நவராத்திரி
"நவராத்திரி" என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் - இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்காலமும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். வேத பாராயணம், சூரியநமஸ்காரம் முதலிய வைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாள் களில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும் படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப்பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக்களுக்கும், பணம்படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தியோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப்பானுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.
நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்து, காலை முதல் உபவாசமிருந்து சரஸ்வதியை பூசை செய்யவேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடையவர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்து பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப்பூசைக்கு 'ஆயுதபூசை' என்றொரு பெயரும் உண்டு. இந்த நவராத்திரியை இந்துமதப்பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண்டாடுகிறார்கள். அன்றியும் சிவ, விஷ்ணு ஆலயங்களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடுகிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள். இந்த வேடிக்கை களைப் பார்க்கவே அனேகர் மைசூருக்குப் போவது வழக்கம். இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப்பனரும் இவ்வுற்சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்பதால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள். நிற்க; இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்னவென்றால், கல்வியும் ஆயுதமும் அதற்குக் கற்பிக்கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்டவர்கள் ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங்களின் அம்மன்களானதனாலும், இந்து மதத் தவர்களுக்கெல்லாம் இது சம்பந்தப்பட்ட புராணக்கதைகளிலிருப்ப தாலுமேயாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்காவிட்டாலும் இது சம்பந்தமான கதைகள் அவர்களிடையேயும் உண்டு. மற்றவர்கள் 'சரஸ்வதிபூசை' யன்று துர்க்காலட்சுமி 'ஸரஸ்வதீப்யோ நம' என்று கூறிப் பூசை தொடங்குவார்கள்.
முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தியாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக்கொண்டிருந்ததால் , இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்திபெற்று, ஒன்பதாம் நாள் மகிஷா சூரனைக் கொன்று, பரிவாரங்களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதிதேவிக்கு மகிஷா சூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே இந்தக் கதையின் ஆதாரத் தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தை கொண்டே
இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.
நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் புராணக் கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர்களுக்கு இதில் வயிறுவளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந்தாலும் கூட இதுபோன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள் என்று எதற்கும் தத்துவ நியாயம் சொல்வது போல் இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேத பாராயணம், கோயிலில் நடக்கும் பூசை , ஆராதனைகள் , ஒன்பது நாளும் பார்ப்பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவைகளால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டுப் பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம். படித்த பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத்தென்னவென்றால் மகிஷாசூரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என்பதை அஞ்ஞானமும் அதன் காரியங்களுமாகவும், பார்வதியை சித் சக்தியாகவும் அது பரம்பொருளாகிய ஆத்ம ஸாசாத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண்டுமாம். பிதுர்க்காலட்சுமி சரஸ்வதீப்யோ நம' என்னும் மந்திர மடத்து சாஸ்திரிகள் வரையிலும் மக்களிடமிருந்து கிடைக்கும் வரையிலும் தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர்களை வேரறுக் கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்துவார்த்தம் சொல்லும் சமயவாதிகளெல்லாம் மகிஷா சூரனிடமல்லவா (அதாவது ஆசையில்) மாட்டிக் கொண்டிருக் கிறார்கள்?
முன்னொரு காலத்தில் லட்சுமிதேவி உலகில் அலர்மேலு மங்கையாக வந்து, பரமபதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெருமாளை அடைந்து ஆனந்திக்க இந்த ஒன்பது நாள் தவமிருந்தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுபெற விவாகம் பெரிய ஆடம்பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன்னிட்டுதான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்நாள்களில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கிறது.பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு , கடைசி மூன்று நாள்களும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம். தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.
இதை நம்பி நடக்கும் நம்மை விட , மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத்துடன் இருக்கிறாள். நம் தேசத்தில் வருடத்திற்கு ஒரு நாள்தான் கண்ணைத் திறந்து திருப்திப்படுகிறாள். இதற்குக் காரணம், பார்ப்பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்று பார்ப்பதற்காகவோ அல்லது பூசையின் திருப்திக் குறைவாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றிகெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன் மொழியான சமஸ்கிருத இலக்கணத்தை தன் முதற் பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்.
கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஒரு அரசன் இருந்ததாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்சாதியான சுவேதி என்பவளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்கிற இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூசையை உபதேசித்த தாகவும், அவ்வாறே அவள் செய்து அரங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து அவன் சத்துருக்களை ஜெயித்துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக்கொடுத்தாகவும் சொல்லப்படுகின்றது. நவராத்திரிக்கு இன்னும் இதுபோன்ற பல கதைகளும் உண்டு.
கிரேதாயுகம் முதற் கொண்டு , இதுநாள் பரியந்தம் செய்த பூசைகளும், மந்திரங்களும் அதைச் செய்த ஜன சமூகங்களும் நம் நாடும், அதை ஏற்றுக் கொண்ட தெய்வங்களும் அய்நூறு வருடங்களாக அன்னியர் படையெடுப்பால் சின்னாபின்னப்பட்டு வெள்ளைக்கார மந்திரத்தால் வெளியேற்றப்பட்டிருக்கையில் நமது 'சரஸ்வதியும், லட்சுமியும் , பார்வதியும்' அவர்களுக்குப் பூசையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு என்று குடிஅரசு கேட்டு விட்டால் சமயவாதியும் , சாஸ்திரவாதியும் 'அது சமயத்தை அடியோடு தூஷிக்கின்றது' என்று சொல்லுவதானாலும் படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ் பி.ஏ, எம்.ஏ, வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா, இல்லையா என்றுதான் கேட்கிறோம்.
மேலும் விஜயதசமி அன்று சிவன் கோயிலில் பிபரிவேட்டை உற்சவம்' என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று பிபகவான்' எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னி மரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி , அந்த மரத்தை எரித்து விடுமாம். அதனால் வேடடையாடுவோருக்கும், ராஜக்களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்த காரணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர். என்றாலும் இதற்கும் உள்கருத்தை வைத்து வைத்துத் தான் நம் நாடு உள்ளேயே போயிற்று . பாமரர்களுக்கு உள்கருத்து ஸ்தூலமாகவும் படித்தவர்களுக்குச் சூட்சுமமாகவும் இருப்பதாகச் சொல்லுகிறார்கள் . (எந்த சூட்சுமமும் பாமரர்களைப் படித்தவன்
ஏமாற்றவே உபயோகப்படுகிறதே ஒழிய, காரியத்திற்கு ஒன்றும் உபயோகப்படுவதில்லை) அதாவது, நெருப்பிலடங்கிய வன்னி மரத்தையே ஆத்மாவோடு கூடிய தேசமாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்புவிடுவதை ஞானோபதேசமாகவும், மரம் எரிந்து விழுவதை கரும சம்பந்தமானவைகளை ஞானத்தணல் சுட்டு வெண்ணீறாக்குவதாகவும் கொள்ள வேண்டுமென்பார்கள் . இந்த உள்கருத்து உபதேசம் கேட்டுத்தான் ராஜவம்சமெல்லாம் நடுத்தெருவில் நின்றதான வடதேசத்துக் கதைகள் அனேகம்.
மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமையானார். ஆனால், வெள்ளைக்காரப் பரிவேட்டை தான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சாவூர் ராஜா செய்த சரஸ்வதி பூசையும், ஆடிய பரிவேட்டையும், சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின் வாயிலில் ராஜாவை ஒடச் செய்து விட்டது. அது போலவே திப்பு காலத்தில் திருவனந்தபுரத்து ராஜாவிற்கு வெள்ளைக் காரர்கள் அபயம் கொடுத்தார்களே ஒழிய சரஸ்வதி பூசையும், பரிவேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத்திராவிடில் அனந்த சயனப் பிரபுவும், அவர் பெண்சாதியும், அவர் மருமகளும் ஓடிப்போயன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடி வந்து தங்கள் சொத்தென்று அங்கு
சயனித்துக் கொண்டிருப்பதாக இப்பொழுதும் சொல்கிறார்கள்.
கடவுளையும் பெரியவர்களையும் தூஷிக்கிறவர்கள் காட்டும் ஆதாரங்களையும், அதன் நியாயவாதங்களையும் கூட்டி ஆலோசியுங்கள், சரஸ்வதியைக் கொலுவிருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்துக்கு 50 பேருக்குக் கூட கல்வி இல்லை. சரஸ்வதியே இல்லாத நாட்டில் ஆயிரத்துக்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.
நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானியமல்லவே ஒரு ஏட்டைக் கிழியோம்; ஒரு எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடுவோம்; கைப்பட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் பிபுண்ணிய தீர்த்தத்தில்' கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும் கம்பன் கவித்திறனும் அவளே என்போம். இத்தனையும் போதாமல் வருடம் ஒரு தரம் பத்து நாள் பள்ளி யறையில் வைத்துக் கும்பிடவும் செய்கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய,இந்த சரஸ்வதி கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாமல் மேனாட்டில் குடிபுகுந்த காரணம் என்ன என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும் பிஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார் கள்; காலில் மிதிக்கிறார்கள்; செருப்புக் கட்டுகிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை; நீ ஒருத்தி இருக்கின்றாய் என்று கூட நினைப்பதில்லை; உனக்கு பூசை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமானர்கள் என்கிறார்கள். எனவே நீ செய்வது நியாய மாகுமா?' என்று நாங்கள் சொல்லிவிட்டால் உன் பாஷையான சமஸ்கிருத இலக்கணத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் படாதென்று நீ சொன்னதாகச் சொல்லும் சாஸ்திரிகளே எங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லுகிறார்கள். உன் முதற்பிள்ளையான பார்ப்பனர்களின் தாசிப்பிள்ளை, அடிமை, வேலையாள், ஒழுக்க மற்றவன் என்று எங்களில் படித்த உணர்ச்சியற்ற பண்டிதர்களையும் கூட நீ சொல்லியிருப்பதாக உன் முதற்பிள்ளைகள் சொல்லும் ஏட்டைக்கூட கிழித்தெறியாமல் சற்றும் விசுவாசமற்றுப் போனாயே என்று நாங்கள் சொல்லி விட்டால், தூஷித்தவர்களாகிவிடுவோமா? நீயே சொல்லு?
நீ வாசம் செய்யும் மேனாட்டில் உனக்குப் பூசையில்லை. நைவேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையுமில்லை. பஞ்சமும் படியாமையுமுடைய இந்த நாட்டின் பேரில் மாத்திரம் உனக்கு வந்த வயிற்றெரிச்சல் என்ன? உன் முதற் பிள்ளை களுக்கெல்லாம் உன் பேராலேயே அளித்தளித்து ஆண்டியானோமே என்று நாங்கள் சொல்லுவதாலேயே உன் பக்தகோடிகள், உன் புருஷனுடைய பிரம்மலோகத்திற்கும் உன் மாமனுடைய வைகுண்டத் திற்கும் உன் பாட்டனும் மகனுமான சிவனுடைய கைலாசத்திற்குப் போகும் கதவுகளை (சமயதூஷணையால்) சாத்தினவர்களாகி விடுகிறோமாம். நீயும் உன் குடும்பத்துப் பெண்களும் குடி போயிருக்கும் நாட்டில் உங்கள் புருஷர்களுக்குக் கோயில் கிடையாது. கும்பாபிஷேகமில்லை. அப்படியிருக்க, நீங்களில்லாத நாட்டில் உங்களுக்குக் கோயிலும் கும்பாபிஷேகமும் பூசையும் எதற்கு?
இருக்கிற கோயில்களில் நீங்கள் குடியிருந்தால் போதாதா? காணிக்கையையும் நிறுத்தி, கும்பாபிஷேகத்தையும் விட்டு, கோயிலுக்கு எழுதி வைப்பதையும் நிறுத்திப் பணத்தையெல்லாம் படிப்பிற்கே வைத்துவிட்டுப் போங்கள் என்றால், பாமர மக்களுக்காக ஏற்பாடு செய்து வைத்த சமய ஒழுக்கங்களையெல்லாம் தடுத்து மோட்ச வாசலை அடைக்கும் தாசர்களென்று எங்களை ராஜீயவாதிகள் கூடச் சொல்லலாமா?
ஆச்சாரிகளுக்கும் குருக்களுக்கும் அதைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பக்கத்து ஏழைக்குப் படிப்பும், தொழிலும் கற்பியுங்களென்றால் ஆச்சாரி களையும் பெரியவர்களையும் நாங்கள் குற்றம் சொல்லு கிறவர்களாகி விடுவோமா? அறுப்பறுக்கும் காலத்தில் கருக்கரிவாள் கூட ஒரு மூலையில் கவலையற்றுத் தூங்குகிறதே!
வருண பகவானுக்கும் சூரிய பகவானுக்கும் ஏற்பட்ட சண்டையில் வருண பகவான் முறியடிக்கப்பட்டு, ஓடி மறைந்து விட்டானே! சூரியனே இப்போது கழனியில் உள்ள எல்லாவற்றையும் காய்ந்து தொலைத்துவிட்டானே! உன் ஆயுதங்களுக்குக் காட்டிலும் கழனியிலும் கூட வேலையில்லை என்றால், பின்னை கருமார் வீட்டிலும் வேலை என்ன? எனவே வேலையில்லா ஆயுதத்திற்குப் பூசை ஏன்?
சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்டபமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண்டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூசைகளும் கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூசையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூசையின் கொலுவால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது? கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார்கள்? அவரவர்கள் முயற்சியும் கடமையும் எந்தக் கஷ்டத்திலும் செய்து முடிக்கும் தைரியமும் இருந்தால் எல்லா லட்சுமியும் அங்கே வந்து தீர்வார்கள் . இதுவே உலக அனுபோகமும் சாஸ்திரத்தின் கருத்துமாகும்.
---------------- நூல்:- "இந்துமதப் பண்டிகைகள்" (இக்கட்டுரை அறிஞர் கைவல்யம் அவரகளால் எழுதப்பட்டது) பக்கம்:-11-19
0 comments:
Post a Comment