Search This Blog

24.10.09

பெரியார் சிலை ஏன்? எதற்கு?

எங்க ஊரு அய்யா சிலை

தந்தை பெரியார் சிலை - திண்டுக்கல
அமைவிடம் : திண்டுக்கல் (டட்லி மேல் நிலைப்பள்ளி அருகில்)
விழாத் தலைவர்: தவத்திரு குன்றக்குடி அடிகளார் M.L.C
திறப்பாளர் : மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி
தொடங்கி வைத்தவர்: கி. வீரமணி M.A.B.L

மறதி என்பது நமக்கிருக்கும் மாபெரும் வியாதி. ஆகவே , நமக்கு நன்றாகத் தெரிந்த விசயங்கள்தான் என்றாலும்கூட அதை அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

2007 இல் முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் அவர்கள் ஒரு செவ்வியின்போது, இராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று கேட்டிருந்தார். இந்தக் கருத்து எதிர்பார்த்தது போலவே இந்துத்துவவாதிகளால் இந்தியா முழுவதிலும் சர்ச்சையாக்கப்பட்டது. சர்வதேச கிரிமினலும், கபட வேடதாரியுமான வேதாந்தி என்பவர் முதல்வர் கலைஞரின் தலைக்கு தங்கம் என்று பத்வா அறிவித்தார். அந்த பத்வாவிற்கு தமிழகம் தவிர்த்த இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஆதரவு கிடைத்தது. ஏன்? இதுதான் இந்துத்துவா வாதிகளுக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

தங்கள் தத்துவத்தின் தலைவர் இராமபிரானை ஒருவர் இழிவுபடுத்துகிறார் என்று தெரிந்தும், அதை பொருட்படுத்தாதது மட்டுமல்ல, அதனைத் தட்டிக் கேட்ட சாமியாரையும், அந்த சாமியாரைச் சேர்ந்த பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மற்ற மற்ற இந்துத்துவ கும்பல்களையும் ஓர் இந்து திருப்பித்தாக்க முடியுமா? என்ற அய்யம்தான் இராமன் கடவுளே இல்லை என்று கூட அல்ல. கடவுள் என்ற ஒன்றே இல்லை என்று சொல்கிற பகுத்தறிவாளர்களையும் இந்து என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி, இராமனுக்கு எதிராக, இராவணனைக் கொண்டாடுகின்ற ஒரு தலைவருக்குப் பின்னால், இந்து என்று சொல்லிக் கொள்கிறவர்கள் அணி திரள முடியுமா? இதுதான்..... தமிழகம் தவிர்த்த வட இந்தியர்களுக்குப் புரியாத புதிர். அந்தப் புதிரை விடுவிக்கின்ற நாயகன்தான் தந்தை பெரியார். நாயகம்தான் பெரியாரியம்; சரி, இப்போது நாம் எங்க ஊரு அய்யா சிலை பற்றி பார்க்கப் போகிறோம். அதற்கு, இராமன் எந்த பொறி-யியல் கல்லூரியில் படித்தான். அதனைச் சொன்னவர் முத்தமிழ் அறிஞர், கலைஞர் என்பதெல்லாம் எதற்கு என்று தோன்றுகிறதல்லவா?

இது நடந்தது 2007இல் , வாருங்கள் இன்னமும் கொஞ்சம் பின்னோக்கி அதாவது 25.09.1970க்குச் செல்வோம். 2007இல் அய்ந்தாவது முறையாக முதல்வராக இருந்து கொண்டிருக்கும் கலைஞர் சொன்னதுதான் மேலே நாம் கண்டது. முதல் முறையாக முதல்வராக இருக்கும்போது, அதாவது 1970இல் என்ன சொன்னார்? தமிழகத்துக்கு தந்தை பெரியார் எப்போதுமே தேவை எங்கு வைத்துச் சொன்னார். 25.09.1970இல் திண்டுக்கல்லில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் வைத்துச் சொன்னார்.

ஆம்! இந்த வாரம் இடம் பெறப்போவது திண்டுக்கல் நகரின் மய்யப்பகுதியில் புனித மரியன்னை மேல் நிலைப் பள்ளி, டட்லி மேல் நிலைப்பள்ளி இவைகளுக்கு மிக அருகில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலையாகும்.

ஒவ்வொரு சிலைக்கும் ஒரு சிறப்பு உண்டு. இந்த சிலைக்குக் கூடுதலான சிறப்புகள் ஏராளம். தலைவனின் சிலையை அவருடைய தொண்டன் திறந்து வைப்பது. அதுவும் எப்படிப்பட்ட பின்னணியில் பகுத்தறிவை கொள்கையாகக் கொண்ட ஓர் அரசியல் கட்சி தேர்தலிலே வென்று தந்தை பெரியாரிடம் பணியாற்றிய ஒருவரே முதல்வராகவும் இருக்கக்கூடிய சூழலில். அப்பப்பா....... இதுபோல அதிசயம் உலகில் வேறுண்டா? தந்தை பெரியாரின் வெற்றியை எவ்வளவுதான் சொன்னாலும் முழுமையானதாக சொல்லி விட்டதாக கருத முடியாது. அதுமட்டுமா? தந்தை பெரியார் சிலை ஒரு பக்கம். அந்த சிலையே உயிராக ஒருபக்கம், தந்தை பெரியாரின் கொள்கைகளையே ஏற்று அதை செயல்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் கலைஞர் ஒரு பக்கம், தந்தை பெரியாருக்குப் பின் இந்த இயக்கத்தை மிகச் சரியாக வழிநடத்தப் போகின்ற, அய்யாவின் அடிச்சுவட்டை இம்மியளவும் பிசகாமல் பின்பற்றப் போகின்ற தலைவர் கி. வீரமணி ஒரு பக்கம், தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒரு பக்கம், ஜி. ராமச்சந்திரன் எம்.பி, ஜி.டி.நாயுடு, மதன கோபால்..... அப்பப்பா.... இதன் சிறப்புக்கு வேறென்ன வேண்டும்.

விழாவில் முதல்வர் கலைஞர் பார்ப்பன நாளிதழ்களுக்கு சுருக்கென்று உரைக்கும் வண்ணம் சூடு போட்டார்.

இங்கே ஏராளமான மக்கள் கூடியிருக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சி பற்றி விடுதலை, நம்நாடு, முரசொலி, தினத்தந்தி, மாலை முரசு தவிர பிற ஏடுகள் எப்படி வெளியிடும் தெரியுமா? அடிகளார் தலைமை வகித்தார், கருணாநிதி சிலையைத் திறந்தார், ஜி.டி. நாயுடுவும், பிறரும் கலந்துகொண்டார்கள் என்று எங்கோ ஒரு மூலையில் செய்தி போடும். பத்திரிகைகள் போக்கு அப்படி; பல லட்சம் விற்பனையாகும் பத்திரிகையை நம்பி கழகம் என்றுமே இருந்ததில்லை பத்திரிகை பலமின்றியே கழகம் வளர்ந்-தது. ஆட்சியைப் பிடித்தது. எங்களுக்கு என்று உள்ளவை மக்கள் எனும் பத்திரிகைகளே. அவர்களது இதயங்களையே நாங்கள் படிக்கிறோம். இதை யெல்லாம் நினைக்கும்போது தந்தை பெரியார் எப்போதும் தேவையே என்று கூற வேண்டியதிருக்கின்றது.

முத்தாய்ப்பாக இறுதியில் தந்தை பெரியார்

சிலைகளும், கல்வெட்டுகளுமே அழியாமல் நிலையாக நின்று பகுத்தறிவு பரப்பும். ஆகவே, நமக்குப் பின்வரும் சந்ததியினர் அறிவு பெற இவற்றை எல்லா இடங்களிலும் நிறுவுவீர். என்று கூறிவிட்டு இன்னும் வெட்ட வெளிச்சாமாக ஏன் தன்னுடைய சிலைகளை வைக்கச் சொல்கிறேன் என்று அவருக்கே உரிய பாணியில் சொல்கிறார் பாருங்கள்.

மற்ற எவரும் சொல்ல வெட்கப்படுகிற, பயப்படுகிற செய்தியை சொல்லப் போகிறேன். என்னவென்றால், இதுபோன்ற சிலைகள் ஊர்தோறும் சந்து பொந்துகளிலெல்லாம் வைக்க வேண்டும். இந்த சிலைகளை மட்டும் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை; நமது முதலமைச்சருக்கு, இராமச்சந்திரனுக்கு, ஜி.டி. நாயுடுவுக்கு, வீரமணிக்கு, மதுரை முத்துவுக்கு இப்படி பகுத்தறிவு கொள்கை உடையவர்களுக்கெல்லாம் சிலைகள் வைக்க வேண்டும். கடவுள்களுக்கு எப்படி எங்கு பார்த்தாலும் சிலைகள் வைத்திருக்கிறார்களோ அதுபோன்று கண்ட கண்ட இடங்களில் எல்லாம் இச்சிலைகளை வைக்க வேண்டும். அப்போதுதான் கொஞ்சமாவது அறிவுவயப்பட முடியும். கண்ட அயோக்கியன் எல்லாம், என்னை விட ஆயிரம் மடங்கு அயோக்கியன் எல்லாம் கடவுளாக இருக்கிறானா இல்லையா? அவன் சிலை எங்கு பார்த்தாலும் இருக்கின்றனவா இல்லையா? இவைகளெல்லாம் எதற்காக இருக்கின்றன? இவற்றை எல்லாம் எதற்காக வைத்தான்? நம்மை மடையனாக்கவும் தேவடியா மகனாக்கவும்தானே. ஆகவே, நாம் வீதிகள் தோறும் இதுபோன்று சிலைகள் வைக்காவிட்டாலும் மண்ணில், சிமெண்டில் செய்து சிறு பொம்மைகளையாவது வைத்து அதனடியில்,

கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்,

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்,

கடவுளை வணங்குகின்றவன் காட்டுமிராண்டி ,

என்று எழுதவேண்டும் என்று கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்களிடம் வேண்டுகோளாக வைத்தார்.

அய்யா சொன்னது சரியாகத்தான் இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக கடவுள் என்கின்ற கருத்தை, கடவுள் பொம்மைகளை வைத்துதானே பிரச்சாரம் செய்து, அந்தக் கருத்தை மக்கள் மறந்துவிடாமல் இருக்க வைத்

திருக்கிறார்கள். ஆகவே உண்மையையும்கூட இப்படி இடைவிடாத பிரச்சாரத்தின் மூலமாகத்தான் நிலைநிறுத்த முடியும். அப்படித்தான்? அய்யாவின் வழியில் அயராத பிரச்சாரத்தின் மூலமாக அவர் கூறியபடியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக சிலைகளை நிறுவிக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமா? அதனுடைய பலனையும் நாம் கண்கூடாக கண்டு கொண்டு இருக்கிறோமே!

அந்த வகையில் திண்டுக்கல்லில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலையும் அய்யாவின் பணியை அயராமல் செய்துகொண்டு இருக்கிறது. இப்படி சிலைகளைப் பார்த்து, அதில் வடித்துள்ள வாக்கியங்களைப் படித்து புத்திக் கொள்முதல் செய்து கொண்டவர்களை கணக்கு எடுத்துவிட முடியாது. ஆனால், ஓசையில்லாமல் தந்தை பெரியாரின் தத்துவங்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும் பணியில் தந்தை பெரியாரின் சிலைகள் இடைவெளியில்லாமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் திண்டுக்கல்லில் அமைந்துள்ள இந்த சிலையும் தன் பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.


சிலை அமைக்கப் பாடுபட்டவர்கள்

பெரியார் பெருந்தொண்டர்கள், கே.டி.ஓ.எஸ். முத்துக்கருப்பன் பூமண்டலம், கிருஷ்ணமூர்த்தி, பெயிண்ட் வணிகர் காளியப்பன். வழக்கறிஞர். கொ. சுப்பிரமணியன், சுப. ஜெகந்நாதன்.


- உடுமலை வடிவேல்
தகவல்: இரா. வீரபாண்டி
தலைவர், மாவட்ட திராவிடர் கழகம் திண்டுக்கல்.

---------------------நன்றி:-"விடுதலை" ஞாயிறுமலர் 17-10-2009

0 comments: