Search This Blog

25.9.09

பெரியாரின் விடுதலை பத்திரிகை இல்லாதிருந்தால்...

ஒரு வரலாற்றுப் பெட்டகம்

ஓர் இனத்தின் விடுதலைக்காகக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கி வரும் ஓர் ஏடு 75 ஆண்டுகளை எட்டியிருக்கிறது! இதழியல் வரலாற்றில் இஃதோர் இமாலயச் சாதனையாகும்! அந்தப் பெருமைக்குரிய ஏடு விடுதலைதான். அதைப் போலவே விடுதலை ஏட்டின் ஆசிரியராக 47 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றித் தமிழ் மக்களால் எங்கள் ஆசிரியர் என்று அன்போடு அழைக்கப் படும் பெருமைக்குரியவர் தமிழர் தலைவர் மானமிகு டாக்டர் கி.வீரமணி அவர்களே ஆவார்கள்.

இதழியல் வரலாற்றில் புகழ் ஏணியின் உச்சியிலிருந்த ஏடுகள் பல இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. (எடுத்துக்காட்டு Illustrated weekly)இன்னும் சில ஏடுகள் தோன்றுவதும் மறைவதுமாக நடக்க முடியாமல் பயணித்துக் கொண்டுள்ளன. ஆனால் உலகின் ஒரே நாத்திக நாளேடான விடுதலை 75 ஆண்டுகளாக இடை முறிவின்றி வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. விடுதலை ஏட்டின் நோக்கமும் தந்தை பெரியாரின் கடின உழைப்பும், விடுதலையின் தேவையை உணர்ந்து அதனைப் போற்றிப் புரந்து வரும் தமிழ் மக்களின் கொள்கை உறுதிப்பாடும் இதற்குக் காரணிகளாக அமைகின்றன.

விடுதலை பவளவிழா மலரின் சீர்மையைப் பற்றிய செய்திகளை வாசக அன்பர்களுக்கு எடுத்துக் காட்ட விரும்புகிறோம். பக்கந்தோறும் மணக்கும் பவள விழா மலரில் எண்ணிலடங்காத வரலாற்றுச் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பவள விழா மலரை உருவாக்கிய தலைவர்களின் கடினமான உழைப்பு மலரைக் கையில் எடுத்தவுடனேயே புலனாகி விடுகிறது. நம்மில் பலர் மறந்துவிட்ட வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கும் அறிவுத் திறம் வியந்து வியந்து பாராட்டுவதற்குரியதாகும்.

விடுதலையின் நோக்கம்

பவளவிழா மலரைத் திறந்து பார்க்கும் முன்பாக அட்டைப் படத்தில் தந்தை பெரியார் கம்பீரமாக அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் காட்சி நம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து கொள்கின்றது. மலரைத் திறந்தவுடன் அய்யா விடுதலையைப் படிக்கும் காட்சி! அதற்குக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புத்தான் மிகமிக இன்றியாமையாதது. விடுதலை ஏடு எதற்காகத் தோன்றியது? யாருக்காகப் பணியாற்றியது? என்னும் வினாக்களுக்குத் தந்தை பெரியார் விடையளிக்கிறார்.

ஒழுக்கக்கேடானதும் மூட நம்பிக்கைகளை வளர்க்கக் கூடியதும் தமிழ் மக்களுக்குச் சமுதாயத்திலும் அரசியலிலும் உத்தியோகத் துறையிலும் கேடு அளிக்கக் கூடியதுமான காரியங்களை வெளியாக்கி அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பாடுபடும் பத்திரிகை விடுதலை, விடுதலை பத்திரிகை இல்லாதிருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை ஏன் என்று கேட்க நாதியே இல்லாமல் போயிருக்கும்.

(ஈ.வெ.ரா. விடுதலை, 16.6.1964)

சமுதாயத் துறையிலும், அரசியல் துறையிலும் அதிகாரத் துறையிலும் தமிழ் மக்களுக்குக் கேடுகளை விளைவித்தது பார்ப்பனியம். இதனை வெளியாக்கியது விடுதலைதான்! மேலும் ஒழுக்கக்கேட்டையும் மூடநம்பிக்கைகளையும் பார்ப்பனியம் இடைவிடாது இத்துறைகளில் பரப்பி வந்தது. எங்கெல்லாம் பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்துகிறதோ அங்கெல்லாம் ஒழுக்கக்கேடும், மூட நம்பிக்கையும் மலிந்து கிடக்கும் என்பதைத் தந்தை பெரியார் எவ்வளவு நுட்பமாகப் புலப்படுத்துகிறார்! தமிழ் மக்களுக்குப் பார்ப்பனர்களால் இழைக்கப்பட்ட கேடுகளை விடுதலை இல்லாமலிருந்தால், ஏன் என் கேட்பதற்கு நாதியே இல்லாமல் போயிருக்கும் என்று தந்தை குறிப்பிடுவதனால் விடுதலை, மட்டுமே கேடுகளை ஒழிப்பதற்குத் தனித்து நின்று ஒரு தனிப் போராளியாகக் களத்தில் நின்று போராடியது என்பது புலனாகும்.

கொள்கைக்காக நடத்தப்பெறும் ஏடுகள் எந்த நாட்டிலும் நிலைத்து நிற்பது கடினம். அறிவியலைப் பரப்பும் ஏடுகளுக்கும் நிலையாமை உண்டு. ஆனால் பெரியாரியல் எனும் அறிவியல் நெறியை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்காகவே தன்னை ஒப்படைத்துக்கொண்டதனால் விடுதலை, காலத்தைக் கடந்து நிற்கிறது. விடுதலையின் ஆசிரியர், தமிழர் தலைவர் மிகச் சரியான, மிகப் பொருத்தமான சொற்களில் கூறுவதைக் கேளுங்கள்:

இது (விடுதலை) தனியாரின் உடைமையல்ல; தமிழ்ப் பெருங்குடி மக்களின் பொதுச்சொத்து. திராவிடர்களின் தெளிந்த நல் பாதுகாப்பு அரண். (பவள விழா மலர், பக்கம் 024)

விடுதலையின் ஆசிரியர்கள்

புகழ் வாய்ந்த அறிஞர் பலர் விடுதலையின் ஆசிரியர்களாக விளங்கியுள்ளனர். டி.ஏ.வி.நாதன், பண்டித முத்துசாமிப் பிள்ளை, அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி, தமிழ் மறவர் பொன்னம்பலனார், அய்யாவின் வரலாற்றாசிரியர் சாமி சிதம்பரனார், அன்னை மணியம்மையார், டாக்டர் கி.வீரமணி என்று ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அறிஞர்கள் விடுதலையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்துள்ள செய்தி இப்பெருமக்களின் படங்களுடன் இடம் பெற்றுள்ளது. இவர்களை நேரில் பார்த்தறியாத இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பினை பவள விழா மலர் வழங்கியுள்ளது பாராட்டத்தக்கது. ஒரு வரலாற்று ஆவணத்தைப் படத்துடன் பார்த்து மகிழும் பேறு நமக்குக் கிடைக்கின்றது. எப்பேர்ப்பட்ட அறிஞர்களையெல்லாம் தந்தை பெரியார் ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி விடுதலையை அழகுபடுத்திப் பார்த்திருக்கிறார் என்பதை அறியும்போது அய்யாவின் அருமைப்பாடு நமக்குப் புலனாகிறது!

வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிக்கை

10.8.1962 ஆம் நாளன்று வரவேற்கிறேன் என்ற தலைப்பில் தந்தை பெரியார் வெளியிட்டுள்ள அறிக்கை வரலாற்றுச் சிறப்புடையதாகும். இந்த வரலாற்று ஆவணத்தில் தன்னலம் மறுத்துப் பொது நலம் விழைந்த மூன்று பெருமக்களைப் பற்றிய அருமைப்பாடு மிக்க செய்திகளைத் தந்தை பெரியார் தமிழ் மக்களுக்குத் தெரிவிக்கிறார்.

(1) ஆனைமலை நரசிம்மன்: செல்வம் கொழிக்கும் தனது தோட்டங்களையும் வயல்வெளிகளையும் தன் மக்களுக்கு ஒதுக்கிக் கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி அய்யாவிடம் வந்து சேர்ந்தவர் ஆனைமலை நரசிம்மன்.பி.ஏ. இவரைக் கழகத்தின் மத்திய கமிட்டிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்க எண்ணிய தந்தை பெரியார், முதலில் கழகப் பொதுச் செயலாளர் ஆக்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக ஆனைமலை நரசிம்மன் அவர்களின் மூத்த மகனுக்கு உடல்நலம் சரியில்லாமற் போகவே அவர் ஆனைமலை திரும்பவேண்டியதாகி விட்டது.

(2) கடலூர் கி. வீரமணி எம்.ஏ., பி.எல்.: தந்தை பெரியார் தொடர்ந்து அந்த அறிக்கையில் எழுதுகிறார். என் உடல் நிலை எனக்குத் திருப்தி அளிக்கத் தக்கதாய் இல்லை. இப்போது போல் சுற்றுப் பயணம் செய்ய என்னால் இனி முடியாது. கழகத் தொண்டுக்கு முழுநேரம் ஒப்படைக்கக்கூடிய தோழர்கள் இல்லை. பிரச்சாரத்திற்கும் அப்படிப்பட்ட தோழர் இதுவரை கிடைக்கவில்லை. பத்திரிகைக்கும் அப்படிப்பட்ட தோழர் கிடைக்க வில்லை. இப்படிப்பட்ட நிலையில் கழக விஷயமாய் நான் நீண்ட நாளாகப் பெருங்கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். இந்த நிலையில் தோழர் வீரமணி அவர்கள், நான் உட்படப் பலர் வேண்டுகோளுக்கும் விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழுநேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகைத் தொண்டையும் பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு தொண்டாற்ற ஒப்புக் கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கு வந்துவிட்டார். இது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி திரு.வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மையைச் சொல்கிறேன். தோழர் வீரமணி இந்த முழுநேரத் தொண்டிற்கு இசையா திருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி வாரப் பத்திரிகையாகத் திருச்சியில் அல்லது ஈரோட்டில் இருந்து நடத்த முடிவு செய்திருந்தேன்.



தந்தை பெரியார் பயன்படுத்தியுள்ள சொற்களை அன்பர்கள் ஊன்றிக் கவனிக்கவேண்டும்.


இது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு; இந்த நற்செய்தி இவற்றால் தந்தை பெரியார், தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் வருகையால் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது புலனாகும்.

தோழர் இமயவரம்பன்: தோழர் இமயவரம்பன் மாதம் 150 ரூபாய் வரை (அந்தக் காலத்தில்) சம்பள வருவாயை விட்டு, தனது குடும்பப் பெரிய சொத்து நிருவாகத்தையும் விட்டு, மற்றும் பல பணத்தோடு வரக்கூடிய சவுகரியத்தையும் தள்ளிவிட்டு, வீட்டிலிருந்து பணம் தருவித்துச் செலவு செய்து கொண்டு கழகத்திற்கு ஒரு வேலை ஆளாக 3, 4 ஆண்டாகத் தொண்டாற்றி வருகிறார். இவ்வாறு புலவர் இமயவரம்பனைப் பற்றி அய்யா குறிப்பிடுகிறார். செல்வக் குடும்பத்தில் பிறந்த புலவர் இமயவரம்பன் அவர்கள் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டுக் கடைசிவரை கழகத்திற்கு ஒரு வேலை ஆளாக உழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

10.8.1962 ஆம் நாளன்று தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கை இத்தகைய நற்செய்திகளைத் தாங்கியுள்ளது. அந்த அறிக்கை பவளவிழா மலரை அணி செய்கிறது. தந்தை பெரியார் எப்பேர்ப்பட்ட தொண்டர்களை இயக்கத்தின் முகாமையான இடங்களில் அமர்த்தியுள்ளார் என்பதை எண்ணி எண்ணி நாம் மகிழலாம்.

திராவிடர் இயக்க இதழ்கள்

திராவிடர் இக்கத்தின் முன்னோடிகள் நடத்திய இதழ்களை வரிசைப் படுத்தி அவற்றின் வரலாற்றுக் குறிப்புகளையும் விடுதலை பவளவிழா மலரில் கொடுத்திருப்பது ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படுவதாகும். இவ்விதழ்களின் தோற்றப் பொலிவை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் இவற்றின் முகப்புப் பக்கங்களைப் படியெடுத்துப் போட்டிருப்பது பாராட்டிற்குரியதாகும்.

படிப்பறிவில்லாத தமிழ் மக்களிடையே 1917 களில், நாளிதழ்களைத் தொடங்கி அவர்களைப் படிக்க வைத்த நீதிக்கட்சித் தலைவர்களின் அருமைப் பாடு மிக்க செயல் திறனை எண்ணி வியந்து நிற்கிறோம்! திராவிடர் இயக்க இதழ்களின் ஆசிரியர்கள், அவர்களின் புகைப்படங்கள், அடிக் குறிப்புகள் முதலான அரிய செய்திகளைத் தேடித் தொகுத்துக் கொடுத்திருப்பது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் தனிஅரசு நாளிதழ் பிஎஸ். இளங்கோவின் மாலை மணி எனும் வார இதழ் இப்படிச் சில இதழ்கள் விடுபட்டுள்ளன. இவற்றையும் திராவிடர் இயக்க இதழ்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

தமிழ் மக்கள் விழிப்புணர்வு பெற்று ஆட்சி அதிகாரத்தைத் தம் கையில் வைத்திருக்கும் இந்தக் காலத்தில் கூடத் தமிழர்களுக்கென்று ஓர் ஆங்கில நாளேடு இல்லையே! ஆங்கில ஏடுகள் எல்லாம் பார்ப்பனர்கள் கைகளில்! ஆனால் நம்முடைய மக்கள் விழிப்புணர்வு பெறாத 1917 களில் அவர்களை விழித்தெழச் செய்வதற்காக Justice என்ற ஆங்கில நாளேட்டைத் தொடங்கிச் சிறப்புடன் நடத்திய நீதிக் கட்சித் தலைவர்களை எவ்வளவு பாராட்-டினாலும் தகும்!Justice இதழின் வீரிய மிக்க செயற்பாட்டால் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரே Justice Party நீதிக்கட்சி என்று பெயர் மாற்றம் பெற்று மக்களால் அழைக்கப்பட்ட வரலாறு நம்முடைய வரலாறு!

விடுதலை ஏட்டை நிலை நிறுத்துவதற்காகவே இன்னும் நாம் போராட வேண்டியிருக்கிறது! இனி ஆங்கில நாளேடு எப்போது வந்து, அது தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று, நிலைத்து நின்று...! எல்லாம் கனவாகவே போய்விடுமோ!

வியப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் உரியதொரு செய்தி என்னவென்றால் திராவிடர் இயக்கம் தோற்றுவித்த இதழ்களைப் போல் எண்ணிக்கையிலும் அவற்றின் உள்ளடக்கத்திலும் சிறப்பான இதழ்களை வேறு எந்த இயக்கமும் தோற்றுவிக்கவில்லை! இந்த வரலாற்று உண்மையை ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விடுதலை பெற்ற விழுப்புண்கள்

விடுதலை ஏட்டின் 74 ஆண்டுக் கால வரலாற்றில் 47 ஆண்டுகள் தொடர்ந்து அதன் ஆசிரியராகத் தமிழர் தலைவர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார் என்னும் செய்தியை இளைஞர்கள் கவனமாகக் கருத்தில் கொள்ளவேண்டும். தமிழர் தலைவர் ஆசிரியராகப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து பெரியார் பிறந்த நாள் மலர் அரிய கருவூலமாக ஆண்டுதோறும் செப். 17 ஆம் தேதியன்று வெளிவந்து கொண்டிருக்கிறது.

விடுதலையை வாங்கிப் படியுங்கள், தாங்கிப் பிடியுங்கள் என்னும் தலைப்பே ஒரு குறுந்தொகைப் பாடலைப் போல் அமைந்துள்ளது. விடுதலை நாளிதழ் கடந்து வந்த பாதையை ஆசிரியரின் கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.

அநீதியை எந்த ரூபத்தில் கண்டாலும் அஞ்சாது அயராது அதனை எதிர்த்து, ஓயாது குரல் கொடுத்து அதனால் விளைந்த ஆயிரமாயிரம் அடக்குமுறைகளையெல்லாம் விழுப்புண்களாகப் பெற்று வீறுநடைபோடுவது விடுதலை நாளேடு. விடுதலை நீந்தி வந்த நெறுப்பாறுகள், கடந்து வந்த புயல்கள், ஆழிப் பேரலைகள், அடக்கு முறைகள், போடப்பட்ட பூட்டுகள், தார்பூசித்தரப்பட்ட விடுதலை ஏட்டின் பக்கங்கள்- இவற்றையெல்லாம் எண்ணினால் இன்னமும் நெஞ்சு குமுறுகிறது என்று ஆசிரியர் குறிப்பிடுவதிலிருந்து, விடுதலை ஏட்டிற்காக இவர்கள் பட்ட துன்பங்களையும் நாம் உணர முடிகின்றது. இவ்வளவு துன்பங்களையும் அவர்கள் ஏற்றுக் கொண்டதற்கு என்ன காரணம்?

நம் இனத்தின் பாதுகாப்புக்காகத் தந்தை பெரியார் விட்டுச் சென்ற நாளேடு விடுதலை என்பதுதான்!

நினைவில் நிறுத்த வேண்டிய செய்திகள்

கழகப் பொருளாளரின் கட்டுரையில் காணப்படும் ஓமந்தூரார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தையும் சோமசுந்தரம் அவர்களை நீதிபதியாக்குமாறு பரிந்துரைத்த கடிதத்தையும் ஒன்றாக வைத்து இரண்டில் ஒன்றை ஏற்றுக் கொள்ளுமாறு பிரதமர் நேருவுக்கு அனுப்பிய செய்தி மறக்க முடியாது செய்தியாகும்.

டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்கள், தாம் விடுதலையைத் தொடர்ந்து படித்ததால் ஏற்பட்ட விளைவுகளை தாம் பெற்ற பயன்களை விளக்கியிருக்கிறார். அறிவியல் வழிப்பட்ட ஒரு செம்மையான திறனாய்வுக் கட்டுரையை டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்கள் அளித்திருக்கிறார்.

திராவிட நாட்டில் உள்ள நாளிதழ்கள் நம் பிறவி எதிரிகளிடம் இருந்த வருகின்றன என்னும் தந்தை பெரி-யாரின் கருத்தினை ஒவ்வொருவரும் உணர்ந்து அடி மனத்தின் ஆழத்தில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.

பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள், தந்தை பெரியாரும் விடுதலை ஏடும் துன்பம் வந்த நேரத்தில் துணை நின்றமையை மனமுருக எடுத்துரைத்துள்ளனர்.

இவை போலும் ஆயிரக்கணக்கான அரிய செய்திகளை விடுதலை பவள விழா மலர் உள்ளடக்கியிருக்கிறது. சிந்தனையைத் தூண்டும் கருத்துகள் அடங்கிய செவ்வியல் இதழாக விடுதலையின் பவள விழா மலர் விளங்குகிறது. தமிழ்ச் சமூகம் நினைவிலிருத்த வேண்டிய பல வரலாற்றுச் செய்திகளை மீண்டும் ஒருமுறை விடுதலை மலர் நினைவுபடுத்திக் காட்டி நம்மைச் செயல்படத் தூண்டுகிறது பவளவிழா மலர்.


---------- "விடுதலை" 23,24-9-2009 இல் டாக்டர் ப.காளிமுத்து அவர்கள் எழுதிய திறனாய்வுக் கட்டுரை


0 comments: