Search This Blog

1.9.09

ஈழப் பிரச்சினையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானவையல்ல!


வரிப்புலியாய்
வாருங்கள்! வாருங்கள்!!


தோழர்களே, தோழர்களே!

பல்வேறு நாடுகளின் இராணுவப் பலத்தோடு ராஜபக்சே தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசு பல லட்சம் தமிழர்களை ஈழத்தில் கொன்று குவித்துவிட்டது; போராளிகளையும் அழித்துவிட்டது. ஆனாலும் அதன் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை போலும்.

மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலி முகாமுக்குள் முடக்கி, ஒவ்வொரு நொடியும் அவர்கள் படும் துயரத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே.
அந்நாட்டுத் தலைமை நீதிபதியே இது அக்கிரமம், அக்கிரமம், அநியாயம் என்று ஆர்ப்பரித்திருக்கிறார்.


காலந்தாழ்ந்தாலும் அய்.நா.வும் எச்சரித்துள்ளது; மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்துக் கொண்டுள்ளன. அமெரிக்காவும் இங்கிலாந்தும் எடுத்துக் கூறி வருகின்றன. எதற்கும் அசைந்து கொடுக்காமல் இருக்கிறார் இந்த ராஜபக்சே. எண்ணூறு இடி அமீன்களாகவும், எண்ணாயிரம் இட்லர்களாகவும் காட்சி அளிக்கிறார்.
போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்ற குரலும் அழுத்தமாக ஆங்காங்கே கிளம்ப ஆரம்பித்துவிட்டன.

இதற்கிடையே இங்கிலாந்து தொலைக் காட்சி ஒன்று (சானல்_4) ஈழத்தில் எத்தகைய காட்டு விலங்காண்டித்தனமாக போராளிகளும், தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டனர் என்கிற காட்சிகளைத் திரையிட்டு உலகம் பூராவும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகாமில் முடங்கிக் கிடக்கும் மூன்று லட்சம் தமிழர்களுக்கு வெளிநாடுகள் அளிக்கும் பொருள்களைக் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்திட மனம் வரவில்லை அந்த மயான மனிதருக்கு.
இதற்குமேல் துயரப்படுவதற்கு ஏதும் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் நமது தொப்புள் கொடி உறவினர்.

இந்த நிலையில்தான் - நம்முடைய முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு வேண்டு கோள் விடுத்தார். இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானவையல்ல என்று மனந்திறந்து கூறியிருக்கிறார்.
முதல்வரின் ஆதங்கத்தை மத்திய அரசு புரிந்து கொள்ளுமா? செயல்படுமா?

தமிழர்களே, தமிழர்களே, தாய் நாட்டுத் தமிழர்களே! நாம் இந்தக் கால கட்டத்தில் கண்களை இறுக்கி மூடிக் கொண்டு கண்டும் காணாமல் இருப்பதை விட துரோகம் வேறு ஒன்று இருக்க முடியுமா?

நம் ரத்தத்தின் ரத்தங்களுக்காக நாம் குரல் கொடுக்காவிட்டால், வீதியில் இறங்கிப் போராடா விட்டால், வேறு யார் அவர்களுக்கு? இதனைச் செய்யாவிட்டால் நாம்தான் யார்?
தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கல்லக்குறிச்சி பொதுக் கூட்டத்தில் (29.8.2009) அறிவித்துவிட்டார் நேற்று (30.8.2009) விடுதலையிலும் அறிக்கை கொடுத்துவிட்டார்.

திரளுங்கள்! திரளுங்கள்! செப்டம்பர் 2 ஆம் தேதி கழகம் அறிவித்துள்ள ரயில் மறியலில் ஆயிரக்கணக்கில் ஈடுபடுங்கள்! ஈடுபடுங்கள்!

எத்தனை எத்தனையோ போராட்டங்களை, எழுச்சிப் பேரணிகளை, மாநாடுகளை, ஈழத் தமிழர்களுக்காக நடத்திய வீரஞ்செறிந்த தன்மான வரலாறு திராவிடர் கழகத்திற்கு உண்டு.
சென்ற ஆண்டு செப்டம்பர் 23 இல் இதே ரயில் மறியலில் ஈடுபட்டோம். இந்த செப்டம்பரிலும் அந்தச் செயலையே செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

புறப்படுங்கள் புறப்படுங்கள்!
புலிப்போத்தாய் புறப்படுங்கள்!
இளைஞர்களே, இளைஞர்களே
எரியீட்டியாய் கிளம்புங்கள்!
எங்கிருந்து வந்தது இந்தச் சேனை என்று
எதிரிகளே கலங்கும் வகையில்
கருஞ்சட்டைச் சிறுத்தைகளே
கிளர்ந்து எழுங்கள்! எழுங்கள்!

செப்டம்பர் 2 ஆம் தேதி ஒன்பது மணிக்கெல்லாம் சென்னை பெரியார் திடலில் கூடுங்கள், கூடுங்கள்!

தமழர் தலைவர் தலைமையில் அணி வகுப்போம்! அணிவகுப்போம்!

அனுமதி கிடைக்காது. தடை உத்தரவு போடப்படும். ஆனாலும் நமது கடமையை முடிக்க களம் காணுவதை எந்த ஆணையும் நம்மைத் தடுத்திட முடியாது.

வாருங்கள்! வாருங்கள்!! வரலாற்றுக் கடமையை ஆற்றிட வரிப்புலியாய்ப் பாய்ந்து_ வாருங்கள்! வாருங்கள்!!

---------------------"விடுதலை" 31-8-2009

2 comments:

Unknown said...

வெங்காய புலிகளே நீங்கள் பெரியார் திடலிலிருந்துகொந்து வெறுமனே உதார்விட்டால் ஏதாவது உருப்படியாக நடக்க்ப் போகிறதா என்ன?ஈழத்துக்ப் போய் சண்டை போடுங்கய்யா.நல்லது நடக்கும்.

நம்பி said...

//Vilwam said...

வெங்காய புலிகளே நீங்கள் பெரியார் திடலிலிருந்துகொந்து வெறுமனே உதார்விட்டால் ஏதாவது உருப்படியாக நடக்க்ப் போகிறதா என்ன?ஈழத்துக்ப் போய் சண்டை போடுங்கய்யா.நல்லது நடக்கும்.
September 1, 2009 1:01 PM //

அதுக்குத்தான் கொட்டை எடுத்த குழம்பு புளி இருக்கிறதே! அதை கரைச்சு ஊத்தினாப் போகுது.