அய்யா, அண்ணாவுடன் ஆசிரியர் இருந்த அருமையான அரிய தருணங்கள்
தமிழ் மக்களுக்கு செப்டம்பர் மாதம் மகிழ்ச்சி நிறைந்த ஒரு மாதமாகும். செப்டம்பர் 17 ஆம் நாள் தந்தை பெரியாரும், செப்டம்பர் 15 ஆம் நாள் அறிஞர் அண்ணாவும் பிறந்த நாள்களாகும். இந்த 2009 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் 131 ஆவது ஆண்டு பிறந்த நாளும், அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழா ஆண்டுகளாகும்.
சமூகத்தில் சமத்துவமற்ற ஒரு நிலையில் தமிழ் மக்கள் வைக்கப்பட்டிருக்கக் காரணமாக இருந்த மதம், கடவுள் போன்ற மூடநம்பிக்கைகளின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கப் பாடுபட்ட இம்மாபெரும் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள் மதத் திருவிழாக்களைப் போன்றவையல்ல. இவ்விரு தலைவர்களின் பிறந்த நாள்களைக் கொண்டாடுவதன் மூலம், அவர்கள் போற்றி வளர்த்த பகுத்தறிவுக் கொள்கைகளை ஒவ்வொரு தமிழரும் மீண்டும் மீண்டும் தன்னுள் உறுதிப்படுத்திக் கொள்கிறார். அவர்களின் வாழ்நாளில் அவர்கள் பரப்பிய கொள்கைகள் இன்று அரசியல் அளவில் கலைஞர் அவர்களாலும், சமூக அளவில் ஆசிரியர் அவர்களாலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றன.
பெரியார் அவர்களின் ஈடு இணையற்ற பொது வாழ்க்கையினால் கவரப்பட்ட அண்ணா, பட்டப் படிப்பை முடித்த பின் பெரியார் அவர்களின் சமூகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முன்வந்தார். ஆசிரியரோ தனது இளம் வயதில், 10 வயதிலேயே, தனது பள்ளி ஆசிரியரால் தந்தை பெரியாரின் கொள்கைகளின் வழியில் நடைபோட பயிற்றுவிக்கப்பட்டதிலிருந்து பகுத்தறிவுக் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறார். தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட விடுதலை பகுத்தறிவு நாளிதழில் அண்ணா ஆசிரியராக இருந்தார். 1962 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் விடுதலையின் ஆசிரியராக இருந்து வருகிறார்.
சுயமரியாதைத் திருமணங்கள்
திராவிட இயக்கத்தின் மாபெரும் கருத்துக் கருவூலம் அதன் உயர்ந்த கொள்கைகளில் மட்டுமன்றி, முன்பும் இன்றும் இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் திறமை மிக்க தலைவர்களிடமும் உள்ளது. அத்தகைய தலைவர்களின் பொதுவாழ்வில் நிகழ்ந்த சில அரிய நிகழ்ச்சிகள் மிகுந்த ஆர்வமளிப்பவையாகும். அய்யா, அண்ணா, ஆசிரியர் ஆகியோரின் வாழ்க்கையில் நிகழ்ந்த இத்தகைய அரிய நிகழ்வுகள் வருங்கால சந்ததியினருக்கு பெரும் பாடமாக விளங்குவனவாகும். சுயமரியாதைத் திருமணம் என்னும் மனிதநேயத் திருமண முறையை தந்தை பெரியார் 1928 இல் அறிமுகப்படுத்தி பரப்பினார். அண்ணா தமிழ்நாட்டுமுதலமைச்சராக ஆகும் வரை இத்தகைய சுயமரியாதைத் திருமணங்-களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. அண்ணா முதலமைச்சராக இருந்தபோது இத்தகைய சுயமரியாதைத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டத்தை இயற்றினார்.
சுயமரியாதைத் திருமணங்களில் வைதீகப் பார்ப்பனரோ, மதச் சடங்குகளோ இருக்கமாட்டா. தந்தை பெரியார் வலியுறுத்திக் கூறிய கருத்து முதலில் ஏற்றுக்கொள்ள கடினமானதாக இருந்தாலும், பின்னர் பின்பற்றுவது எளிதானதாகவே இருந்தது. இத்தகைய திருமணங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று தந்தை பெரியார் சில நடை முறைகளை உருவாக்கினார். அனைத்து பாரம்பரியமான மதவழித் திருமணங்களிலும் மணமகன் மணப்பெண்ணின் கழுத்தில் தாலி என்னும் மங்கல சூத்திரம் கட்டுவார். இந்தத் தாலிதான் பெண்ணின் அடிமைத்தனத்தைக் குறிக்கும் அடையாளம் என்று பெரியார் கூறினார். சுயமரியாதைத் திருமணங்களின்போது இவ்வாறு தாலி கட்டுவது தவிர்க்கப்படவேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார். ஆனால், காலம் காலமாக வந்த இந்த வழக்கத்தைக் கைவிடும் அளவுக்கு மக்கள் பகுத்தறிவு முதிர்ச்சி அடைந்தவர்களாக இருக்கவில்லை. பகுத்தறிவுக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதென்பது திடீரென மேற்கொள்ள முடிவதல்ல; படிப்படியாக மேற்கொள்ள இயன்ற ஒன்றாகும். ஒரு திருமணத்தில், இரண்டு குடும்பங்கள், இரண்டு மனித மனங்கள் நெருங்கி வருகின்றன. ஒரு குடும்பமோ, மணமக்களில் ஒருவரோ தாலியைத் தவிர்க்கும் மனநிலை படைத்த பகுத்தறிவாளராக இருந்தபோதிலும், மற்றொரு குடும்பமோ, மணமக்களில் ஒருவரோ அவ்வாறு செய்யத் தயாராக இல்லாதவர்களாக இருக்கலாம். தாலி கட்டப்படத் தான் வேண்டும் என்பதில் அவர்கள் உறு-தியாக இருந்தால், தாலி கட்டப்-படட்டும். நாளடைவில் தாலி கட்டுவதற்கு அர்த்தமே இல்லை என்பதையும், அது பெண்களை அடிமைப்படுத்துவதற்கான அடையாளமே என்று அவர்கள் புரிந்து கொண்டால், தேவையற்றதென்று அவர்கள் தாலியைக் கழற்றிவிடலாம். எனவே சுயமரியாதைத் திருமணங்களில் தாலி கட்டுவது என்பது கட்டாயமல்ல; விரும்பினால் கட்டலாம் என்றே பெரியார் கூறினார். இதுதான் சுயமரியாதைத் திருமணம்.
சுயமரியாதைத் திருமண
அங்கீகார சட்டம்
தந்தை பெரியாரின் சீடர்களில் தலையாயவர் ஆன அறிஞர் அண்ணா தமிழ்நாட்டு முதலமைச்சராக ஆன பின், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க சட்டம் இயற்ற முடிவெடுத்தார். அதற்கான சட்ட வரைவினை பெரியாரிடம் காட்டி அவரது ஒப்புதலைப் பெறவேண்டும் என அண்ணா விரும்பினார். எனவே, அந்த சட்டவரைவை எடுத்துச் சென்று பெரியாரிடம் காட்டி ஒப்புதல் பெற்றுவர ஆசிரியரை அண்ணா கேட்டுக்கொண்டார். தந்தை பெரியார் அச்சட்ட வரைவில் ஒரு மாற்றத்தைச் செய்தார். ஆசிரியர் அதை எடுத்துச் சென்று அண்ணாவிடம் கொடுத்தார். இதில் ஏதேனும் திருத்தத்தை அய்யா செய்தாரா என்று அண்ணா கேட்டார். ஆம் என்று ஆசிரியர் சொன்னார். சட்டவரைவில் பார்ப்பனப் புரோகிதர்கள், சடங்குகள் தவிர்க்கப்பட்டிருந்தன. ஆனால், அதில் ஒரு வரி தாலி கட்டுவதும் என்று இருந்தது; அப்படியானால் அது தாலி கட்டுவது கட்டாயம் என்ற பொருள் தருவதாகிவிடும். தாலி கட்டுவதும் என்பதற்கு பதிலாக அல்லது தாலி கட்டுவது என்று மாற்றும்படி அய்யா ஆசிரியரிடம் சொன்னார். அவ்வாறு இருந்தால், அது தாலி கட்டுவது அவரவர் விருப்பம் என்ற பொருள் தரும். மக்கள் முதிர்ச்சி அடையும்போது அவர்கள் தாலியைத் தவிர்த்துவிடுவார்கள். பெரியார் செய்த திருத்தத்தை ஆசிரியர் அண்ணாவிடம் விவரித்தபோது,வியப்படைந்த அண்ணா, தம்பி வீரமணி, நான் ஒரு முதுகலை பொருளாதார பாட பட்டதாரி, நீங்களும் ஒரு முதுகலைப் பட்டதாரிதான். சட்ட வரைவில் தாலி கட்டுவதும் என்று குறிப்பிடும் இடத்தில் அல்லது தாலி கட்டுவது என்று குறிப்பிடுவதன் பொருத்தத்தை நம்மால் உணர்ந்து இருக்க முடியவில்லை. அதனால்தான் அவர் பெரியாராக இருக்கிறார் என்று கூறினார்.
அய்யாவும் அண்ணாவும் காலமான வெகுநாட்கள் கழித்த பின் ஆசிரியர் இந்த நிகழ்ச்சியை அடிக்கடி நினைவுபடுத்திக் கூறுவது வழக்கம். அய்யா, அண்ணா ஆகியோருடன் ஆசிரியருக்குஏற்பட்டகோட்பாட்டு அளவிலான, அறிவு பூர்வமான, உணர்வு நிறைந்த நிகழ்ச்சியாக இது அமைந்தது. தாங்கள் பட்டதாரிகளாக இருந்தாலும், தந்தை பெரியாரின் பேரறிவைப் பெருமையுடன் ஏற்றுக் கொண்ட எத்தகைய நேர்மை படைத்த தலைவர்களாக அண்ணாவும், ஆசிரியரும் விளங்கினார்கள்? இவ்வாறு திருத்தப்பட்ட சட்ட முன்வரைவு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, இந்து சட்டத்தில் 1967 சென்னை சட்டம் 21 என்று சேர்க்கப்பட்டது. அய்யா, அண்ணா, ஆசிரியர் சம்பந்தப்பட்ட இந்த ஆர்வமளிக்கும் நிகழ்ச்சி பொருத்தமான சொல்லாடலைப் பயன்படுத்திய தந்தை பெரியார் அவர்களின் கூர்ந்த அறிவைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
அய்யாவின் கொள்கைப் பணியாற்ற பதவியையும் கைவிடத் தயார்
அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட பின், சேலம் மாவட்டம் நாகரசம்பட்டி என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியின் கட்டடத்தைத் திறந்து வைக்கப் பெரியாருடன் சேர்த்து அழைக்கப்பட்டிருந்தார். ஆசிரியர் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். அப்போது அண்ணா ஆற்றிய உரை, அய்யாவின் கோட்பாட்டை எந்த அளவுக்கு அவர் உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார் என்பதையும், பெரியார்பால் அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. தேவைப்படின், முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி, தனது ஆசானான பெரியாரைப் பின்பற்றி அவரது உயர்ந்த கொள்கைகளைப் பரப்ப, தான் தயாராக இருப்பதாக தனது பேச்சில் அண்ணா கூறினார். ஆனால், பெரியார் பேசும்போது அண்ணா கட்டாயம் பதவியில் நீடிக்கவேண்டும் என்றும், அதன்மூலம் தமது கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அய்யாவும், அண்ணாவும் ஒருவர் பால் ஒருவர் கொண்டிருந்த அன்பிற்கும், மதிப்பிற்கும் ஆசிரியர் வீரமணியே சாட்சியாக இருந்தார். இந்த நிகழ்ச்சி முழுவதும் விடுதலையில் அந்நாட்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பான பெரியார் ஒரு சகாப்தம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
47 ஆண்டுகள் ஆசிரியராக இருக்கும் உலக சாதனை
விடுதலை நாளேட்டின் ஆசிரியராக கி.வீரமணி அவர்கள் கடந்த 47 ஆண்டுகளாக இருந்து வருகிறார். உலகிலேயே உள்ள ஒரே ஒரு பகுத்தறிவு நாளேடான விடுதலை தனது 75 ஆவது பவளவிழாவைக் கொண்டாடி வருகிறது. இவ்வாறு நீண்டதொரு காலம் ஒரு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த வரலாறு உலகின் வேறு எந்த நாட்டிலும் எக்காலத்திலும் காணப்படாத ஒன்று. ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின் அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பு ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் நாள் பெரியார் பிறந்த நாள் மலரை வெளியிட்டு வருவதுதான். பெரியாருடன் பழகி, அவரது கொள்கையை, வியந்து பாராட்டிப் பின்பற்றிய பல்வேறு பெருமக்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய அறிவுக் கருவூலமாக விளங்குவன பெரியார் பிறந்த நாள் மலர்களாகும். இவ்வாறு ஆண்டுதோறும் மலர் வெளியிடுவதும், பல முக்கிய பிரமுகர்கள் பொருத்தமான தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதும், திராவிட இயக்க வரலாற்றைப் பதிவு செய்ய உதவுகிறது.
அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட பின்,பெரியாரின் 88 ஆம் பிறந்த நாள் மலருக்கான கட்டுரை தரவேண்டும் என்று அண்ணாவை சந்தித்த ஆசிரியர் கேட்டார். ஆனால் தனது அலுவலகப் பணிகளின் சுமை மற்றும் சுற்றுப் பயணங்களின் காரணமாக தனது கட்டுரையை எழுதித் தர அண்ணாவால் இயலவில்லை. பொது நிகழ்ச்சிகளில் அண்ணாவை சந்திக்கும் போதெல்லாம் ஆசிரியர் அதுபற்றி நினைவூட்டிக் கொண்டே இருந்தார். ஆசிரியரின் ஆவலைப் புரிந்துகொண்ட அண்ணா, கவலைப்படாதீர்கள். வெகுவிரைவில் ஒரு கட்டுரை எழுதி அனுப்பி வைக்கிறேன் என்று கூறுவார். அண்ணாவின் அலுவலகப் பணிச்சுமையை நன்கு அறிந்திருந்த ஆசிரியர் அதன்பின் அண்ணாவை இதுபற்றி நினைவுபடுத்துவதைக் கைவிட்டுவிட்டு, மலர் தயாரிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மதுரைக்குச் சென்றிருந்த போது தனக்குக் கிடைத்த குறுகிய கால அவகாசத்தில் ஒரு கட்டுரை எழுதிய அண்ணா, அதனை சென்னையில் இருந்த ஆசிரியர் வீரமணியிடம் உரிய நேரத்தில் கொண்டு போய்ச் சேர்க்க தனி நபர்மூலம் அனுப்பி வைத்தார். அக்கட்டுரையின் தலைப்பு எனது வாழ்வின் வசந்தகாலம் என்பதாகும்.
வாழ்வின் வசந்த காலம்
பெரியாருடன் தான் சேர்ந்திருந்த நாள்களையும், அவருடன் தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களுக்கும், வெளிநாடுகளில் பல இடங்களுக்கும் சென்று வந்த அந்த காலமே தனது வசந்த காலம் என்று அண்ணா அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அக்காலத்தில் சுகமாகப் பயணம் செய்யக் கூடிய வசதிகள் இருக்கவில்லை. பெரியாருடன் பயணம் செய்து, பிரச்சாரம் செய்வது என்பது மிகுந்த சோர்வளிக்கும் கடினமாக பணியாக இருந்தது. ஆனால் அண்ணா அந்தக் காலத்தையே தன் வசந்த காலம் என்று குறிப்பிட்டார். அவர்தான் அண்ணா! பெரியார்பால் அண்ணா கொண்டிருந்த மதிப்பு அத்தகையது! தனது பிரதான சீடர் அண்ணா எழுதிய அக்கட்டுரையை பெரியார் திரும்பத் திரும்பப் படித்ததைக் கண்டு ஆசிரியர் மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைந்தார். இவ்வாறு ஒரு தந்தையைப் போன்ற பாசத்தை வெளிப்படுத்தியது பெரியாரைப் பொறுத்தவரை வழக்கத்திற்கு மாறானது.
ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து கோட்பாட்டு ரீதியில் இயக்கம் கண்ட ஒரே தலைவர் பெரியார்தான்
உலகின் இப்பகுதியில் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் ஓரளவு சமத்துவத்துடன் அமைதியாக வாழ்ந்து வந்தனர். பின்னர் நிகழ்ந்த ஆரியக் கலாச்சாரப் படையெடுப்பின் காரணமாக, கடவுள், மதம் ஆகியவற்றின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட பூர்குடி மக்களிடையே சமமற்ற சமூக ஏற்றத் தாழ்வுகள் உண்டாக்கப்பட்டன. வந்தேறிய ஆரியர்களின் உயர்தன்மையை பூர்வகுடி மக்கள் ஏற்றுக் கொள்ளும்படிச் செய்யப்பட்டனர். சமூகத்தில் நிலவிய இத்தகை ஏற்றத்தாழ்வுகளைக் கண்ட மாபெரும் மனிதர்கள் பலர் தங்கள் வழியில் அதனை எதிர்த்துப் போராடியுள்ளனர் என்பதை வரலாறு காட்டுகிறது. இவ்வாறு அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் கோட்பாட்டுடன் கூடிய ஓர் இயக்கத்தை முதன் முதலாக உரு-வாக்கிய ஒரே மக்கள் தலைவர் பெரியார்-தான். தனது நோக்கங்கள் சிறிது சிறிதாக வெற்றி பெருவதைத் தன் வாழ்நாட்களிலேயே கண்டு களித்தவர் பெரியார். பெரியாரின் தலைமைச் சீடரான அண்ணா, பெரியாரின் நோக்கங்களை எட்ட அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தார். அப்பாதையில் மக்களை இன்று கலைஞர் வழிநடத்திச் செல்கிறார். பெரியாரின் நோக்கங்களை அமைப்பு ரீதியாக ஆசிரியர் வீரமணி வழிநடத்திச் செல்கிறார். அய்யாவும், அண்ணாவும் எவ்வாறு தங்களின் தன்னிகரற்ற வழியில் செயலாற்றினரோ, அந்த வழியில் ஆசிரியரும் கலைஞரும் இன்று எடுத்துக்காட்டான முறையில் செயலாற்றி வருகின்றனர். திராவிட இயக்கம் பெற்றிருக்கும் இத்தகைய அற்புதமான தலைமையைப் பற்றி நமது இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு அறிந்து கொள்வதின் மூலம், இந்த ஈடு இணையற்ற இயக்கத்தில் இணைந்து, தந்தை பெரியாரின் அறிவுச் சுடரை முன்னெடுத்துச் செல்லும் பணியில் தங்களை அவர்கள் ஈடுபடுத்திக் கொள்ளட்டும்.
பெரியார், அண்ணா ஆகியோரின் நினைவு நீடு வாழட்டும்! அவர்களின் கொள்கைகள் பெரு வெற்றி பெறட்டும்!
சமூக விடுதலைக்கான சக்திகளை மேலும் ஒன்று திரட்டும் பணியில் கலை ஞர் ஆசிரியர் ஆகியோரின் தலைமையி லான இயக்கத்தின் முயற்சி வெற்றி பெறட்டும்.
-------------------வீ.குமரேசன் , மாநில ப.க. பொதுச்செயலாளர் -17-9-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment