Search This Blog

7.10.09

சுயமரியாதை சுடரொளி - சி.டி. நாயகம்


சி.டி. நாயகம்

சுயமரியாதை இயக்க வீரர், 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் சர்வாதிகாரி சி.டி. நாயகம் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1878). திருச்செந்தூரையடுத்த குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் இவர்.

ஆசிரியராகப் பணி தொடர்ந்தவர் பிறகு கூட்டுறவுத் துறையில் நுழைந்து, அரசுப் பதிவு பெற்ற (கெசடட் ஆபீசர்) கூட்டுறவுத் துறையின் துணைப் பதிவாளர் (டெபுடி ரிஜிஸ்ட்டிரார்) என்கிற அளவுக்குப் பதவி உயர்வு பெற்றவர் ஆவார். அரசுத் துறையில் அவர் பணியாற்றியபோது பார்ப்பனர் அல்லாதாரைக் கைதூக்கி விட்டவர்.

கூட்டுறவுத் துறை என்றாலே பார்ப்பனர் அல்லாதார் துறை என்ற நிலை பிற்காலத்தில் பேசப்பட்டதற்கு அடிக்கல் நாட்டியவர் அந்தப் பெருமகனேயாவார். தொடக்க முதலே நீதிக்கட்சியோடு தொடர்பு கொண்டிருந்தார்.

சுயமரியாதை இயக்கத்தில் தந்தை பெரியாருக்கு உற்ற தோழராய்த் திகழ்ந்தார். பல மாநாடுகளுக்குத் தலைமை தாங்கியதுண்டு. எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தம் இணையரோடுதான் வருவார். இவரது பேரன்தான் பிரபல மருத்துவ வல்லுநர் செ.நெ. தெய்வநாயகம் ஆவார்கள். சென்னை தியாகராயர் நகரில் உள்ள இவரது இல்லத்தில்தான் பெரியார் மணியம்மை திருமணம் பதிவு செய்யப்பட்டது என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பாகும்.

அன்னை மணியம்மையார் அவர்கள் சி.டி. நாயகம் வீட்டில் தங்கித்தான் இளங்கலைப் பயிற்சிப் பள்ளியில் படித்தார் என்பது இன்னொரு வரலாற்றுக் குறிப்பாகும்.

சென்னையில் தியாகராயர் நகர் மேல்நிலைப்பள்ளி, குண்டூர் சுப்பையா பிள்ளை தியாகராயர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தியாகராயர் நகர் தொடக்கப் பள்ளிகளும் இவரின் கொடையே!

25.1.1933 இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டுக்குத் தலைமையேற்குமாறு சி.டி. நாயகம் அவர்களின் இணையர் சிதம்பரத்தம்மாளை முன்மொழிந்து தந்தை பெரியார் கூறிய கருத்து வருமாறு:

"தோழர் நாயகமும், அவரது குடும்பத்தினரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் எவ்வளவு தொண்டு செய்துள்ளனர்! இவர்களுடைய தொண்டினை அறிய விரும்புகிறவர்கள் தோழர் நாயகத்தைப் பற்றி சட்டமன்றத்தில் தோழர் சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனரும், அவரது அடிமைகளாகிய சில பார்ப்பனரல்லாத சட்டமன்ற உறுப்பினர்களும் பேசிய பேச்சுகளையும், கேட்ட கேள்விகளையும் படித்துப் பார்த்தால் தெரியும். தோழர் நாயகம் அவர்கள் தனது அரசுப் பதவியைப் பெரிதாகக் கருதி இருந்தால் இன்னும் 4, 5 ஆண்டுகள் பணியில் இருந்திருக்கக் கூடும். ஆனால், வேலையையும் விட்டுவிட்டு நமது இயக்கத்திற்காகக் குடும்பத்துடன் தொண்டு செய்து வருகின்றார்.

தோழர் நாயகம் அவர்கள் திருநெல்வேலி சைவவேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், இவர் குடும்பத்தைப் பொறுத்தவரை பல காலமாகவே ஜாதி வேறுபாடுகள் இல்லை. கைம்பெண்கள் (விதவைகள்) பலருக்குச் சுயமரியாதைத் திருமணத்தைச் செய்து வைத்திருக்கிறார்கள். சுயமரியாதை மாநாடு எங்குக் கூடுவதாகச் செய்தித்தாள்களில் பார்த்தாலும், அழைப்பிதழ் இல்லாமலேயே போய்விடுவார்கள்."

------------------(புரட்சி, 3.12.1933).

வேறு பாராட்டும் வேண்டுமோ!


----------- மயிலாடன் அவர்கள் 7-10-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: