Search This Blog

22.10.09

இப்படியும் கோயில் வழிபாடு, திருவிழா


நாகரிகமா?

கருநாடக மாநிலம் குடகு மாவட்டம் கோனி கொப்பா அருகே தேவபுரா என்னும் கிராமம்; அய்யப்பா பத்ரகாளி என்னும் கோயில் இருக்கிறது. மே மாதத்தில் இரண்டு நாள்கள் விழா நடைபெறுகிறது.

குடகு மாவட்டத்தில் சித்தாபுரா, மார்தாரி, கோனி கொப்பா, வீராஜ் பேட்டை, பொன்னம்பேட்டை, பாலிபெட்டா, தித்திமத்தி போன்ற இடங்களிலிருந்து ஆண், பெண் பக்தர்கள் திரண்டு வருவார்களாம்.

இங்கு ஆயுதப் பூஜை கொண்டாடுவதுபோல, வீட்டில் பயன்படுத்தும் கருவிகளையெல்லாம் வைத்துப் படைப்பார்களாம்.

ஆண்கள், பெண்கள் வேடம் தரித்து வண்ணப் பொடிகளைப் பூசிக்கொண்டு ஊர்வலமாக வருவார்களாம்.

ஊர்வலமாகச் செல்லும்போது நடக்கும் சமாச்சாரம்தான் முக்கியமானது. கடைகளுக்கும், வீடுகளுக்கும் சென்று கொச்சைத்தனமான, கெட்ட வார்த்தைகளை அசிங்க அசிங்கமாகப் பேசி நன்கொடை கேட்பார்களாம். செலவு போக மீதிப் பணத்தை கோயில் உண்டியலில் போடுவார்களாம்.

இப்படியும் கோயில் வழிபாடு, திருவிழா, பக்தி அநாகரிகங்கள் இந்த அர்த்தமுள்ள இந்துமதத்தில்.

இங்கு சேலம் அன்னதானப் பட்டியில் துடைப்ப அடி வழிபாடு நடக்கவில்லையா?

பீடி சாமியார், சுருட்டு சாமியார், எச்சில் சாமியார், பீர் சாமியார், கெட்ட வார்த்தை பேசும் சாமியார் என்று ரகரகமாக அர்த்தமுள்ள இந்து மதத்தில் புழுத்துக் காணப்படவில்லையா?

இந்தக் கேடு கெட்ட அநாகரிகமான சாமியார்களைத் தேடி பக்தர்கள் செல்வதில்லையா? காணிக்கைகளைக் கொடுப்பதில்லையா?

அதில் ஒரு ரகம்தான் இந்தக் கருநாடகத் திருவிழாவும்.

அறிவுக்கு விரோதம்

ஒழுக்கத்துக்கு விரோதம்

நாகரிகத்துக்கு விரோதம்

பொருளாதாரக் கேடு

காலக்கேடு

மனித உழைப்பு நாசம்

ஒட்டுமொத்தமாக ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், மனிதத் தன்மைக்கே விரோதமான காட்டுமிராண்டித்தனமான பக்தியை இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் அனுமதிக்கலாமா?

இதுகுறித்துப் பேசினால் மத விஷயத்தில் தலையீடு. மனம் புண்படுகிறது என்று ஓலமிடுவது எவ்வளவு கேவலம்?

நிர்வாண சாமியார்களின் கால்களை தம் தலையில் வைத்து ஒற்றிக்கொள்ளும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வாழும் நாட்டில், பாமரர்களைக் குற்றம் சொல்லி என்ன பயன்?

------------ மயிலாடன் அவர்கள் 22-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: