Search This Blog

11.9.09

தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்பட வேண்டும்!
பெரியார் திரைப்படம் விருது பெற்றதற்கு மகிழ்ச்சி மாதிரிக் கல்வி என்ற பெயரால் இந்தியைத் திணிக்காதே! காவிரி நீர் உள்ளிட்ட உரிமைகளைக் காப்பதில் தமிழர்களிடையே ஒற்றுமை உணர்வு தேவை

ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையைக் காப்பதில் மத்திய அரசு சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் அழுத்தம் கொடுக்கவேண்டும்

மோசடி செய்யும் ஆண் - பெண் சாமியார்களைக் கைது செய்க!

குடந்தை இளைஞரணி மாநாட்டுத் தீர்மானங்கள்ஈழத் தமிழர் வாழ்வுரிமை உள்ளிட்ட 9 முக்கிய தீர்மானங்கள் குடந்தை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

கும்பகோணத்தில் நேற்று (9.9.2009) நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:_

1. பெரியார் திரைப்படம் மாநில மொழிகளில் மிகச் சிறந்தது என்று மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அளிக்கப்பட்டதற்கு இம்மாநாடு மட்டற்ற மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது. பெரியார் திரைப்பட வெற்றிக்குக் காரணமாக இருந்த நமது முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்புகளையும் சார்ந்த அனைவருக்கும் இம்மாநாடு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டுமாய் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

3. தமிழ்நாட்டில் இன்னும் கிராமப்பகுதிகளில் தேநீர்க் கடைகளில் இரட்டை தம்ளர் முறை இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன. இதனைக் கடுமையாக ஒடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

4. ஈழத்தில் போரை முடித்த பிறகும் விடுதலைப்புலிகள் என்ற தீவிரவாதிகளை அழித்து விட்டோம் என்று கூறிவிட்டு இப்போது தமிழினத்தை முற்றாக ஒழிப்பது என்னும் திட்டத்தோடு செயல்படும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

முள்வேலி முகாமுக்குள் முடங்கிக் கிடக்கும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை விடுவித்து, அவர்-களின் சொந்த பகுதிகளுக்கு வீடுகளுக்குச் செல்லும் வாழ்வுரிமையை மீட்டுத்தர இந்திய அரசு சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் உதவிட முன்வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஈழ முகாம்களில் குழந்தைகள், சிறுவர்கள் படும் அவதிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக அய்.நா.வின் யுனிசெப் அலுவலக மூத்த அதிகாரி ஜேம்ஸ் எல்டரை இலங்கை அதிபர் ராஜபக்சே வெளியேற்றியதைக் கண்டிக்காமல் இந்திய அரசும், அய்.நா.வும் மவுனம் சாதிப்பதற்கு இம்மாநாடு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. பத்திரிகையாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை இம்மாநாடு கண்டிப்பதுடன், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், உலக நாடுகளை மனித உரிமை மற்றும் ஊடக அமைப்புகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. காவிரி நீர், முல்லை பெரியாறு நீர் தேக்க உரிமை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், பாலாற்று உரிமை இவைகளில் தமிழ்நாட்டுக்கு உரிய உரிமைகளை மீட்பதில் கட்சிகளைக் கடந்து தமிழர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும் என்றும், இது போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசு கண்டும் காணாமல் இருக்கும் போக்கை கைவிட்டு, உண்மையான ஒருமைப்பாட்டை செயல்படுத்தும் மத்திய அரசாக செயல்பட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

6. மாதிரிப் பள்ளிகளைத் திறப்பது என்ற பெயரால் இந்தியைத் திணிக்க முயற்சிக்கும் போக்குக்கு இம்மாநாடு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

7. ஆண், பெண் சாமியார்கள் மக்களின் பாமரத்தனமான பக்தியைப் பயன்படுத்திக் கொண்டு மோசடி செய்வதைத் தடுத்திட திருவண்ணாமலையில் மேற்கொண்டதுபோல மாவட்ட ஆட்சியும் காவல்துறையும் இணைந்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

8. பொது இடங்களில் எந்த மத சம்பந்தமான வழிபாட்டு நிலையங்களையும், கோயில்களையும் கட்டக் கூடாது என்று அரசு ஆணைகளும், உச்சநீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்புகளும் தெளிவாக இருந்தும்கூட, அவற்றிற்கு மாறாக அரசு அதிகாரிகளே அரசு அலுவலக வளாகங்களுக்குள் கோயில்கள் எழுப்புவது நாளும் வளர்ந்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் உரிய சுற்றறிக்கைகளை அனுப்பி, சட்ட விரோதமாக கோயில் கட்டும் பணிகளைத் தடுக்குமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.


9. மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்குவதில் தாராளத் தன்மை கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு இம்மாநாடு பாராட்டுதலைத் தெரிவிக்கிறது. ஆனால் நடைமுறையில் பல வங்கி அதிகாரிகள் பல்வேறு காரணங்களைச் சொல்லி இழுத்தடிக்கும் போக்கு நீடித்து வருவதை மத்திய நிதி அமைச்சகத்தின் கவனத்துக்கு இம்மாநாடு கொண்டு வர விரும்புகிறது. இதில் உள்ள நடைமுறை இடர்ப்பாட்டைக் களைந்திட ஆவன செய்யுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

-------------------"விடுதலை" 10-9-2009

0 comments: