Search This Blog

22.10.09

முல்லை பெரியாறு அணை பிரச்சினை

முல்லை பெரியாறு அணை பிரச்சினை:
இரட்டை வேடம் போடும் மத்திய அமைச்சர்
ஜெய்ராம் ரமேஷிடமிருந்து துறையை மாற்றவேண்டும்
தமிழர் தலைவர் அறிக்கை

முல்லை பெரியாறு பிரச்சினையில் மத்திய இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷி டமிருந்து நீர்ப்பாசனத் துறை மாற்றப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

முல்லை பெரியாறு அணைக்கட்டுப் பிரச்சினை, மதுரை மற்றும் தேனி போன்ற பல தென்மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையாகும்.

கேரளத்தில் அமைந்துள்ள அச்சுதானந்தன் அரசு, இந்த முல்லை பெரியாறு அணையை உயர்த்திட உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு இருந்தும், அதனைத் தடுத்து, இல்லாத ஊருக்குப் போகாத பாதை அமைப்பதுபோல, தாங்கள் தனி அணை கட்டவேண்டும் என்று வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அத்தனை அடாமுயற்சிகளையும் மேற்கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தி.மு.க. அரசிற்கு எதிரான ஆயுதமா?

தமிழ்நாட்டில் தமிழக அரசு அதனைத் தடுத்து நிறுத்திட கலைஞர் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு, கட்சி வேறுபாடு, அரசியல் மாறுபாடு இன்றி எல்லா கட்சிகளும், அமைப்புகளும் ஒத்துழைப்புத் தந்து, ஒரே குரலில் பேசாமல், வழக்கம்போல் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா இதில் அரசியல் செய்கிறார்; அவரது கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகளும் அதற்கு ஆதரவான வகையில் நம்மிடையே ஒருமித்த கருத்தில்லை; என்று காட்டி, தி.மு.க. அரசிற்கு எதிராக இது ஒரு ஆயுதம் என்றுதான் அற்பத்தனமாகக் கருதி, 6 கோடி தமிழர்களின், தமிழ்நாட்டின் நலத்தையும், உரிமையையும் எதிரிகளுக்குக் காட்டிக் கொடுப்பது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்!

கேரளத்தைப் பாரீர்!

கேரளத்தைப் பாருங்கள்; அங்கே எல்லா அரசியல் கட்சிகளும் ஓர் அணியில் ஒரே குரலில் தமிழ்நாட்டுக்கு எதிரானதாக உள்ள இப்பிரச்சினையில் கேரள அரசின் அதீத நடவடிக்கைகளுக்குக் கண்களை மூடிக்கொண்டு ஆதரவுக்கரம் நீட்டுகிறார்கள்!

இங்கோ எல்லோரும் தனித்தனிதான்

ஏகமனதாகி இவர் நம்மை எதிர்ப்பதெங்கே?

என்ற புரட்சிக்கவிஞரின் கவிதைக்கேற்ப தமிழர்களின் பரிதாப நிலை.

மத்தியில் உள்ள இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் என்ற கன்னடப் பார்ப்பனர் இதில் இரட்டை வேடம் போட்டுள்ளார்!

முல்லை பெரியாறு அணையை ஆய்வு நடத்த கேரளாவிற்கு ரகசியமாக அனுமதியளித்துவிட்டு, பிறகு ஏதேதோ சொல்லியிருக்கிறார். நுனி நாக்கு ஆங்கிலத்தை மட்டும் மந்திரியாவதற்குப் பெரும் தகுதியாகக் கருதும் மத்திய அரசின் தலைமை காரணமாகத்தான், இதுபோன்ற கொள்ளிக் கட்டைகளை எடுத்து தலையைச் சொறிந்துகொள்ளும் நிலை அங்கே உள்ளது!

அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிடமிருந்து துறை மாற்றப்படவேண்டும்

தி.மு.க. ஆட்சியையே அலர்ஜியாகக் கருதும் அவரது உள்ளம் தி.மு.க.காங்கிரஸ் கூட்டணி எப்படியாவது உடையாதா? என்று திட்டமிட்டு வேலை செய்வதாகத் தெரிகிறது.

இவரிடம் உள்ள இந்தத் துறையை மாற்றி யாராவது அனுபவம் மிகுந்த தங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் பிரதமர் அவசரமாக ஒப்படைக்க முன்வரவேண்டும்.

மதுரையில் முதலமைச்சர் பங்கேற்கும் கண்டனக்கூட்டம்

இவரது இந்த பாரபட்ச நடவடிக்கையை எதிர்த்து மதுரையில் நவம்பர் முதல் தேதி மாபெரும் கண்டனக் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் முதல்வர் கலைஞர் கலந்துகொள்வார் என்றும் தி.மு.க. அறிவித்திருப்பது, மிகவும் வரவேற்கத்தக்கது; காலத்தே எடுக்கப்பட்ட தவிர்க்க இயலாத நன் முடிவு.

கூட்டணி என்றால் எதற்கும் வாய்மூடி மவுனமாக இருக்கவேண்டும் என்பதில்லை.

உரிமைக்குக் குரல் கொடுப்பதும், உறவுக்குக் கைகொடுப்பதும் என்பதில் முன்பு உள்ளதுதான் முக்கியம் இப்போது.

இந்திய ஒருமைப்பாடு படும்பாடு, எப்படியிருக்கிறது பார்த்தீர்களா?

வாதாட போராடவேண்டும்

இதேபோல், பல பிரச்சினைகளிலும் நாம் வாதாட, போராடவேண்டியவைகள் உள்ளன. சேது சமுத்திரத் திட்டம்போல பல பணிகள் தமிழ்நாட்டு அரசுக்கும், கட்சிகளுக்கும் இருக்கின்றன!

எனவே, இந்தக் குரல் ஓங்கட்டும்!

தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
22.10.2009

0 comments: