Search This Blog

3.10.09

பொது இடங்களில் கோயில் கட்டத் தடை-பாராட்டுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா


பாராட்டுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா
பொது இடங்களில் கோயில் கட்டத் தடை-உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சாலைகளின் நடுவில், பொது இடங்களை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் மதவழிபாட்டுக் கோயில்கள் கட்டப்பட்டு இருப்பதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். இவ்வாறு பொது இடங்களை ஆக்கிரமித்து வழிபாட்டுக் கோயில்கள் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது. கோயில், தேவாலயம், குருத்துவாரம், மசூதி அல்லது அவை போன்ற மதவழிபாட்டுத் தலங்கள் எவற்றையும் சட்டத்திற்குப் புறம்பாக பொது இடங்களை ஆக்கிரமித்துக் கட்டக்கூடாது என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் இரு நீதி அரசர்கள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது.

சம்பந்தப்பட்டவர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப்படக்கூடும் என்று கருதும் அதிகாரிகளின் தயக்கத்தின் காரணமாக நீதிமன்றத்தின் ஆணையை நடைமுறைப்படுத்துவது அத்துணை எளிதான செயலாக இருக்காது. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக பொது இடங்களை ஆக்கிரமித்து கோயில்கள் கட்டுவதைத் தடை செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி மத்திய உள்துறைச் செயலாளர் கூட்டிய கூட்டத்தில் அனைத்து மாநில அரசுகளும் வியக்கத்தக்க வகையில் ஒருமித்த கருத்துடன் ஒப்புக்கொண்டுள்ளன. தற்போதுள்ள இத்தகைய பாதைக் கோயில்கள் விஷயத்தில் சில முரண்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது சரியானதே. பாதைகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், இதர பொது இடங்களிலும் கட்டப்பட்டிருந்த கோயில்களை, பலத்த எதிர்ப்புகளுக்குமிடையேயும் இடித்துத் தள்ளிய நகராட்சிகளின் செயலுக்கு, இந்துத்வ தீவிர ஆதரவாளர் என்று கருதப்படும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பக்க பலமாக இருந்தார் என்ற செய்தியே, இத்தகைய நடவடிக்கை எடுக்க முடிந்ததுதான் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

நாட்டின் சட்டங்களுடன் மோதல் ஏற்படுத்தாத வரை எந்த மதத்தையும் ஒருவர் சுதந்திரமாகப் பின்பற்றலாம் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ள மதச் சார்பற்ற ஒரு நாட்டிற்குத் தேவையான முக்கிய அம்சங்களில் ஒன்றை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எடுத்துக் காட்டியுள்ளது. அதன்படி, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திரம் என்பது, பொது ஒழுங்கு, அமைதி, ஒழுக்கம், சுகாதாரம் ஆகியவற்றிற்கு உட்பட்டதுதான் என்பது நன்கு விளங்குகிறது. அனுமதி பெறாமல், சட்டத்திற்குப் புறம்பாக, பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வண்ணம் பொது இடங்களில் கோயில்கள் கட்டுவது அனுமதிக்கப்பட முடியாது என்று கூறப்படுவது இந்தக் காரணத்தினால்தான்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் மத விழாக்கள், ஊர்வலங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் இதே போன்ற நியாயத்தைக் கூற முடியும். மதவிழாக்கள், பிரார்த்தனைகளின் போது பெருத்த ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். எந்த வகையிலும் சம்மந்தமே இல்லாத பொதுமக்களின் அமைதியைக் குலைக்கும் வகையில் ஒரு மத விழா கொண்டாடப்படுவதை அனுமதிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. மத விழாக்களும், கொண்டாட்டங்களும் இந்திய கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இருப்பவை. அனைத்து வகையான மத நம்பிக்கைகளையும் பொதுமக்கள் அறியும் வண்ணம் வெளிப்படுத்துவதைப் பொறுத்துக் கொண்டு ஊக்கம் தருவதாக நமது மதச்சார்பற்ற தன்மை இருக்கலாம். ஆனால் அத்தகைய விழாக்கள் நாட்டின் சட்டங்களை மனதில் கொண்டவையாக இருக்க வேண்டும். தீபாவளி பண்டிகை வர இன்னும் சில நாள்கள்தான் உள்ளன. முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாகவும், பலத்த சத்தத்தை ஏற்படுத்தி, பெருமளவில் காற்றை மாசுபடுத்துவதாகவும் இருக்கும் தீபாவளி பட்டாசு வெடிப்புக்கு நாம் பழக்கமாகிப் போயிருக்கிறோம். ஆனால், மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மத விழாக்களைக் கொண்டாடுவதன் மூலமும், பொது இடங்களில் அனுமதி இன்றி கோயில் கட்டுவதன்மூலமும் நாட்டின் சட்டங்களை வேண்டுமென்றே வெளிப்படையாக காற்றில் பறக்க விடுவதற்கான காரணம் எதுவும் இல்லை, இருக்க முடியாது.

---------------------நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்கம், 1.10.2009

2 comments:

கிரி said...

நல்ல முடிவு, செயல்படுத்தினால் நலம்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிரி