Search This Blog
6.9.09
வ.உ.சி.யும் - பெரியாரும்
வ.உ.சி. 138ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை
தோழர் வி.ஓ சிதம்பரம் பிள்ளை அவர்கள் முடிவெய்தி விட்டார். தனக்கு இயங்கும் சக்தி இருந்து ஓடி உசாவித் திரியும் காலமெல்லாம் தனக்கு சரியென்று தோன்றிய வழிகளில் உழைத்துவிட்டு ஒடுக்கம் ஏற்பட்டவுடன் அடக்கமாகிவிட்டார். இது மக்கள் வாழ்க்கையின் நியாயமான நிலையேயாகும்.
மிக்க மந்தமான காலத்தில் அதாவது மனிதன் பொதுநலம் என்றால் மத சம்பந்தமான காரியம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், அரசியல் என்றால் அது தெய்வீக சம்பந்தமானது என்றும் எப்படி எனில் கூனோ, குருடோ, அயோக்கியனோ, கொள்ளைக்காரனோ ஒருவன் புருஷனாய் அமைந்து விட்டால் பெய்யெனப் பெய்யும் மழை என்பதற்கு இலக்காகவும் பின்தூங்கி முன்னெழுபவள் போலவும் இருப்பதுதான் பெண்ணின் கற்புக்கு குறியென்றும் அக்கூட்டு தெய்வீக சம்மந்தமாய் ஏற்பட்டதென்றும் சொல்வது போல் அரசன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும், ஆட்சி எப்படிப் பட்டதாய் இருந்தாலும், அரசனை விஷ்ணுவாய் கருதி ஆட்சியை வேதக் கோட்பாடாகவும் கருதி வாழ வேண்டும் என்று இந்த பார்ப்பனீய ஆதிக்க காலத்தில் மற்றும் தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானமாகவும், மகா இழிவாகவும், மகா கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில், தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து அரசியலை இகழ்ந்து துச்சமாய் கருதி தண்டனையை அடைந்து சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்று கலங்காமல் மனம் மாறாமல் வெளிவந்த வீரர்களின் முதன்மை வரியில் முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம். அதன் பலன் எப்படியோ, ஆனாலும் அவராலேயே அநேக பார்ப்பனரல்லாத மக்கள் உண்மை வீரர்களாகவும் சுய நலமற்றவர்களாகவும் வெளிவர முடிந்தது.
தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திருப் பாரேயானால் லோக மானியர், முனீந்திரர், சிதம்பரம் கட்டம், சிதம்பரம் உருவச் சிலை, சிதம்பரநாதர் கோயில், சிதம்பரம் பண்டு, காங்கிரஸ் மண்டபங்களில் காங்கிரஸ் பக்தர்கள் வீடுகளில் சிதம்பரம் கழுத்து சிலை, சிதம்பரம் உருவப்படம் இருக்கும்படியான நிலையை அடைந்திருப்பார். ஆனால் அவர் பிள்ளை. அதுவும் சைவப் பிள்ளை ஆனதால் அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்காமல் இருந்தது என்பதோடு அவருக்காக ஏற்படுத்தப்பட்ட பண்டுகூட வெளியிட யோக்கியதை இல்லாததாய் இருந்து வருகிறது.
சிதம்பரம் பிள்ளையின் அனுபவத்தை மற்ற தேசாபிமான பார்ப்பனரல்லாதாரும் அறியட்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிட்டோம்.
அரசியல் உலகம் அவர் இறங்கின காலத்தில் ஒரு விதமாகவும் இப்போது ஒரு விதமாகவும் இருக்கிற படியால் ஓர் அளவுக்கு பார்ப்பனரல்லாத தேச பக்தர்களைப் பற்றி ஆறுதல் அடைகிறோம். எப்படியெனில் பார்ப்பனரல்லாத தேச பக்தர்களை பார்ப்பனர் ஓர் அளவுக்காவது வேஷத்துக்காகவாவது அணைத்துத் தீரவேண்டிய நிலையில் வேறு பல இயக்கங்கள் நிர்பந்தித்துக் கொண்டிருப்பதால் அதிகம் பயப்பட வேண்டியதில்லை.
ஆகையால் சிதம்பரம் பிள்ளையை ஓர் உதாரணமாகக் கொண்டு மற்ற தேசபக்தர்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்வார்களாக.
------------------------- (22-.11.-1936 குடிஅரசு)
ஹிந்து, மெயில், மித்திரன், ஜெயபாரதி, தினமணி இடம் கொள்ளுமா? பிறப்புக்கும் பேருக்கும் அடிமையான பித்தலாட்ட தேசம் இதுதானே?
ஏ -பி வகுப்பு சிறையில்லாத முப்பதாண்டு கட்கு முன்பு சிறை புகுந்து, வக்கீல் தொழிலிழந்து, தியாகம் பல புரிந்து, கஷ்டநஷ்டங்கள் அடைந்து, கடைசி வரையில் ஏழையாகவே வாழ்ந்து சென்ற 18ஆம் தேதியன்று, 65ஆவது வயதில் உயிர் துறந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை பிரம்மா தலையிலிருந்து வெடித்தெழுந்த வ.உ.சிதம்பர அய்யராயிருந்தால், ஹிந்து, சுதேசமித்திரன், ஜெயபாரதி, தினமணி முதலிய பழுப்பு வெள்ளை பத்திரிகைகளிலும், மெயில் போன்ற வெளுப்பு பார்ப்பன பத்திரிகைகளிலும் வேறு விஷயங்களுக்கு இடமிருக்குமா? இது வரையில் இந்நாட்டில் இறந்த வடநாட்டு படேல்களாயிருந்தாலும் சரி - தென்னாட்டுப் படேல்களாயிருந்தாலும் சரி - சிதம்பரம் பிள்ளை தியாகத்துக்கு ஒப்பாகுமா? ஜெயிலிருக்கும் திக்கே தெரியாத கஸ்தூரி தங்கய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார் முதலியோரின் சேவையும் தியாகமும் பிள்ளை அவர்களின் தியாகம் முன்பு உறை போடவும் கூடுமா? ரவுலட் சட்டத்தில் கையொப்பமிட்ட சர். சி.வி.குமாரசாமி சாஸ்திரிக்கும், பார்ப்பனரல்லா தாரிடமே பத்து லட்சக் கணக்கில் கொள்ளையடித்து எல்லா சொத்தையும் பார்ப்பனருக்கே உதவ வேண்டுமென்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து போன டாக்டர் ரங்காச்சாரிக்கும் கொடுத்த இடத்தில் 100இல் ஒரு பங்குகூட, தேசபக்த சிங்கம் சிதம்பர தங்கத்துக்கு, ஹிந்து முதலிய தேசிய பத்திரிகைகள் கொடுக்கவில்லையென்றால் இந்த வகுப்புவாதமே உருவெடுத்த சண்டாள பத்திரிகைகள் தேசியம் பேசி, பாமர மக்கள் தலையில் எத்தனை காலம் மிளகாய் அரைக்க உத்தேசித்திருக்கின்றனவோ தெரியவில்லையே?
போதாக்குறைக்கு சிதம்பரம் பிள்ளை காங்கிரஸ் என்று சொல்லியே உயிர் துறந்தாராம்! சி. ராஜகோபாலாச்சாரி போன்ற பார்ப்பனத் தலைவர்களின் சூழ்ச்சியை கண்டித்தும், காங்கிரசை விட தேசமே பெரிதென்று கர்ஜித்த சிங்கமா, அக்ரஹாரப் புலிகள் அதிகாரம் செலுத்தும் காங்கிரசைப் பற்றி மகா கவலை கொண்டு இறந்திருப்பார்? ஒரு வேளை காங்கிரசின் பேரால் பாமர மக்கள் தலை மேல் கல் விழப் போகிறதே என்று வேண்டுமானால் கவலைப் பட்டிருக்கலாம். தாலி அறுப்பு ஜவஹர் கூட்டத்தில் யானையை விட்டது. ருக்மணி லட்சுமிபதியை சுந்தரராவ் குத்தப் போனது - போன்ற தேர்தல் அபாண்டங்களோடுதான், சிதம்பரம் காங்கிரஸ் காங்கிரஸ் என்று உயிர்விட்டார் என்ற அபாண்டத்தையும் சேர்க்க வேண்டும்.
சிதம்பரம் பிள்ளை விஷயத்தில் மவுனம் சாதிக்கும் ஜாதிப் பித்து பிடித்த பார்ப்பன பத்திரிகைகளின் போக்கைக் கண்ட பின்னாவது, பார்ப்பனரல்லாதாருக்கு ஆத்திரம் பொங்குமா?
----------------(29.-11.1936, குடிஅரசு).
--------------- "வ.உ.சி.யும் பெரியாரும்" என்ற நூலிலிருந்து.......
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment