Search This Blog

17.10.09

பார்ப்பனியச் சடங்கை விலக்கியவர் சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர்

ஆர்.கே.எஸ்.

சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் என்ற பெருமைக்குரிய ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) அவர்களின் பிறந்த நாள் இன்று (1892). சுயமரியாதை இயக்கத்தின் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1931 இல் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாநில சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமை வகித்த பெருமைக்குரியவர். இவர் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர். அம்மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காந்தியாரோடு ஒருமுறை இவர் உரையாடிக் கொண்டிருந்தபோது, ஆர்.கே.எஸ். அவர்களிடம் தெறித்த தனித்தன்மையான சீர்திருத்த கருத்துகளைச் செவியுற்ற காந்தியார் இந்த விஷயத்தில் தங்களுக்குக் குருநாதர் யாராவது உண்டா? என்ற கேள்வியைக் கேட்டபோது, ஆம், எனது குருநாதர் ஈரோடு ஈ.வெ. ராமசாமியார்தான் என்று கூறியுள்ளார். அவரைச் சந்திக்கவேண்டும் என்று காந்தியார் விரும்பினார். 1927 இல் பெரியார் காந்தியார் சந்திப்பு பெங்களூரில் நடந்தது.

அதன் தொடர்ச்சிதான்.

விடுதலை ஏடு பொருளாதார நெருக்கடிக்கு ஆளான போதெல்லாம் தொடர்ந்து அதன் வாழ்வுக்கு நிதி உதவி செய்து வந்தவர் ஆர்.கே.எஸ். ஆவார்கள். (தமிழர்கள் நன்றி உணர்வோடு நினைவு கூர்வார்களாக!)

அந்த விளையும் பயிர் முளையில் தெரிந்தது. சென்னையில் கல்லூரிகளில் படித்தபோது அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசைத் தட்டி செல்பவராக ஆர்.கே.எஸ். இருந்தார்.

1913 இல் டாக்டர் சி. நடேசனார் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் திராவிடர் சங்கம் நடத்தி வந்தார். வருடந்தோறும் பட்டதாரிகளாக வெளிவரும் பார்ப்பனர் அல்லாதாரை அழைத்துப் பாராட்டுக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

அப்படி ஒருமுறை அங்கே வந்து, பட்டதாரிகள் சார்பில் நன்றி தெரிவித்து, ஆங்கிலத்தில் ஆற்றிய உரையால் அனைவரையும் ஒரே மூச்சில் கவர்ந்து ஈர்த்தவர் ஆர்.கே. சண்முகம். அந்தக் கூட்டத்தில் வெள்ளுடை வேந்தர் சர்.பி. தியாகராயர், பனகல் அரசர் போன்றவர்கள் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

1920 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியையும் ஈட்டினார். சட்டமன்றத்தின் 127 உறுப்பினர்களுள் மிகவும் இளையோராக இருந்தவர் சண்முகம்தான். அப்போது நீதிக்கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார். அதன்பின் மத்திய (டெல்லி) சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் (1923). மத்திய சட்டசபையில் அவர் ஆற்றிய உரைகள், தந்த புள்ளி விவரங்கள் அகில இந்திய அளவில் அகல விரிந்து அவரைப் பார்க்கும்படிச் செய்தன.

இந்திய அளவிலும், உலக அளவிலும் அவர் பெயர் பரவியிருந்தது என்பது உண்மைதான் என்றாலும், அடிப்படையில் ஆர்.கே. சண்முகனார் அழுத்தமான சுயமரியாதைக்காரர் ஆவார்.

பிராமணியச் சடங்கை விலக்கியவர்கள் என்ற ஒரு பட்டியல் குடிஅரசில் வெளிவந்தது. (1) ஈ.வெ. ராமசாமி (2) திரு.வி.கலியாணசுந்தரம் (3) டாக்டர் பி. வரதராசுலு (4) ஆர்.கே. சண்முகம்.

இந்த அடையாளம் போதுமே!


---------------- மயிலாடன் அவர்கள் 17-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: