Search This Blog

5.9.09

தந்தைபெரியாரும்-ஆசிரியர்களும்(செப்டம்பர் -5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பெரியார் அவர்களின் சிந்தனையை இங்கு பதிவு செய்யப்படுகிறது.ஊன்றிபடித்து உண்மையை உணர வேண்டுகிறேன். நன்றி.)


சகோதரர்களே! சகோதரிகளே!

இன்று நீங்கள் எனக்குச் செய்த வரவேற்பு, ஆடம்பரம், உபசாரம், வரவேற்புப் பத்திரம் முதலியவைகளைக் கண்டு எனது மனம் மிகவும் வெட்கப்படுகிறது. இவ்வித ஆடம்பரங்களுக்கு நான் எந்த விதத்தில் தகுந்தவனென்பது எனக்கே தெரியவில்லை. கல்வி கற்பிக்கும் ஆசிரியர் என்று சொல்லப்பட்ட பெருத்த கல்விமான்களாகிய உங்களது மாநாட்டுக்கு, அக்கல்வியை ஒரு சிறிதும் பயிலாத நான் எவ்விதத்தில் தகுதியுடையவனாவேன்? உங்களின் அன்பான வேண்டுகோளை மறுக்கப் போதிய தைரியமில்லாத காரணத்தாலேயே ஒருவாறு இப்பதவியை ஏற்கவேண்டியவனாக இருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் சுமார் 2 வருஷ காலந்தான் நான் பள்ளியில் படித்திருப்பேன். அவ்விரண்டு வருஷமாகிய எனது 8 வயதுக்கு மேற்பட்டு 11 வயதுக்கும்பட்ட காலத்தில் நான் படித்த காலத்தைவிட உபாத்தியாயரிடம் அடிப்பட்ட காலந்தான் அதிகமாயிருக்கும்.

இதையறிந்த என் பெற்றோர்கள், 'இவன் படிப்புக்கு இலாயக்கில்லை' என்பதாகக் கருதித் தாங்கள் செய்து வந்த தொழிலாகிய வர்த்தகத்தில் என்னுடைய 11ஆவது வயதிலேயே ஈடுபடுத்திவிட்டார்கள். இந்த 2 வருஷக் கெடுவிலேயும் என் கையெழுத்துப் போடத்தான் கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம். ஆகவே, கல்விமுறையிலும் உங்கள் குறைகளைப் பற்றியும் நான் உங்களுக்கு எந்த விஷயத்தையும் சொல்லக்கூடிய சக்தி என்னிடத்தில் இல்லை. ஏதோ என் புத்தி அனுபவத்திற்கெட்டிய வரையில் சில வார்த்தைகளைச் சொல்லுகிறேன்.

தற்கால ஆசிரியர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியத் தொழிலை ஒரு புனிதமான கடமை என்பதாக கருதிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து நடப்பதற்கில்லாத நிலையில் இருந்துகொண்டு, அத் தொழிலைத் தங்கள் வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாய் இருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மாநாடுகள் கூட்டிப் பேசுவதும், தீர்மானிப்பதும் தங்களுக்குச் சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும், தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, தேச முன்னேற்றத்திற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியை அடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை.

முதலாவது, நீங்கள் படித்த கல்வியும், நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கல்வியும், வயிற்றுப் பிழைப்புக்கு ஓர் ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல் மக்கள் அறிவுத் தத்துவத்துக்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால், தற்காலம் அடிமைத் தன்மையையும், சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவி செய்து வயிறு வளர்க்கும் தேசத் துரோகிகளை உற்பத்தி செய்யும் இயந்திரமாகத்தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?

சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில், நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். அக்குழந்தைகளுக்கு, 6,7 வயது வரையிலும் தாய்மார்களே தான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். மேல்நாட்டுப் பழக்கங்களிலும் இவைதான் காணப்படுகின்றன.

எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். நீங்களிருவரும் எப்படிப் பிள்ளைகளைப் படிப்பிக்கின்றீர்களோ அப்படியே அவர்கள் தேசத்திற்கும், தேச நன்மைக்கும், ஒழுக்கத்திற்கும் உரிய மக்களாய் வாழக் கூடும். எனவே தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்படவேண்டி இருக்கிறது. ஆனால் அப்பேர்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளைப்பெறும் இயந்திரங்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா, பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்? ஆகவே, அந்த முதலாவது ஆரம்ப ஆசிரியர்களின் யோக்கியதை இப்படியாய்விட்டது!

அடுத்தாற்போலுள்ள, இரண்டாவது ஆரம்ப ஆசிரியர்களாகிய உங்கள் யோக்கியதையோ உங்கள் வயிற்றுப்பாட்டுக்கு 'கான்பரன்ஸ்' கூட்ட வேண்டியதாகப் போய் விட்டது. உங்கள் இருவர்களாலும் கற்பிக்கப்படப் போகிற பிள்ளைகள், எப்படித் தக்க யோக்கியதையை அடையமுடியும்? கல்வியென்பது வயிற்றுப் பிழைப்புக்காக மாத்திரமல்ல, அது அறிவுக்காகவும் ஏற்பட்டது என்பதாக நாம் எடுத்துக்கொண்டால், மக்கள் சுயமரியாதையோடும், சுதந்திரத்தோடும், மற்ற மக்களுக்கு இன்னல் விளைவிக்காமலும் அன்பு, பரோபகாரம் முதலியவைகளோடும் கண்ணியமாய் உலக வாழ்க்கையை நடத்தத் தகுந்த ஞானமும் உண்டாக்கத் தக்கதாக இருக்கவேண்டும். இவைகளை அறிந்தே வள்ளுவரும் 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலாதார்' என்றும் பீதாம் இன்புறுவது உலகின்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்' என்றும், ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாரும் வைக்கப்படும் என்றும் சொல்லி இருக்கின்றார்.

இதற்கேற்ற கல்விக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நாய்க்கு நாலு கால், பூனைக்கு வாலுண்டு, கண்ணில்லாதவன் குருடன், திருடாதே, அடிக்காதே என்று சொல்லிக் கொடுப்பதனால் என்ன பலன் ஏற்பட்டுவிடக் கூடும்? இவற்றை எல்லாம் குழந்தைகம், தாமாகவே படித்துக்கொள்ளும். ஒருவனை அடித்தால் அவன் திரும்பி அடித்துவிடுவான்; ஒருவனை வைதால் அவன் திரும்பி வைதுவிடுவான்; திருடினால் பிடித்து நன்றாக உதைத்து விடுவார்கள் என்பதும்,நாயும் பூனையும் கண்ணில் பார்க்கும்போதே கால் எத்தனை என்பதும், வாலுண்டென்பதும் தெரிந்துகொள்ளுவார்கம். இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமும், பணச்செலவும், மெனக்கெடும் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம்.

நீங்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும்; மானம், ஆண்மை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்கவேண்டும்; தேசாபிமானத்தைக் கற்றுக் கொடுக்கவேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா? என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப்பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல, உங்களைவிடப் பெரிய சகலகலா வல்லுநர்களிடத்தில் படித்து, எம்,ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையன்களும், ஒரு காப்பிக் கடைக்குப் போனால் தனது சுயமரியாதையற்று அங்கு எச்சில் கிண்ணம் தூக்குபவனைக் கண்டு 'சாமி, ஒரு கப் காப்பி கொண்டு வா' என்று கூப்பிடுகிறான். தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான்; தன் தேசத்தையும், மக்களையும் காட்டிக்கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டி போடுகிறான். இந்தப் பட்டமெல்லாம் கல்வியாகுமா? இதைப்பெற்றவர்களெல்லாம் படித்தவர்களாவார்களா?

வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி முதலியோர் எப்படித் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்களோ, அப்படியே தற்காலம் பி.ஏ.,எம்.ஏ., என்று படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படிச் சரித்திரம் பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படி பூகோளப் பாடம் தெரியாதோ அப்படியோ எம்.ஏ படித்தவனுக்குப் பிறருக்குச் சவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேதவியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது. ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களைவிட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர்கம் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; அறிவாளிகளுமல்லர்; உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர, அறிவாகாது. இவ்வளவும் படித்தவர்கள் முட்டாம்களாகவும், சுயநலக்காரர்களாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படியாதவர்கள் பரோபகாரிகளாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதையுள்ளவர்களாகவும் இருக்கலாம். எனவே, இவைகளல்ல கல்வியென்பது நமக்கு விளங்கவில்லையா?

நமது நாட்டின் கேட்டிற்கும் நிலைமைக்கும் முதல் காரணம் தற்காலக் கல்வி முறை என்பதே எனது அபிப்பிராயம். முற்காலக் கல்வி முறை என்பதே எழுதித் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து படித்த படிப்பை விடத் தற்காலப் படிப்பு மக்களுக்கு என்ன நன்மை செய்து விட்டது? ஓலைச்சுவடியும், எழுத்தாணியும், ஆற்றுமணலும் போய், காகிதக் குப்பைகளுக்கும் பெரும் பெரும் புத்தகங்களுக்கும் இங்கி, பெட்டி, பேனா, பென்சில்களுக்குமாக நமது பணங்கள் சீமைக்குப் போக ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல் வேறு பலனுண்டா? 'படிப்பில்லாத' என்கிற முற்காலத்து மக்களைவிட 'படிப்புள்ள' என்கிற தற்காலத்து மக்கள் ஒழுக்கத்தில் எவ்விதம் உயர்ந்திருக்கிறார்கள்? படிப்பில்லாத காலத்தைவிட அன்பில், அன்னியோன்யத்தில், நம்பிக்கையில் படிப்புள்ள மக்கள் என்ன ஒத்திருக்கிறார்கள்?

முன்காலத்தில் ஒருவன் வாங்கின கடனைக் கொடுக்காவிட்டால் அவன் வீட்டு வாயிலில் ஒரு பசுவையும் அதன் கன்றையும் தீனி போடாமல் கட்டிவிடுவது வழக்கம். இந்தப்பட்டினியின் பாவத்திற்கு அஞ்சி பெண்சாதியின் தாலியை விற்றாவது கடனைக் கொடுத்துவிட்டுத்தான் வீதிப்புறம் நடப்பான் என்று எனது தகப்பனார் சொல்லி இருக்கிறார். கல்வி ஏற்பட்ட காலமாகிய இப்பொழுது அம்மாதிரிச் செய்தால் படித்தவர்கல் என்கின்ற வக்கீல்கள், 'பாலைக் கறந்து வந்து நமக்குக் கொடுத்து விடு, பாவம் வந்து உன்னை என்ன செய்துவிடும் பார்க்கலாம்' என்று தைரியம் சொல்லி ஏமாற்றி வழிகாட்டி வருவார்கள். இதனாலேயே தற்காலம் எத்தனை மாஜிஸ்ரேட் கச்சேரி, எத்தனை முன்சீப்கோர்ட், எத்தனை செஷன்ஸ், அய்கோர்ட், எத்தனை போலீஸ் கச்சேரி ஏற்பட்டிருக்கிறதுபாருங்கள்! இவைகளெல்லாம் 'படிப்பில்லாத' என்கிற முற்காலத்தில் இருந்தனவா? படிப்பு என்னும் தற்காலக் கல்வி முறையல்லவா மக்களை இவ்வளவு ஒழுக்க ஈனமாக நடக்கத் தூண்டி, அல்லல்படுத்தி, நாட்டையும் சமூகத்தையும் பாழ்படுத்தி வருகிறது!

அறிவுக் கல்வியின் யோக்கியதை இப்படியானால் தொழில் கல்வியின் யோக்கியதை இதைவிட மோசமாக இருக்கிறது. தொழிற்கல்வி என்னும் பெயரில் தற்காலம் நமது பணமும் நேரமும், மக்களின் அறிவும் வீணாவதல்லாமல் வேறென்ன பலனைக் கண்டோம்? தற்காலப் பள்ளிக்கூடங்களில் தொழிற்கல்வி என்ற பெயருடன் கற்றுக்கொடுக்கும் தொழிற்கல்வி முறையும் கொஞ்சமும் சரியானதல்ல. கொஞ்ச காலமாகத் தேசியக் கிளர்ச்சி ஏற்பட்டதின் பலனாய் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் தொழில் கல்வி என்பதாகச் சொல்லி தச்சு வேலையும், விவசாயமும், இராட்டினம் சுற்றுதலும், நெசவு நெய்தலும் முதலிய வேலைகளுக்கென்று அனாவசியமாய் பணத்தையும் நேரத்தையும் பாழ்படுத்துகின்றனர். வக்கீல் மகனுக்கும் ஜட்ஜ் மகனுக்கும், மிட்டாதார் மகனுக்கும், வியாபாரி மகனுக்கும், பெரிய நிலச்சுவான்தார்கம் மகனுக்கும், ஒருங்கே உட்காரவைத்து சில மணி நேரம் தச்சு வேலை கற்றுக் கொடுப்பதாலும், இராட்டினத்தைச் சுற்றச் சொல்வதாலும், என்ன பயன் விளையக்கூடும்? எல்லாத் தொழிலும் கற்றிருக்கட்டும் என்பதற்காகவே சொல்வோமானால், இந்த இரண்டு மூன்று தொழிலாலேயே உலகத் தொழில் எல்லாம் தெரிந்துவிடுமா?

ஜீவனோ - பாயத்திற்காக என்று சொல்வோமானால் மேற்கண்ட பிள்ளைகளெல்லாம் இந்தத் தொழிலை ஜீவனோ பாயத்திற்காக ஏற்று ஜீவிக்க முடியுமா? ஆகவே, அறிவுக்காவது, ஜீவனத்திற்காவது இந்தத் தொழில்கம் இப்பிள்ளைகளுக்கு உபயோகப்படுகிறதா? உயர்தரப் பாட சாலை என்பவைகளில் 'சயன்ஸ்' என்றும், சரித்திரம் என்றும் எதை எதையோ பணத்தையும் காலத்தையும் செலவழிக்கச் சொல்லிக் கொடுத்து உருப்போடச் செய்து, கற்றுத் தேர்ந்த பிறகு 30 ரூபாய்க்கு ஏவின வேலை செய்து, படிப்பினுடைய சக்தியையும் அறிவையும் கொண்டல்லாமல் மேல் எஜமானனுக்கு மானத்தையும் மனச்சாட்சியையும் விற்று நல்ல பிள்ளையாவதன் மூலம் சம்பளத்தை உயர்த்தி, வாங்கிய சம்பளத்தில் வாழ்ந்து தன் காரியத்தை பார்த்துக்கொண்டதோடு, சாவதல்லாமல்,வேறு ஏதாவது பல் குத்துகிற துரும்புக்காவது உதவப்படுகிறதா? அல்லது அந்தத் தொழிலுக்காவது இந்தப் படிப்புகள் உபயோகப்படுத்தப்படுகிறதா?

அதுபோலவே, இக் கைத்தொழில்களும் வாழ்வுக்கோ, பிழைப்புக்கோ உபயோகப்படாமல் போகிறது. கைத்தொழில் கற்றுக் கொடுப்பதென்றால் கூடுமானவரையில் பிள்ளைகளின் இயற்கை அறிவிற்கும், வாழ்விற்கும், வாழ்க்கைக்கும் தக்கபடி தரந்தரமாகப் பிரித்து அததுகளுக்குத் தகுந்த தொழில்களைச் சொல்லிக் கொடுத்து அதை அவர்களுக்கு உபயோகப்படும்படி செய்ய வேண்டும்.

பெண்களுக்கு இராட்டினம் சுற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆண் பிள்ளைகளுக்குக் கதரைக் கட்டச் செய்வதும், கதரை ஆதரிக்க வேண்டிய அவசியத்தைச் சொல்லிக் கொடுப்பதும், இராட்டினத்தை விட முக்கியமானதாகும். அதைவிட்டு விட்டு உபாத்தியாயரும் கதர் கட்டாமல் பிள்ளைகளையும் கதர் கட்டச் செய்யாமல், இவர்களின் எஜமானர்களாகிய தாலுக்கா போர்டு, ஜில்லா போர்டு முதலிய தலைவர்களும் அங்கத்தினர்களும் கதரைக் கட்டாமல் பொதுமக்களின் வரிப்பணத்தை அள்ளி வெறும் இராட்டினத்தை வாங்கி பிள்ளைகளின் நேரத்தையும் பஞ்சையும் வீணாக்கி நூலைக் குப்பையில் போடுவதில் இலாபமென்ன? கதர் கட்டுவதன் அவசியத்தை அறியாத ஒரு பையன் இராட்டினம் சுற்றுவதில் பிரயோஜனமென்ன? கதரைக் கட்டாத உபாத்தியாயர்கள் கதரைக் கட்டும்படி உபதேசம் செய்வதில் பிரயோஜனமென்ன? (பிற்காலத்தில் பெரியார் கதர் பற்றிய தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன் ---தமிழ் ஓவியா)

அறிவும் தொழிலும் இப்படியானால் உபாத்தியாயர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இருக்கிற பொறுப்பும், பற்றுதலும், பக்தியும் இதைவிட மோசமானதென்றே சொல்ல வேண்டும். சாதாரணமாய், ஒரு உபாத்தியாயருக்கும் ஒரு மாணாக்கனுக்கும் உள்ள பற்றுதலையும் பக்தியையும்விட ஒரு தாசிக்கும் அவளுடைய அன்றன்றைய நாயகனுக்கும் உள்ள பக்தியும், பற்றுதலும் மேலானதென்றே சொல்லலாம். எப்படியெனில் ஒரு தாசிக்கு ஓர் இரவு முழுதுமாவது ஒரு நாயகன் இருக்கக்கூடும்.

நமது மாணவர்களுக்கோ மணிக்கு இரண்டு உபாத்தியாயர்கள் வருகிறார்கள். ஒரு நிலையான உபாத்தியாயரிடமிருந்து ஒரு பொறுப்பான விஷயங்களை உணரக் கூடிய சந்தர்ப்பங்களே கிடையாது. உபாத்தியாயர்களும் சம்பளம் உயர்ந்த பள்ளிக்கூடங்களுக்குப் போவதும், மாணாக்கர்களும் அவர்களுக்குச் சவுகரியப்பட்ட பள்ளிக்கூடத்திற்குப் போவதும் சுயேச்சையாகிவிட்டது. பிள்ளை படிக்கவேண்டியதும், உபாத்தியாயர் அவனைத் தேறச் செய்ய வேண்டியதும் அவரவர்கள் இஷ்டத்தைப் பொறுத்ததாகவே போய்விட்டதேயல்லாமல், பொறுப்பும் கவலையும் ஒருவருக்குக் கட்டுப்பட்டதல்லாததாகவே இருந்து வருகிறது.

கல்வி, அறிவு, தொழில்முறை, குரு பக்தி ஆகியவற்றின் யோக்கியதை இப்படி என்றால் உபாத்தியாயர்களின் காலட்சேபமோ நினைப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது. முன்காலத்தில் உபாத்தியாயர்களுக்கு காலட்சேபத்தைப் பற்றி கவலையே இருந்தததில்லை. உபாத்தியாயர்களுக்கு ஒரு சிறு குடிசை இருந்தால் போதும். பிள்ளைகளுக்கு அக்குடிசைக்கு முன்னால் ஒரு பந்தலோ, கொட்டகையோ இருந்தால் போதும். பிள்ளை படிப்பதற்கு அய்ந்தாறு மட்டை பனை ஓலையும், அரை வண்டி மணலும் இருந்தால் போதும். எழுதுகோலாக ஒரு கூர்மையான ஆணி இருந்தால் போதும். மற்றபடி உபாத்தியாயர்களுடைய காலட்சேபத்தைப் பற்றி உபாத்தியாயர்களுக்குக் கவலையே கிடையாது. வெள்ளாமைக் காலத்தில் பையன்களிடம் சொல்லிவிட்டால் கூடை கூடையாய்த் தானியங்கள் வந்து குவிந்து விடும். உபாத்தியாயரே போட்டு வைக்க இடமில்லாததால், 'போதும்' என்று சொல்லிவிடுவார். எண்ணெய், விறகு முதலியவைகள் மாதத்துக்கு ஒரு தடவையும், காய்கறி பதார்த்தங்கள் தினமும் தானாகவே பிள்ளைகள் மூலம் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடும். பண்டிகைகளுக்கு வேஷ்டித் துணிகளும், மேற்செலவுக்கு இனாம் பணங்களும் தானாகவே வந்து சேர்ந்துவிடும். உபாத்தியாயர் வீட்டில் நடக்கும் கல்யாணம், கார்த்திகை, நன்மை, தீமை முதலிய சடங்குகளுக்கு அவ்வப்போது பெற்றோர்களும், பையன்களுடைய சுற்றத்தார்களும் தாராளமாகக் கொடுத்து நடத்தி விடுவார்கள்.

பையனுடைய வகுப்புக்கு உபாத்தியார் ஜவாப்தாரியாகவும், உபாத்தியாயர்களுடைய காலட்சேபத்திற்குப் பிள்ளைகளின் பெற்றோர்கள் ஜவாப்தாரிகளாகவும் பரஸ்பரம் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுவார்கள். ஒரு பையன் வீட்டில் ஏதாவது குற்றஞ் செய்துவிட்டாலும், அவன் படித்ததாகச் சொல்லும் பாடங்களில் கேட்ட கேம்விகளுக்குச் சரியான பதில் சொல்லாவிட்டாலும், உபாத்தியாயருக்குக் கொடுப்பதில் குறைத்துவிடுவார்கள். உபாத்தியாயர்கள் பெயரைச் சொன்னால் பையன்கள் நடுங்குவார்கள். சாப்பாட்டுக் கவலையென்பதே உபாத்தியாயர்களுக்குத் தெரியவே தெரியாது. உபாத்தியாயர் வீட்டுப் பெண்களோடு குடும்பக் கவலை நின்றுவிடும். எவ்விதத்திலும் அவைகள் உபாத்தியாயர் காதுக்கு எட்டவே எட்டாது. அக்காலத்தில் படிப்புச் செலவு இப்போதைய செலவுகளில் பதினாறில் ஒரு பங்கு கூட இருக்காது. இப்பொழுதோ பிள்ளைகள் கொடுக்கிற பணம் கணக்கு வழக்கில்லை. புத்தகம், காகிதம், பேனா, பென்சில், சித்திர சாமான், விளையாட்டுக் கருவி, இரசாயன சாமான், பெஞ்சு, நாற்காலி, மேசை, கட்டடங்கள் இவைகளுக்காகும் செலவுகளோ மக்கள் தாங்கமுடியாததாகப் போய்விடுகிறது. இதன்மேல் உபாத்தியாயர்களுக்குக் கொடுப்பதும் தாங்க முடியாததாகவே ஏற்பட்டு விடுகிறது.

சாதாரணமாக ஆரம்ப ஆசிரியர்கள் என்போருக்குக் கொடுக்கப்படும் சம்பளம் சில ஆபீஸ்களில் பியூன்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் கொடுக்கப்படுவதை விடக் குறைவாகத் தானிருக்கிறது. குழந்தை குட்டிகளோடு வாழ்கிற ஒரு குடும்பத்திற்கு 30 ரூபாயாவது இருந்தால் தான் கவலையில்லாமல் தன் காரியத்தைக் கவனிக்க முடியும். அதுகூட இல்லாமல் கஷ்டப்படுகிறதைப் பார்க்கும்பொழுது நமக்கு மிகவும் பரிதாபகரமாகத்தானிருக்கிறது.

பசுவைக் கொன்று செருப்புத் தானம் செய்வது போல்' நமது அரசாங்கத்தார்கள், சாராயத்தை விற்று அதில் வரும் இலாபத்தை எடுத்து கல்விக்காகச் செலவு செய்கிறார்கள்.ஆகவே இன்னும் கொஞ்சம் கல்வி சவுகரியமும், சம்பளச் சவுகரியமும் வேண்டுமானால் இன்னுங் கொஞ்சம் அதிகமாகக் கள், சாராயம் குடித்து, அதனால் அதிக வரும் படியை உண்டாக்கும் பொறுப்பை நம் தலையில் வைத்திருக்கிறார்கள். இம்மாதிரிக் குடியில் வரும் இலாபத்தினால்தான் படிப்புக்குச் செலவு செய்ய வேண்டும் என்று ஏற்படுமானால், நம் மக்கள் படிக்காமல் தற்குறியாக இருந்தாவது. உபாத்தியாயர்களெல்லாம் தெருவில் கல்லுடைத்து ஜீவனம் செய்து கொண்டாவது, கள் குடியை நிறுத்துவதே மேலானதென்பது என் அபிப்பிராயம்.

இம்மாதிரிப் படிப்பு வலுத்ததன் பலனாய் படிப்பின் அவசியமல்லாமல் வேறு வழியில் வாழக்கூடிய பெருத்த குடும்பங்களெல்லாம் பாழாகிப் போய்க்கொண்டே வருகின்றன. எவ்வளவுக்கெவ்வளவு உயர்தரப் பள்ளிக்கூடங்களென்பது அதிகமாகிக் கொண்டு வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதில் படித்த பெரும்பான்மைப் பிள்ளைகளின் குடும்பங்கள் கெட்டுக் கொண்டே வருகின்றன.

உதாரணமாக, பூமிகளின் சொந்தக்காரர்களின் பெயர்களைக் காட்டும் 'செட்டில்மெண்ட் ரிஜிஸ்டர்' என்னும் பதிவுப் புத்தகத்தை வாங்கிப் படித்தீர்களானால் அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். 40,50 வருஷங்களுக்கு முந்திய செட்டில்மெண்ட் ரிஜிஸ்டரிலுள்ள பூமிக்குச் சொந்தக்காரரின் பெயர்களை 10 வருஷத்துக்கு முன்னுள்ள புத்தகத்தைப் பார்ப்பீர்களானால் 100க்கு 75 பாகம் மாறிப் போய்த்தானிருக்கும். அக்காலத்தில் கவுண்டர், நாயக்கர், பிள்ளை, படையாச்சி, ரெட்டி, நாயுடு என்றிருப்பது போய், இப்பொழுது அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார், செட்டியார் முதலிய உத்தியோகஸ்தர்கள், வக்கீல்கள், வியாபாரிகள் ஆகியவர்கள் பெயருக்கே மாறியிருக்கும். காரணமென்னவென்றால் உயர்தரப் பள்ளிக்கூடம் வந்தவுடனே எல்லா பிள்ளைகளும் அதில் படிக்கச் சேர்ந்து விடுகிறார்கள். குடியானவர்களும், தங்கள் பிள்ளைகளை அதிலேயே சேர்த்துவிடுகிறார்கள். அந்தப் பிள்ளைகளுக்குப் படித்துத்தான் ஜீவனம் செய்யவேண்டுமென்கிற அவசியமில்லாததாலும், 'இந்தக் கூட்டங்களும் படித்துவிட்டால், உத்தியோகங்கொண்டே வாழவேண்டியவர்களாகிய நம்ம கூட்டத்தார் வாயில் மண் விழுந்து விடுமே' என்கிற பயங்கொண்ட உபாத்தியாயர்களாலும், இப்பிள்ளைகள் சரியாகப்படிக்க முடியாமல் 5,6 வருஷம் பெஞ்சுக்கு வாடகை கொடுத்ததோடு தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டும், சிகரெட், பீடி பிடித்துக்கொண்டும், வேடிக்கை உடைகள் தரித்துக்கொண்டும், பொறுப்பும் ஒழுக்கமுமற்ற சம்பாஷணைகள் பழகிக் கொண்டும், உல்லாசமாய்த் திரிந்து 2,3 தடவை பரீட்சையில் தோல்வியுற்று கடைசியாய் 'இனி படிப்பு வராது' என்கின்ற முடிவுடன் வீடுபோய் சேருகின்றார்கள்.

இந்தப் பட்டணவாசப் பள்ளிப் பழக்கமானது பட்டிக்காட்டு வாசத்துக்குச் சவுகரியமில்லாமல் வீடு, வாசல்களும், விவசாயப் பண்ணைகளும் தங்களுக்குப் பிடித்த மில்லாததாகி, நோக்கமெல்லாம் பட்டிணங்களிலேயே கொண்டுபோய் விடுகிறது. அல்லது, சிலருக்குப் பட்டிக்காட்டிலேயே பட்டணங்கள்போல் வீடுவாசல் கட்டி சுகமனுபவிக்க ஆசை ஏற்பட்டு விடுகிறது. இதன் மூலம் தங்கள் விவசாயம் கெடுவதோடும் தங்களுக்குச் சிரமமாய் வரும் பொரும் வருவாயும் கெடுவதோடு அதிகச் செலவும் ஏற்பட்டு அதன்மூலம் கடன்காரர்களாகி வீண் விவகாரங்களில் ஈடுபட்டுக் கடைசியாய் இக்குடும்பச் சொத்தானது விவகாரத்தில் அதிகாரிகளுக்கு இலஞ்சத்தின் மூலமாகவும், வக்கீல்களுக்குப் 'பீசி'ன் மூலமாகவும் லேவாதேவிக் காரர்களுக்கு வட்டியின் மூலமாகவும் போய்ச் சேர்ந்துவிடுகிறது. இந்தக் காரணங்களால் இவர்கள் பூமிகள் அவர்கள் பேருக்குப் பட்டாமாறுவதும் அல்லது அவர்கள் விலைக்கு வாங்குவதுமாய் முடிந்துவிடுகிறது. இனியும் ஒரு 50 வருஷத்திற்கு இக்கல்வி முறை இப்படியே இருக்குமானால் நமது பூமிகளெல்லாம் உத்தியோக வக்கீல் கூட்டத்தாருக்கும் லேவாதேவிக் கூட்டத்தாருக்குமே போய்ச் சேர்ந்துவிடும். இப்பொழுதுள்ள மிராசுதாரர்களின் பிள்ளைகளெல்லாம் அந்தக் கூட்டத்தாரிடம் பண்ணையாட்களாகவும் குடிவாரக் காரர்களாகவும் போய்ச் சேர வேண்டியதுதான்.

அரசாங்கத்தாரும் கல்விக்காகக் கோடிக்கணக்கான ரூபாய்ச் செலவு பண்ணுகிறார்கள். அவ்வளவும் உபாத்தியாயர்களுக்குப் போவதாயிருந்தால் உபாத்தியாயர்களுக்குக் கஷ்டமே இருக்காது. பணத்தையெல்லாம் கல்வியின் பெயரால் மேற்சொன்னபடி சாமான்களுக்கும், கட்டடங்களுக்கும் மற்றும் பாதிரிமார்களுக்கும் உயர்ந்த சம்பளம் பெறும் உபாத்தியாயர்களுக்கும், இவற்றை மேற்பார்வை பார்ப்பது என்பதாகப் பல பெரிய பெரிய சம்பளமும் உத்தியோகஸ்தர்களுக்குமே போய்விடுகிறது. இவ்வளவு செலவுகளையும் அனாவசியமாகச் செய்துவிட்டு ஆரம்ப ஆசிரியர்களையும் பட்டினி போட்டுவிட்டு இந்த ஆசிரியர்களை ஆடுமாடுகளைவிடக் கேலமாகவும் மதிக்கிறார்கள்.

ஜனப்பிரதிநிதிகள் என்கிற சட்டசபை அங்கத்தினர்கள் முதலிய அரசியல் வாழ்வுக்காரர்களோ உங்களிடம் வரும் போது உங்களிடத்தில் ரொம்பவும் அனுதாபம் உள்ளவர்கள் போல் காட்டிக் கொண்டு,உங்களுக்குச் சம்பளம் 40 ரூபாய் வேண்டும். 50 ரூபாய் வேண்டும்! என்ற ஆசை வார்த்தை சொல்லி உங்களைதிருப்தி செய்து உங்களால் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஓட்டுக்களைப் பெற்றுக் கொண்டு போய்விடுகிறார்கள். பொது ஜனங்களிடம் போகும் போது அவர்களைப் பார்த்து, சர்க்கார் அதிக வரிவசூல் பண்ணுகிறது. அனாவசியமாய் அதிகமான ஆம் அம்புகள் வைத்து அரசாங்கச் செலவைப் பெருக்கி விட்டது. நாங்கள் போய்ச் சம்பளத்தையும் செலவையும் குறைத்து உங்களுக்கு வரியைக் குறைக்கிறோம் என்று மேடைமேல் நின்று பேசிவிடுகிறார்கள். உங்களிருவரையும் ஏமாற்றி சட்டசபையில் போய் உட்கார்ந்து கொண்டு உங்களுக்கும் அவர்களுக்கும் திருப்தி ஏற்படும்படியாக ஏதோ இரண்டு கேள்வி கேட்டதாகப் பாவனை காட்டிவிட்டு உங்களையும் பொது ஜனங்களையும் வஞ்சிக்கிற காரியங்களுக்காகச் சர்க்காருக்கு உள் உளவாய் இருந்து தங்களுக்குப் பெருமையும், உத்தியோகங்களும், பதவியும் கிடைப்பதற்கும் தங்கள் சொந்தக் காரியங்கள் ஏதாவது சாதித்துக் கொள்வதற்கும் ஆளாகிவிடுகிறார்கள்.

வரி குறைப்பதும், சம்பளம் கூட்டுவதும் ஒன்றுக்கொன்று பொருந்தாத விஷயம். வரியையும் குறைத்து, உங்கள் சம்பளத்தையும் உயர்த்த வேண்டுமானால் பெரிய உத்தியோகஸ்தர்களுடைய சம்பளத்தையும், நான் மேலே சொன்ன வீண் செலவுகளையும் குறைக்கும்படி சொல்லுவதற்கு இவர்களுக்குத் தைரியம் வேண்டும். இவர்களே மாதம் ரூ.2000,3000,4000, 5000 சம்பளம் வாங்கிக் கொண்டு மந்திரி, தலைவர் முதலிய பதவிகளுக்கு ஆசைப்பட்டுக் கொண்டு, இவர்களே இப்பேர்ப்பட்ட பதவிகளை மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்து, அவர்களை ஆதரித்தும் அதன் மூலம் தாங்கள் பிழைக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டும், இவர்களுடைய செலவுக்கே தினம் 10,15,40,50 வேண்டுமென்று சர்க்காரை கேட்டுக்கொண்டு, இவர்கள் போக்குவரத்துக்கே முதலாவது, இரண்டாவது வகுப்பு, இரட்டைப் படிகள் வாங்கிக் கொண்டும், இவர்கள் நடவடிக்கை நடத்தும் கூட்டங்களுக்கே 2 இலட்சம் , 3 இலட்சம், 2 கோடி, 4 கோடி, அனுமதித்துக் கொண்டு இராஜபோகமனுபவிப்பவர்கள், வேறு யாருடைய எந்தச் செலவைக் குறைத்து, வரி உயர்த்தாமல், உங்களுக்குச் சம்பளத்தை அதிகப்படுத்தக்கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகவே இவ்வித அரசியல் புரட்டுகள் நமது நாட்டிலுள்ளவரையிலும், உங்களைப் போன்றவர்கள் இவர்களை ஆதரித்து இப்புரட்டர்களை மரியாதை செய்கிற வரையிலும் உங்களுக்கு மாத்திரமல்ல; இந்த நாட்டுக்கே விமோசனம் இல்லையென்பதுதான் என் அபிப்பிராயம். இனியாவது இந்த அரசியல் புரட்டர்களின் சூழ்ச்சிகளிலிருந்து தப்புவீர்களென்று எதிர்பார்க்கின்றேன்.

--------------------போளூரில் 24,4,1927ல் நடந்த ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில் தந்தைபெரியார் அவர்களின் சொற்பொழிவு -நூல்:"பகுத்தறிவுச் சுடரேந்துவீர்!"

0 comments: