டு.
இந்தப் பூனை கண் மூடினால் பூலோகம் இருண்டுப் போய் விடுமாம்.
பூணூல் ஏடான தினமலர் தனக்கே உரித்தான அற்பத்தனத்தை அச்சுப் போட்டு அறிவித்துவிட்டது.
செப்டம்பர் 17 இல் சனிப் பெயர்ச்சி மலர் கேட்டு வாங்குங்கள் என்று அறிவித்துள்ளது.
இன்னொரு வகையில் இந்தச் சனியன்களையெல்லாம் வேரோடு வெட்டி பெயர்ச்சி செய்த வெண்தாடி வேந்தரின் பிறந்த நாள் அல்லவா!
அந்த வகையில் பெயர்ச்சி என்பதும் பொருத்தம்தானே!
பார்ப்பன சமாச்சாரங்களையெல்லாம் அக்குவேர், ஆணிவேர் வரை சென்று பிரச்சாரத் திராவகம் ஊற்றி, அடையாளம் தெரியாத அளவுக்குப் பெயர்ச்சி செய்வித்த பெயருக்குரிய பெரியாரின் பிறந்த நாள் அல்லவா!
பெண்ணென்றால் பேய் என்றும், பிறவி அடிமை என்றும் பேசும் மனுதர்மவாதிகளின் நாக்கைத் துண்டித்து, வாயை அரக்கு வைத்து அடைத்து அந்தப் பாழும் குப்பைகளையெல்லாம் பெயர்ச்சியடையச் செய்த பெம்மான் பிறந்த நாள் அல்லவா!
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற நிலையை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக அரங்கேற்றி வந்த ஆரிய ஆதிக்கத்தை பெயர்ச்சி அடையச் செய்த அரிமா பெரியார் அவர்களின் பிறந்த நாள் அல்லவா இந்நாள்! தினமலர்களின் திரிநூல்களும் முற்றிலும் பெயர்ச்சி அடையச் செய்யும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
பார்ப்பனர்களின் பூணூல் தனம் இந்த 2009 லும் எப்படி விஷக் கொடுக்கை நீட்டிக் கொண்டு இருக்கிறது என்பதை தந்தை பெரியார் பிறந்த நாளில் தமிழர்கள் உணர்வார்களாக!
---------------- மயிலாடன் அவர்கள் "விடுதலை" 17-9-2009 இல் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment