Search This Blog

11.10.09

நம்பலாமா இவைகளை? நமது பண்பாடுதானா இவை?




இன்றுள்ள இழிநிலை ஒழிந்து, நம்நாடு விடுதலை பெற வேண்டும் என்கிறோம். அதற்காக என்ன தேவை? அச்சம் நீங்க வேண்டும்! தலை நிமிர்த்தி நடக்க வேண்டும், பிளவு இருத்தலாகாது! உண்மையூற்று பெற்று தோள் நிமிர்த்தி சிந்தைத் தெளிவுடன் மக்கள் வாழ வேண்டும். உயர்ந்த எண்ணமும் உருவான செய்கையும் எழல் வேண்டும்! அந்நாடே சுதந்திர நாடு! என்னாடு அந்நிலை எய்துக!

சுதந்திரம் என்றால் அச்சம் நீங்கிய மக்கள், ஆண்மையுள்ள மக்கள், சிந்தை தெளிந்து சீரிய கருத்துக் கொண்ட மக்கள், இருத்தல் என்ற பொருள் தக்கதேயன்றி, சுதந்திரம் என்றால் யாரோ ஒரு குறிப்பிட்ட இனத்தவரிலே விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் ஆட்சி மண்டலத்திலே கொலு வீற்றிருப்பது என்பதல்ல.

ஆரியர்கள் மக்களிடை புகுத்தியுள்ள கடவுள் சம்பந்தமான கட்டுக் கதைகள் எவ்வளவு மூடத் தனத்தை மக்களிடை வளர்த்து விட்டது. உண்மை நெறியில் மக்கள் செல்லவொட்டாது தடுத்துவிட்டது. கடவுள் தன்மையை, ஆரியர்கள் கொடுமையுடைய தோர் மனப்பான்மையுடன், கொண்ட மட்டிலும் புளுகி, அறிவை அழித்தனர். ஆரியர்கள் கூறிடும் தெய்வதேவாதிகள் எத்துணை எத்துணை? அவதாரங்கள் எவ்வளவு! அவதாரங்களின் லீலைகள் எத்தகையன! எதையும் விட்டாரில்லை ஆரியர்; தெய்வீகத் தன்மை மனித உருவிலிருந்து மண் வரை இருப்பதாகக் கட்டுக்கதைகள் தீட்டிவிட்டனர்.


சிவனாரின் வாகனம் ரிஷபம். எனவே அதற்கொரு நமஸ்காரம்! அவர் அணிவது பாம்பு. அரிதுயில்வது ஆதி சேஷன், ஆகவே புற்றுக்குள் பால் வார்க்க வேண்டும்.

முருகனுக்கு மயில், வினாயகருக்கு பெருச்சாளி, கேட்டதைத் தரும் காமதேனு பசு. ஆடும், ஆறுமுகன் அன்றொரு நாள் ஏறியதே; இங்ஙனம் மிருக ஜாதிகளுக்கு; பட்சிகளில் கருடனோ மகாவிஷ்ணு வின் வாகனம், சேவலோ முருகன் கொடி, காக்கையோ சனி பகவான் சவாரிக்கு உதவுவது. மர வகைகளிலோ, வில்வம் சிவனுக்கு உதவுவது, துளசி விஷ்ணுவுக்கு, வேம்பு மாரிக்கு மனோகரந் தருவது; மண்ணிலோ, ஒருவிதமானது விபூதி மற் றொன்று நாமம் முன்னது முக்கண்ணனுடையது, பின்னது விஷ்ணுவுக்கு ஏற்புடையது. முக்கண்ணுடையார், சிவனார், பனிரண்டு கண்கள் முருகருக்கு! பிரமனுக்கோ கண்கள் பத்திருந்தன! முக்கண்ணன் கண்டு ஏன் இவ்வளவு கண்கள் என்று கருதியோ என்னமோ ஒரு தலையைக் கிள்ளி எறிய இப்போது எட்டு கண்களோடு இருக்கிறார் அயன். இவை மூலக் கடவுள் சேதி! பரிவாரங்களின் சேதியை விரிக்கப்புகின் பெருகும், விரியும்.


ஒரு மரத்தடியிலே அமர்ந்து எதை நினைத்தாலும் அதைப் பெறலாம் அது கற்பக விருட்சம்.


பசுவொன்றுண்டு, கேட்போருக்குக் கேட்டதைத் தரும் - அது காமதேனு. எனவே பொருள்களுக்குக் குறைவில்லை! அதுமட்டுமா. கண்களையும் கருத்தையும் ஒருங்கே பறிக்கும் தேஜோமய திவ்யாலங்கார தேவமாதர்களாம், ரம்பை, ஊர்வசி, திலோத்தமை முதலியோர் தும்புரு நாரதர் பாட, நந்தி மிருதங்கம் கொட்ட, ஆயிரம் கண்ணுடையானாம் இந்திரன் முன்னால் ஆடுவர், பாடுவர், எனவே போக போக்கியங்களுக்குக் குறைவு இல்லை. காட்சி களைக் கண்டு கண் அயர்ந்து விடுவோமோ என்ற கவலை இல்லை. ஏனெனில் அங்கு சென்றால் கண் மூடவே முடியாது. நடனத்தைக் காணும் நேரத்திலே சாப்பாட்டுக் கவனம் எடுக்குமோ? இல்லை. பசியிராது, தூக்கமிராது!


இவ்வளவு வர்ணனையும் மயக்க! மிரட்டவோ எனில் நெருப்புக் குண்டம், கொதிக்கும் இரும்புக் குழம்பு, தேள் நெளியும் பிலம், மற்றும் செக்கு முள் சக்கரம், பழுக்கக் காய்ச்சிய பதுமைகள் மற்றும் பயங்கரமான தண்டனைகள் தரத் தயாராக உள்ள கோரப்பற்களும், கொடுவாள்முகமும் கொண்ட யம தூதர்கள் இருப்பர்.


இவைகளை நீங்கள் நம்பி வாழ வேண்டுமா? இவைதானா திராவிடப் பண்பு என்றுதான் கேட்கிறோம்.



----------------------------------அண்ணாவின் "திராவிட நாடு" இதழிலிருந்து 13.7.47

0 comments: