Search This Blog

5.10.09

பார்ப்பனியத்துக்குச் சாவு மணி அடித்த வள்ளலார்


வடலூரார்

வடலூர் இராமலிங்க வள்ளலாரின் பிறந்த நாள் இந்நாள் (1823). தொடக்கத்தில் சிவ பக்தராக, முருக பக்தராக தம் பக்திப் பயணத்தைத் தொடர்ந்த அடிகளார் கடைசியில் உருவ வழிபாடுகளை எல்லாம் எள்ளி நகையாடி உருவமற்ற ஜோதி வழிபாடு என்ற ஒரு முறையை அறிமுகப்படுத்தினார்.

இன்னார், இன்ன ஜாதியார்தான் உள்ளே சென்று வழிபடலாம் எனும் ஆரியப் பார்ப்பன முறைக்கு மாறாக வடலூரில் அவரால் தொடங்கப்பட்ட (1870) ஞானசபையில் ஏற்றப்பட்ட ஜோதியை யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று வணங்கலாம் என்று அறிவித்து, அதுவரை உருவ வழிபாடு என்பதன்மூலம் சமூகத்தில் பிறவி முதலாளித்துவ ஆட்டம் போட்ட பார்ப்பனியத்துக்குச் சாவு மணி அடித்தார்.

பெருநெறி பிடித்தொழுக வேண்டும், மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்று மதத்தினை பேய்க்கு ஒப்பிட்டு அதனை வெருட்டுவதன் அவசியத்தை எளிமையாக எடுத்துரைத்தார். மதத்திற்கு எதிரான ஒரு நெறியை அவர் பெருநெறி என்று விளித்தது விவேகமானது, வெகுவாகப் பாராட்டுதலுக்குரியது.

மதத்தால் மனிதருக்குள் குடிபுகுந்திருக்கும் வெறி சமூக நல்வாழ்வு நெறிக்கு எதிரானது என்பதை தமது ஆறாம் திருமுறையில் அலசி எடுக்கிறார்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் நீதி நூலுக்கு வடலூர் வள்ளலார் அளித்த சாற்றுக் கவியில், வேதநாயகம் எழுதியுள்ள நீதி நூலுக்கு முன் மனுநீதி உள்ளிட்டவை எல்லாம் வெறும் கயிற்று நூல்களே என்று கூறுகிறார்.

சமஸ்கிருதம் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி (மாத்ரு) என்றால் தமிழ், மொழிகளுக்கெல்லாம் தந்தை மொழி (பித்ரு) என்று சங்கராச்சாரியாருடன் நேருக்கு நேர் வாதிட்டவர் அவர்.

தந்தை பெரியார் கருத்துகளோடு இணைந்தவைகளாக வள்ளலார் சிந்தனைகள் பல அமைந்ததால் வடலூரும் ஈரோடும் என்ற ஒரு நூலையே வெளியிட்டார் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள்.

இப்படியெல்லாம் கடைசிக் காலத்தில் சீர்திருத்தப் போர்வையில் பார்ப்பனியத்தை வீழ்த்தும் விவேகியாக அவர் கிளம்பிய நிலையில் வள்ளலார் ஜோதியாகிவிட்டார் என்று ஒரு கதையைக் கட்டினார்கள்.

தங்களின் எதிராளிகளைச் சூழ்ச்சியால் கொன்ற வரலாறு என்பது பார்ப்பனியத்துக்கே உரித்தானது என்ற வரலாற்றை சற்று அசை போட்டால், இராமலிங்கனாரின் மர்ம மறைவிற்கும் காரணம் புரியாமல் போகாது.

------------------- மயிலாடன் அவர்கள் 5-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: