Search This Blog

3.9.09

சென்னை கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஜாதி ஒழிப்பு மாநாடு


கையிருப்பைக் காட்டுவோம்- வாரீர்!

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பெயரால் அமைந்த சட்டக் கல்லூரியில் ஜாதி மோதலா?
மனுதர்ம _ வருணாசிரம தர்மத்தை எதிர்த்து ஏற்றத் தாழ்வற்ற இன்ப உலகைக் காட்டும் புத்த மார்க்கத்தைத் தழுவிய அண்ணல் அம்பேத்கர் பெயரால் அமைந்த கல்லூரியிலா ஜாதிக் கலவரம்? அதுவும் தம் வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிப்புச் சமர்க்களத்தில் சண்ட மாருதம் செய்த சரித்திர நாயகர் தந்தை பெரியாரின் தத்துவ வயலிலா இந்த ஜாதிக் களைகள்?

வெட்கம்! மகாவெட்கம்!

வேதனைப்பட்டார் தமிழர் தலைவர்.

ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி பெறவேண்டும் _ உயர்ந்த ஜாதி என்று தம்பட்டம் அடித்தவர்களின் தலைக்குமேலே நம் மக்கள் உயரமாக நிற்கவேண்டும் என்பதுதானே தந்தை பெரியார் கண்ட திராவிடர் கழகத்தின் தாகம்!

சென்னை கல்லூரி மாணவர்களைக் கூட்டவேண்டும், ஜாதி என்னும் தோலை உரித்துக் காட்டவேண்டும் புத்துணர்வை ஊட்டவேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
பலமுறை கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தும் தொடர் மழையின் காரணமாக அந்தக் காலகட்டத்திலேயே அது நிறைவேறாமல் போனாலும், அந்த எண்ணம் கைவிடப்படவில்லை. அதனுடைய வடிவம்தான் நாளை மறுநாள் (4.9.2009) மாலை சென்னை புதுவண்ணையில் வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மாணவரணியினர் நடத்தவிருக்கும் ஜாதி ஒழிப்பு மாநாடு.

அதே வண்ணையில்தான் தந்தை பெரியார் போர் முழக்கம் செய்தார் (14.10.1957).
உலகெங்கும் இல்லா ஜாதியை உயிர்த் தியாகம் செய்தேனும் அழிப்போம்! என்று சங்கநாதம் செய்தார்.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை என்கிறானே, அது பித்தலாட்டம். பார்ப்பனருக்கும், திராவிட மக்களுக்கும் நடந்த சண்டையைத்தான் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை என்கிறான். இந்த ஜாதி ஏற்பாட்டை எதிர்த்தவர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். அப்படிக் கொன்று பார்ப்பனர்களைக் காப்பாற்றியவர்கள்தான் அவதாரங்கள் என்பவை என்று இதே வண்ணையில்தான் வைக்கம் வீரர் எடுத்துரைத்தார்.


அதே வண்ணையிலே அவரின் வழிவந்த தலைவரின் வழிகாட்டுதலில் நமது கழகக் கண்மணியினர், மாணவரணியினர் ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறார்கள். துடிப்பு மிக்க மாணவர் பட்டாளம் தூக்கத்தைத் தூர வைத்துவிட்டு தும்பிகளாகப் பணியாற்றுகின்றது.
எல்லாப் பொறுப்புகளும் அவர்களிடத்தில்தான்! நிதி வசூலிலிருந்து, விளம்பரப் பணிகள் உள்ளிட்ட அத்தனைப் பணிகளையும் அவர்களே போட்டி போட்டுக்கொண்டு செய்கின்றனர்.
வாழையடி வாழையாக இயக்கத்திற்கு வளமான பணிக்குத் தோழர்கள் வேண்டாமா? அதற்கான பயிற்சிக் களமாகக்கூட இதனைக் கருதலாம்.

தமிழர் தலைவர் வைத்த தேர்வில் நமது கருஞ்சட்டை மாணவர்கள் மிகப்பெரிய மதிப்பெண்களைப் பெறுவார்கள் என்று நம்பலாம்.

அண்மைக்காலத்தில் அனைத்துக் கல்லூரிகள் மற்றும் விடுதிகளிலிருந்து மாணவத் தோழர்கள் கழகத்தை நோக்கிப் பயணம் செய்கின்றனர். அய்யாவின் கருத்துகளில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்; அம்பேத்கர் கல்லூரியில் நடைபெற்ற சம்பவத்திற்காக வெட்கித் தலைகுனிகிறார்கள். அந்த நோய்க்கு மாமருந்து _ தந்தை பெரியாரின் பகுத்தறிவு மூலிகைத் தோட்டம்தான் என்ற உணர்வு மாணவர்கள் மத்தியிலே தலைதூக்கி நிற்கிறது.

அந்த உணர்வின் உச்சகட்டம்தான் வட சென்னை ஜாதி ஒழிப்பு மாநாடு.
சென்னையில் உள்ள அத்தனைக் கல்லூரிகளிலிருந்தும், விடுதிகளிலிருந்தும் மாணவர் பட்டாளம் படையெடுத்து வருகிறது. பாழ் செய்யும் ஜாதிப் பகைக்குப் பாடை கட்ட மாணவத் தோள்கள் துடித்துக் கொண்டு நிற்கின்றன.

புரட்சிகரமான தீர்மானங்களை வடிப்போம் வாருங்கள்!
புரட்டுகளை நொறுக்குவோம், வாருங்கள்!
புரட்சி சமூகம் படைப்போம், கூடுங்கள்!

அன்று நம் திராவிட முன்னோன் இரணிய கசிபு சொன்னான்:

வாருங்கள் தானவர்களே! தயித்தியர்களே! நீங்கள் பிராமண க்ஷத்திரியர்களாலே விருத்தியடையாமல் நின் பூமியை யடைந்து தபசு எக்கியம் விரதம் அக்கினி சம்மாரம் பண்ணுங்கள் எந்தெந்த தேசத்திலே பிராமணர்கள் வேதங்கள் வர்ணாசிரம தர்மங்கள் இவை யாவும் உண்டாயிருக்கின்றனவோ, அந்தந்த தேசத்தைப் போய்க் கொளுத்துங்கள்!
(பாகவதம் வேணுகோபாலாச்சாரி மொழி பெயர்ப்பு, பக்கம் 572, _ 1955 ஆம் ஆண்டுப் பதிப்பு)


ஜாதி ஒழிப்புக்கு, வருணாசிரமத் தகர்ப்புக்கு நமது திராவிட மாவீரன் சொன்ன மார்க்கம்தான் அது. அந்த மாவீரன் மகனான பிரகலாதனையே துரோகியாக்கி விபீடணனாக்கி கருணாவாக்கி கோழைகள் சூழ்ச்சியால் கொன்றனர்.

ஆனாலும், அவன் சொன்ன மருந்து இருக்கவே செய்கிறது.

சம்பூகனை அழித்தவர்கள் ஏகலைவனைப் பழிவாங்கியவர்கள், சூரபத்மனைக் கொன்றவர்கள், இராவணனை வீழ்த்தியவர்கள், வெண்தாடி வேந்தர் தந்தை பெரியாரின் காலடியிலே வீழ்ந்தார்கள்.

காரணம், வீரம் மட்டுமல்ல, விவேகமும் கலந்திருந்தது தந்தை பெரியார் அவர்களின் போர் முறையில்!

அந்தப் பே()ராயுதம் நம்மிடம் இருக்கிறது. புறப்படுவோம் வாருங்கள்.
மாநாட்டில் தமிழர் தலைவர் தரும் வழிமுறையை ஏற்போம், கூடுங்கள்!
அவர் கொட்டும் போர் முரசை செவி மடுப்போம் வந்து சேருங்கள்!
மானமிகு மாண்புமிகு மத்திய அமைச்சர் ஆ. இராசாவின் அறிவு முழக்கம் _ கேட்போம் வாருங்கள்! வாருங்கள்!

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மாணவர் அணியின் கைத்திறனின் எழுச்சியைக் காணுங்கள்! காணுங்கள்!!

----------------- மின்சாரம் அவர்கள் 2-9-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: