Search This Blog

14.10.09

பெரியார் பவுண்டேசன் ஏற்படுத்திட வேண்டும்!

அம்பேத்கர் ஃபவுண்டேசன் போல பெரியார் ஃபவுண்டேசன் ஏற்படுத்திட வேண்டும்
மத்திய சமூகநீதித் துறைக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்

மத்திய சமூகநீதி அமலாக்கத்தின் துறை சார்பிலே அம்பேத்கர் ஃபவுண்டேசன் என்றிருப்பதைப் போல, இந்தியாவுக்கே சமூகநீதிக்கு வழிகாட்டிய தந்தை பெரியார் அவர்களின் பெயராலே பெரியார் ஃபவுண்டேசன் அமைய வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்க உரையாற்றினார்.

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் 28.9.2009 அன்று நடைபெற்ற அறுபெரும் விழாக்களில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

முதலாவதாக விருதுகள் வழங்கப்பட்ட மகாலிங்கம், ரவிமுருகையா, கவிஞர் சல்மா, டாக்டர் என்.பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுதல்களை விடுதலையின் சார்பாக விடுதலை வாசகர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.

அது போலவே இங்கே நம்முடைய போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் இந்த வளாகத்திலே எத்தனை நிகழ்ச்சிகள் நடந்தாலும் நாங்கள் எப்பொழுதெல்லாம் அழைக்கிறோமோ அப்பொழுதெல்லாம் வரக்கூடியவர்கள்.

பெரியார் காலத்தில் மேடு-பள்ளம் அந்த வகையிலே மிகத் தெளிவான ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இந்த வளாகம் தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலே மேடு பள்ளம் நிறைந்த ஒன்று. சமுதாயத்தை அவர்கள் எப்படி மேடு பள்ளமாகப் பார்த்தார்களோ, அதே நிலையிலே தான் இருந்தது.

இந்த வளாகத்திலே இன்றைக்கு இவ்வளவு பெரிய புரட்சி, அதுவும் குறிப்பாக டிஜிட்டல் பப்ளிசிங் என்ற ஒரு புதிய படிப்பையும், பட்டம் பெறக்கூடிய வாய்ப்பையும், அதிலே சேர்ந்தவர்கள் அத்துணை பேருக்கும் தொழில்துறையில், வேலை வாய்ப்பில் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைந்து நடக்கிறபொழுது, நிறைவுரை என்று எனக்குப் போட்டிருக்கிறார்கள். நிறைவுரை என்று சொன்னால் வேறில்லை. மனம் நிறைவாக உரையாற்றக்கூடிய ஒருவன் என்ற முறையிலே ஒவ்வொருவருடைய உரையும் மிகச் சிறப்பாக இருந்தது.

பெரியாரின் பெருமைகளை பேசதாத நாள்கள் எல்லாம்

பெரியாரின் பெருமைகளை பேசாத நாள்கள் எல்லாம் பிறவாத நாள்களே. பெரியார், அண்ணா என்று சொன்னால் எந்த மேடையாக இருந்தாலும் அங்கே அதை சொல்லிக் கொண்டிருப்பதென்பது நம்முடைய முத்தமிழறிஞர் தமிழகத்திலே ஒரு பொற்கால ஆட்சியை உருவாக்கி, எந்த நேரத்திலே எந்தக் குரலைத் தவறாமல் கொடுக்க வேண்டுமோ, அந்தக் குரலைத் தவறாமல் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய அவருடைய உறுதி எவ்வளவோ, அதே போன்று அவருடைய தம்பிமார்கள் கொஞ்சம் கூட அந்த இன உணர்வு குறையாமல் இங்கே அருமையாகக் கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.

எங்கள் குடும்பம் கழகக் குடும்பம். இதிலே எங்களுடைய சகோதரர்கள் டெல்லியிலே அமைச்சர்களாக இருக்கிறார்கள். வாளாக, கேடயமாக கோட்டையிலே அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று பார்க்கும்பொழுது நாங்கள் அளவற்ற பூரிப்பை பெறுகின்றவர்கள்.

உங்களுக்குத் தெரியும். திராவிடர் கழகம் தேர்தலிலே நிற்காத ஓர் இயக்கம். ஆனால் அதே நேரத்திலே கோட்டைக்குள்ளே அது சாதாரணக் கோட்டையாக இருந்தாலும் சரி, சென்னை கோட்டையாக இருந்தாலும் சரி, செங்கோட்டையாக இருந்தாலும் சரி, நம்முடைய அமைச்சர் பெருமக்கள் அமர்ந்திருக்கக் கூடிய நிலைக்கு யாராவது சிறு கோளாறுகளை ஏற்படுத்தினால் கூட, அதை தடுக்கக்கூடிய மிகப்பெரிய வாளாக கேடயமாக திராவிடர் கழகம் என்றைக்கும் இருந்து கொண்டிருக்கும் என்ற நிலையிலே தான் தந்தை பெரியார் அவர்களுடைய அறக்கட்டளை சார்பாக இந்த மாபெரும் அரங்கம் எளிய முறையிலே தொடங்கியது.

சமூக நீதியிலே இருக்கக் கூடிய மேடு பள்ளங்களை சரிப்படுத்துவதைப் போல இங்கே நாங்கள் சரிப்படுத்தி இன்றைக்கு ஒரு பெரிய பெருமை வந்திருக்கிறது.

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழாவை இந்த நகரமே காணாத அளவுக்கு மிகச் சிறப்பாகச் செய்தார்கள்.

மணியம்மையார் விளையாட்டரங்கம்

அந்தக் குழுவினர் செய்த பணிகளிலே எங்களுக்குத் தோன்றியதுதான், இந்த விளையாட்டரங்கம் மணியம்மையார் ஸ்டேடியம் என்பது.

எனவே, இந்த ஸ்டேடியத்திலே அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களைப் பாதுகாத்து, அதற்குப் பிறகு இந்த இயக்கத்தை 5 ஆண்டுகாலம் பாதுகாத்து தந்தை பெரியார் அவர்களுடைய சொத்துகள் மட்டுமல்ல, தன்னுடைய சொந்த சொத்துகளைக் கூட, தனியாக பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம் என்பதை உருவாக்கி அதன் மூலம் பாலிடெக்னிக்குகள், இன்றைக்குப் பல்கலைக் கழகங்கள் இவைகளை எல்லாம் தெளிவாக ஆக்கித் தந்திருக்கக் கூடிய அன்னை மணியம்மையார் அவர்களுடைய பெயராலே இது அமைய வேண்டும்.

நாகம்மையார் குழந்தைகள் இல்லம், அன்னை மணியம்மையார் அவர்களுடைய பெயராலே இந்த ஸ்டேடியம் என்று அமைத்திருக்கின்ற பொழுது இங்கு சொன்னார்கள்.

மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும், அவருடைய நண்பரும் தந்தை பெரியார் அவர்களிடம் கையெழுத்து வாங்க அவர் பத்து ரூபாய் கொடுத்தார்; இவர் அய்ந்து ரூபாய் கொடுத்தார் என்று.

காசில்லாமல் கையெழுத்துப் போட்டவர்

பெரியார் நான்கணாவுக்கே கையெழுத்துப் போட்டுக் கொடுப்பார். அது மட்டுமல்ல. இன்னொரு செய்தி என்னவென்றால் குடிஅரசு பதிப்பக புத்தகத்தை நாங்கள் விற்றோம் என்று அவர்கள் சொன்னார்கள் அல்லவா? இந்தப் புத்தகத்தையும் வாங்கி கையிலே ஒரு நான்கணாவையும் சேர்த்து இளைஞர்கள் கொடுக்கின்ற பொழுது, அந்த நான்கணாவை அய்யா அவர்கள் திருப்பிக் கொடுத்திருக்கின்றார்கள். பரவாயில்லை, நீ புத்தகம் வாங்கியிருக்கிறாய் என்று சொல்லி திருப்பிக் கொடுத்திருக்கின்றார்கள்.

பெரியாரிடம் கொடுத்த 101 காலணா பைகள், இன்னமும் நினைவுகளாக எங்களிடத்திலே இருக்கிறது. அப்படி எல்லாம் காலணாக்கள், நான்கணாக்கள் இவைகளை எல்லாம் சேர்த்த தந்தை பெரியார்_சிக்கனத்தின் சிறப்பு என்ன என்பதை உலகுக்குக் காட்டிய தந்தை பெரியார் எதையும் அவர்கள் தன்னுடைய குடும்பத்திற்கோ, தனக்கோ வைக்காமல், அத்துணையும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கே வைத்தார்கள்.

தமிழர்கள் அறிவு பெற வேண்டும்

தமிழர்கள் கல்வி அறிவைப் பெற வேண்டும். தமிழ்ப் பெண்கள் உரிமை பெற வேண்டும். தமிழர்கள் பகுத்தறிவு பெற வேண்டும். என்பதற்காகவே தந்தார்கள்.

எனவே, அவர்களுடைய தொண்டனுக்குத் தொண்டனாக இருக்கக் கூடிய என்னைப் போன்றவர்கள் இந்தப் பணியை செய்யும்பொழுது, எங்களுடைய இயக்கத் தோழர்கள் அல்லது மிகப்பெரிய புரவலர்களாக இருக்கக் கூடிய அருமை அய்யா டாக்டர் வீகேயென் அவர்கள் போன்றவர்கள் ஆனாலும் சரி, மற்றவர்கள் யாராக இருந்தாலும், நாங்கள் எந்தத் திட்டத்தை தொடங்கும் பொழுதும் பணத்தை வைத்துத் தொடங்குவதே கிடையாது. திட்டத்தைத் தொடங்கி விடுவோம்.

குடிசெய்வார்க்கில்லை பருவம்

பணத்திற்கு பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற சொல்லுக்கு அடையாளமாக, குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்

என்ற குறள் தந்தை பெரியார் அவர்களுக்குப் பிடித்த குறள்.

நாங்கள் துண்டேந்திப் போகிற நேரத்தில் பல பேர் உதவி செய்கிறவர்களாகத்தான் இருப்பார்கள். எனவே, எடுத்த திட்டம் இந்த வளாகத்திலும் சரி, அல்லது வல்லம் பல்கலைக் கழகத்திலும் சரி, பின்னாலே போனதே கிடையாது.

அந்த அளவிற்கு மிக அருமையாக எங்களுக்கு என்றைக்கும் உதவக் கூடியவர்கள் தமிழ் கூறும் நல்லுலகத்திலே இருக்கக் கூடியவர்கள் என்ற துணிச்சலோடு நாங்கள் இறங்கினோம்.

இதையும் ஓரளவுக்கு முடித்து இன்றைக்கு மத்திய அமைச்சர்களும், மாநில அமைச்சர்களும் சேர்ந்து இந்த விழாவிற்கு வந்திருப்பதிலே பெரு மகிழ்ச்சியையும், நன்றியையும் அடைகின்றோம்.

இந்த நேரத்திலே ஒன்றைச் சொல்ல வேண்டும். தந்தை பெரியார் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.

பெரியாரை தேசியம் ஏற்காத காலம்....!

தந்தை பெரியாரை தேசியம் ஏற்றுக்கொள்ளாத காலம் ஒன்று உண்டு. பெரியார் படம் தேசிய விருது கிடைத்ததாக இருக்கிறதென்றால் அதற்காக நாம் இரண்டு பேருக்கு நம்முடைய தலை தாழ்ந்த நன்றியைத் தெரிவிக்க வேண்டும். ஒன்று நம்முடைய முதல்வர் மாண்புமிகு மானமிகு சுயமரியாதைக்காரான கலைஞர் அவர்கள்.

அதற்கு அடுத்த படியாக இந்த முயற்சிக்காக மிகப்பெரிய அளவிலே ஒரு வெற்றியை காணக்கூடிய வகையிலே அக்கறை எடுத்துக்கொண்டு தந்தை பெரியாரை தேசிய மயமாக்கினார்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தேசிய சிறப்பை உருவாக்கியவர் நம்முடைய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் அவர்கள் ஆவார்கள்.

எனவே, இது ஒரு நன்றிப் பெருக்கு விழா. அது போலவே தான் சமூகநீதியிலே நம்முடைய அருமைச் சகோதரர் நெப்போலியன் அவர்கள் குறுகிய காலத்திலே மிகச்சிறப்பாக பணியாற்றுகின்றார்கள். இதிலே இன்னும் நிறைய செய்ய வேண்டிய பணிகள் இருக்கின்றன.

பெரியார் ஃபவுண்டேசன்

அம்பேத்கர் ஃபவுண்டேசன் என்றிருக்கின்றது. பாபு ஜெகஜீவன்ராம் ஃபவுண்டேசன் என்றிருக்கிறது. அது போல அடுத்த சில மாதங்களுக்குள்ளாக அல்லது சமூகநீதியை இந்தியாவிலேயே முதன்முறையாக எடுத்துச் சொல்லி போராடிய தந்தை பெரியார் அவர்களுடைய பெயராலே மத்திய அரசின் சார்பாக பெரியார் ஃபவுண்டேசன் என்பதை உங்களுடைய துறையிலே உருவாக்குவதற்கு நீங்கள் உழைக்க வேண்டும். அதற்கான முயற்சி எடுக்க வேண்டும்.

நாங்கள் எந்த அளவிற்குப் பொது மக்களுடைய கருத்தைத் திரட்ட முடியுமோ, அதைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். உங்களுடைய கரங்களைப் பலப்படுத்த இருக்கின்றோம்.

அதே போலத்தான் மத்திய தகவல் ஒலி பரப்புத்துறை இருக்கிறதே அது இதுவரையிலே தமிழர்கள் வசம் வந்ததில்லை. ஒரு நல்ல இலக்கியச் செல்வர், தன்மானச் சுடர் ஜெகத்ரட்சகன் அவர்களுடைய வசம் வந்திருக்கிற காரணத்தால் அதிலே இன்னமும் புதிய, புதிய உத்திகளைக் கையாண்டு பகுத்தறிவாளர்களுக்கும், அறிவியல் மனப்பான்மையைப் பரப்ப வேண்டும் என்று நினைக்கின்றவர்களுக்கும், தமிழர்களுக்கும் வாய்ப்புத்தர உங்களால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யுங்கள் என்று இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கின்றேன்.

மற்றபடி அமைச்சர்கள் எல்லோரும் தங்களுடைய நேரத்தை ஒதுக்கி வந்ததற்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மழை மிரட்டியது. பெரியார் வெற்றி பெற்றார். இயற்கையை எதிர்த்து கூட தந்தை பெரியார் வெற்றி பெற்றார். மண்ணை மணந்த மணாளர் என்று வா.ரா. அவர்கள்தான் சொன்னார்கள். அவர்தான் தந்தை பெரியார்.

இவ்வளவு நேரம் காத்திருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

----------------------"விடுதலை" 14-10-2009

0 comments: