Search This Blog
13.9.09
விநாயகர் சதுர்த்தி -பூஜையா?-விழாவா? -விளையாட்டா?
விளையாட்டா?
கேள்வி: விநாயகர் சதுர்த்தி அன்று சில இடங்களில் கிரிக்கெட் வீரராக விநாயகர் காட்சி அளித்துள்ளது பற்றி. .
பதில்: விநாயகர் சதுர்த்தி, ஒரு பூஜை என்பதைக் கடந்து, ஒரு விழா ஆகி, இப்போது விளையாட்டாக ஆகி இருக்கிறது. நஷ்டம் விநாயகருக்கு அல்ல.
-------------------------- துக்ளக், 16.9.2009
விநாயகர் சதுர்த்தி ஒரு பூஜை என்பதைக் கடந்து ஒரு விழா ஆனதாக கூறுகிறார் திருவாளர் சோ. இதன் மூலம் பூஜை வேறு, விழா வேறு என்று தனித்தனியாகப் பிரிக்கிறார்.
பூஜை என்றால் வீட்டுக்குள் மட்டும்- விழா என்றால் வீதிக்கு வருவது. அப்படி வீதிக்குக் கொண்டு வந்தவர் லோகமான்யர் என்ற அவாள் போற்றும் திலகர்தான்.
இந்துத்துவ வெறியை மக்களிடம் திணிப்பதற்கு அந்தப் புண்ணியவான் தான் விநாயகர் ஊர்வலம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
எலிகளால் பிளேக் நோய் பரவுகிறது என்பதால் எலிகளை வேட்டையாடிய வெள்ளைக்காரர்களை வேட்டையாடியதுதான் திலகர் பெருமான் கட்டிக் கொண்ட புண்யம்.
காரணம், எலி விநாயகரின் வாகனமாம். ஆகா, வெள்ளைக்கார மிலேச்சன் இந்து மதத்தில் கை வைத்து விட்டான் என்று அவிழ்த்துவிட்டாரே ஒரு கரடி அதன் விளைவுதான் வெள்ளைக்கார அதிகாரி சுடப்பட்டது.
விநாயகர் பூஜை, விழாவானதால் வேறு என்னென்ன விளைவுகள்? விழா என்ற பெயரில் ஊர்வலம் நடத்தினால்தானே முஸ்லிம்களின் தர்கா முன் சென்று தகராறு செய்ய முடியும்? அதன் மூலம் ஒரு கலவரத்தை உண்டாக்க முடியும். பூஜை விழாவானதால் அவர்களுக்கு கைமேல் கிடைத்த உடனடிப் பலன் இது.
மூன்றாவது, பூஜை விளையாட்டாகிவிட்டது என்று குறைபட்டுக் கொள்கிறார். விநாயகர் பொம்மையைப் பார்க்கும் சிறுவர்களுக்கு அதன் வினோதமான உருவம் விளையாட்டுப் பொம்மையாகத்தானே நினைக்கும்படிச் செய்யும். குற்றம் குழந்தைகள் மீதா? கடவுள் அப்படிப் பிறந்ததாக எழுதி வைத்திருக்கும் ஆசாமிகள், புராணங்கள் மீதா?
நஷ்டம் விநாயகருக்கு அல்ல என்கிறாரே -உயிருள்ள ஒன்றாகச் சிந்திக்கும் திராணி உள்ளதாக இருந்தால்தானே லாபநஷ்டம் தரும்.
களிமண் பொம்மைக்கு நஷ்டம் தெரியுமா? இலாபம் தெரியுமா? ஒன்று மட்டும் உண்மை. இப்படி பக்தர்கள் தங்கள் கடவுள்களை அசிங்கப்படுத்தினால் ஒட்டு மொத்த நஷ்டம் பார்ப் பனர்களுக்கே - காரணம் பக்திதானே அவர்களின் மூலதனம்.
------------------- மயிலாடன் அவர்கள் 13-9-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment