Search This Blog

4.9.09

இலங்கையினால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பேராபத்து!


இந்தியா சிந்திக்குமா?

இலங்கையினால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பேராபத்தினை இந்தியா அடிக்கடி கூறிவரும் அந்த இறையாண்மைக்குப் பேரிடரை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கடந்த 2 ஆம் தேதி சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான ரயில் மறியல் போராட்டத்தின்போது சுட்டிக்காட்டினார்.

இந்தியாவை அச்சுறுத்துவதற்காகக் கூறப்பட்டதல்ல இது. உண்மையான யதார்த்தமான தகவல்களின் அடிப்படையில் கூறப்பட்ட கருத்தாகும்.

இந்தியாவின் எல்லையில் சீனாவின் அச்சுறுத்தல் இருந்துகொண்டேதான் உள்ளது.
சிக்கிம், பிங்கர் பகுதிகள் தங்களுக்குச் சொந்தம் என்றே சீனா கூறிக்கொண்டு இருக்கிறது. இலங்கையின் ஆதரவு சீனாவுக்குக் கிட்டினால் இந்தியாவை அச்சுறுத்துவதற்குப் பெரிதும் பயன்படும்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் அம்பாந்தோட்டையில் வணிகத்துக்குப் பயன்படக் கூடிய துறைமுகத்தை சீனா உருவாக்கி வருகிறது. இதனைக் கடற்படைத் தளமாக மாற்றுவது ஒன்றும் கடினமானதல்ல.

இலங்கையில் காலடி எடுத்து வைத்ததன்மூலம் இந்தியாவின் மிக அருகில் சீனா வந்துவிட்டதாகக் கருதவேண்டும்.

மன்னார் வளைகுடா கரையில் அமைந்திருக்கும் நகரான புத்தளத்திற்கு அருகில் உள்ள நோரோச்சோலை என்னும் இடத்தில் 900 மெகாவாட் திறனுடைய அனல் மின் நிலையம் ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்குச் சீனாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. கட்டுமானப் பணிகளும் 2006 மே மாதத்தில் தொடங்கப்பட்டுவிட்டன.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், இந்தக் கட்டுமானப் பணி 2004 டிசம்பரில் இந்தியாவின் தேசிய அனல் மின் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒன்றாகும்.
அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, சீனாவுக்கு இலங்கை அளிக்கிறது என்றால், இதன் உள்நோக்கம் என்ன என்பதை இந்தியா புரிந்துகொண்டிருக்க வேண்டாமா?

தமிழ்நாட்டில் சேது கால்வாய்த் திட்டத்திற்கு வெகு அருகில் உள்ள ஒரு முக்கியமான திட்டம் சீனாவின் கைக்குப் போய்ச் சேர்ந்துள்ளது (வெறும் 70 கிலோ மீட்டர் இடைவெளிதான்).
அடுத்து மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியத் துரப்பணப் பணிகளுக்காக சீனாவுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சேது கால்வாயின் நுழைவாயிலிலிருந்து இது வெறும் 20 கிலோ மீட்டர் தூரம்தான்.

இது ஒரு பக்கம் என்றால், பாகிஸ்தானிடம் நேசக்கரம் நீட்டி விட்டது இலங்கை அரசு. தலிபான்களுடன் போரிடுவதற்கு பாகிஸ்தான் இராணுவத்துக்கு இலங்கை அரசு பயிற்சி அளிக்கப் போகிறதாம்.

விடுதலைப்புலிகளை வீழ்த்துவதற்குப் பயன்பட்ட ஆயுதங்கள் பெரும்பாலும் சீனாவிடமிருந்தும், பாகிஸ்தானிடமிருந்தும் பெறப்பட்டவைதான்.

இதன்மூலம் இந்தியாவைச் சுற்றி சீனா, பாகிஸ்தான், இலங்கை என்னும் மூன்று நாடுகளும் கைகோத்துக் கொண்டு உறுமிக் கொண்டிருக்கின்றன.

இது இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் இல்லையா? இப்படியிருந்தும் கூட இலங்கை சிங்களப் பேரினவாத அரசுக்கு இந்தியா நல்ல பிள்ளையாக நடந்துகொள்ள வேண்டும் என்று கருதுகிறது என்றால், இதில் என்ன ராஜ தந்திரம் தான் வழிகிறது என்றுதான் விளங்கவில்லை.

சீனாவோடு சேர்ந்துகொண்டு, அய்.நா.வில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நடந்துகொள்வது கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையில் சொறிந்து கொள்வது ஆகாதா?
இந்தியாவுக்குப் பயந்து கொண்டிருந்த இலங்கை அரசின் அண்மைக்காலப் போக்குகள் வேறு விதமாகத் தொனிக்க ஆரம்பித்துவிட்டன. இது இந்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட தோல்வியாகத்தான் கருதவேண்டும். இதற்குமேல் இலங்கையைத் தாஜா செய்யும் நடவடிக்கையில் இந்தியா இறங்குமானால், இந்தியாவின் சுயமரியாதைக்குக் கூடப் பங்கம் விளைவிப்பதாகவே உலக நாடுகளும் கருதும்.

ஈழத் தமிழர்ப் பிரச்சினையை மய்யப்படுத்தி, இதற்கு ஆதரவு தரும் நாடுகளை ஒருங்கிணைத்து இந்தியா புதிய பார்வையுடன் செயல்படத் தொடங்குமேயானால், ஈழத் தமிழர்களுக்கும் சரி, இந்தியாவுக்கும் சரி அனுகூலமாக இருக்கும்.
இந்தியா சிந்திக்குமா?

-------------------"விடுதலை" தலையங்கம் 4-9-2009