Search This Blog

4.10.09

ஜாதி என்ற சொல் இருப்பதே அவமானமல்லவா?


முதலமைச்சரின் ஆரூர் பிரகடனம்!

பிராமணன், சூத்திரன், சத்திரியன் என்றெல்லாம் பேசப்படுகிற ஜாதி வேறுபாடுகள், ஜாதி வித்தியாசங்கள் இந்தச் சமூகநீதிக்கு எதிரான கொள்கைகள் நாட்டில் நடமாடுகின்ற வரையில், திராவிட இயக்கத்திற்கு, குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற இந்த அரசியல் இயக்கத்திற்கு வேலை இருக்கிறது. இதைத்தான் அண்ணா சொன்னார். இன்னும் 50 ஆண்டுகாலத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பணி இருக்கிறது என்று சொன்னார்.

50 ஆண்டு காலம் அல்ல; 100 ஆண்டுகாலம் ஆனாலும் திராவிட இயக்கத்தினுடைய கொள்கைகள் சமத்துவம் ஓங்கவும், சமதர்மம் வாழவும், சமத்துவப்புரங்களாக ஒவ்வொரு கிராமத்து வீதிகளும், குடிசையில் வாழும் மக்களும், அதிலே வாழுகின்ற நிலையும் ஏற்பட்டால், இந்தியாவே சமத்துவப்புரமாக ஆவது என்றைக்கு என்ற அந்தக் கணக்கு பிறகு இருக்கட்டும்; முதலில் தமிழ்நாட்டைச் சமத்துவபுரமாக ஆக்குவோம்; அதுவரை நமக்கு ஓய்வில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் திருவாரூர் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை-யின் ஒரு பகுதிதான் மேலே எடுத்துக்காட்டப்பட்டு இருப்பது (30.9.2009).

திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் அரசியல் கட்சியல்ல _ சமுதாயக் கொள்கை உடைய அரசியல் கட்சிதான் இதற்குள்ள தனித்தன்மை என்று பல நேரங்களிலும் தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் சொல்வதுண்டு.

அதனை மிக முக்கியமானதோர் காலகட்டத்தில் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள், தமது சொந்த ஊரில் ஆணி அடித்ததுபோல உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதுதான் இதில் உள்ள தனிச்சிறப்பாகும்.

உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் வேறுபாடுகள், ஏற்ற தாழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அந்த வேறுபாடுகள் வேறு; இந்தியாவில் இந்து மதத்தில் இருக்கும் வருண வேறுபாடு என்பது பிறப்பின் அடிப்படையிலானதாகும். அதனை மாற்றவே முடியாது என்பதுதான் இந்து மதத்தின் உறுதியான நிலைப்பாடாகும்.

உலகத்தில் உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும் தீண்டாதவர்களிடையே நிலவும் தீண்டாமை என்பதை நீக்கவே முடியாது எவ்வளவு அணிமணிகளைப் பூட்டினாலும் பிறப்போடு பிறந்த அந்தத் தீண்டாமை அழுக்கை அகற்றவே முடியாது என்று சிருங்கேரி சங்கராச்சாரியார் சொல்லவில்லையா? இரத்தத்தில் நான்கு பிரிவுகள் இருப்பதுபோலவே வருணதர்மத்திலும் நான்கு பிரிவுகள் உண்டு என்று பூரி சங்கராச்சாரியார் பேட்டியே கொடுத்தாரே!

இன்றைக்கும் அவர்கள் இந்தியாவின் நான்கு திசைகளிலும் மடம் வைத்துப் பிரச்சாரம் செய்துகொண்டுதானே இருக்கிறார்கள். அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

இன்னும் சில கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடு பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட முடியாது என்ற நிலை இருந்ததே. கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகுதானே கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் போன்ற ஊராட்சிகளில் தேர்தல் நடத்தப்பட முடிகிறது.

ஜாதியைக் கடந்து திருமண உறவுகள் என்பது எண்ணி மகிழ்கின்ற அளவுக்கு இன்னும் பெரிய எண்ணிக்கையில் நடக்கவில்லையே!

வெகுதூரம் போக வேண்டாம் _ தந்தை பெரியார் அவர்களைப்பற்றி ஒரு பக்கம் புகழ்ந்துகொண்டே இன்னும் ஜாதி அடிப்படையிலே உறை போட்டு மூடி கட்சிகளை நடத்திக்கொண்டிருக்கவில்லையா? தேர்தல்களில் வாக்குகளைச் சேகரிக்கவில்லையா?

21 ஆம் நூற்றாண்டிலும் ஜாதி என்ற சொல் இருப்பதேகூட அவமானகரமானதல்லவா?

தன்மான இயக்கம் பிறந்ததே ஜாதியை ஒழிக்கத்தானே _ திராவிட இயக்கத்தின் முக்கிய குறிக்கோளும் அதுதானே!

மானமிகு கலைஞர் அவர்கள் வெறும் வாய்ப் பேச்சால் அல்ல; செயலால் தம் வீட்டிலேயே ஜாதி மறுப்புத் திருமணங்களை அரங்கேற்றிவிட்டுத்தானே ஜாதியற்ற சமத்துவபுரங்களை அமைக்கவேண்டும் என்று கூறுகிறார்.

இதை ஏதோ கலைஞர் அவர்கள் இப்பொழுதுதான் கூறுகிறார் என்று கூற முடியாது. காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. முருகேசன் அவர்களின் மகன் இரகுநாதன் _ சுகந்தி திருமணத்தை நடத்தி வைத்து இதுகுறித்து விளக்கமான கருத்தினை எடுத்து வைத்ததுண்டே! (1999).

திராவிட இயக்கத்தினுடைய வேர் அடிப்படைக் கொள்கை என்னவென்றால், சமுதாயச் சீர்திருத்தக் கொள்கை சமுதாயத்தில் பகுத்தறிவு மணம் கமழவேண்டும் என்பதற்காக நம் நெஞ்சிலே பதிய வைத்துக்கொண்டிருக்கிற கொள்கைதான் திராவிட இயக்கத்தின் சமுதாயக் கொள்கையாகும்.

சமுதாயக் கொள்கையை திராவிட இயக்கத்தின் சார்பில் பெரியார் அவர்களும், அண்ணா அவர்களும் எடுத்துரைத்தபோது தமிழகத்திலே வேறு சில கட்சிக்காரர்கள் சமுதாயக் கொள்கைக்கு இப்பொழுது என்ன வந்துவிட்டது? அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் பொருளாதாரக் கொள்கைதான் முக்கியம் என்றெல்லாம் பேசியதுண்டு.

அப்பொழுது பெரியாரும், அண்ணாவும் அவர்களுக்கு அளித்த விளக்கம்என்னதான் பொருளாதாரத்திலே உயர்ந்தாலும் அரசியலிலே அதிகாரங்களைப் பெற்றாலுங்கூட சமுதாயத்திலே அவர்களுக்கு ஏற்படக் கூடிய கவுரவம் அவர்களுக்கு வழங்கிடக்கூடிய உரிமை, அவர்கள் பெறவேண்டிய மதிப்பு, மரியாதை இவைதான் முக்கியம். சமுதாய அந்தஸ்து இல்லாமல் என்னதான் பொருளாதாரத்திலே உயர்ந்தாலும், அது தனி ஒருவனுடைய மதிப்பாக இருக்-குமேயல்லாமல், மொத்த சமுதாயத்தின் உயர்வாக இருக்க இயலாது என்று இன்றைக்கு பத்தாண்டுகளுக்குமுன் தெரிவித்த அதே கருத்தைத்தான் தம் பிறந்த ஆரூரிலே கலைஞர் அவர்கள் கூறியுள்ளார்.

இவ்வுரையை வரவேற்கிறோம். உண்மையான திராவிட இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இதில் கவனத்தைக் கொள்ளச் செய்யவேண்டும்; பாசறைகள் கூட்டிப் பயிற்றுவிக்கவேண்டும் இக்காலகட்டத்திற்கு இதுவே ஆம் இதுவே முக்கியமானதாகும்.

-------------------"விடுதலை" தலையங்கம் 3-10-2009

0 comments: