Search This Blog

4.10.09

கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்யச் செய்யத்தான் கோயில்கள் பெருகுகின்றதா?



விளம்பரமே!

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நடந்த பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களின் வருகை கணிசமாகக் குறைந்து காணப்பட்டது. இவ்விழா குறித்து விரிவான அளவில் விளம் பரம் செய்திருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது. இதற்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்தான் காரணம்.

பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தால் தேவஸ்தானத்திற்குக் கூடுதல் வருமானம் கிடைத்திருக்கும். மேலும் அடிப்படை வசதிகள் மற்றும் மின்விளக்கு அலங் காரம் குறைவு என்ற புகாரும் வந்துள்ளது.

_ திருப்பதி தேவஸ்தான போர்டின் தலைவர் ஆதிகேசவலு நாயுடு சொன்னதாக தினமலர் ஏடே (2.10.2009) செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்று மட்டும் இதன்மூலம் தெளிவாகிவிட்டது. விளம்பரம் செய்தால்தான் பக்தர்கள் கூடுவார்கள். வியாபாரத்துக்கு விளம்பரம் எப்படி அவசியமோ, அதுபோல கோயில்களில் பக்தர்களின் கூட்டம் சேர விளம்பரமும் தேவைப்படுகிறது.

வாரியாரிலிருந்து சங்கராச்சாரியார்வரை பக்தி ஒரு பிசினஸ் ஆகிவிட்டது என்று ஏன் கூறினார்கள் என்பது இதற்குமுன் விளங்காவிட்டாலும், இப்பொழுது விளங்கியிருக்குமே!

மின் விளக்கு அலங்காரங்கள் குறைவாக இருந்ததும் பக்தர்களின் கூட்டக் குறைவுக்குக் காரணம் என்றும் தேவஸ்தான போர்டு தலைவர் கூறியுள்ளார். அனுபவஸ்தராயிற்றே அவருக்குத் தெரியாதா? எதிலும் ஒரு கவர்ச்சி இருக்கவேண்டும். அப்பொழுதுதான் கோயிலாக இருந்தாலும் பக்தர்கள் கூடுவார்கள்.

கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்று நீங்கள் எல்லாம் பிரச்சாரம் செய்யச் செய்யத்தான், நாட்டில் கோயில்கள் பெருகுகின்றன. பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று நம்மைப் பார்த்துக் கேட்கும் அதிமே(ல்)தாவிகளைக் கேட்கிறோம்; திருப்பதி தேவஸ்தான போர்டு தலைவர் ஆதிகேசவலு நாயுடுகாரின் குற்றப் பத்திரிகைக்கு என்ன பதில்?

ஒரு கோடி ரூபாய் பணம் கொடு கழுதையை மகானாக்கிக் காட்டுகிறேன் என்பார் தந்தை பெரியார்.

அந்தக் கழுதையைபற்றி நாலு முக்கியமான இடத்தில் திண்ணைப் பிரச்சாரம் செய்தால் போதாதா?

டீக்கடையிலும், பஸ் ஸ்டாண்டிலும், சவரக் கடைகளிலும் உட்கார்ந்துகொண்டு, அந்தக் கழுதையின் மூத்திரத்தில் ஜவ்வாது மணக்கிறது, தெய்வ சக்தியும் இருக்கிறது. அதனை ஒரு டம்ளர் குடித்தால், தீராத நோய் எல்லாம் தீரும், குழந்தை வரம் கிடைக்கும் என்று திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்தால் போதுமே, திருப்பதிக்குச் செல்லும் பக்தர்களைவிட அதிகமாகக் கூடிவிடுவார்களே!

உலகமே பிரச்சாரத்துக்கு அடிமைதான். பக்தி என்பதும் அப்படித்தான் கடவுள் சக்தியால் அல்ல அப்படி ஒன்றும் கிடை-யாது.

------------ மயிலாடன் அவர்கள் 4-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: