Search This Blog

1.10.09

முல்லை பெரியாறு சிக்கல்



நியாயப்படியான பிரச்சினையாக இருந்தாலும் சரி, சட்டப்படியான பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதையும் பிரச்சினையாக்கப்படும் நாடுதான் இந்தியா.

அதற்குக் கண்கண்ட எடுத்துக்காட்டு முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையாகும். கடந்த 30 ஆண்டுகாலமாக இந்தப் பிரச்சினை ஓயா அலையாக எழுந்து நிற்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சியில் 21 ஆண்டுகள் உழைத்து இந்த அணை உருவாக்கப்பட்டது. 1866 இல் திருவாங்கூர் அரசுடன் தமிழ்நாடு போட்டுக்-கொண்டுள்ள ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கானது.

143 ஆண்டுகள் கழிந்த நிலையிலே, கேரள மாநில அரசு ஏட்டிக்குப் போட்டியாக நடந்துகொண்டு வருவது வருந்தத்தக்கது. காங்கிரஸ் ஆட்சி மட்டுமல்ல, இதில் மார்க்சியம் பேசும் சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியும் விதிவிலக்கல்ல.

152 அடி அளவுக்கு தண்ணீரைத் தேக்கிக் கொள்ளும் வகையில் அணை உருவாக்கப்பட்டுள்ளது. அணை பலகீனமாக உள்ளது என்றும், அணை உடைந்தால் கேரளாவின் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 34 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அபாய சங்கை ஊதியது கேரள அரசு.

இதன் அடிப்படையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையும் பெறப்பட்டு, 30 கோடி ரூபாய் செலவில் பலமான கட்டுமானப் பணிகளைத் தமிழ்நாடு அரசு செய்து, அதன்மீது தொழில் ரீதியான சான்றிதழ் பெறப்பட்ட பிறகும் கேரள அரசு சண்டித்தனம் செய்து வருவது அதன் தரத்தைத்தான் வெளிப்படுத்தும்.

தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம்வரை சென்று தமிழ்நாட்டின் நியாயமான, சட்ட ரீதியான, தொழில்நுட்ப ரீதியான, உண்மைகளை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும்கூட மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்ற போக்கை கேரள அரசு கடைபிடித்து வருகிறது.

பல வகைகளிலும் கேரளாவுக்குத் தமிழ்நாடு அரசு விட்டுக் கொடுக்கும் போக்கைத்தான் சகோதரத்துவத்துடன் கடந்த காலங்களில் கடைபிடித்து வந்திருக்கிறது. மீன்பிடி உரிமை, சுற்றுலாப் பயணிகளின் படகுப் பயணக் கட்டண வருமானம் போன்றவற்றில் கேரள அரசின் வேண்டுகோளை தமிழ்நாடு அரசு பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. அணைக்குப் பாதுகாப்பு கேரளக் காவல்துறை; அவர்களுக்குச் சம்பளம் கொடுப்பதோ தமிழ்நாடு அரசு. நீர்ப் பிடிப்புப் பகுதிக்கான வாடகையைப் பல மடங்கு கேரளா உயர்த்திய போதும்கூட தமிழ்நாடு அரசு அதில் பிரச்சினை செய்யவில்லை.

152 அடி தண்ணீரைத் தேக்கினால்தான் நாற்பது அடி தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 112 அடி தண்ணீர் என்பது கட்டாயம் தேக்கப்பட்டாகவேண்டும். அதனைப் பயன்படுத்த முடியாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவிலங்குகள் பாதுகாப்புக்காக இந்த நிபந்தனை உள்ளது. இந்த நிலையில், கேரளா விதிக்கும் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால் வெறும் 20 அடி தண்ணீரைத்தான் தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தேனி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்த நீர்த்தேக்கத்தை நம்பியே உள்ளன. குடிநீர் வாய்ப்பும் மறுக்கப்படும் ஆபத்து, மின் உற்பத்தியும் ஆண்டுக்கு ரூ.80 கோடி பாதிக்கப்பட்டு வருகிறது.

அடாவடித்தனத்திற்கு ஓர் எல்லையேயில்லை என்கிற போக்கில் கேரளாவின் மார்க்சிஸ்ட் ஆட்சி வீறுநடை போடுகிறது.

இந்த அணைக்குப் போட்டியாக புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது கேரள அரசு. இது தொடர்பாக மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் பொய்யான தகவலைத் தந்திருக்கிறது. இந்த அணை தொடர்பான வழக்கு எந்த நீதிமன்றத்திலும் நிலுவையில் இல்லை என்று அப்பட்டமான பொய்யை அதிகாரப்பூர்வமாகத் தந்துள்ளது.

முல்லை பெரியாறில் அணை கட்டுவதற்கு வனப் பகுதியில் ஆய்வு நடத்திட மத்திய அரசு அனுமதியளித்ததாக கேரள மாநில முதலமைச்சர் கூறியுள்ளார். மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தொலைப்பேசியில் சொன்னதாக ஒரு முதலமைச்சர் கூறுகிறார் என்றால், தெரிந்துகொள்ளலாமே, இதுபோன்ற பிரச்சினைகளில் வாய்மொழி ஆணை என்பது சரியானதுதானா?

தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்ட நிலையில், அத்தகைய அனுமதி ஏதும் அளிக்கப்படவில்லை என்று அந்த மத்திய அமைச்சரே அறிவித்து விட்டாரே! இந்த நிலை கேரள மாநில அரசுக்குப் பெருமை சேர்க்கக்கூடியதுதானா? முல்லை பெரியாறில் அணை கட்டுவது தொடர்பான எந்த முடிவையும், தமிழ்நாடு அரசுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று மத்திய அரசு கூறிவிட்டதே . இதற்கு மேலும் தான்தோன்றித்தனமாக கேரளா நடந்துகொள்ளுமேயானால், அரசமைப்புச் சட்ட சிக்கலை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழல்தானே ஏற்படும் . எச்சரிக்கை!

--------------------"விடுதலை" தலையங்கம் 30-9-2009

0 comments: