Search This Blog

9.10.09

பெரியார் என்ற பீரங்கி பெற்றெடுத்த ஏ.கே.47

பெரியாரின் கொள்கைகளை கிராமம் கிராமமாக
பிரச்சாரம் செய்வதைப் பார்த்து வியக்கின்றோம்

நம்முடைய ஆசிரியர் அண்ணன் அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கைகளைக் கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்வதைப் பார்த்து பிரமிப்படைகிறோம் என்று மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் கூறினார்.

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் 28.9.2009 அன்று நடைபெற்ற ஆறுபெரும் விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆற்றிய உரை வருமாறு:

விடிவெள்ளியான வெளிச்சத்தின் முன்னுரையாய் நம்முடைய இதயமெல்லாம் நிறைந்திருக்கிற நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் சொல்லுவதைப் போல மின்னலை இப்படித்தான் மின்னவேண்டும் என்று எப்படிச் சொல்ல முடியாதோ, புயலை இப்படித்தான் வீசவேண்டும் என்று சொல்ல முடியாதோ அப்படி தமிழர்களை காத்துக் கொண்டிருக்கிற நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் இங்கே வீற்றிருக்கின்றார்கள்.

நான் பிரமித்துப்போனேன்

இந்த அவையைப் பார்க்கிறேன். நான் பிரமித்துப் போயிருக்கிறேன். கருப்பு சட்டைக் காரன் காவலுக்கு மட்டும்தான் கெட்டிக்காரன் என்று நினைத்திருந்தேன். கருப்பு சட்டைக்காரன் கல்விக்கும் கெட்டிக்காரன் என்பதை இங்கே வந்துதான் நான் தெரிந்துகொண்டேன்.

பெருமக்களே! நான்கூட கல்வி நிறுவனம் நடத்திக்கொண்டிருக்கின்றேன். நானும் என்னுடைய அருமை அண்ணன் கே.என்.நேரு அவர்களும், இந்த வளாகத்தைச் சுற்றி வந்தபொழுது ஏதோ ஒரு மேலைநாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அறிஞர் அண்ணா அவர்கள் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார்கள். அந்த பல்கலைக்கழகத்திற்குச் சென்று பார்த்தேன்.

மேல்நாட்டில் இருப்பதுபோன்ற உணர்வு

பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்றிருக்கின்றேன். அவ்வளவு அற்புதமாகக் கண்டேன். ஒரு மேலை நாட்டில் இருப்பதைப் போல வடிவமைத்து இந்த பல்கலைக்கழகத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற நம்முடைய ஆசிரியரை எப்படிப் பாராட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த அவையைப் பார்க்கிறேன்.

தண்டலை மயில்கள் ஆட

தாமரை விளக்கம் தாங்க கொண்டல்கள் முடியில் ஏங்க

குவளைகள் விழித்து நோக்க

தெண்டிரை எழிலைக் காட்ட

தேன்விழி மகர யாழின்

வண்டுகள் இனிது பாட

மருதம் வீற்றிருக்கும் மாதோ

என்று சொல்லுவதைப்போல;

மூங்கில் காடுகளில்

தேங்கி நிற்கின்ற

தென்றலைப் போல்

இங்குள்ள பெருமக்கள்!

விண்ணிலே இருந்து விழுகின்ற பனித்துளிகள் மண்ணில் விழுந்து மரணித்துப் போவதற்கு முன்னால் ஒரு புல்லில் விழுந்து புளங்காங்கிதம் அடைவதைப் போல நாங்கள் அத்துணைப்பேரும் இங்கு மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருக்கின்றோம்.

இங்கே பெரியார் என்ற பீரங்கி பெற்றெடுத்த ஏ.கே.47தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள். அவரைப் பற்றி நான் பல நேரங்களிலே வியந்து பாராட்டிப் போற்றியிருக்கின்றேன்.

செந்தமிழால் செய்த உடல் _ செங்கோலால் செய்த விரல் _ தங்க நூல் செறிந்த உடல் _ சரித்திரத்தின் ஞானக்கடல் _ நினைப்பதெல்லாம் தமிழன்னை _ நெஞ்சமெல்லாம் தந்தை பெரியார் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெருந்தகை அவர்கள் இங்கே பேசியிருக்கின்றார். சொல்நோக்கு, பொருள்நோக்கு, இடைநோக்கு, நடைநோக்கு அத்தனைக்கும் இலக்கியமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற நம்முடைய ஆசிரியர் அவர்கள்.

பெரியார் எதை விட்டுச் சென்றாரோ!

உமிழ் நீரும் தமிழ் நீராய்ச் சுரக்கும் நம்முடைய வேர்களுக்குத் தாய்ப்பால் ஊட்டிய பாட்டுடைத் தலைவன்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள். மன்னவரும் நீரோ வடநாடும் உனதோ உன்னை அறிந்தோ தமிழை ஓதுவேன் என்று சொல்வதைப்போல் யார் கேட்கிறார்கள் யார் கேட்கவில்லை என்பதைப்பற்றி கவலைப்படுவதில்லை.

தந்தை பெரியார் எதை விட்டுச் சென்றாரோ அத்துணையையும் தன் தோள்மீது சுமந்து இந்த வயதிலேயும் கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்து உழைத்துக் கொண்டிருக்கிறவர்தான் இங்கே அமர்ந்திருக்கின்ற நம்முடைய பெருந்தகை அவர்கள்.

நாம் அத்துணைபேரும் எப்படி வாழவேண்டும் என்பதற்காக இஙகே நமக்கு அற்புதமான செய்திகளை எல்லாம் தந்திருக்கிறார்கள்.

நாம் பதிலே சொல்லமுடியாது

அவர்களைப் பற்றி நான் பல நேரங்களிலே சொல்லுவேன்,

கண்ணுறங்கும் நாவழகா

பனியுறங்கும் பூவழகா

சேரசோழ பாண்டியனை

சேர்த்து வைத்த மூவழகா

என்று சொல்லலாம்.

இவர் தமிழ்நடை தனிநடை. மதுநடை, மயக்க நடை. இந்த வயதில்கூட ஆசிரியர் அவர்கள் பேசுகிற ஆற்றலைப் பார்த்தால் பிரமித்துப்போக வேண்டும்.

மேடைக்கு வரும்பொழுது ஒரு பத்து புத்தகங்களோடு வருவார். அந்தப் புத்தகங்களிலிருந்து குறிப்புகளைச் சொல்லுவார்கள்.

அவர் குறிப்புகளைச் சொல்லும்பொழுது அதற்கு நாம் பதிலே சொல்ல முடியாது. விவாதத்தை எடுத்து வைக்கின்ற ஆற்றலில், தமிழகத்தில் இப்படிப்பட்ட ஒரு தலைவனை நான் பார்த்ததேயில்லை. அவர் பேச்சு, அதுவும் அவர் எடுத்துக் கொண்டிருக்கின்ற பொறுப்பு அவர் சொல்லுகின்ற செயல், தமிழர்களின் நெஞ்சை நிமிர வைத்திருக்கின்றது.

தாயின் பரிவோடும், ஒரு போர்வீரனின் ஆவேசத்தைப் போல நமக்கெல்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பெருந்தகை ஆறுபெறும் விழாக்களை இங்கே நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆறு விழாக்களைப் பற்றி எனக்கு முன்பு பேசிய நண்பர்கள் எல்லாம் சொன்னார்கள்.

கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர்

அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லுவார்கள். நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் என்று நம்முடைய ஆசிரியர் அவர்களும் நான் கண்டதும் கொண்டதும் பெரியார் பெரியார் என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெருந்தகை.

கொடிகட்டும் விழியோடும் போராடுவோம்

எறிகண்டு பாய்ந்தாலும்

இரு கை கொண்டேற்கும் ஆற்றல் வாய்ந்த தொண்டர்களைப் பெற்றிருக்கின்ற தலைவர் அவர்கள். காரல் மார்க்சைப் பற்றிச் சொல்லுவார்கள். காரல் மார்க்சுக்கு டாக்டர் பட்டம் தந்தார்களாம். நான் அந்தப் பட்டத்தை நீங்கள் சொல்லுவதால் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்தப் பெயருக்கு முன்பாக டாக்டர் பட்டத்தைப் போடக்கூடாது என்று சொன்னாராம் காரல் மார்க்ஸ். அப்படித்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.அழகப்பா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் தந்தது. அவர் நிபந்தனை விதித்தார்கள். நான் வேண்டுமானால் வாங்கிக்கொள்கிறேன். என்னுடைய பெயருக்கு முன்னால் அதைப் போடக் கூடாது என்று சொன்னார்.

இப்படிப்பட்ட பெருந்தகையை இந்தக் காலத்தில் நம்மால் எப்படிப் பார்க்க முடியும்.

வாழ்வியல் சிந்தனையைப் பாருங்கள்!

அவருடைய வாழ்வியல் சிந்தனை என்று ஒரு நூல் இருக்கிறது. இன்றைக்குக்கூட நாங்கள் மேடைக்கு வருகிறோம் என்று சொன்னால், பேசுகிறோம் என்று சொன்னால் அந்த வாழ்வியல் நூலில் கூறியுள்ள சிந்தனைகளைத்தான் படித்துவிட்டு வருவோம். நீங்கள் எல்லாம் அதைப் படிக்க வேண்டும். அந்த வாழ்வியல் சிந்தனை நூல்களில் உலகத்திலே இருக்கின்ற அத்துணை செய்திகளையும் திரட்டித் திரட்டி கிட்டத்தட்ட ஒரு பத்தாயிரம் புத்தகங்களைப் படித்தால்தான் அவ்வளவு செய்திகளை சேமித்துக் தரமுடியும்.

இப்படி அவர் எப்படி உழைக்க முடிகிறது என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது.

அறிஞர் அண்ணா, அன்புத் தலைவர் அண்ணன் கலைஞர் அவர்கள் எப்படி எல்லாம் பார்த்தார்களோ, அதை இவர்களிடத்திலே என்னால் பார்க்க முடிகிறது.

பெரியாருடன் இறுதிவரை இருந்தவர்

தந்தை பெரியாரோடு தொடக்க காலத்திலே இருந்தவர்கள் _ இறுதிவரை இருந்ததாகத் தெரியவில்லை. தந்தை பெரியாரோடு இறுதியில் இருந்தவர்கள் கடைசியில் இல்லை.

ஆனால் தந்தை பெரியார் அவர்களோடு தொடக்கத்திலேயிருந்து இறுதிவரை இருந்த ஒரே தலைவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள்தான். அவரைப் பற்றி பல செய்திகளைச் சொல்லலாம்.

நான் மனம் நெகிழ்ந்து போனேன். இந்தக் குறிப்புகளை எல்லாம் படித்துக் கொண்டிருந்தேன். அவருக்குத் திருமணம் நடைபெற்றது 7-.12.1958. அவர் எங்க ஊர் பக்கத்தைச் சார்ந்தவர். அவர் கடலூரில் இருக்கின்றார். திருச்சியில் இருந்து தந்தை பெரியார் தந்தி அனுப்புகின்றார். நீ உடனே புறப்பட்டு வா என்று.

நேராக வந்து தந்தை பெரியாரைப் பார்க்கின்றார். தந்தை பெரியார் சொல்லுகிறார். உனக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்று உங்கள் வீட்டாரிடம் கேட்க வேண்டுமே என்று தந்தை பெரியார் கேட்டாராம்.

இப்படிப்பட்ட ஒரு தலைவர் - தொண்டர்

நம்முடைய ஆசிரியர் சொன்னாராம். என்னுடைய தாயும், தந்தையும் நீங்கள்தானே. நீங்கள் யாரை சொல்லுகின்றீர்களோ, அவர்களைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொன்னாராம். இப்படிப்பட்ட ஒரு தலைவனை _ தொண்டனை உலகத்தில் நான் பார்த்ததே இல்லை.

நானே திருமணம் என்றால் என்னுடைய சொந்த விசயம் என்று சொல்லலாம், இந்தக் காலத்தில்கூட. அப்பொழுது 1958 லே ஆசிரியர் சொல்லுகின்றார். நானா? எனக்கா? எனக்குத் தாயும், தந்தையும் நீங்கள்தான்.

நீங்கள் யாரைச் சொல்லுகின்றீர்களோ, அவர்களைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று. எப்படிப்பட்ட மாற்றம். இப்படிப்பட்ட ஒரு தலைவனைப் பார்த்ததாக வரலாறே இல்லை.

அந்தத் தலைவர் மீது அவர் வைத்திருக்கின்ற பற்றை இன்றைக்கும் நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

கீவளூர் பொதுக்கூட்டத்தில்...

இங்கே நான் திரும்பிப் பார்க்கின்றேன். திகைத்து நிற்கின்றேன். 1950 என்று கருதுகின்றேன். இங்கே கீவளூர் என்று ஒரு ஊரில் பொதுக்கூட்டம்.

தந்தை பெரியார் அவர்கள் பேசுகிறார்கள். நாமாக இருந்தால் கூச்சப்படுவோம், அய்யோ நாமெல்லாம் தலைவராகி விட்டோமே என்று. இவர் தந்தை பெரியாருடைய நூல்களைத் தன் தோள்மீது வைத்துப் பொதுக்கூட்டத்தில் விற்றுக்கொண்டிருக்கின்றார். தந்தை பெரியார் பேசிக் கொண்டிருக்கின்றார்.

ஒரு கவர்னர் ஜெனரலைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவருடைய பெயர் மறந்துபோய் விட்டது.

அந்தப் பெயர் என்னப்பா? என்று திரும்பிப் பார்க்கிறார். நம்முடைய ஆசிரியர் புத்தகத்தை விற்றுக் கொண்டிருந்த அவர் அங்கிருந்து அந்தப் பெயரைச் சொன்னாராம்.

பெரியார் சொன்னாராம், நான் இப்பொழுதே உன்னை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று. அப்படியானால் எந்த அளவுக்கு இவருக்குத் தந்தை பெரியாரோடு நெருக்கம் இருந்திருக்கிறது. அந்தச் சிறுவயதில்கூட அவர் எவ்வளவு செய்திகளை சேர்த்து வைத்திருக்கிறார் என்பதை எல்லாம் நினைத்துப் பார்க்கிறபொழுது எனக்கெல்லாம் நெஞ்சம் துடித்துப் போகிறது.

கோவில் திருவிழாவில் தொலைந்துபோன நம்மை எல்லாம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றவர் நம்முடைய ஆசிரியர் பெருந்தகை அவர்கள்.

எங்களுடைய பள்ளி நாட்களில் எல்லாம் நாங்கள் எல்லாம் தீவிரப் பகுத்தறிவுவாதிகளாக இருந்தவர்கள். இப்பொழுது கொஞ்சம் மாறியிருக்கின்றோம்; அது வேறு. எனக்கு அதெல்லாம் தெரியவில்லை.

கல்லூரிக்கு கோவூரை அழைத்தோம்

பள்ளி நாட்களில் எல்லாம் எங்களைப் போன்ற ஒரு பகுத்தறிவுவாதியை உலகத்திலே பார்க்கவே முடியாது.

அந்தப் பாடல்களை எல்லாம் இங்கே சொன்னால் சரியாக இருக்காது என்று கருதுகின்றேன். அவை எல்லாம் எனக்கு மனப்பாடமான பாடல்கள். நான் கல்லூரி மாணவனாக இருந்தபொழுது டாக்டர் கோவூர் அவர்களை அழைத்துப் பேச வைத்தேன். நான் படித்த கல்லூரியில் டாக்டர் கோவூர் வந்தார். அப்பொழுது புட்டர்பர்த்தி சாய்பாபாவைப் பற்றி எங்கே பார்த்தாலும் பிரச்சாரம்.

அவர் லிங்கம் எடுக்கிறார்; அது எடுக்கிறார், இது எடுக்கிறார் என்று சொல்லியிருந்தார்கள். டாக்டர் கோவூர் அவர்கள் வந்தார்கள். நான்தான் அவரை அழைத்துச் சென்றேன். அவர் விபூதி வரவழைப்பது எப்படி என்று அறைக்குள் அழைத்து எனக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டார். கல்லூரி மேடைக்கு வந்தார். பேச ஆரம்பித்தார்.

இவர் யார் உங்களுக்குத் தெரிகிறதா என்று எல்லோர் முன்னிலையிலும் கேட்டார். இவர் எங்களுடைய கல்லூரி மாணவர் தலைவர் என்று எல்லோரும் சொன்னார்கள்.

உடனே சொன்னார். புட்டர்பர்த்தி சாமியார் மட்டும் விபூதி எடுப்பதாகச் சொல்கிறார்களே!

மாணவர்களுக்கு ஆச்சரியம்

இப்பொழுது உங்களுடைய மாணவரே விபூதி எடுப்பார் என்று சொன்னார். சரி, விபூதி எடு! என்று சொன்னார்.

நான் கையைத் தூக்கி கீழே போட்டேன். விபூதி அப்படியே கொட்டியது. எங்களுடைய மாணவர்களுக்கெல்லாம் ஆச்சரியம் என்ன புட்டர்பர்த்தி சாயிபாபா உனக்கும் சக்தி கொடுத்து விட்டாரா? என்று. இது மந்திரம் அல்ல; தந்திரம் என்று அன்று சொன்னார்.

------------------------------தொடரும்.
----------------------"விடுதலை"9-10-2009

0 comments: