Search This Blog

15.9.09

பெரியார் சிந்தித்தார் - அண்ணா செயல்படுத்தினார்


பெருந்தகையர் பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும்

அறியாமை என்னும் காரிருள் கப்பிக் கொண்டு, ஜாதிவெறி_ சமயவெறி_ கடவுள் பக்திவெறி_ மூடப்பழக்கவழக்கம் குருட்டு நம்பிக்கை போன்ற நச்சுக் கிருமிகள் நடமாடிக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் _ பகுத்தறிவொளி பரப்பி அறியாமையிருளை அகற்றிடவும், நலிவு பயக்கும் நச்சுக் கிருமிகளை நசுக்கிடவும், செஞ்ஞாயிறு போன்ற பெருந்தகையர் பெரியாரும், முழு வெண்ணிலவு போன்று பேரறிஞர் அண்ணாவும் தோன்றினார்கள்.

ஞாயிற்றின் கடுமையான கதிர்களை வாங்கி, அவற்றைத் தண்ணொளி நிலவாகத் தருவது திங்களது இயல்பு. அதுபோன்று பெரியாரின் கடுமையான பகுத்தறிவு நெறிக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கருத்துகளையும் வாங்கி, அவற்றை எளிய அழகிய இனிய மென்மையான நல்ல தமிழில் நாட்டு மக்களுக்கு வழங்கி பெருமை பேரறிஞர் அண்ணா அவர்களைச் சாரும்.

ஞாயிற்றுக்கிழமையை அடுத்துத் திங்கள்கிழமை நிற்பதைப் போல், பெரியாரை அடுத்து அறிஞர் அண்ணா எப்பொழுதும் திகழ்ந்து வந்தார்.

தமிழின மக்கள் அறிவுடையவர்களாக, ஆற்றலுடையவர்களாக, மானமுடையவர்களாக, இனப்பற்றுக்கொண்டவர்களாக, மொழிப்பற்று மிகுந்தவர்களாக, பகுத்தறிவு நெறியைப் பின்பற்றுபவர்களாக, சிந்தனை செய்பவர்களாக, சீர்தூக்கிப் பார்ப்பவர்களாக, உண்மை ஒழுக்கம் நாணயம் நேர்மை ஆகியவற்றினிடத்து மதிப்புக்காட்டுபவர்களாக, பண்பாடுகளிலே அக்கறை கொண்டவர்களாக, பொதுத்தொண்டுகளில் நாட்டங்கொண்டவர்களாக ஆவதற்கு இருபதாம் நூற்றாண்டிலே அடிப்படையாக விளங்கியவர்களும், உறுதுணையாக நின்றவர்களும் பெரியாரும் அவர் வழி வந்த அறிஞர் அண்ணா அவர்களுமே ஆவார்கள்.

சாக்ரடீசுக்குப் பிளேட்டோ எப்படித் தலை மாணாக்கரோ, காரல் மார்க்சுக்கு மாவீரர் லெனின் எப்படியோ, அண்ணா காந்தியடிகளுக்குப் பண்டித நேரு எப்படியோ, அப்படியே பகுத்தறிவுப் பெருந்தகையர் பெரியார் ஈ.வெ.ரா.இராமசாமி அவர்களுக்குப் பேரறிஞர் அண்ணா அவர்களும் விளங்கினார்கள்.

சீரிய முதியோர்கள் சிந்திக்கிறார்கள்; சிறிய இளையோர் செய்து முடிக்கிறார்கள் என்பது பழமொழி. காரல்மார்க்ஸ் சிந்தித்தார்; மாவீரன் லெனின் செயல்படுத்தினார். அதுபோல பெரியார் சிந்தித்தார்; பேரறிஞர் அண்ணா அவர்கள் செயல்படுத்தினார்கள்.

வேண்டத்தகாத கருத்துகளையும் செயல்பாடுகளையும், போக்குகளையும், நிகழ்ச்சிகளையும் பெரியார் அவர்கள் கடுமையாகத் தாக்கி, வன்மையாகச் சாடினார்கள். அறிஞர் அண்ணா அவற்றையெல்லாம் எளிமையாகச் சொல்லி, அவற்றிலிருந்து விலகும்படி மென்மையாகக் கூறினார்கள்.

பெரியார் அவர்கள் விரும்பத்தகாத பழமை என்னும் பாறைகளைப் பீரங்கி வைத்துப் பிளந்து எறிந்தார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் பிளவுபட்டு விழுந்த கற்களையெடுத்து அவற்றைப் பயன்படும் அழகான பதுமைகளாகச் செதுக்கிக் காட்டினார்கள்.

பெரியார் அவர்கள் பெருங்கடப்பாரை கொண்டு குருட்டு நம்பிக்கைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் உடைத்தெறிந்தார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் சிற்றுளி கொண்டு செதுக்கினார்கள்.

பெரியார் அவர்கள் பசும்பாலைப் பச்சையாகக் கறந்து தந்தார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் அதனைக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து வெண்ணெய் எடுத்து நெய்யாக உருக்கித் தந்தார்கள்.

பெரியார் அவர்கள் பகுத்தறிவு மலர்களைச் சுட்டிக்காட்டினார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் அவற்றிலிருந்து தேனை எடுத்துக் கொடுத்தார்கள்.

பெரியார் அவர்கள் பகுத்தறிவு விதைகளை ஊன்றிச் செடிகளாக வளர்த்தார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் அவற்றை மரங்களாக்கி கனிகளைக் குலுங்கச் செய்தார்கள்.

பயன்படாத பழமை உலகை வேரொடும் வேரடி மண்ணோடும் அழித்தொழிக்கத் தலைப்பட்டவர் பகுத்தறிவுப் பெருந்தகையர் பெரியார் ஆவார். பயன்படக்கூடிய புதிய உலகை அழுத்தந்திருத்தமாக அமைக்க முற்பட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

பெரியார் துவக்கப்பள்ளியோடு படிப்பை நிறுத்தியவர். அறிஞர் அண்ணா பல்கலைக் கழகப் படிப்பை முடித்தவர். ஆனால் இருவரும் அறிவின் ஊற்றுக்கண்களாக விளங்கியவர்கள். அய்ந்தாவது வரை படித்த பெரியாரை, எம்.ஏ வரையில் படித்த அறிஞர் அண்ணா அவர்கள் ஈடும் எடுப்புமற்ற ஒரு பெருந்தலைவராகக் கொண்டாரென்றால், அந்த அளவுக்குப் பெரியாரின் அறிவாற்றல் திறனை அறிஞர் அண்ணா போற்றிப் பாராட்டி, வரவேற்று, வழிபட்டு நின்றார். நான் என் வாழ்நாளில் ஒரே ஒரு தலைவரைத்தான் கண்டேன். அவரைத்தான் என் தலைவராகவும் கொண்டேன். அவர்தான் பெரியார் என்று அறிஞர் அண்ணா குறிப்பிட்டுள்ளதிலிருந்து, பெரியாரிடத்தில் அறிஞர் அண்ணா எத்துணையளவு மதிப்பு வைத்திருந்தார் என்பதை அறியலாம்.

பெரியாரை அறிஞர் அண்ணா அவர்கள் இறுதி வரையில் தம்முடைய வளர்ப்புத் தந்தையாகவே கருதிவந்தார். அதுபோல அறிஞர் அண்ணா அவர்ளைப் பெரியார் அவர்கள் தம்முடைய வளர்ப்பு மகனாகவே கருதினார்கள்.

பெரியார் பெரும் பணக்காரராக இருந்தபோதிலும், அந்தப் பணத்தைக் கொண்டு பெருஞ்சொத்து சேர்க்கும் நோக்கத்தைக் கொள்ளாமல் பொதுநலத்தொண்டே உயிரெனப் பாடுபட்டு வந்தார். அதுபோலவே அறிஞர் அண்ணா பெரும் படிப்பாளியாக இருந்தபோதிலும், பெருஞ்சொத்துத் திரட்ட வேண்டும் என்ற எண்ணமில்லாமல், பொதுநலத்தொண்டு புரிவதே தம் வாழ்க்கையின் குறிக்கோள் என்று கருதினார்.

பெரியாரின் கனவுகள் பலவற்றை நனவாக்கிய பெருமை அறிஞர் அண்ணா அவர்களுக்கு உண்டு. பெரியாருக்கு இருந்த எல்லாவித எதிர்ப்புகளையும் தகர்த்தெறிந்து, பொதுமக்களின் ஆதரவையும், அரவணைப்பையும், நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெரியாரின் கொள்கைகளின் பக்கம் ஈர்த்து, கொள்கைக்கும் கட்சிக்கும் வெற்றி தேடித்தந்து, பெரியாரின் கொள்கைகளை ஆட்சிமனை ஏற்றிப் பெரியாருக்குப் பெருமையையும், பெரும்புகழையும் ஈட்டித் தந்தவர் அறிஞர் அண்ணா.

பெரியார் அறிஞர் அண்ணா ஆகிய இருவருமே ஆடம்பரத்தை, பகட்டை, படோடோபத்தை, ஆரவாரத்தை, போலித்தன்மையை, வன்முறைப் போக்கை, அடிமைத் தன்மையை, அடக்கும் தன்மையை, சூது_ சூழ்ச்சியை எப்பொழுதுமே விரும்பியதில்லை.


பெரியாரிடத்தில் பணம் உண்டு, அறிஞர் அண்ணாவிடத்தில் பணம் இல்லை. ஆனால் இருவருமே போற்றத் தகுந்த சிக்கனக்காரர்கள். இருவருமே பாராட்டுதலுக்குரிய பண்பாடுகள் நிறைந்தவர்கள்.

இவற்றைக் கால வருங்காலத் தமிழ்ச்சமுதாயத்திற்குப் பகுத்தறிவுப் பெருந்தகையர் பெரியார் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆகிய இருவருமே இணைபிரிக்க முடியாத எடுத்துக்காட்டுகளாவர்; வழிகாட்டிகளாவர்

------------------டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் "தமிழரசு", செப்டம்பர் 2002 இல் எழுதிய கட்டுரை

0 comments: