“சுயமரியாதை இயக்கம் - ஜாதியிலும், மதத்திலும், கடவுளிலும் பிரவேசித்தாலேயே அதன் யோக்கியதையைக் கெடுத்துக் கொண்டது என்கிறார்கள். மனிதனுக்கு இழிவு ஜாதியால் தானே உண்டாகி வருகிறது? ஜாதியோ மதத்தினால் தானே உண்டாகி வருகின்றது? மதமோ கடவுளால்தானே உண்டாக்கி வருகின்றது? இவற்றுள் ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை அழிக்க முடியுமா? ஒன்றுக்கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக இருக்கின்றது என்று யோசித்துப் பாருங்கள். ஜாதியை அழித்துவிட்டால் இந்து மதம் நிலைக்குமா? அல்லது இந்துமதத்தை வைத்துக் கொண்டு ஜாதியை அழிக்க முடியுமா? ஜாதியையும் மதத்தையும் அழித்துவிட்டுக் கடவுளை வைத்துக் கொண்டிருக்க முடியுமா? நான்கு ஜாதியை இந்தமத தர்ம சாஸ்திரமாகிய மனுதர்ம சாஸ்திரங்கள் முதலியவை ஒப்புக் கொள்ளுகின்றன. நான்கு ஜாதிமுறைகளைக் கீதை முதலியவை கடவுள் வாக்குகள் ஒப்புக் கொள்கின்றன. "நான்கு ஜாதிகளையும் நானே சிருஷ்டி செய்தேன். அந்த ஜாதிகளுக்கு ஏற்ற தர்மங்களை (தொழில்களை)யும் நானே சிருஷ்டி செய்தேன். அத்தருமங்கள் தவற எவனாவது நடந்தால் அவனை மீளா நரகத்தில் அழுத்தி இம்சிப்பேன்" என்று இந்துக்களின் ஒப்பற்ற உயர் தத்துவமுள்ள கடவுளான கிருஷ்ண பகவான் என்பவர் கூறி இருக்கிறார். இதிலிருந்து ஜாதிக் கொடுமை, ஜாதி இழிவு, ஜாதிபேதம், ஜாதிப்பிரிவு ஆகியவைகளையோ, இவற்றில் ஏதாவது ஒன்றையோ ஒழிக்க வேண்டுமானால் மதங்களையும், கடவுள்களையும், சாஸ்திரங்களையும் ஒழிக்காமல் முடியுமா? அல்லது இவைகளுக்குப் பதில் ஏற்படுத்தாமலாவது முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். வீணாய் சுயமரியாதைக்காரர்கள் ஜாதியை, மதத்தை, கடவுளை எதிர்க்கிறார்கள், ஒழிக்க வேண்டுமென்கிறார்கள் என்பதில் ஏதாவது அர்த்தமோ அறிவோ இருக்கிறதா என்று பாருங்கள்”.
----------------- சென்னை சுயமரியாதைச் சங்கம் விழாவில் பெரியார் ஈ.வெ.ரா. பேச்சு, "குடிஅரசு" 19-01-1936
0 comments:
Post a Comment