Search This Blog

13.9.09

பெரியார் சிலையைப் பார்த்தாலே வாலைச் சுருட்டிக் கொள்ளும் பார்ப்பனியம் !


எங்க ஊரு அய்யா சிலை

தந்தை பெரியார் சிலை வேடசந்தூர்
திறப்பாளர் _ மானமிகு. கி. வீரமணி
தலைமை _ மானமிகு ந. திருமலைசாமி
முன்னிலை _ மானமிகு. சி. மாரியப்பன் (வேடசந்தூர் ஒன்றிய ப.க.தலைவர்) நாள்_26.11.1995 _அமைவிடம் _ பேருந்து நிலைய நுழைவு வாயில் வேடசந்தூர்
பெரியாருக்கும் சரி, பெரியாரியத்துக்கும் சரி இலவச விளம்பர ஸ்பான்சர்கள் யாரென்றால் அன்று தொட்டு இன்று வரை இந்துத்துவா அமைப்புகள்தான். நாடு முழுவதும் மிகப்பெரிய அளவுக்கு அச்சு ஊடகத்தை கைக்கொண்டிருந்த இந்துத்துவா அமைப்புகள் திட்டமிட்டு பெரியாரையும், பெரியாரியத்தையும் இருட்டடிப்பு செய்தன. ஆனால், பெரியாரின் அணுகு முறை பார்ப்பனியத்தை நிலை தடுமாறச் செய்தது. பத்திரிக்கைகள் மூலமாகத்தான் மக்களிடம் செல்ல வேண்டுமா? பெரியாரே மக்களிடம் சென்றார். பிரச்சாரம் செய்தார். மக்களை உணர்ச்சி கொள்ளச் செய்தார்.
தமிழ்நாட்டின் சந்து பொந்து, இண்டு இடுக்கு எல்லாம் பெரியாரின் தள்ளாத கால்கள் தளராமல் நடந்து, நடந்து அவர் கால்தடங்கள் படாத இடங்களே இல்லை எனும் அளவுக்கு மக்களை சந்தித்தார். அதன் விளைவாய் மக்கள் கொதித்தெழுந்தனர்.

தங்கள் ஆதிக்கம் பறிபோகிறதே என்கிற பதைபதைப்பு இந்துத்துவாதிகளின் மூளையை மழுங்கடித்துவிட, பெரியாருக்கு எதிராக காய் நகர்த்துகிறோம் என்று கொக்கரித்திருந்தவர்கள் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக மேட் (MATE) ஆகிக்கொண்டே வந்திருக்கின்றனர். இதில் உடம்பெல்லாம் மூளை என்று மிகைப்படுத்தி பேசப்பட்ட ராஜாஜியும் தப்ப முடியவில்லை. பெரியாரை எதிர்கொள்ள முடியாமல் கொல்லைப்புறம் வழியாக ஓடிப்போனார்.

எதையெதையோ தின்று ஜீரணித்து கொழுத்துத்திரிந்த இந்துத்துவாவில் பெரியாரையும், பெரியாரியத்தையும் ஜீரணிக்க முடியவில்லை. ஆட்டம் வராவிட்டால் ஆடுகின்றவனை அடி என்கிற தப்பாட்டத்தினால் சரியாக ஆடிய பெரியாரை கருத்து ரீதியாக எதிர் கொள்ள முடியாமல் கருத்து சிறுத்தும் _ சீரழிந்தும் போய்க் கொண்டிருக்கிறது.

அப்படி பார்ப்பனிய எதிர்ப்பில் முகிழ்த்துக் கிளம்பிய மொட்டான (பெரியாரியம்) மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்க, அந்த மலர்களில் ஒன்றாக திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூரில் அமைந்துள்ள பெரியார் சிலை முகிழ்த்த போது எழுந்த எதிர்ப்புதான் இந்த வார, எங்க ஊரு அய்யாசிலை.

என்னையும் கடவுளாக்கி விடுவார்கள். ஆகவே , கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்ற வாசகங்களுடன் சிலைகளை அமையுங்கள் என்று பெரியார் இட்ட கட்டளைப்படி திண்டுக்கல் வேடசந்தூரிலும் அய்யாவிற்கு சிலை தயாரானது. முறைப்படி இடம் தேர்வு செய்யப்பட்டு, முறைப்படி அனுமதியும் பெறப்பட்டு நிகழ்ச்சிக்கு தயாராக இருந்த நிலையில், எதைத் தின்றால், பித்தம் தெளியும் என்கிற மந்த நிலையில் இருந்த இந்துத்துவாவின் அரசியல் வடிவில் இருந்த பி.ஜே.பி. ஆஹா! பெரியார் சிலையா? கூடாது? கூடாது? என்று காவல் துறையை அணுகி , ஊரில் எந்த சிலையும் கிடையாது. ஆகவே புதிதாக சிலை வைக்க வேண்டிய தேவையில்லை அதுவும் பெரியார் சிலை கூடவே கூடாது என்று முறையிட்டனர்.

இது போதாதா தோழர்களுக்கு. ஆண்டாண்டு காலமாய் பிடிவாதமாய் குடியிருக்கும் பார்ப்பனியத்தை கிளப்பத்தானே பெரியார். இப்பொழுதுதான் மீன் புழுவைக் கடித்திருக்கிறது; தூண்டிலையும் கடிக்கட்டும் என்று காத்திருந்து , கடித்தவுடன் தகவலை அப்போது பொதுச் செயலாளராக இருந்து தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கும் எட்டச் செய்தனர். அவரும் முறைப்படி சம்மந்தப்பட்ட மாவட்ட கண்காணிப்பாளருக்கு கொண்டு சென்றார். பிறகு, குறித்த நேரத்தில், குறித்த நாளில் பெரியார் சிலை மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியோடு அமர்க்களப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

சிலை திறக்கப்பட்ட பிறகு பி.ஜே.பி யின் நிலை என்ன தெரியுமோ? முகத்தைக் கொண்டு போய் வேறெங்கோ வைத்துக் கொண்டது.

அதுசரி, பலித்தவரைதானே பார்ப்பனியம். கெஞ்சினால் மிஞ்சுவார்கள்; மிஞ்சினால் கெஞ்சுவார்கள் பெரியாரை மட்டுமல்ல, பெரியாரின் சிலையைப் பார்த்தாலே போதுமே பார்ப்பனியம் வாலைச் சுருட்டி கால்களுக்குள் வைத்துக் கொள்ளுமே!

------------------------தகவல்: சி.மாரியப்பன் (வேடசந்தூர் ஒன்றிய ப.க. தலைவர்) - நன்றி:-"விடுதலை" ஞாயிறுமலர் 22-8-2009

0 comments: