Search This Blog

2.10.09

நம்புங்கள் நாராயணன்களை நம்பினால், நடுவீதியில் நிற்கவேண்டியதுதான்


சுனாமிக்குக் காரணம் சனிப் பெயர்ச்சியா?

மூட நம்பிக்கை வியாபாரிகள் இருக்கிறார்களே அவர்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், அதுதான் வாய்ப்பு என்று தங்கள் கடையை விரித்துவிடுவார்கள்.

நியூசிலாந்து அருகே பசிபிக் பெருங்கடலில் செப்டம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட சுனாமி-யால் 144 பேர் மரணம் அடைந்தனர். இதேபோல், இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது ரத்தத்தை உறைய வைக்கக் கூடிய துயர நிகழ்வுகளாகும்.

இந்தத் திடீர்ப் பேரழிவுக்குக் காரணம் சனிப் பெயர்ச்சிதான் என்று கண்டுபிடித்திருக்கிறார் ஒரு நவீன கொலம்பஸ்.அவர்தான் ஜோதிடர் காழியூர் நாராயணன்.

இதற்கு ஏடுகளின் விளம்பரம் வேறு!

ஆமாம், இவர்தான் கரைகண்ட ஜோதிடர் ஆயிற்றே வந்ததற்குப்பின் காரணம் சொல்லுவதைவிட, வருவதற்குமுன் ஏன் சொல்லவில்லை அபாய எச்சரிக்கையைச் செய்யவில்லை?

இதுபோன்ற பேர்வழிகள் கடந்த முறை தேர்தலில் சொன்ன ஜோதிடங்கள் எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதற்குப் பின் தலைமறைவாகக் கிடந்தவர்கள் இப்பொழுது ஏதோ ஒரு சாக்கை பயன்படுத்திக்கொண்டும், மக்களின் மறதியில் நம்பிக்கையை வைத்துக்கொண்டும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர் என்பதைப் பொதுமக்கள் சிந்திக்கத் தவறக்கூடாது.

இதுவரை சனிப்பெயர்ச்சி என்பதை மனிதர்களிடத்தில் வைத்துதான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது நாடுகளை வைத்தும் விளையாட ஆரம்பித்துவிட்டனர். இதன்மூலம் குறுக்கு வழியில் விளம்பரம் கிடைக்கும் அல்லவா!

நிலநடுக்கங்களும், சுனாமிகளும் இப்பொழுதுதான் ஏற்படுகின்றனவா? இதற்கு முன் எத்தனையோ தடவைகள் நடந்ததுண்டே! அதற்கெல்லாம் காரணம் இந்தச் சனிப் பெயர்ச்சிதானா? ஏன் அப்பொழுதெல்லாம் அவ்வாறு கூறவில்லை? அப்பொழுது இருந்த ஜோதிடர்களுக்குச் சாமர்த்தியம் போதாது என்று இந்த நாராயணன்கள் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள் (சொன்னால்தான் பிழைப்புப் போய்விடுமே!) ஆனாலும், உள்ளுக்குள் சிரித்து மகிழ்வார்கள்.

சனி பெயர்ந்தால் அதன் விளைவு பெரிய ஆபத்தாக அல்லவா முடியும்?

கிரகங்கள் ஒன்றையொன்று ஈர்த்திருக்கும் நிலையில், ஒரு கிரகம் பெயர்ந்தால் அதன் விளைவு வேறு கிரகங்களைப் பாதிக்காதா? 75 கோடி மைல் தூரத்தில் உள்ள 73,000 மைல் குறுக்களவு உள்ள சனிக்கிரகம் பெயர்ந்தால், விளைவு என்னவாகும்?

கிரகங்கள் என்ன கூடுவிட்டுக் கூடு பாயும் சித்து விளையாட்டுக்காரர்களா?

இந்த வாரம் ஜூனியர் விகடனில் (4.10.2009, பக்கம் 23) சேஷாத்திரி சாஸ்திரி என்பவர் இந்தச் சனிப் பெயர்ச்சிபற்றி கூறும் கருத்து கவனிக்கத்தக்கதாகும்.

நவக்கிரக வழிபாடு என்பதே இந்த பத்து, இருபது வருடமாக பரவியிருக்கிற தேவையில்லாத கலாசாரம். காசியில் இருக்கும் லிங்கமானாலும், இங்கே ஒரு குளக்கரையில் இருக்கிற லிங்கமானாலும் ஒன்றுதான். இந்தக் கோயிலில் அந்தக் கடவுள் இருக்கிறார், அந்த இடத்தில்தான் அருள்பாலிக்கிறார் என்பதெல்லாம் சிறப்பு சேர்க்க சிலரால் எழுதி வைக்கப்பட்டவைதான். வேறு எந்த தனி முக்கியத்துவமும் இல்லை.

இந்த உலகம் தோன்றியபோதே இருப்பவைதான் சனியும், மற்ற கிரகங்களும். அதற்குப் பின்னால் உருவானவைதான் கோயில்கள். அப்படி இருக்கும்-போது சனீஸ்வரன் திடீரென்று புதுசாக இங்கு வந்தார், அங்கு வந்தார் என்பதெல்லாம் எப்படி சரியாக இருக்க முடியும்? அது ஒரு கோள். அந்தக் கோள், இந்த பிரபஞ்ச இயக்கம் நல்ல முறையில் தொடர்வதற்கு உதவி செய்கிறது. அதற்காக அதற்கு நாம் நன்றி சொல்லலாம், அவ்வளவுதான்! அதை அந்த கிரகத்தின் இடப்பெயர்ச்சி சமயத்தில்தான் சொல்லவேண்டும் என்பதோ... குறிப்பிட்ட கோயிலுக்குத் தேடிச் சென்று தான் சொல்லவேண்டும் என்பதோ கிடையாது. சனியைவிட சூரியனும், சந்திரனும் பூமியில் உள்ளோருக்கு ரொம்ப முக்கியமானவர்கள். அவர்களுக்கும் இடப்பெயர்ச்சி கொண்டாடலாம் என்று கிளம்பினால் என்ன ஆகும்?

இப்படி சொல்கிறவர் தந்தை பெரியாரின் சீடர் அல்ல கருஞ்சட்டைக்காரரும் அல்லர். விடுதலை வாசகரும் அல்லர். சாட்சாத் சாஸ்திரிதான்.

இந்தச் சனிப் பெயர்ச்சி விவரம் எல்லாம் அமெரிக்கர்களுக்கோ, ஜெர்மன்காரர்களுக்கோ தெரியுமா? பல நாடுகளில் எரிமலைகளின் சீற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றனவே காடுகள் பல மாதக் கணக்கில் பற்றி எரிகின்றனவே அவற்றிற்கும் இந்தச் சனிப் பெயர்ச்சிக்கும் தொடர்புண்டு என்று புது மூட்டையை அவிழ்த்துவிட்டாலும் அவிழ்த்து விடுவார்கள் யார் கண்டது?

சுனாமி வருவது, நிலநடுக்கம் ஏற்படுவது, புயல் வீசுவது, கடுமழை பெய்வது ஏன் என்பதற்கான அறிவியல் விளக்கங்களை உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன்கூட ஒழுங்காகச் சொல்லுவான்.

தங்கள் பிள்ளைகளின் புத்தகங்களில் என்ன இருக்கிறது என்பதை குறைந்தபட்சம் பெற்றோர்கள் கருத்தூன்றிப் படித்தாலும் போதுமே, உண்மை விளங்கிவிடுமே!

நம்புங்கள் நாராயணன்களை நம்பினால், நடுவீதியில் நிற்கவேண்டியதுதான் _ எச்சரிக்கை!

-----------------------"விடுதலை" தலையங்கம் 2-10-2009

0 comments: