Search This Blog

16.9.09

கலைஞர் கருணாநிதி பற்றி அறிஞர் அண்ணா


கருணாநிதியின் எழுத்து வல்லமை, பேச்சு வல்லமை, நாடக நூல்களை எழுதிய வல்லமை, நாடகங்களில் நடித்த திறமை இவைகள் ஒவ்வொன்றையும் பற்றி எடுத்துச் சொன்னார்கள்.

கருணாநிதி இத்தகைய திறமைகளைப் பெற்றிருப்பது எவ்விதம் என்பதை உணர்ந்தால்தான் இந்தப் பாராட்டு விழாவின் உட்கருத்து புரியும்.

வண்ணமான எண்ணத்தை மிகச் சிறு பருவத்தில் பெற்றவர் கருணாநிதி. அவர் இளமைப் பருவம் முதல் நாட்டு மக்களுக்கு எதையாவது சொல்ல வேண்டும் என்று ஆர்வத்தோடு சில எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு கையேட்டுப் பிரதிகள் மூலமாகச் சொல்லி கட்டுரை வடிவத்தில், கவிதை வடிவத்தில், நாடக வடிவத்தில், சினிமாத்துறை மூலம் சொல்லி இன்றைய தினம் அமைச்சராக இருந்து அந்த எண்ணங்களுக்கு எல்லாம் அமைச்சர் என்ற முறையில் எந்த அளவுக்கு வடிவம் கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு வடிவம் கொடுத்து வருவதை நாமெல்லாம் மகிழ்ச்சியோடு பாராட்டுகிறோம்.

ஒருநாளைக்குக் கருணாநிதி எத்தனை மணிநேரம் தூங்குகிறார் என்பதை யாராவது அவருக்குத் தெரியாமல் பார்த்தால்தான் இந்தத் திறமை பெற்றதன் அடிப்படை உழைப்பு என்பதை உணர்வீர்கள்.

கடுமையான உழைப்பு என்று நான் குறிப்பிட்டேன். கடுமையான உழைப்பு செய்வதற்கேற்ற உடல் வளம் ஒரு துளியும் கிடையாது. பேசுகிறபோது வீரம் சொட்டும், பேசி உட்கார்ந்த உடனே வியர்வை கொட்டும். வீட்டுக்குச் சென்ற உடனே மருந்துச் சொட்டுகள் உள்ளே செல்லும். 2 மணி நேரத்துக்குப் பிறகு வீட்டிலே உள்ளவர்கள் கன்னத்திலே, கை வைத்துக் கொள்பவர்களும், முகவாய்க் கட்டையைத் தடவிக் கொள்பவர்களும் , பெரியவர்களாக உள்ளவர்கள் தலையிலே தட்டிக் கொள்பவர்களும், இப்படிப் போய் அலைவானேன், இப்படி வந்து அவதிப்படுவானேன். இப்படிப் போய் வேலை செய்வானேன், இங்கு வந்து இப்படிக் கடிப்பானேன் என்று கவலைப்பட்டுக் கொள்பவர்களும், சுற்றி இருக்கிற டாக்டர்கள் இது இந்த வியாதியாக இருக்குமா, அந்த வியாதியாக இருக்குமா என்று அவர்களுக்குள்ளே பேசிக் கொள்வதையும் நீங்கள் பார்த்தீர்களானால் அந்தக் கடும் உழைப்புக்கு ஏற்ற உடல்கட்டு அவரிடத்திலே இல்லை.

எப்படியோ சொல்லி வைத்தாற் போல் தமிழ் நாட்டின் தலைவர்களில் யாருக்கு உடற்கட்டு இருக்கிறதோ அவர்கள் தங்களது உடற்கட்டை வேறு பல காரியங்களுக்குப் பயன்படுத்துகிறார்களே தவிர, இப்படிப்பட்ட காரியங்களுக்குப் பயன்படுத்துவதில்லை. உடற்கட்டு துளியுமில்லாத ம.பொ.சி. போன்றவர்களும் கருணாநிதியைப் போன்றவர்களும் தான் கடுமையாக உழைத்துவிட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டோ தலையை, கழுத்தைப் பிடித்துக் கொண்டோ மருத்துவமனையில் படுத்திருக்கிறார்கள்.

ம.பொ.சி.யும், சட்டமன்றத் தலைவர் அவர்களும் சொன்னார்கள், கருணாநிதியைத் தாக்க சிலர் முயன்றார்கள் என்று! இதிலே நான் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் தாக்க முற்படாமல் இருப்பார்களேயானால்தான் நான் உள்ளபடி ஆச்சரியப்பட்டிருப்பேன். ஒரு பேரறிவாளர் சொன்னார். உன்னை யாருமே குறை கூறவில்லையென்றால் கொஞ்ச காலம் கவலைப்படு, மற்றவர்கள் மனதை உறுத்தும்படியான வகையில் விஷயத்தை சொல்லத் தவறிவிட்டாய் என்பதுதான் அதனுடைய பொருள் என்று!

நான் கருணாநிதி அமைச்சரானபோது அடைந்த மகிழ்ச்சியை விட அவர் மாற்றாரால் அமைச்சர் என்ற முறையில் தாக்கப்படுவாரானால் நிமிர்ந்த நடை போட்டு என் தம்பி எதையும் ஏற்றுக் கொள்கின்றவன் என்று சொல்வேன்.

நாங்கள் எங்கள் மீது ஈ எறும்பு விழாது என்று சொல்லத் தக்க அளவிலே உள்ளவர்களல்ல. எங்களை உருட்டிவிட்ட அழுக்குப் பள்ளங்கள் ஏராளம். நாங்கள் ஏறி இறங்கிய மலைச் சரிவுகள் நிரம்ப உண்டு. நாங்கள் கண்டு அதிலே சிக்காமல் தப்பிய சதிகள் பல. சந்தித்த எதிர்ப்புகள் மிகப்பல. அவைகளுக்குப் பிறகு இன்றைய தினம் இந்த நிலை அடைந்திருக்கிறோம் என்றால் மறுபடியும் எங்களை அதே கொடுமைக்கு ஆளாக்குகின்றவர்களை நான் பணிவன்போடு கேட்கிறேன். இன்னும் எந்த உயரத்துக்கு எங்களை அழைத்துச் செல்ல நீங்கள் இந்தக் கொடுமை செய்கிறீர்கள்?

எங்களைத் தூற்றினீர்கள். மக்கள் போற்ற ஆரம்பித்தார்கள். நீங்கள் அடித்தீர்கள்; மக்கள்அணைத்துக் கொண்டார்கள். எங்களை அலட்சியப்படுத்தினீர்கள், மக்கள் எங்களை அரசாளும் பீடத்தில் அமர்த்தினார்கள்.

புதுவை நகரத்திலே நடைபெற்ற ஒரு பெரிய கலவரத்தில் அவரையும் மற்றவர்கள் அடித்துப் போட்டு, இவர் செத்துவிட்டார் என்ற எண்ணத்தாலே பாதையோரத்தில் கிடத்திவிட்டுச் சென்று வருடம் 22 ஆகிறது. அதை விடப் பெரிய தாக்குதல் இனி யாரும் நடத்த முடியாது. ஏன் சொல்கிறேன் என்றால், தாக்குதல் நடந்த இடம் புதுச்சேரி. புதுச்சேரித் தாக்குதலே அவ்வளவுதான். புதுச்சேரியை மற்ற இடங்களுக்கு வரவழைத்துக் கொண்டு தாக்குபவர்களின் தாக்குதல் அதைவிடப் பயங்கரமானதாக இருக்க முடியாது. ஆகையினால், அவைகளிலே எல்லாம் தேறிப் பிழைத்து இந்த நிலைக்கு வந்தவர்தான் கருணாநிதி என்பதைஅவர் பிறந்த நாளில் எண்ணிக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மிகுந்த பெருமையடைகிறோம்.

என்னை முழுவதும் அறிந்தவர்கள்தான் கழகத்திலே இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத் தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடம் உண்டு.

நான் கவலையோடு இருக்கிறேன் என்றால் முதன் முதல் கண்டுபிடிக்கக்கூடியது கருணாநிதிதான். கோபமாக இருக்கிறேன் என்றால் முதல் முதல் கண்டு பிடிக்கக்கூடியது கருணாநிதிதான். நான் கோபமாக இருப்பது தெரியாமல் என்னிடத்திலே ஏதாவது பேசி, நான் கோபமாக நாலு வார்த்தை சொன்ன பிறகுதான் அண்ணா கோபமாக இருக்கிறார் என்று சொல்பவர் நம்முடைய நாவலர். கலைக்கு இருக்கும் ஒரு விசேடமே அது. கவலைப்பட்டு நடிக்கிறானென்றால் மற்றவர்களும் அதை உணர்ந்து அல்லது அந்தக் கணமே அறிந்து மற்றவர்களைக் கவலைப்பட வைப்பதுதான் கலைஞனுடைய திறமை. அதைப் போல என்னுடைய கோபதாபங்களை என்னுடைய கவலைகளை உடனுக்குடன் நொடிப்பொழுதில் அறிந்து அதை மாற்றவேண்டும் என்ற அக்கறையோடு நல்ல முறையில் துணை புரிவதில் கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான்.

----------------கலைஞர் 46 ஆவது பிறந்த நாள் "முரசொலி" மலரில் வெளிவந்த அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம்

0 comments: