கருநாடக மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன்
உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆவதைத் தடுப்பதா?
* பொய் சேதிகளை, வீண்பழிகளை பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு பரப்புவதா? * தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் உச்சநீதிமன்றம் செல்ல தடைசெய்வதா? * சென்னையில் தமிழர் தலைவர் போராட்ட முழக்கம்
சென்னை திருவல்லிக்கேணியில் 18.9.2009 அன்று இரவு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாப்பொதுக்கூட்டம் தேரடி வீதி பி.வி. (நாயக்கர்) தெருவில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கர்நாடக மாநில தலைமை நீதிபதியான பி.டி.தினகரன் அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பார்ப்பனர்கள் மேற்கொண்டு வரும் சதிகளை அம்பலப்படுத்தினார் தமிழர் தலைவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள்.
தமிழர் தலைவர் உரை
திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட முக்கிய செய்தி வருமாறு:
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா விழாவை நாடு முழுக்க நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாள் விழா அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா என்றழைக்கப்படக் கூடிய மியான்மா போன்ற நாடுகளில் தந்தை பெரியார் தொண்டர்கள் பெரியார் பற்றாளர்கள் இன உணர்வாளர்கள் எழுச்சியோடு கொண்டாடிக்கொண்டிருக்கின்ற செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன.
குவைத்தில் அய்யா பிறந்தநாள் விழா
வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குவைத் நாட்டில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை அங்குள்ள பற்றாளர்கள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்துவருகிறார்கள்.
தந்தை பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கின்றார் என்பதை இன்றைக்கு நாம் கண்கூடாகக் காணுகின்றோம்.
டாக்டர் நடேசனார் வாழ்ந்த பகுதி இது
தந்தை பெரியார் கொள்கை வழியில் நின்று பல அரிய செயல்களை நம்முடைய மாண்புமிகு, மானமிகு சுயமரியாதைக்காரரான, முழு பகுத்தறிவுவாதியான கலைஞர் அவர்கள் சிறப்பாக பணியாற்றிக்கொண்டு வருகின்றார்.
இந்த திருவல்லிக்கேணிப் பகுதி நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் சி.நடேசனார் அவர்கள் பார்ப்பனரல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதியை ஏற்படுத்தி தந்தார். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிள்ளை பிடிப்பது போலச் சென்று மாணவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு கல்வியை வழங்கினார். அவர் வாழ்ந்த அத்தகைய சிறப்புக்குரிய இடம் தான் இந்தத் திருவல்லிக்கேணிப் பகுதியாகும். சூத்திரர்களுக்கு கல்வி உரிமை கிடையாது என்று மனுதர்மத்தில் எழுதி வைத்து அதை நடைமுறைப்படுத்தி நம்மவர்களை படிக்கவிடாமல் கல்விபெறும் வாய்ப்பை தடுத்தனர் பார்ப்பனர்கள்.
அக்கிரகாரத்தில் ஆடிய சரசுவதியை நாடு முழுக்க ஆடவிட்டவர்
கல்வி என்பது அக்கிரகாரத்திற்குத்தான் சொந்தம் என்று ஒரு கொடுமையான நிலையை உருவாக்கி வைத்திருந்தார்கள். அக்கிரகாரத்தில் மட்டும் ஆடிய சரசுவதியை நாடு முழுக்க ஆட வைத்தார்கள்! கல்வி நீரோடையைப் பாய்ச்சியவர்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், நமது கலைஞருமேயாவார்கள். அவர்களுடைய உழைப்பு தான் காரணம். திரும்பிய பக்கமெல்லாம் இன்றைக்கு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், மேல்நிலைப் பள்ளிகளை கலைஞர்அவர்களுடைய அரிய முயற்சியால் காணலாம் ஆட்சித் திறமையால் எங்கும் காண முடிகிறது. இன்றைக்கு நம்மவர்கள் அய்.ஏ.எஸ் அதிகாரி-களாக, அய்.பி.எஸ் அதிகாரிகளாக சட்டம் படித்தவர்களாக வந்திருக்கின்றார்கள் என்றால் இதெல்லாம் திராவிட இயக்கத்தின் சாதனையாகும் விளைவாகும்.
பெரியார் வேண்டுகோள் - கலைஞர் நிறைவேற்றினார்
நாம் எல்லோரும் அதிர்ச்சி அடையக்கூடிய ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. இப்பொழுதுதான் சென்னை உயர்நீதிமன்றங்களிலே தாழ்த்தப்பட்ட நீதிபதிகள் வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அதுவும் தந்தை பெரியார் அவர்களுக்கு 1973ஆம் ஆண்டு அய்.ஏ.எஸ். அதிகாரிகள் சென்னையில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில் பேசியவர்கள் தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனரல்லாத சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டை எடுத்துக் கூறிப்பாராட்டி நன்றி தெரிவித்துப் பேசினார்கள்.
இறுதியாகப் பேசிய தந்தை பெரியார் அவர்கள் தனது பேச்சில் ஒரு முக்கிய செய்தியைக் குறிப்பிட்டார். சென்னை உயர்நீதிமன்ற நூறாண்டு கால வரலாற்றில் இதுவரை ஒரு தாழ்த்தப்பட்டவர் கூட நீதிபதியாக வரவில்லையே ஏன்? என்று கேள்வி எழுப்பி வேதனையோடு பேசினார். நமது கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார். இதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து பேசினார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நாங்கள் வேனில் திரும்புகிற பொழுது அய்யா அவர்கள் எங்களிடம் சொன்னார். இதைப் பற்றி ஒரு தலையங்கம் எழுதுங்கள் என்று. மறுநாள் விடுதலையில் தந்தை பெரியார் அவர்களுடைய பேச்சும் வந்தது.
நாங்கள் எழுதிய தலையங்கமும் பிரசுரிக்கப்பட்டது. விடுதலையை தொடர்ந்து முதலில் படிப்பவர் நம்முடைய கலைஞர் அவர்கள்தான்.
அடுத்த கணமே விரைந்து செயல்பட்டார் கலைஞர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி எங்கேயிருக்கிறார் என்று தேடினார். பழைய தென்னார்க்காடு மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் டிஸ்ட்ரிக் ஜட்ஜாக வரதராஜன் அவர்கள் இருந்தார். அதுவும் அவர் சீனியாரிட்டி முறைப்படி 12ஆவது இடத்தில் கீழே இருந்தார்.
முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதி வரதராஜன்
உடனே சட்ட அமைச்சர் மாதவன் அவர்களை அன்றைக்கு டெல்லிக்கு அனுப்பி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி வாங்கிவரச்சொன்னார் கலைஞர்.
தந்தை பெரியார் அவர்களின் விருப்பப்படி 100 ஆண்டுகால சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி ஏ.வரதராஜன் அவர்களை சென்னை உயர்நீதிமன்ற முதல் நீதிபதியாக ஆக்கிய பெருமை நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்களையே சாரும்.
நீதிபதி வரதராஜன் அவர்கள் ஜோலார் பேட்டையைச் சார்ந்தவர். பின்னர் அவரே உச்ச நீதிமன்றத்திலும் முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியாக வந்தார். அந்தப் பெருமையும் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களையே சாரும்.
இப்படி ஒரு சமுதாய மாறுதலை ஏற்படுத்த காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். காரியமாக இருந்தவர் கலைஞர் அவர்கள் . அதன் பிறகு உச்சநீதிமன்ற வரலாற்றிலே 55 ஆண்டுகளுக்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி ரத்னவேல் பாண்டியன் வந்தார். அதற்குப் பிறகு இடைவெளி.
நீதிபதி பி.டி.தினகரன் மீது வீண்பழி
இன்றைக்கு அதே போல பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான நீதிபதி சதாசிவம் அவர்கள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றிருக்கின்றார். இன்றைக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக சிறப்பாகப் பணியாற்றியவர் நீதியரசர் பி.டி தினகரன் அவர்கள்.
அவர் சமீபத்தில் தான் பதவி உயர்வு பெற்று கர்நாடக மாநிலத்தின் தலைமை நீதிபதியாகச் சென்றார். அவருடைய பணி. கர்நாடக மாநில தலைமை நீதிபதியாக இருக்கின்ற அவர் அங்கு ஒரு பெரும் சாதனையை செய்தார். கடந்த பல வருடங்களாக அங்கு நீதித்துறையில் நிரப்பப்படாத இருந்த பதவிகளையெல்லாம் நிரப்பினார். கடந்த பல வருடங்களாக டிஸ்டிரிக்ட் முன்சீப்புகள் முதல் சப்ஜட்ஜ்கள், சப்ஜட்ஜ்களாகவே இருந்தார்கள். மேல் உத்தியோகத்திற்குப் போகாமல் இருந்தார்கள்.
கருநாடக நீதிபதிகளுக்குப் பதவி உயர்வு கொடுத்தார்
நீதிபதி தினகரன் பார்த்தார். இவர்கள் எல்லாம் பதவி உயர்வு இல்லாமல் ஏன் அப்படியே வைக்கப்பட்டனர் என்பதை உடைத்தெறிந்து அந்த நீதிபதி-களுக்கெல்லாம் பதவி உயர்வினை கொடுத்து மேலே தூக்கிவிட்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களுடைய தலைமையில் நான்கு நீதிபதிகள் அமர்ந்து கொலிஜியம் என்ற முறையில் அந்த நீதிபதிகள் நீதிபதி பி.டி தினகரன் அவர்களுடைய பெயரை உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்து அனுப்பினார்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதி பி.டி. தினகரன்
நீதிபதி பி.டி தினகரன் அவர்கள் உச்சநீதிமன்றப் பணிக்குத் தகுதியானவர் என்று தேர்ந்தெடுத்த செய்தியை அவர்கள் வெளியிட்டதுதான் தாமதம்.
இத்துணைக்கும் நீதியரசர் பி.டிதினகரன் அவர்கள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று பதவியே ஏற்கவில்லை. அதற்குள்ளாக பார்ப்பனர்களும், உயர்ஜாதிக்காரர்களும், பார்ப்பன ஊடகத் துறையினரும் அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாகச் செல்லவிடாமல் தடுக்க பொய்யான குற்றச்சாற்றுகளைப் பரப்பி வருகின்றனர்.
பார்ப்பனர்களின் பொய்யான புகார்
நீதிபதி பி.டி.தினகரன் சொத்து சேர்த்து விட்டார் என்று ஒரு பொய்யான புகாரை வெளிப்படுத்தினார்கள். பி.டி. தினகரன் அவர்கள் பாரம்பரியமாக பெரும் பணக்காரர். வருமான வரிகட்டிக்கொண்டு வருபவர். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சாந்திபூஷண் முன்னாள் மத்திய அமைச்சரானவர். இவர் போன்ற பார்ப்பனர்கள் சேர்ந்து இப்படி ஒரு பழியை தினகரன் அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர்.
சாந்திபூஷண் யோக்கியதை
சாந்தி பூஷண் என்ற பார்ப்பனர் கலைஞருக்காக உச்சநீதிமன்றத்திலே அவருடைய வழக்கறிஞராக கலைஞரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு சர்க்காரியா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர்.
ஆனால் அதே சாந்திபூஷண் என்ற பார்ப்பனர் அடுத்து மத்தியில் சட்ட அமைச்சராக வந்தார். கலைஞருக்காக வாதாடிய அவர் சர்க்காரியா கமிஷன் வழக்கு பொய்யான குற்றச்சாட்டைக் கூறி அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்திய வழக்கு என்று தெரிந்தும் அந்த வழக்கை நீக்கினாரா என்றால் அது தான் இல்லை. இவர் யோக்கியமானவராக இருந்தால் அந்த காரியத்தை செய்திருக்க வேண்டாமா?
நமது கலைஞர் அவர்களோ அதைப் பற்றி ஒன்றும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பார்ப்பனர்களின் புத்தி எப்படிப்பட்டது. என்பதை நன்கு உணர்ந்தவர் ஆயிற்றே! கலைஞர் மீது ஒரே ஒரு குறை உண்டு. என்ன அவர் முதுகில் பூணூல் இல்லை அவ்வளவுதான். பார்ப்பனர் நீதிபதிகளின் யோக்கியதை என்ன என்பதை வெளிப்படுத்தியவர்கள் நாங்கள் .
பொய் வயது - நீதிபதி ராமச்சந்திர அய்யர்
சென்னை உயர்நீதி-மன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த ராமச்சந்திரா அய்யர் பொய் வயது கொடுத்து கடைசி வரை நீதிபதி பதவியை அனுபவித்ததன் யோக்கியதையை அம்பலப்படுத்தியவர்கள் நாங்கள்.
நீதியரசர் பி.டி.தினகரன் அவர்களைப் பற்றி இந்து பத்திரிகையிலும் நேற்றைய டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகையிலும் பார்ப்பனர்களுக்கே உரிய புத்தியோடு அவரை எப்படியாவது உச்சநீதிமன்ற நீதிபதியாகாமல் தடுத்துவிட வேண்டும் என்று எழுதியிருக்கின்றார்கள்.
பி.டி.தினகரன் இன்னும் பதவியே ஏற்கவில்லை
பரம்பரையாக தாத்தா காலத்திலிருந்து செல்வந்தரான நீதியரசர் தினகரன் கர்நாடக மாநில தலைமை நீதிபதியாக பணியாற்றிய காலத்திற்குள்ளாகவா சொத்து சேர்த்துவிட்டார்? உண்மை அது அல்ல. தமிழர் ஒருவர் அதுவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் பி.டிதினகரன் அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகிவிடக் கூடாது என்பது தான் பார்ப்பனர்களின் நோக்கம் சாந்தி பூஷண்களின் நோக்கம் பார்ப்பன ஊடகங்களின் நோக்கமாக இருக்கிறது. இதை எப்படியாவது தடுத்து விடலாம் என்று பார்க்கிறார்கள்.
பிடி.தினகரன் அவர்களை பதவியில் அமரவைக்கும் வரை விடப்போவதில்லை
நீதியரசர் பி.டிதின-கரன் அவர்கள் இன்னமும் பதவியே ஏற்கவில்லை. பரிந்துரை செய்தி மட்டும் வெளியாகியிருக்கிறது.
நீதியரசர் பி.டி தினகரன் அவர்களை உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக அமரவைக்கும் வரை இந்தப் பிரச்சினையை திராவிடர் கழகம் உட்பட சமூகநீதி அமைப்புகள் இப்பிரச்சினையை விடப்போவதில்லை. ஓயப்போவதில்லை.
தனி நபருக்காக அல்ல - ஒரு தத்துவம்
இது ஏதோ ஒரு தனிப்பட்ட நபருக்காக நாங்கள் வாதாடவில்லை. சமூகநீதியை நிலைநாட்ட ஒரு தத்துவத்திற்கிடையே நடைபெறுகின்ற போராட்டமாகும்.
இன்றைக்கு உச்சநீதிமன்றம் தான் இந்த நாட்டையே ஆண்டு-கொண்டிருக்கின்றது. தந்தை பெரியார் ஒன்றைச் சொன்னார். காஷ்மீரில் இருக்கின்ற பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரியில் இருக்கின்ற பார்ப்பானுக்கு நெறிகட்டும் என்று.
நாடுதழுவிய அளவில் மாபெரும் போராட்டம்
எனவே நீதியரசர் பி.டி.தினகரன் அவர்களை உச்சநீதி-மன்றத்தில் அமர வைப்பதற்காக, பார்ப்பனர்களின் திட்டமிட்ட ஆதாரமற்ற புகார்களை தவிடுபொடியாக்கிட திராவிடர் கழகத்தின் சார்பில் நாடு தழுவிய அளவிலே மாபெரும் போராட்டத்தை கண்டன ஆர்ப்பாட்டத்தை எங்களுடைய தோழர்களை கலந்துகொண்டு விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அறிவித்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மேலும் பல அரிய கருத்துகளைக் கூறி விளக்கமாகப் பேசினார். இது பற்றி பார்ப்பனர் போக்கைக் கண்டித்து சென்னை யில், மதுரையில் வரும் 25.9.2009 கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
--------------------நன்றி:-விடுதலை" 20-9-2009
0 comments:
Post a Comment