Search This Blog

13.9.09

பெரியார் பற்றி இயக்குனர் ஞான. இராஜசேகர்


பெரியார்பேழை

சமூகத்தில் சம நிலை காணவேண்டும் என்பது நல்லவர்கள் எண்ணம். அந்தச் சிந்தனைச் சிறு பொறி தீச்சுடராக மாறப் பல சூழ்நிலைகள் துணை நின்றுள்ளன. இலக்கியங்கள், வாழ்க்கை வரலாறு நூல்கள் ஒரு சிலர் வாழ்க்கையில் திருப்பு முனைகளை ஏற்படுத்தியுள்ளன. அவைகளின் தத்துவங்கள், கொள்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தி, அவற்றின் தூதுவர்களாக ஒரு சிலரை வழிநடத்திச் சென்றுள்ளன. இதனையொட்டிய ஓரிரு நிகழ்வுகள் விளக்கப்படுகின்றன.

ஹென்றி இப்சன், மேலைநாட்டுத் தலைசிறந்த நாடகாசிரியர். அவரின் நாடகங்கள் புரட்சிகரமான நாடகங்கள். கருத்துகள், இன்னும் தொடர்புடையவனவாக உள்ளன. ஜவகர்லால் நேரு, மேலைநாட்டு இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். இப்சனின் நாடகங்களை படித்ததில், பொம்மை வீடு என்ற நாடகத்தின் கதாநாயகி, நோராவின் படைப்பு, ஒரு முன் மாதிரி பெண்ணாக அமைந்துள்ளதைக் கண்டு, இந்திய நாட்டுப் பெண்களின் நிலையை எண்ணிப் பார்த்தார். இந்தியப் பெண்கள் எந்த உரிமையும் இல்லாது தவிக்கும் அவல நிலை நீங்க நோரா போன்ற பெண்களின் வழி நடக்கவேண்டும் என்று தன் எழுத்துகளில் எழுதிவந்தார். நேருவுடன் அரசியல் இயக்கத்தில் தோழமை பூண்டிருந்த சரோஜினி நாயுடு, அருணா ஆசப் அலி, நேருவின் தங்கை விஜயலட்சுமி போன்றோர் நேருவின் கருத்தை மதித்தனர். வரவேற்றனர். இது இப்சன் நாடகத்தின் வலிமை வெளிப்பாடு என்று கொள்ளலாம்.

தற்காலத்தில் ஊடகத்தின் வலிமை செஞ்சிக்கோட்டை மிதிலை மிஞ்சும் வகையில் கொடி கட்டி பறக்கும் கால கட்டத்தில், செயத்தக்க, காலம் அறிந்து, தமிழர் தலைவர், ஒல்லும் வகையால் உலகுக்கு அளித்த பேழை பெரியார் திரைப்படம், மூடிய கண்கள் திறந்தன. திறந்த கண்களில் ஆனந்தக் கண்ணீர் அரும்பின. பெரியாரைப் பார்த்தவரும், பார்த்தவர் சொல்லும் பாங்கை கேட்டவரும், பூரித்துப் போவர்.

பல்லாயிரம் மக்களின் உள்ளக்கிடக்கைக்கு உருக் கொடுத்து வானத்து நிலவாக உலா வரச் செய்தவர், புறநானூற்று வீரராக வெளிப்பட்டவருக்கு, தமிழர் தலைவர் வாகை மாலை சூட்டி வாழ்த்து வழங்கப்பெற்ற இயக்குநர், மானமிகு ஞான. இராஜசேகர் கலையுலகுக் கடலில், பெரியார் கலத்திற்கு வெள்ளோட்டம் ஓட்டி மகிழ்ந்தவர் இயக்குநர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் நெஞ்சத்தை நெகிழச் செய்து, குரு காணிக்கையைப் பெற்றவர், பெரியார் சென்ற இடமெல்லாம், சிவப்பு கம்பள வரவேற்பும் விருதுகளும் பெற்ற பெரியார், திரு ஞான. இராஜசேகர் உள்ளத்தை கல்விக் கொண்ட விதம் எப்படி? கருப்புச் சட்டை வெண்தாடி வேந்தர், இயக்குநர் கருத்தில் கருத்தரித்த காரணமென்ன? தாக்கம் எத்தகையது? இதற்கான விளக்கத்தை வெளியில் எங்கும் தேடாது இயக்குநர் வாயிலாகவே நமக்கு கிடைத்துள்ளது.

கலைஞர் தொலைகாட்சியில், 30_07_2008 அன்று இயக்குநர் மானமிகு ஞான இராஜசேகர் அவர்கள் உதிர்த்த முத்துகள், கால வெப்பத்தில் உலர்ந்து போகாதவை, அதன் தொகுப்பு கீழே:-

பெரியார் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க, எனக்கு முதலில் தூண்டுகோலாக அமைந்தது திருப்பூர், கோவை, திருநெல்வேலியில் நான் சந்தித்த மக்களின் வேண்டுகோளே.

தந்தை பெரியாரைப் பற்றி அறிந்து கொள்ள, அவரைப்பற்றிய ஏராளமான புத்தகங்களைப் படிக்கத் துவங்கினேன்.

நான் எடுத்துக்கொண்ட திட்டத்திற்கு, ஓராண்டு (பணியில்) விடுப்பு எடுத்துக் கொண்டேன்.

தந்தை பெரியார், கடவுள் மறுப்பாளர் (Anti God) என்ற கருத்துக்கும், ஓர் இனத்தின் எதிரி என்ற எண்ணத்துக்கும், தக்க விளக்கம் கூற ஆசைப்பட்டேன்.

தந்தை பெரியாரை நான் மூன்று முறை சந்தித்துள்ளேன்.

பெரியாரின் நகைச்சுவை (Sense of (HUMOUR) humour) என்னை மிகவும் கவர்ந்தது.

எந்த பிரச்சனையையும் , தன்னை கலக்கத்தில் ஆழ்த்தியதாக பெரியார் கருதியதில்லை.

ஜாதி ஒழிப்பில் அவர் தீவிரமாக இருந்தார், அதன் தீமையால் அவர் நேரிடையாக பாதிக்கப்படவில்லையென்றாலும், ஜாதி ஒழிப்பு முயற்சியில் முனைப்பாக இருந்தார்.

பெரியாரின் நேர்மை குணம் குறிப்பிடத் தக்கதாகும்.

அவரின் தாய், மனைவி மறைவைப் பற்றி அவர் கொண்ட கருத்து ஒரு புதுமையான கருத்து. 90 வயதைக் கடந்து இயலாத நிலையில் வாழ்ந்த அவரின் தாயார், மேலும் வாழ்வதில் பொருளேதுமில்லை என்று கருதினார். இது ஒரு துணிச்சலான கருத்து. துணைவியார் மறைவு பற்றி அவர் வழங்கிய கருத்து ஓர் அரிய கருத்து.

கடலில் மூழ்கி கிடக்கும் பெரிய பனிப்பாறையின் ஒரு சிறு முனை மட்டும் வெளியில் தெரியும். (Tip of the ice berg). அது போன்று பெரியாரின் ஒரு சிறிது அளவு செய்தியைத்தான் கூறியுள்ளேன்.

பெரியாரின் கருத்துகள் சுய சிந்தனைக் கருத்துகள், மேற்கோள்களைக் கூறி உரை நிகழ்த்துவதில்லை, (Quotation free speech)

அவர், வாழ்க்கையில் அனுபவபூர்வமாக கண்டவை, அனுபவித்ததைப் பற்றியே பேசியுள்ளார், வழக்கமாக பயன்படுத்தும் பழமொழிகளையும், சூழ்நிலைகளையும் விளக்கி உரை நிகழ்த்தினார்.

அனைத்துக்கும் மேலாக, பெரியாரிடம் காணப்பட்ட தலையாய பண்பு, அவரின் மனித நேயப் பண்பாகும்.


திரு. வீரமணி அவர்கள், பெரியாருடன் நீண்டகாலம் இருந்தவர், அவரை நன்றாக அறிந்தவர். நான் தயாரித்த கருத்து படிவம் (Script) முழுவதையும் படித்து, ஒப்புதல் தந்து, பல வகையில் ஊக்கமளித்தார். அவருடன் 2 அமர்வு (Sitting) வைத்து விவாதித்தேன். ஒவ்வொரு அமர்வும் 3 மணி நேரம்.

படம் முழுமை அடைந்த பிறகு, முதல்வர் கலைஞர், படத்தை பலமுறை பார்த்தார். என்னிடம் பேசினார். கேள்விகள் ஏதும் கேட்கவில்லை, சில நிகழ்ச்சிகளை நடித்தே காட்டினார். அறிஞர் அண்ணா முதல்வரானவுடன், தந்தை பெரியாரைக் கண்டு வாழ்த்துப் பெறச் சென்று சந்தித்தபோது நடந்த நிகழ்ச்சியை , கலைஞர் அப்படியே விளக்கினார்.

நான், பெரியாரின் ஜாதி ஒழிப்பு முக்கியத்துவத்தை விளக்கிப் பேசிய இறுதிக் கட்ட காட்சியுடன் படத்தை முடிக்க இருந்தேன், கலைஞர் அவர்கள் பெரியார் மறைவையும், மக்கள் உணர்வு வெளிப்பட்ட நிகழ்வையும் இறுதிக் காட்சியாக அமைத்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தைக் கூறினார். நல்ல ஒரு கருத்து என்று ஏற்று, அதன்படியே இறுதிக் காட்சியை அமைத்தேன்.

மதிக்கத்தக்க திரு. ஞான. இராஜசேகர், பாராட்டுக் கூட்டங்களிலும், இதழ்கள் மூலமாகவும் பெரியார் படத்தைப் பற்றி பல செய்திகளைக் கூறியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி செய்திகள் கூடுதல் செய்திகளாக அமைகிறது. திரு. ஞான. இராஜசேகர் திரையுலகில் முழுமையாக ஈடுபட்டவரல்லர். இவர் ஓர் அய்.எ.எஸ். அதிகாரி. இன்றைய ஊடகத்தின் விளைவுகளை உணர்ந்தவர். நல்ல கலை என்னும் விளைநிலத்தில், ஊடகம் மூலம் உவர்ப்பை சேர்த்து, உதவாத நிலமாகி விடக் கூடாது என்ற நல்லெண்ணெத்தில், தரம் மிகுந்த சிந்தனைச் செறிவுள்ள உரத்தை இட எண்ணம் கொண்டவர். அந்த அளவிற்கு அவர் திரையுலக ஈடுபாடு என்று அறிய முடிகிறது. பாராட்டப்பட வேண்டிய முனைப்பு. தொலைக்காட்சியில், தமிழ் சினிமாக்கள் தரமாக இருந்தால், தமிழர்கள் சிறப்பாக இருப்பார்கள் என்று அவர் கூறியது, நம் கருத்துக்கு உறுதி சேர்க்கிறது, Thoughts rule the world’ எண்ணங்கள் உலகை ஆள்கிறது என்பது உண்மையே.

------------------------மு.வி.சோமசுந்தரம்--"விடுதலை" ஞாயிறுமலர் 12-9-2009

0 comments: