Search This Blog

5.10.09

மார்க்சிஸ்ட்களுக்குப் போதிய பக்குவம் இல்லையா?


பாறாங்கல்லைத் தூக்கிப் போடாதீர்!

கருநாடக மாநிலத்தில் தலைமை நீதிபதியாக இருக்கக் கூடிய நீதியரசர் பி.டி தினகரன் அவர்களின் உச்சநீதிமன்ற நீதிபதி பதவி நியமனம் தொடர்பான செய்தி வெளிவந்ததும் வராததுமாக பார்ப்பன ஏடுகள் வரிந்து கட்டிக் கொண்டு அவர்மீது சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்தன. இந்து ஏடு அதற்கான மய்யப் புள்ளியாக இருந்து இந்தக் கைங்கரியத்தைச் செய்தது. சமூகநீதிக் கண்ணோட்டத்தில் திராவிடர் கழகம் வழக்கம்போல் இந்தக் களத்தில் இறங்கியது. செய்தியாளர்களைச் சந்தித்து திராவிடர் கழகத் தலைவர் இதன் பின்னணியில் உள்ள சதிகளையெல்லாம் அம்பலப்படுத்தினார்.

பார்ப்பனர் அல்லாதார் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர் பதவிகளுக்கு வரும் போதெல்லாம் இந்த உயர் ஜாதி ஆதிக்கச் சக்திகள் கங்கணம் கட்டிக் கொண்டு தங்களிடம் வசதியாக உள்ள ஊடகங்களைப் பயன்படுத்திக் கொண்டு புழுதி வாரித் தூற்றுவதுபற்றி "விடுதலை" தலையங்கமும் தீட்டியது.

தீக்கதிருக்கு என்ன வந்தது? அதற்கு ஏன் தேள் கொட்டியது? பி.டி. தினகரன் தாழ்த்தப்பட்டவர்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டார். அப்படியிருக்கும்போது அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் "விடுதலை" அவருக்கு வக்காலத்து வாங்க வேண்டுமா என்று கேள்வியைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக திரு கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் வந்தபோதும் இதேபோல அக்கப்போர்களைக் கிளப்பினார்கள். இது உயர்ஜாதியினரின் சாணக்கியத்தனம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சிஸ்ட்களுக்குப் போதிய பக்குவம் இல்லையா? தேவையான அக்கறை இல்லையா? என்ற கேள்விதான் எழுந்து நிற்கிறது.

பி.டி. தினகரன் உச்சநீதிமன்ற நீதிபதி என்ற பிரச்சினை வந்த மாத்திரத்தில் மட்டும் அவர்மீது இத்தகைய குற்றச்சாற்றுகள் வீசி எறியப்படுவது ஏன்? கருநாடக மாநிலத்தின் தலைமை நீதிபதியாக போனபோது தீக்கதிருக்கு இந்தக் குற்றச்சாற்றுகள் கிடைக்கவில்லையா?

நீதித்துறையில் இடஒதுக்கீடு, சமூகநீதி என்பது இல்லை என்பது மார்க்சிஸ்ட்களுக்குத் தெரியாதா? தப்பித்தவறி எப்பொழுதாவது பி.டி. தினகரன் போன்றவர்கள். அந்தக் கர்ப்பக்கிரகத்தில் காலடி எடுத்து வைத்தாலே அதையும் தட்டிப் பறிக்க செங்கொடி தூக்குவதுதான் அவர்கள் கற்றுக் கொண்டிருக்கிற அல்லது பயிற்சி அளிக்கப்பட்டிருக்கின்ற முறையா?

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கொண்டு வரப்பட வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்களிடத்தில் இந்தச் சமூகநீதி எல்லாம் எடுபடுமா?

எந்த "விடுதலை" தலையங்கத்தை (செப்டம்பர் 22) எடுத்துக்காட்டி தீக்கதிர் எதிர்த்துக் கட்டுரை தீட்டியுள்ளதோ (26.9.2009) அந்தத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த பல முக்கிய தகவல்களின் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் ஒதுங்கிக் கொண்ட சாமர்த்தியம்தான் என்னே!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.கே. சபர்வால் பற்றி குற்றச்சாற்று எழுந்ததே. தன் மகன்களுக்காக தீர்ப்பைத் தவறாகக் கூறினார் என்றும், அந்தக் குற்றச்சாற்றில் பசை இருக்கிறது என்றும் நீதித்துறை வல்லுநர்கள் மட்டுமல்லர்; நடுவண் அரசின் கண்காணிப்பு ஆணையமும் கூறியது என்று "விடுதலை" எழுதியுள்ளதே அந்த சபர்வால் மீது குற்றச்சாற்று எழுந்தபோது செங்கொடியினர் களத்தில் இறங்கிப் போராடியதுண்டா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவிருந்த இராமச்சந்திர அய்யர் தம் வயதைத் திருத்தி பதவியை நீட்டித்துக் கொண்டபோது தந்தை பெரியாரும், "விடுதலை"யும் உரக்கக் குரல் கொடுத்தபோது இவர்கள் எங்கே போயிருந்தார்கள்?

சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கு மூன்று பேர்களாக இருக்க கூடியவர்கள் கூடாரம் அடித்துக் கொண்டிருந்தபோது ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவை என்று திராவிடர் கழகம் கொடியேற்றிப் போர்க் குரல் கொடுத்தபோது இந்தத் தீக்கதிர்கள் வனவாசம் சென்றிருந்தனவா?

நான் சங்கராச்சாரியார் பக்தன் அதன் காரணமாக அவர்மீதான கொலைக் குற்றத்தை நான் விசாரிக்க மாட்டேன் என்று உச்சநீதிமன்ற நீதிபதி வெளிப்படையாகவே கூறியபோது தீக்கதிரின் பேனா முனை வேலை நிறுத்தம் செய்துவிட்டதா?

ஜாதிய வேர், ஆழப்படிந்து கிடக்கும் ஒரு சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகாலமாகப் புறக்கணிக்கப்பட்ட மக்கள் சமூகத்திலிருந்து தப்பித் தவறி யாராவது ஒருவர் தலை எடுத்து மேலே எழுந்தால் அவர்கள் தலைமீது பாறாங்கல்லைத் தூக்கிப் போடும் வேலையில் இறங்குவது மார்க்சியம் பேசுவோர்க்கு அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

----------------" விடுதலை" தலையங்கம் 5-10-2009


0 comments: