Search This Blog

2.9.09

ஓணம் பண்டிகையும் - பார்ப்பனர்களின் சூழ்ச்சியும்


ஓணம்

இன்று ஓணம் பண்டிகை _ குறிப்பாக கேரள மாநிலத்தில் இது விசேஷம்.
எதற்கெடுத்தாலும் ஒரு புராணக் கதை தயாராக இருக்குமே. இதற்கு மட்டும் இல்லாமலா போகும்.

மாவலி என்னும் சக்ரவர்த்தி மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். அவன் இரணியகசிபு வழி வந்தவனாம். (இப்பொழுது புரிந்திருக்குமே அசுரக் குலத்தைச் சேர்ந்தவன் அவன் என்று).

மக்களுக்கு நல்லாட்சி புரிந்து வந்தான்; கேட்டவர்களுக்கெல்லாம் வாரி, வாரி வழங்கினான்.
பொறுக்குமா சுரர்களுக்கு? (பூதேவர்களாகிய பார்ப்பனர்களுக்கு) வழக்கம் போன்ற அவதாரக் கதைதான் இங்கும்.

பூதேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டார்களாம் (இந்து மதக் கடவுள்களில் அவதாரம் எடுக்கக் கூடியவர் இவர்தான்) மக்களுக்கு நன்மைகள் செய்வதால் மாவலிக்கு ஆணவம். அவனை ஒழிக்கவேண்டும் என்று முறையிட்டார்களாம்.

பூதேவர்கள் சொல்லி விட்டால் அதற்கு அட்டி ஏது? (பிரம்மா பூலோகத்தைப் படைத்ததே பிராமணர்களுக்குத்தான் என்பதுதானே மனுதர்மம்?)

உடனே விஷ்ணு வாமன (அதுவும் குள்ளப் பார்ப்பான்_ சூழ்ச்சி வரும்போது அந்த அவதாரம்தானே!) அவதாரம் எடுத்தானாம். அடுத்த கட்டம்... கேட்டவர்களுக்கெல்லாம் இல்லை எனாது கொடுக்கும் மாவலியிடம் குள்ளப் பார்ப்பானாகிய விஷ்ணு சென்று யாக சாலைக்கு மூன்றடி மண் கேட்டானாம். கொடுத்தேன் போ! என்றானாம் மாவலி.

ஒரு அடியை மண்ணில் வைத்து, இன்னொரு அடியை ஆகாயத்தில் வைத்து, மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று கேட்டானாம் குள்ளப் பார்ப்பான். உடனே மாவலி தன் தலையைக் காட்டினானாம் (அதுதானே அவாள் எதிர்பார்த்தது) தலையில் கால் வைத்து மிதித்துக் கொன்று விட்டானாம்.

மாவலி மறைந்த நாளில் வீட்டில் கோலம் போட்டு பக்தர்கள் வரவேற்பார்களாம். அன்று எல்லோர் வீட்டிலும் அவர் வருவார் என்பது அய்தீகமாம் (கிட்டத்தட்ட தீபாவளி கதைபோல் இருக்கிறது அல்லவா!)

யாரை அழித்தார்களோ, அந்த அழிவுக்கு ஆளானவரின் இனத்தைச் சேர்ந்த மக்களையே கொண்டாட வைப்பதுதான் பார்ப்பனர்களின் சூழ்ச்சி.

தீமைகள் செய்தான் அதனால் நரகாசுரனை அழித்தார்களாம்; இராவணனை அவதாரம் எடுத்து கொன்றார்களாம். அப்படியானால் நல்லது செய்த மாவலியை ஏன் அழித்தார்களாம்? நல்லது செய்த அசுரனுக்கு நல்ல பெயர் வரலாமா?


மக்களுக்கு அன்றாடம் நன்மை செய்துவரும் கலைஞர் ஆட்சியை அழிக்க பார்ப்பனர்கள், அவர்களின் ஊடகங்கள் செய்துவரும் போக்கினை இதோடு முடிச்சுப் போட்டுப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

-------------- மயிலாடன் அவர்கள் 2-9-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: