Search This Blog

8.10.09

தலித் விடுதலை முன்னோடி – பெரியார் -3


அன்று சூத்திரர்கள் மிக மோசமான பார்ப்பனீயத்தை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். இன்று அவர்கள் நெற்றியிலும், உடல் முழுவதும் பார்ப்பனீயத்தின் அடையாளங்களைப் பூசிக் கொண்டு அதிகாரங்களை செலுத்திக் கொண்டு காட்டுமிராண்டி பார்ப்பனர்களின் கால்களை பிடிக்கவும் தயாராக இருக்கிறார்கள். தலித் நோக்கிலிருந்து பெரியார் செய்த மிகப் பெரிய தவறு இதுதான் என்று நினைக்கிறேன். “சூத்திரர்களை தலித்துகளின் விரோதிகளாக அவர் மாற்றிவிட்டார்” என்று பெரியார் மீது அடுத்த அவதூறை வீசியுள்ளார் டாக்டர் வேலு அண்ணாமலை.

பேனா கையில் கிடைத்து விட்டால் எது வேண்டுமானாலும் எழுதி விடலாமா?

சூத்திரர்களில் மட்டுமல்ல தாழ்த்தப்பட்டவர்களிலும் பார்ப்பனக் கூலிகளாய் பார்ப்பன பாதந்தாங்கிகளாய் இருக்கிறார்கள். ஊதாரணமாக ஜெயேந்திர சங்கராச்சாரியாரின் காலடியில் அமர்ந்து ஆலோசனைகளை கேட்டுக் கொண்டிருக்கும் ‘நீலப்புலிகள்’ மற்றும் ஜெயேந்திர சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட ‘டாக்டர் அம்பேத்கர் மக்கள் சபை’முன்னோடிகள் மற்றும் நான் கறி சாப்பிடுவதில்லை பியூர் வெஜிடேரியன் என்று ‘அவாள்’ பாசையில் பேசிக் கொண்டு பார்ப்பனியத்தை காத்துக் கொண்டு இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களின் செயலுக்கு காரணம் அம்பேத்கரா?

தாழ்த்தப்பட்டவர்களிலும் தாழ்த்தப்பட்டவர்களாக உள்ள துரும்பர்கள் (புதிரை வண்ணார்கள்) சமுதாயத்தை கொடுமைப்படுத்ததுபவர்கள் சேரியில் வாழும் தாழத்தப்பட்டவர்கள்தான் என்று துரும்பர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதற்காக அம்பேத்கரை துரும்பர்களின் எதிரியாக நினைக்க முடியுமா? இது குறித்து ஒதுக்கப்பட்டவர்களே ஒதுக்கும் புதிரை வண்ணார்கள் என்ற தலைப்பில் திரு.மீனாமயில் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி இதோ.

“பிற ஜாதியினர் தங்களை அடிமைப்படுத்துவதை உணர்ந்து போராட்டத்தில் இறங்கியிருக்கும் தலித் மக்கள், முதலில் தங்களை சரிபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறத? இன்னொருவரை அடிமைப்படுத்தி விட்டு தனக்கான விடுதலைக்கு ம்டடும் குரல் கொடுப்பது எவ்வளவு கேவலமான விஷயம்? அப்படியே தலித் மக்களுக்கு விடுதலை கிடைத்தாலும், அது சமூக விடுதலையாக இருக்காது. மாற்றம் வேரிலிருந்து வரவேண்டும். அப்பொழுதுதான் ஒட்டு மொத்த சமூக விடுதலை என்பது சாத்தியமாகும். இல்லையென்றால், போராடிப் பெறும் எந்த வெற்றியுமே நிலைக்காது என்பதை தலித் மக்கள் உணர வேண்டும். முதலில் தான் விலங்கு பூட்டி மக்களை விடுவித்துக் கொண்டு தன் விலங்கை உடைக்கப் போராடுவதே சரி. தன்னை யாரும் அடிமைப்படுத்திவிடக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருக்கும் யாரும் - தானும் யாரையும் அடிமைப்படுத்திவிடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும். இந்தச் ஜாதியக் கட்டமைப்புதான் இதற்கு காரணம் (இதை விட்டு விட்டு பெரியார் மேல் பாய்வது எவ்வகை நியாயத்தை சார்ந்தது டாக்டர் வேலு அண்ணாமலை) அதை உடைக்கும் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லோரையும் இணைத்துக் கொள்வதே சரி “என்னை யாருமே ஜாதி வித்தியாசம் பார்த்து ஒதுக்கக் கூடாது. ஆனால் நான் மட்டுமே ஜாதி பார்த்து மக்களை அடிமைப்படுத்துவேன்” என்ற சிந்தனை உள் ள யாரும் - சமூக விடுதலைப் போரில் கலந்து கொள்வதற்கான தகுதியை இழந்து விடுகிறார்கள். இவ்விசயத்தில் தலித் மக்ககள் இன்னும் நிறைய மாறியாக வேண்டும் என்றே தோன்றுகிறது.”

(துரும்பர்களின் இராமநாதபுரம் மாவட்ட முதல் மாநாடு மலர் பக்கம் 15.16)

இந்நாட்டைப் பிடித்துள்ள இந்தச் ஜாதியக் கட்டமைப்பை தகர்தெறிவதற்கு தன் வாழ்நாளெல்லாம் உழைத்த பெரியாரை தலித்துகளுக்கு எதிரானவர் என்று எழுதுவது விசமத்தனமானது.

யார் யாரெல்லாம் ஒடுக்கப்பட்டார்களோ அந்த மக்கள் எல்லாம் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில்தான் பெரியாரின் உழைப்பு, போராட்டம் அமைந்தது. இதன் மூலம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்வுக்கு அஸ்திவாரம் அமைத்தவர் பெரியார். இது குறித்து பெரியார் தரும் விளக்கம் இதோ:-

இதுவரை நானோ, சுயமரியாதை இயக்கமோ, திராவிடர்கழகமோ துவக்கிய எந்தப் போராட்டத்திலும் அல்லது கொள்கையிலும் தோல்வியுற்றதே கிடையாது என்பதைப் பலமுறைகள் எடுத்துக் காட்டி இருக்கிறேன். கோவில் நுழைவு முதல் , பொதுக்கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை வரையிலும், இரயில்வே சிற்றுண்டி விடுதிகள் முதல் சாதாரண ஓட்டல்களிலும் ஜாதி வித்திதயாசம், உயர்வு தாழ்வு கூடாதென்பதிலும், தாய்மார்களை ஆண்டவன் பெயரால் பொட்டுக்கட்டும் அநாகரிகம் ஒழியவேண்டுமென்பது வரை நாங்கள் கிளர்ச்சி செய்து சிறை சென்று பல தொல்லைகளுக்கு உடபட்டு வெற்றி பெற்று அது நடைமுறையிலும் இன்று இருந்து வருகிறதேயல்லாது, ஒன்றிலும் தோல்வி கிடையாது. இன்னும் விரைவில் கூறப்போகிறேன். கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை விட்டது மட்டும் போதாது., அவர்களே பூசை செய்ய வேண்டும், தட்சிணை காசுகளை அவர்களே அடையவேண்டும், அப்படி அனுமதிக்காத சாமிகளை உடைத்து ரோட்டுக்கு ஜல்லி போட வேண்டுமென்று கிளர்ச்சி செய்யத்தான் போகிறேன்."

(“விடுதலை” 22.8.1948)

தான் சொன்னது போலவே “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்” சட்டம் கொண்டு வர காரணமாயிருந்தவர் பெரியார். அதுபோல தனது இறுதிக் காலத்திலும் “தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு“ முயற்சியில்தான் உயிர் துறந்தார். அவ்வாறு விருப்பு வெறுப்பின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் உழைத்த பெரியாரை தலித் மக்களுக்கு எதிரானவர் என்று சித்தரிப்பது எந்தவகை அறிவு நாணயத்தைச் சார்ந்தது? டாக்டர் வேலு அண்ணாமலைக்கே வெளிச்சம்.

-----------------------தொடரும்

0 comments: