Search This Blog

10.10.09

தலித் விடுதலை முன்னோடி – பெரியார் -4


இதுதான் யானை என்று உருவகப்படுத்திக் கொண்ட விழி இழந்த அய்வர் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது.பகுத்தறிவு ஒளி மூலம் நமது விழிகளைத் திறந்த சமுதாய மருத்துவராம் தந்தைபெரியாரைப் பற்றி அந்த விழி இழந்தோர் உருவகப்படுத்தியதை விடவும் அதிகமான அளவில் பொய்யும், புனைவுமாக பல உருவகங்களை உலவவிட்டுள்ளனர் பார்ப்பனர்களும் ,பார்ப்பன அடிவருடிகளும்.

எடுத்துக்காட்டாக பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு வீட்டில் பிள்ளையாரை வணங்கினார், வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தார்,பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபடவில்லை,அவர்களை இழிவாகப் பேசினார் என்பது போன்ற பல அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றார்கள். இந்த அவதூறுகள் பெரியார் உயிரோடு இருந்த போதிலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. இந்த அவதூறுகளுக்கெல்லாம் பெரியாராலும், பெரியார் தொண்டர்களாலும் மற்றும் நேர்மையான வரலாற்று ஆய்வாளர்களாலும் தகுந்த ஆதாரங்களுடன் பதில் அளிக்கப்பட்டே வந்துள்ளது.

இருந்தாலும் திரும்பத் திரும்ப அதே அவதூறுகளை இப்போதும் சொல்லிவருகிறார்கள். அந்த வகையில் http://www.tamilhindu.com தளத்தில் பெரியாரின் மறுபக்கம் என்ற பெயரில் ஏற்கனவே புத்தகமாக வந்ததை பதிவு செய்து வருகின்றனர். அந்த தளத்தில் வரும் செய்திகளையொட்டி நாம் மறுமொழி அளித்தால் பதிவு செய்யப்படுவதில்லை. அதோடு நாம் பதில் அளிக்கவில்லை. நழுவி விடுகிறோம் என்ற மாய்மாலப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விடுகின்றனர். இவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கெல்லாம் நாம் ஏற்கனவே நாம் http://thamizhoviya.blogspot.com “தமிழ் ஓவியா” வலைப்பூவில் பதில் அளித்துள்ளோம். குறிப்பாக பெரியார், பெரியார்-தலித், அய்யத்தெளிவு என்ற சுட்டியை சுட்டிப் படித்தால் உண்மையை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பணிப்பளு மற்றும் குடும்பச் சுமை காரணமாக இந்தப் பார்ப்பனக்கும்பலுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க கால தாமதமாகிறது. அதோடு ஏற்கனவே இது குறித்து பதில் அளித்து விரிவான நூல்கள் வந்து விட்ட நிலையில் திரும்பத் திரும்ப எழுத வேண்டுமா? என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
அந்த வகையில் 2004 அம் ஆண்டு “உலகத் தமிழர் சக்தி” ஜூன் 2004 இதழில் “தலித் தலைமை –பெரியாரின் நிலை என்னவாக இருந்தது?” என்ற தலைப்பில் டாக்டர் வேலு அண்ணாமலை அவர்கள்,எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக நான் எழுதிய கட்டுரையை இங்கு தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறேன்.
சமூகப் பொறுப்பில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று கூறியதோடு இந்த கட்டுரையை தட்டச்சு செய்து கொடுத்த எனது இனிய தோழர் “ஆதிஆனந்த்அப்பா” அவர்களின் உதவிக்கு மிக்க நன்றி
****************************************************************************
“பெரியாரின் சீடர்கள் பலர் ஜாதியத்தையும், தீண்டாமையையும் ஆதரிக்கிறார்கள. ஏனென்றால் அவர்கள் தான் இப்பபோது உண்மையான இந்துத்துவ சீடர்கள். இது துரதிருஷ்டவசமானதுதான். மாணவர்களின் சாதனைகள்தானே ஆசிரியரின் புகழை முடிவு செய்யும். அப்படியென்றால் பெரியார் சீடர்கள் ஏன் தார் கொண்டு ஊரெங்கிலும் உள்ள ஜாதிப் பெயர்களை அழிக்கக்கூடாது?” என்ற அடுத்த அவதூறை வீசியுள்ளார் டாக்டர் வேலு அண்ணாமலை.

ஜாதியத்தையும், தீண்டாமையும் ஆரிப்பவர்கள் எப்படி பெரியாரின் சீடர்கள் ஆவார்கள்? விளக்குவாரா டாக்டர் வேலு அண்ணாமலை. உங்கள் வாதத்தில் எள்ளவும் உண்மை என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. முதல் பாராவில் “தலித்துகளுக்காக பெரியார் பாடுபட்டார் என்று எப்படிச் சொல்லமுடியும்” என்று எழுதிய நீங்களே அடுத்த பாராவில் “தலித்துகளுக்காக பெரியார் எதுவுமே செய்யவில்லை என்று நான் சொல்ல்பபோவதில்லை” என்று எழுதியுள்ளீர்கள். நீங்கள் எழுதிய கட்டுரையை இன்னொரு முறை நீங்கள் படித்தால் மண்டையை பிய்த்துக் கொள்வீர்கள் அந்த அளவு முன்னுக்குப்பின் முரணாக “உண்மை” என்ற ஒன்று இல்லாமல் அபத்தமாக எழுதியுள்ளீர்கள். பெரியாரை “வாழ்வியலாக” கடைபிடிப்பவர்கள்தான் உண்மையான பெரியாரின் சீடர்கள். மற்றவர்களை எப்படி பெரியாரின் சீடராக ஏற்றுக் கொள்ள முடியும். ஜாதி ஒழிப்பில் பெரியாரின் சீடர்கள்தான் மற்ற யாரைக் காட்டிலும் ஜாதி ஒழிப்பில் முதன்மைப் பங்கு வகிக்கிறார்கள். ஆமாம் இவ்வளவு வியாக்கியானம் பேசும் டாக்டர் வேலு அண்ணாமலை ஜாதி ஒழிப்பிற்காக என்ன என்ன செய்தார்? பட்டியலிட முடியுமா? பெரியாரின் சீடர்கள் ஜாதி ஒழிப்பிற்காக செய்த பணிகள் இதோ:-


பெரியாரின் திராவிடர் கழகமும், அதன் தலைவர் கி.வீரமணி அவர்களும் ஜாதி ஒழிப்பிற்காக செய்த பணிகளின் பட்டியல் பாரீர்.


1981 ஆம் ஆண்டு ஜாதிக்கு பாதுகாப்பு அளிக்கும் மனுதர்ம சாத்திர எரிப்பு

1988 ஆம் ஆண்டு தீண்டாமை சதி ஆதரவாளர் பூரி சங்கராச்சாரி கொடும்பாவி எரிப்பு
1992 இல் ஜாதியைப் போற்றும் “இராமலீலா” வுக்கு எதிராக “ராவணலீலா” நடத்தியது


ஜாதிக்கு ஆதாரமாய் இருக்கும் மதவெறியை மாய்க்க “மதவெறி மாய்ப்போம், மனித நேயம் காப்போம்” என்று 3.1.93 முதல் 30.03.93 வரை பல வட்டார மாநாடுகளை நடத்தி ஜாதி மத வெறியை ஒழித்தனர்

18.04.1993 அன்று இந்துத்துவ “காவிக் கொடி எரிப்பு“ நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

25.01.95 முதல் 28.8.95 வரை அனைத்து மாவட்டங்களிலும் 26 ஜாதி ஒழிப்பு மாநாடுகளை நடத்தி ஜாதி ஒழிய காரணமாயிருந்தனர்.

2003 ஆண்டு திருச்சியில் விஷ்வஇந்து பரிஷத் மாநாடு நட்த்தி சூலம் கொடுத்ததை கண்டித்து ‘இந்துத்துவா’வின் வெறித்தனத்தை அம்பலப் படுத்தி அதே திருச்சியில் 2.3.2003 அன்று தி.,க மாணவர் மாநில எழுச்சி மாநாடு நடத்தினர். தொடர்ந்து இந்துத்துவாவை அழித்தொழிக்கும் முயற்சியாக பல நகரங்களில் திராவிடர் எழுச்சி மாநாடுகளை நடத்தினார்கள்.

15.7.2003ல் நாகர்கோவிலில் தொடங்கிய தமிழர் சமூக விழிப்புணர்ச்சிக்கான எழுச்சிப் பயணம் 25.7.2003 அன்று வில்லிவாக்கத்தில் முடிவடைந்தது. இப்பயணத்தின் நோக்கம் 1. ஜாதி ஒழிப்பு 2. பெண்ணடிமை ஒழிப்பு 3. மத வெறி மாய்ப்பு 4. சமூக நீதி காப்பு.இவ்வாறு ஜாதி ஒழிப்பை தனது வாழ்நாள் பணியாக செய்து வரும் பெரியார் சீடர்களை பார்த்து ஜாதி இந்துக்களை விட மோசமாக செயல்படுகிறார்கள் என்று எழுதும் டாக்டர் வேலு அண்ணாமலையை என்னவென்று சொல்லுவது? (இன்னும் விரிவான தகவல்களை அறிய தஞ்சை ஆடலரசன் அவர்கள் எழுதிய ‘தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும்” என்ற நூலைப் படிக்கவும்)


தலித்துகளின் நலனை முன்னிறுத்தி செயல்பட்ட பெரியாரை தலைவராக ஏற்கும் சூத்திரர்கள் கண்டிப்பாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த இன்னலும் செய்யமாட்டார்கள். தலித்துகளுக்கு வந்த துன்பம் தனக்கு வந்ததாகவே கருதுவர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு துன்பம் இழைக்கும் எந்த சூத்திரரும் பெரியாரை தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படியிருக்க ஒட்டு மொத்த சூத்திரர்களின் தலைவராக பெரியாரை சித்தரிக்கும் டாக்டர் வேலு அண்ணாமலையின் செயல் சிறுபிள்ளைத்தனமானது. இது குறித்து நாட்டுப்புற ஆட்டப் பாடல்களில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற திரு கே.ஏ.குணசேகரன் அவர்கள் தரும் விளக்கம் இதோ:-

பெரியார் தீண்டாமையை முக்கிய பிரச்சினையாக வச்சிக்கிட்டு நீண்டகால செயல் திட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்பட்டார். வரலாற்றில் அவர் இடத்ததை நிரப்ப முடியாது. தலித் மக்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசும்போது அதன் நியாயத்தைப் புரிந்து கொண்டு, தோழமை கொண்டு இவர்களும் சமமாக வந்தால்தான் இங்கே மக்கள் நல்லா இருக்காங்கன்னு சொல்ல முடியும் என்று தங்கள் ஜாதிகளையும் இழந்திட்டு ஜாதி அடையளாங்களை அழிச்சிட்டு, இந்த தலித் மக்களின் முன்னேற்றத்திற்கு நிற்கிறவர்கள் ரொம்பப் பாராட்டப் பட வேண்டியவர்கள். அதன் முன்னணியில் நம்ம பெரியார்தான் நிற்கிறார். பெரியார்தான் தலித் அல்லாதவர்களையும், தலித் மக்களின் விடுதலைக்காக நின்றாக வேண்டும் என்ற படிப்பினையை சொன்னதோடல்லாமல் செய்யவும் செஞ்சாரு. தலித் மக்களின் பிரச்சினை கூட நமது பிரச்சினை அவர்கள் முன்னேறாமல் இருந்தால் தமிழன்னு சொல்லிக்கிறதுக்கே அசிங்கமா இருக்கு என்று அவர்களுடைய (தலித்துகள்) பிரச்சினைகளை தமது பிரச்சினையாக நினைத்து போராடிய செயல்வீரராக, புரட்சியாளராக தந்தை பெரியார் இருக்கிறார். இன்றைய தலித் அல்லாத தோழர்கள் கூட தலித் மக்ககளுடைய பிரச்சினைகளை கையில் எடுத்தாகனும். அப்பத்தான் இங்கே தமிழர்கள் என்ற விசயத்தை கட்டமைக்க முடியும் என்ற நல்ல நோக்கத்ததோடு செயல்படுவதற்கு பெரியாருக்கே நன்றி சொல்ல வேண்டும்

----------------“தமிழ் இனி” (மடங்கல்-கன்னி) 2033


ஆக தலித் பிரச்சினையில்பெரி யாரின் பார்வை மிகத் தெளிவாக இருந்ததை முனைவர் கே.ஏ.குணசேகரன் உறுதிப்படுத்தி இருக்கிறார். பெரியாரின் அடியொட்டியே பெரியாரின் தொண்டர்களும் நடந்து வருகின்றனர். ஜாதி ஒழிப்புக்காக எத்தனையோ குடும்பங்களை இழந்துள்ளது பெரியார் இயக்கம். அப்படிப்பட்ட பெரியாரின் தொண்டர்களைப் பார்த்து ஜாதி ஒழிப்புக்காக எதுவும் செய்யவில்லை என்ற தொனியில் தனது பேனாவை ஆட விட்டிருக்கும் டாக்டர் வேலு அண்ணாமலையை பார்த்து கேட்கிறோம். ஜாதி ஒழிப்புக்காக நீங்கள் செய்த பணியை பட்டியலிடமுடியுமா? பட்டியல் கூட வேண்டாம். சாம்பிளுக்கு ஒன்று இரண்டு நிகழ்வுகளையாவது உங்களால் காட்ட முடியுமா? குறைந்தபட்சம் பெரியார் தொண்டர்களைப் போல் ஜாதி ஒழிப்புக்காக ஜாதி ஒழிப்பு திருமணமாவது செய்துள்ளீர்களா?

தாழ்த்தப்படடோரைத் தொடாதே எட்டி நில் என்று சொல்லுகின்றோம். அதற்குக் காரணம் பிறவியின் அடிப்படையில் அவனுக்குள்ள தூய்மையற்ற நிலையேயாகும். உலகத்லேயே உயர்ந்த சோப்பினால் அவனைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், நவநாகரிக ஆடை அணிமணிகளால் அலங்கரித்தாலும், பரம்பரைப் பரம்பரையாக வந்த அவர்களுடைய தீட்டை அழுக்கைப் போக்கவே முடியாது

------------------------(நூல்:- Hindu Ideal பக்கம் 230)


இப்படிச் சொன்னவர் சிருங்கேரி சங்கராச்சாரியார் இவருக்கு நான் ஒன்றும் சளைத்தவனல்ல என்ற வகையில் நாசிக் கூட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் பேசியது இதோ.
“சதுர்வர்ண அமைப்பு (பிறவி பேதம்) இந்து மதத்தின் அடித்தளமாகும். இந்து சமுதாய அமைப்பு (பிறவி பேதம்) மறைந்துவிட்டால் இந்து மரமே அழிந்து விடும்”.

இவ்வாறு தாழ்த்தப்பட்டோரை இழிவுபடுத்தும் சங்கராச்சாரிகள் மீது டாக்டர் வேலு அண்ணாமலைகளின் பேனா பாயாமல் சமத்துவ சமுதாயமாக வாழச் சொன்ன பெரியார் மீதும், பெரியார் தொண்டர்கள் மீதும் பாய்வது ஏன்?

பார்ப்பனர்களுக்கு “ஆதவன்”களாகவும், ஏதமறியா தாழ்த்தப்பட்டவர்களுக்கு “அறிஞர்”களாகவும் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கும் இவர்களின் செயலை அம்பேத்கர் பார்த்திருந்தால் இவர்களைப் பற்றி எழுத பேனாவே கூச்சப்படுகிறது.


--------------------------தொடரும்..

0 comments: