Search This Blog

1.9.09

பக்தி ஒரு வியாபாரம்; ஃபேஷன் என்று சங்கராச்சாரியார்கள்வரை ஒப்புக்கொள்ளும் நிலை !


கைப்பேசி கடவுள்!


மத்தியப் பிரதேசம் இந்தூரில் சிந்தாமணி கோயில் ஒன்று இருக்கிறது. அது 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம்.

இந்தக் கோயிலுக்குள்ள சிறப்பு என்னவாம்? நேரில் பகவானைத் தரிசிக்கத் தேவையில்லையாம். கடிதம் எழுதிப் போட்டால் போதுமாம். 40 ஆண்டுகளுக்குமுன் ஒரு பக்தர் கோயிலில் உள்ள சாமியின் முகவரியிட்டு அஞ்சல் அட்டை எழுதினாராம். தன்னால் நேரில் வர இயலவில்லை; அருள்கூர்ந்து என் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று அதில் எழுதப்பட்டிருந்ததாம்.

சாமி என்ன செய்யும்? அதுவா கடிதத்தை வாங்கும்_ வாங்கிய கடிதத்தைப் படிக்கும். அதுதான் ஒரு தற்குறியாயிற்றே _ பிடித்து வைத்த பொம்மையாயிற்றே?

அந்தக் கடிதத்தை பூசாரி பகவானின் காலடியில் வைத்தாராம்; என்ன ஆச்சரியம் விட்டலாச்சாரியா பாணியில் _ கடிதம் எழுதியவரின் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறினவாம்.

அதோடு கோயில் தர்மகர்த்தாக்கள் விட்டுவிடுவார்களா? கோயிலுக்கு ஒரு மகாத்மியத்தை உண்டாக்கவேண்டாமா? அதுதானே அவர்களின் நோக்கம்? இந்தச் சேதியைப் பரவவிட்டார்கள். பக்தர்கள் கடிதங்களை எழுத ஆரம்பித்தனர்.

அஞ்சலட்டையெல்லாம் எந்தக் காலம்? கம்ப்யூட்டர் யுகத்தில், ஆளுக்கு ஆள் கைப்பேசி வைத்துள்ள காலச் சூழலில், காலத்திற்கேற்ற கோலம் கைப்பேசியில் கடவுளிடம் பேச ஆரம்பித்தார்களாம்; கடவுள் என்றால் வேறு யாரும் இல்லை. கோயில் அர்ச்சகர்தான். சாமியாரின் பாதத்தில் கைப்பேசியை வைத்துவிடுவாராம்.

ஒவ்வொரு தடவையும் பக்தர்கள் பேசும்போதெல்லாம் அதே கைப்பேசியைக் கொண்டு போய் வைப்பாரா? ஒவ்வொரு முறையும் பேசும்போதும் வெவ்வேறு கைப்பேசிகளை வைப்பாரா என்று தகவல் இல்லை.

பக்தி ஒரு வியாபாரம்; ஃபேஷன் என்று சங்கராச்சாரியார்கள்வரை ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடவுள்தான் சர்வசக்தி வாய்ந்தவர் ஆயிற்றே _ உண்மையான பக்தன் யார்? போலிப் பக்தன் யார்? என்பதை அறிந்துகொள்ளும் ஆற்றல் அவருக்குக் கிடையாதா?


அவனுடைய தேவை என்பதைத் தெரிந்துகொள்ளும் சக்தி கிடையாதா?

இதை ஒப்புக்கொண்டுவிட்டால் பெரிய ஆபத்து இருக்கிறது மதவாத உலகத்திற்கு? கடவுளுக்கு எல்லாம் தெரியும் அதற்காக எந்தவிதமான பிரத்யேக ஏற்பாடுகள் தேவையில்லை என்று சொல்லிவிட்டால், கோயிலுக்கு வேலையில்லை; அதற்குள் கடவுள் சிலைகள் தேவையில்லை; பூஜை புனஷ்காரங்கள், காணிக்கைகள் என்ற பிரச்சினைக்கே இடமில்லை. அதைவிட முக்கியம் அர்ச்சகனுக்கும் வேலையில்லை.

பிழைப்புப் போய்விடுமே _ மத வியாபாரம் நடக்கவேண்டாமா?

நாளடைவில் என்ன ஆகும்? கடவுள் என்ற ஒன்றையே மக்கள் மறந்துவிடுவார்கள். அதனால்தான் இந்த எத்துவேலைகள் எல்லாம்; புரிகிறதா?

-------------- மயிலாடன் அவர்கள் 31-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: