Search This Blog

26.10.09

நாய்கள் சாப்பிட்ட பின்பே ஊர் மக்கள் சாப்பிட வேண்டுமாம்! விசித்திரமான வழிபாடு

நோபல் பரிசு போல, நம் நாட்டில் சிறந்த ஒரு ஏற்பாடு செய்யவேண்டுமானால், தலைசிறந்த மூட நம்பிக்கையாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குத் தனிப் பரிசளிக்கலாம்!

நேரிடையாக அவர்களுக்கு அழைப்புக் கொடுத்து நடத்துவதற்குப் பதிலாக, ரொம்ப விசித்திரமான மூட நம்பிக்கையாளர்பற்றி ஏடுகளில் குறைந்தபட்சம் விடுதலை போன்ற பகுத்தறிவு நாளேடுகளிலாவது அதுபற்றி முழுத்தகவல்களைத் தந்து, பகுத்தறிவை வளர்க்கும் நூல்களைப் பரிசாக அளிக்கலாம்; இல்லையேல் இருட்டில் இருக்கும் இவர்களை வெளிச்சத்திற்கு வர அடையாளச் சின்னமாய் டார்ச்லைட்டினையோ, மற்ற சில வெளிச்சம் தரும் பொருள்களையோ பரிசளிக்கலாம்.

இதோ இன்று ஆங்கில நாளேடு ஒன்றில் வெளியான சுவையான மூட நம்பிக்கையின் உச்சமான செய்தி:

பாட்டியாலாவில் (பஞ்சாப்) உள்ள கான்பூரில் ஒரு கோயில் இருக்கிறது. அதில் விசித்திரமான வகையில் வழிபாடு நடக்கிறது, நாய்களுக்கு.

சீ நாயே! என்று யாரும் அங்கே திட்ட முடியாது; பயபக்தியுடன் கும்பிட்டு வழிபடல் வேண்டும். அந்நாய்கள் உண்ட பிறகே அங்கே உள்ள கிராமப்புற மக்களுக்கு ஊரில் சாப்பிட உரிமையாம். உணவு பொது சமையல் கூடத்திலிருந்து பரிமாறப்பட்டு, சாப்பிட அனுமதியாம்!

அதுவும் எப்படி தெரியுமா?

நீண்டகால பாரம்பரிய பழக்கவழக்கத்தையொட்டி கோயில், நாய்களுக்கு மூன்று வேளை உணவு! முக்கால பூஜை நடத்திய பிறகே அதாவது பைரவமூர்த்தி (நாய்)க்கு உணவு படைத்துச் சாப்பிட வைத்த பின்பே ஊர் மக்களுக்குச் சாப்பிடும் உரிமையும், அனுமதியும் உண்டாம்!

ஆனந்தகிரி என்ற தலைமை அர்ச்சகர் மூன்று காலமும் கோயிலுக்குள் வருவார்; நுழைந்தவுடன் நாய்போல் குரைப்பாராம்! உடனே குரல் கேட்டு, நாய் பகவான்கள் மூவர் வந்தவுடன் மிகுந்த மரியாதை, பயபக்தியுடன் அவர்களுக்கு உணவு பரிமாறப்படுமாம்.

அதுவும்கூட சமைத்துள்ளவைகளில் எவை மிகச் சிறந்தவையோ அவைகளை அவர்களுக்கு அமுது படைக்கப்படுமாம்! ஊர்க்காரர்கள், மக்கள் அதன் பிறகே சாப்பிடவேண்டுமாம்! இது அரச கட்டளை!

இந்த நாய்க் கடவுள்கள் பூஜை எப்படி வந்தது என்பதும் மிகுந்த சுவையான கதையாகவல்லவா இருக்கிறது!

அக்கால மாதம் மும்மாரி பொழிகிறதா? என்று கேட்கும் நமது தெருக்கூத்து ராஜாவைவிட, மிகவும் கேவலமாக இருக்கிறது!

முன்பொரு காலத்தில் பாட்டியாலாவின் மகாராஜா அப்போது அரச குடும்பத்தைச் சேர்ந்த கேப்டன் அமீரீண்ட சிங் அவர்களின் முன்னோர்களில் ஒருவரான ஆலா சிங் என்ற ராஜா, தாசிகளிடையே ஒரு வகையான விசித்திரமான போட்டியை தர்பாரில் நடத்தினாராம்!

ஒரு விலைமாது அப்போட்டியில் 50 கிலோ கஞ்சாவை உட்கொண்ட பின்பும் ஸ்டெடியாக ஆடாமல், அசையாமல் அப்படியே சிலை போல் நின்றாராம்; இதனைப் பார்த்த ராஜா, வியந்து பரிசு அளித்தாராம்!

1695_1765 என்ற காலகட்டத்தில் வாழ்ந்த அந்த மகாராஜா இந்த விலைமகளான பெண்ணுக்கு 150 ஏக்கர் பிகா எஸ்டேட்டினை பரிசாக வழங்கினாராம்.

இந்த விசித்திர குணாதிசயம், ரசனைமிக்க அந்த ராஜா, மற்றொரு அரசு ஆணையையும் போராட்டாராம்!

நாய்கள் சக்தி வாய்ந்த கடவுள்கள் ஆகும். எனவே, கான்பூர் கோயிலில் உள்ள சாமிக்கு பூஜை செய்து முதல் கவளம் உணவை இந்த இரண்டு, மூன்று நாய்களுக்குப் படைக்கவேண்டும் அந்தக் கோயில் அர்ச்சகர்.

அதற்குமுன் காலையிலும், மாலையிலும் அமுது படைக்கும் முன்பு கோயில் அர்ச்சகர் நாய் மாதிரி குரைப்பாராம்! சத்தமாக குரைத்தவுடன், நாய்கள் ஓடோடி வந்து, உடனே அந்த கவள உணவையும், மற்றதையும் சேர்த்து சாப்பிடுமாம்!

அதன் பின்னரே, அந்தக் கோயில் மணி ஓசை வந்த பிறகே, ஊர்ப் பொதுமக்கள் உணவு உண்பார்களாம். இன்றுவரை இந்த மூடப்பழக்கம் (பஞ்சாப்) பாட்டியாலாவில் நீடிக்கிறதாம்! அர்ச்சகர் குரைக்க, நாய்கள் ஓடோடி வந்து உணவு உண்ட பின்பு, ஊர் மக்கள் சாப்பிட வேண்டும் என்கிற வழக்கம் தொடருகிறதாம், இன்றைக்கும்!

வயதான முதியவர்களிடம் இதுபற்றி எந்த எதிர்ப்பும் இல்லையாம்! ஆனால், படித்த இளவட்டங்கள் இதனைப் பரிகசித்து எதிர்க்குரல் கொடுத்து கலகம் செய்யத் தொடங்கிவிட்டனராம்!

ஆனந்தகிரி என்ற அர்ச்சகர் அய்யர் குரைத்து, நாய்களை அழைப்பது 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 21 ஆம் நூற்றாண்டுவரை நீடிக்கிறதாம்!

என்னே மடமை!

பக்தி வந்தால் புத்தி போகும் என்று எவ்வளவு அழகாகச் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்!

பரவாயில்லை, நம் நாட்டில், எச்சில் இலையில் உள்ள மிச்ச உணவுக்கு நாய்களுடன் போட்டியிட்டு மனிதன் சாப்பிடும் கொடுமையான காட்சி அங்கில்லை என்றுகூட புது வியாக்கியானம் கூறி புகழும் மனிதர்களும் இருப்பார்கள்!

மேலை நாடுகளின் அமெரிக்கா, இங்கிலாந்தில் நாயாகப் பிறப்பது மனிதனைவிட அரிய வாய்ப்பு ஆகும்; காரணம் அவ்வளவு கவனிப்பு பாசப் பொழிவு எல்லாம் நாய்களுக்குக் கிடைக்கும்.

தாய், தந்தையை விட்டுவிட்டு வாழும் அவர்கள் நாய்களையே மிகவும் விரும்பி நேசிக்கிறார்கள்; அங்கே ஒரு நாயைத் திட்டினாலும் அதன் எஜமானர் நீதிமன்றம், வழக்கு என்றுகூடப் போய்விடுகிறார்கள்! அவர்களை வைதால்கூட மறந்து மன்னித்து விடுவார்கள்!

நாய்க்கு உயில் எழுதி வைப்பவர்கள் பலர் அங்கே உண்டு!

நன்றிக்கு நாயைச் சொன்னாலும் இப்படியா? கொடுமை! கொடுமை!! காரணம் நாய் பைரவர்; கடவுளின் வாகனம் என்று குத்தப்பட்ட மூட நம்பிக்கையே!

பக்தி முற்றிய பலர், அதிக அடக்கத்துடன் நாயடியேன் என்று தங்களை அழைத்துக் கொண்டது இம்மாதிரி அந்தஸ்து அடுத்த உலகிலாவது கிடைக்கும் என்பதாலா?

மூட நம்பிக்கையின் தொட்டில் இல்லையா, இது?


----------------26-10-2009 "விடுதலை" யில் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை

0 comments: