Search This Blog

9.10.09

தமிழரை தலைநிமிர வைத்த தலைவர் பெரியார்

பெரியாருக்கு எப்படி இவ்வளவு பெரிய சிந்தனை வந்தது
இன்றைக்கும், நாளைக்கும் சேர்த்து சிந்தித்த மாபெரும் தலைவர் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் பேச்சு

தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கும், நாளைக்கும் சேர்த்து சிந்தித்தவர். தந்தை பெரியார் அவர்களுக்கு எப்படி இவ்வளவு பெரிய சிந்தனை ஏற்பட்டதென்றே தெரியவில்லை என்று மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் வியப்புடன் கூறி உரையாற்றினார்.

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் 28.9.2009 அன்று நடைபெற்ற ஆறுபெரும் விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

கோவூர் அப்பொழுது சொன்னார், சாய்பாபா லிங்கம் எடுக்கிறார், அது எடுக்கிறார்; இது எடுக்கிறார் என்று சொல்லுகின்றார்கள். ஒன்றுமில்லை-சாய்பாபா கையிலிருந்து ஒரு பூசணிக்காய் வரவழையுங்கள்; அல்லது ஒரு பலாப்பழத்தை வரவழைக்கச் சொல்லுங்கள். ஒன்றும் வேண்டாம், கரண்ட் கம்பியைத் தொடச்சொல்லுங்கள் என்று சொன்னார்.

இந்தப் பகுத்தறிவுக் கருத்துகளை எல்லாம் நான் எண்ணிப் பார்க்கின்றேன். தந்தை பெரியாருக்கு எப்படி இப்படிப்பட்ட எண்ணம் வந்தது என்றே தெரியவில்லை.

நானும் என்னுடைய நண்பர் ராமலிங்கமும் பெரியார் திடலுக்குப் போனோம். அய்யா அவர்கள் பூதக்கண்ணாடி வைத்துதான் படிப்பார்.படிப்பு என்றால் நாமெல்லாம் புத்தகத்தைத் தூக்கிப் போட்டு படுத்துவிடுவோம். அய்யா அவர்களிடம் கையெழுத்து வாங்கச் சென்றோம்

அய்யா அவர்கள் பூதக் கண்ணாடியை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். அய்யா அவர்களிடம் ஒரு கையெழுத்து கேட்டோம். கல்லூரியிலிருந்து வந்திருக்கிறோம் நாங்கள், அய்யா கையெழுத்து வேண்டும் என்று கேட்டேன். பக்கத்தில் இருந்த உதவியாளர் சொன்னார். நீங்கள் காசு கொடுத்தவுடன் கையெழுத்து போடுவார் என்று சொன்னார். அப்பொழுது நமது ஆசிரியர் அவர்கள் அங்கு இல்லை. என் பக்கத்திலே இருந்த பையன் உடனே பாக்கெட்டிலிருந்த பத்து ரூபாயை எடுத்துக்கொடுத்தான். அய்யா அவர்கள் அவனுக்கு ஈ.வெ.ராமசாமி என்று கையெழுத்துப் போட்டுக்கொடுத்தார்.

அடுத்தது நான். நம்ம பாக்கெட்டிலே ஏது காசு? தடவித், தடவிப் பார்த்தால் அய்ந்து ரூபாய்தான் இருந்தது. அய்யா என்னிடம் அய்ந்து ரூபாய்தான் இருக்கிறது என்று சொன்னேன். அதையும் பெரியார் வாங்கிக்கொண்டார்.

எனக்கு வெறும் ஈ.வெ.ரா என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். நான் கேட்டேன் அவனுக்கு ஈ.வெ.ராமசாமி என்று போட்டுக் கொடுத்தீர்கள். எனக்கு ஈ.வெ.ரா என்று மட்டும்தானே போட்டுக்கொடுத்தீர்கள். என்று கேட்டேன். அவன் 10 ரூபாய் கொடுத்தான். முழுப்பெயரைப் போட்டேன். அய்ந்து ரூபாய்க்கு வெறும் ஈ.வெ.ரா. தான் என்று சொன்னார்.

தமிழரை தலைநிமிர வைத்த தலைவர்

உலகத்தில் இப்படிப்பட்ட தலைவரை வேறு எங்கு பார்க்க முடியும்? தமிழர்களையும், தமிழர்களின் நாகரிகத்தையும் தலைநிமிர வைத்தவர் பெரியார். லெனின் சோவியத் நாட்டை சொர்க்க பூமியாக மாற்றினான். அவன் ஏன் அப்படி வந்தான்?

தன்னுடைய அண்ணன் ஜாரை கண் எதிரே குத்திக் கிழிக்கிறார்கள். அவன் இறந்துவிடுகிறான். அதைப் பார்த்து அவருக்கு வெறி வருகிறது. அந்த அநீதியைக் களைய தலைவனாக வேண்டும் என்று நினைக்கின்றான்.

அதே போல முசோலினியைப் பார்த்தால் அய்ரோப்பிய நாடுகளில் நிறைய நாற்காலிகள் காலியாக இருக்கின்றன அதில் நான் அமர வேண்டும் என்று சொன்னான் என்று சொன்னதை அறிகிறோம்.

பெரியார் எந்தப் பதவியையும் எதிர்பார்க்கவில்லை

ஆனால் தந்தை பெரியார் அவர்கள் எந்தப் பதவியையும் எதிர்பார்க்காமல் பொதுத் தொண்டாற்ற வந்தார். காரணம் என்னுடைய இனம் நாதியற்று கிடக்கிறது. அவர்களுக்காக நான் போராடுகிறேன் என்று வந்தார்.

உலகத்தில் தலைவர்கள் எப்படித் தோன்றுகிறார்கள். என்று பாருங்கள். இன்றைக்கும், நாளைக்கும் சிந்திக்க வைத்த தலைவர் தந்தை பெரியார் அவர்கள். வான சூரியன் வம்சத்தில் வந்த ஞானசூரியனாக திகழ்ந்து இயக்கத்தின் வேராகவும், நீராகவும் இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கின்ற ஒரு பெருந்தகை.

இங்கு பெருமக்கள் எல்லாம் சொன்னதைப் போல தன்மானம் என்கிற முதுகெலும்பை நமக்குத் தந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

பெரியார் இல்லை என்று சொன்னால்

அவர் இல்லையென்று சொன்னால் நாம் நிமிர்ந்திருக்கவே முடியாது. காலிலே பிறந்தவன் காலிலேயே இருந்திருப்பான். அவருக்குப் பிறகு வந்த தலைவர் கலைஞர் அவர்கள் மாணவச் செல்வங்கள் இங்கே சொன்னதைப் போல தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் சேர்ந்த இரண்டு உருவங்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதோ நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு விருது கொடுத்தார்கள். என்னுடைய தலைவன் அங்கே பேசுகிற பொழுது ஒரு பத்து தடவை நம்முடைய ஆசிரியர் அவர்களுடைய பெயரைச் சொல்லியிருப்பார்கள். தன்னுடைய சகோதரனை அழைப்பதைப் போலச் சொன்னார்.

தி.க. என்றால் கலைஞருக்கு சர்க்கரைப் பொங்கல்

திராவிடர் கழகம் என்று சொன்னால் தலைவர் கலைஞர் அவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் மாதிரி. அவர் பகுத்தறிவைப் பற்றி ஏதாவது ஒன்றை பேசிவிடுவார். நான் கூடச் சொல்வேன்.

அது என்னுடைய உயிரிலும், உதிரத்திலும் கலந்த ஒன்று என்று சொல்லுவார்கள். பெரியார் பிறவாமல் இருந்திருந்தால் நாம் அடியோடு ஒழிந்து போயிருப்போம். தமிழ்த்தாயின் பால் குடித்து தமிழ் வளர்த்தவர்கள் உண்டு.

தமிழ்த்தாய்க்குப் பால் கொடுத்த தலைவர்கள் மூன்று பேர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். கல்லைப் பிழிந்து நீரெடுத்து, காற்றைப் பிழிந்து சாறெடுத்து, எரிமலைக்குச் சரிமலையாய் தமிழனை நிமிர வைத்தவர் தந்தை பெரியார் அவர்கள். விண்ணிலே இடம் பிடித்தவர்கள் உண்டு. மண்ணிலே இடம் பிடித்தவர்கள் உண்டு.

அவரைப் போல் தமிழர்களுடைய இதயங்களிலே இடம் பிடித்தவர் உலகத்தில் இதுவரை பார்க்கவே முடியவில்லையே. அப்படிப்பட்ட ஒரு தாயாகத் தந்தை பெரியார் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

திரு.வி.கவுக்கு இவர் விபூதி கொடுக்கிறார்

அவரைப் பற்றி பல செய்திகள். படிக்கப் படிக்க அவ்வளவு இனிமையான செய்திகள். திரு.வி.க அவர்கள் ஈரோட்டுக்குப் போகிறார். பெரியார் அவர்களும் உடன் இருக்கிறார். திரு.வி.க காலையில் எழுந்து காவேரிக் கரைக்கு குளிக்கப் போய்விட்டார். பெரியார் ஆற்றங்கரைக்கு வெளியே நின்று கொண்டிருந்தாராம். திரு.வி.க குளித்துவிட்டு வந்தாராம்.

பெரியார் தன்னுடைய மடியிலிருந்து விபூதி எடுத்துக்கொடுத்தாராம். என்னங்க, நீங்கள் சாமி இல்லை என்று சொல்லுகிற ஆளாயிற்றே, நீங்கள் போய் விபூதி கொடுக்கிறீர்களே! என்று கேட்டார். என் வீட்டிற்கு நீங்கள் விருந்தினராக வந்திருக்கின்றீர்கள். அவர்களை கவுரவிப்பது என்னுடைய கடமையல்லவா என்று சொன்னார், பெரியார். உலகத்தில் இப்படிப் பட்ட தலைவரை வேறு எங்கு காண முடியும்?.

பிள்ளையார் கோவிலுக்கு அவங்க அப்பா சொத்து எழுதி வைத்து விட்டாராம். பிராமணர்களுக்கு சாப்பாடு போட வேண்டுமென்று தந்தை பெரியார் அவர்களுடைய அப்பா எழுதி வைத்து விட்டாராம்.

என் தந்தை உயிலில் அப்படி எழுதவில்லையே

தந்தை பெரியார் வந்தபொழுது பார்ப்பனர்களுக்கு சாப்பாடு போடவில்லையாம். எல்லோரும் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்களாம். நீதிபதி பெரியாரைப் பார்த்துக் கேட்டாராம். என்ன உங்களுடைய அப்பா உயிலில் என்ன எழுதி வைத்திருக்கிறார். பார்ப்பனர்களுக்கு சாப்பாடு போட வேண்டும் என்று. நீங்கள் ஏன் அவர்களுக்கு சாப்பாடு போடவில்லை என்று கேட்டாராம்.

அப்பொழுது தந்தை பெரியார் சொன்னராம். நான் சாப்பாடு போடுகிறேன். ஆனால் அவர்கள் சாப்பிட மறுப்பார்கள் என்று சொன்னாராம்.

உடனே பிராமணர்களைப் பார்த்துக் கேட்டாராம் நீதிபதி, அவர்தான் சாப்பாடு போடுகிறேன் என்று சொன்னாரே, நீங்கள் ஏன் சாப்பிட மறுக்கிறீர்கள் என்று கேட்டாராம். அதற்குப் பார்ப்பனர்கள் இல்லை, இல்லை அவர் நான் பிராமினுக்குரிய சாப்பாட்டை செய்து போடுகிறார். அதை எப்படி நாங்கள் சாப்பிடுவது என்று கேட்டார்கள்.

நீதிபதி திரும்ப பெரியாரிடம் கேட்டாராம். உடனே பெரியார் சொன்னாராம் எங்கள் தந்தையார் உயிலில் சாப்பாடு போடுவதைத்தான் எழுதி வைத்தார். அதிலே பிராமின் சாப்பாடு, நான்பிராமின் சாப்பாடு என்று எதுவும் சொல்லவில்லையே என்று சொன்னாராம், யாரிடம்? நீதிபதியிடமே. நீதிபதி அப்பொழுதே பார்ப்பனர்கள் போட்ட வழக்கை டிஸ்மிஸ் செய்துவிட்டாராம். எப்படிப் பாருங்கள். எப்படிப்பட்ட சிந்தனை தந்தை பெரியாருக்கு இருந்திருக்கிறது என்று பாருங்கள்.

ஒரு முறை திராவிடர் கழக மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது. தந்தை பெரியார் பேசினார்களாம். ஜெயகாந்தன் பேசியவுடன் பேசி முடித்தவுடனே அதற்கு ஜெயகாந்தன் எழுந்து பதில் சொன்னாராம். திருச்சி என்றால் 10 பேருக்கு நான்கு பேர் தி.க. என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அப்பொழுது நமது திராவிடர் கழகத்தினர் எல்லாம் கொதித்துப் போனார்களாம். ஜெயகாந்தன் பதில் சொன்னாராம்.

பெரியார் எல்லோரையும் அமைதிப்படுத்தி சப்தம் போடாதீர்கள் அவர் பதில் சொல்லட்டும் என்று சொன்னார்களாம்.. அது மட்டுமல்ல, அவர் யார் என்று தெரியவில்லை. பிராமணன் என்று நினைக்கின்றேன் என்று தந்தை பெரியார் சொன்னாராம். இல்லைங்க அவர் நமது பிள்ளைதான் என்று சொன்னாராம். நமது பிள்ளை நம்மை எதிர்த்து பதில் சொல்லாமல் வேறு யார் பதில் சொல்லுவார்கள் என்று சொன்னாராம். இப்படிப்பட்ட ஒரு தலைவனை யாராவது பார்க்க முடியுமா?இப்படி எல்லாம் பல செய்திகளை நாம் சொல்லிக்கொண்டேயிருக்கலாம்.

காந்தியாருக்கு 3 பேர் முக்கியமானவர்கள்

கள்ளுக்கடை மறியலில் 500 தென்னை மரங்களை வெட்டிப்போட்டார் தந்தைபெரியார். காந்தியடிகள் சொன்னார். எனக்குத் தமிழ்நாட்டில் 3 பேர்தான் சீடர்கள் என்று சொன்னார். ஒன்று தந்தைபெரியார், மற்றொருவர் ஜீவா, இன்னொருவர் நம்முடைய பெருந்தலைவர் காமராஜர் என்று சொல்லுகிறார்கள்.

காந்தியடிகள் இறந்தபொழுது தந்தை பெரியார் சொல்லுகிறார், இந்த நாட்டிற்கு காந்திநாடு என்று பெயர் வைக்க வேண்டுமென்று சொல்லுகின்றார். அப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்த தலைவராகத் தந்தைபெரியார் அவர்கள் திகழ்கின்றார்.

ஆசிரியர் அவர்கள் அவருடைய குறிப்பில் எழுதி வைத்திருப்பதை படித்துப் படித்து வியக்கின்றேன். கல்கி வீட்டுத் திருமணம்; கல்கி வீட்டில் ஆனந்திக்குத் திருணம் நடக்கிறது. கல்கி தெரியும் உங்களுக்கு. அவர் ஒரு பிராமணர் என்று. எல்லா வைதிக ஆகமப்படி அந்தத் திருமணம் நடக்கிறது.

எல்லா நிகழ்ச்சியும் முடிந்த பிறகு கடைசியாக பெரியார் சொல்லுகிறார்.

கல்கி இல்ல மணவிழா

கல்கி தந்தை பெரியார் வந்ததை வரவேற்று வாங்க, வாங்க என்று சொல்லி உட்கார வைத்தார். உடனே கல்கி சொன்னாராம். நீங்கள் கொஞ்சம் முன்னாலே வந்திருக்கலாமே என்று. பெரியார் உடனே சொன்னாராம், திருமணம் நடைபெறுகிறது. நான் கறுப்புச் சட்டை போட்டு வருவேன். உங்களுக்குக்கெல்லாம் சங்கடமாக இருக்கும். அதற்காகத்தான் நான், கடைசியில் வந்திருக்கிறேன் என்று சொன்னாராம்.

எப்படிப்பட்ட பெருந்தன்மையைப் பாருங்கள். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கின்ற பொழுது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு செய்தியைச் சொல்லி நிறைவு செய்கிறேன். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியார் அவர்கள் சட்டமன்றத்திலே ஒரு தீர்மானம் கொண்டு வருகின்றார். தேவதாசி மசோதா விவாதம்

தேவதாசி ஒழிப்பு மசோதா தீர்மானம். சட்டமன்றத்தில் சத்தியமூர்த்தி முழுமையாக எதிர்க்கிறார். தேவதாசி முறையை ஒழிக்கக் கூடாது. அவர்கள் கடவுளுக்காகப் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்தவர்கள். அவர்கள் நேரடியாக சொர்க்கத்திற்குப் போகக் கூடியவர்கள். அதை ஒழிக்கக் கூடாது என்று சொன்னார்களாம். இந்த முத்துலெட்சுமி ரெட்டி அம்மையாருக்கு ஒன்றும் புரியவில்லை. இதை யாரிடம் போய் கேட்டால் சரியாக இருக்கும் என்று எண்ணி உடனே நேராகப் பெரியார் அவர்களை வந்து பார்த்தார்களாம். தந்தை பெரியார் சொன்னாராம், பரவாயில்லையம்மா, சத்தியமூர்த்தியிடம் போய் நீங்கள் சொல்லுங்கள். எங்கள் வீட்டுப் பெண்கள் இதுவரையில் நிறைய பேர் சொர்க்கத்திற்குப் போய்விட்டார்கள்; இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்களை சொர்க்கத்திற்கு அனுப்புங்கள் என்று சொன்னாராம் தந்தை பெரியார்.

எவ்வளவு நயமான செய்திகள் பாருங்கள். இப்படி எல்லாம் இந்த சமூகத்தை திருத்தியவர் தந்தை பெரியார் அவர்கள்.

அவருக்கு 131ஆவது ஆண்டு பிறந்தநாள் ஒரு நாள் போன் பண்ணவில்லையென்றால் தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் ஊனோடும், உணர்வோடும் கலந்திருக்கிறவர் தலைவர் கலைஞர் அவர்கள். அந்த தலைவரை நம்முடைய ஆசிரியர் அவர்கள், ஒரு நாளைக்குப் போன் பண்ணிக் கேட்கவில்லையென்றால் உடனே கேட்டுவிடுவார் எங்கே ஆசிரியர் வரவில்லையா? என்று. நம்முடைய தலைவர் கலைஞருக்கு 86 வயது. நம்முடைய ஆசிரியர் அவர்களை பெயரிட்டு அழைப்பதில்லை. ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியர் என்றுதான் அழைக்கிறார். இப்படிப்பட்ட ஒரு பிணைப்பு இரண்டு இயக்கங்களுக்கும் இருக்கின்றன.

உங்களோடு சேர்ந்து நானும் மணம் பெறுகிறேன்

அருமை அண்ணன் அவர்களே! நான் எப்படி உங்களை வாழ்த்துவதென்றே தெரியவில்லை. மலர்களை உங்கள் கைகளிலே தருகிற பொழுது அந்த மலரின் வாசனையை நானும் பெறுவதைப் போல, பன்னீரை உங்கள் மீது தெளிக்கின்ற பொழுது அந்த பன்னீரின் வாசனையை நானும் பெறுவதைப் போல மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருக்கிறேன்.

நான் கூட வந்தவுடன் இந்த வளாகத்தை சுற்றிப் பார்த்தேன். நானும் கல்லூரி நடத்திக்கொண்டிருக்கிறேன். நான் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன். தந்தை பெரியார் அவர்களுடைய அனைத்து நிறுவனங்களுக்கும் என்னாலான உதவிகளைச் செய்கிறேன். தந்தை பெரியார் மட்டும் இல்லை என்று சொன்னால் முழங்காலுக்கு மேல் வேட்டி கட்டியிருக்க மாட்டோம் நாம். பலருக்குத் தெரியாது. முதல் தலைமுறையும், மூன்றாம் தலைமுறையும் சேர்ந்து நடத்துகின்ற விழா இது.

என்னையும் ஒரு பொருட்டாக மதித்து

அந்தத் தலைவன் ஒருவன் மட்டும் இல்லையென்று சொன்னால் நம்மை மனிதனாகவே மதித்திருக்க மாட்டான். நமக்கு சுவாசத்தைத் தந்தவர் தந்தை பெரியார். அந்த சுவாசத்தை மனிதனாக நடமாடவிட்டிருக்கின்றவர் தந்தை பெரியார் அவர்கள்.

தலைவர் கலைஞர் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் தமிழ்ச்சமுதாயம் இருக்கிறவரை, தமிழனுடைய கடைசி மூச்சு இருக்கின்றவரை இந்த மூன்று பெருமக்களும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்லி, எங்கோ கிடக்கிற என்னையும் ஒரு பொருட்டாக அழைத்து பெருமை சேர்த்த ஆசிரியர் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியை, வணக்கத்தைக் கூறி விடைபெறுகின்றேன், வணக்கம்.

இவ்வாறு அமைச்சர் ஜெகத்ரட்சகன் பேசினார்.

-----------------------"விடுதலை" 9-10-2009

0 comments: