Search This Blog

5.11.09

பெரியாரும் கட்டுப்பாடும்


அன்பிற்கினிய இணையத்தோழர்கள் குழலி, செந்தழல் ரவி மற்றும் தோழர்களுக்கு வணக்கம்.

தோழர் குழலி அவர்கள் தி.க.வின் தலைமை நிலையச்செயலாளர் பொறுப்புக்கு தோழர் அன்புராஜ் அவர்களை நியமித்தது தொடர்பாக ஒரு பதிவை எழுதி அது குறித்து எனது கருத்தை கேட்டிருந்தார். அது குறித்த எனது விளக்கத்தை தெரிப்பது எனது கடமை என்ற அளவில் எனது விளக்கம் இதோ:

நான் ஒரு பெரியார் தொண்டன். நான் மட்டுமல்லாது எனது வாழ்விணையரும் பெரியார் தொண்டர். நாங்கள் பெரியார் தொண்டர்களாக உருவாக்கப்பட்டோம். ஆனால் எங்கள் மகள் பிறக்கும் போதே பெரியார் தொண்டராக பிறந்தாள். எங்களின் வாழ்க்கையை, நாங்கள் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்துப் பார்த்து எங்கள் மகள் வளர்ந்ததால் இயல்பிலேயே பெரியாரின் கொள்கையாளாராக ஆகி விட்டார். இப்போது எங்களின் குடும்பமே பெரியார் கொள்கைவயப்பட்ட குடும்பம்.

அந்த அளவுக்கு பெரியாரின் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு வாழ்வியலாகக் கடை பிடித்து வருகின்ற போது அமைப்பு ரீதியாக தி.க.வில் இனைந்து எங்களாலான பெரியாரியல் பரப்பும் பணியைச் செய்து வருகிறோம்.

ஒரு அமைப்புக்குள் செல்லும் வரை என்ன வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் எதுவும் செய்யலாம்,அதனால் உண்டாகும் விளைவுகளுக்கு அவரவரே பொறுப்பு. ஆனால் அமைப்பு ரீதியாக ஒன்றிணைந்து விட்டால் அமைப்புக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அதுதான் சரியான நிலைப்பாடு.

இது தொடர்பாக பெரியார் தரும் விளக்கம் உங்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் என்பதால் அதை அப்படியே தருகிறேன்.

இதோ பெரியார் பேசுகிறார்

"என்னைப் பின்பற்றுபவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று கூறினேன். யாராவது ஒருவன் (தலைமை ஏற்று) நடத்தக் கூடியவனாக இருக்க முடியுமே தவிர எல்லோரும் தலைவர்களாக முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள் தான்.தோழர்களே! நான் இப்போது ஒருபடி மேலாகவே சொல்லுகிறேன்.


நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல; உங்கள் மனசாட்சி என்பதைக் கூட நீங்கள் மூட்டைக் கட்டி வைத்து விட வேண்டியது தான். கழகத்தில் சேரும் முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம். ஆனால் உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனசாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்து விட்டுக் கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்ற வேண்டியது தான் முறை.

மனசாட்சியோ, சொந்த பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால் உடனே விலகிக் கொள்வது தான் முறையே ஒழிய, உள்ளிருந்துக் கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

----------- 1948-இல் தூத்துக்குடி மாநாட்டிலும் மற்றும் பல சமயங்களிலும் பெரியார் பேசியதிலிருந்து ஒரு பகுதி.

ஆக தலைமை எடுக்கும் நிலைப்பாடுகளில் வேறுபடுபவர்கள், கருத்து மாறுபாடு உடையவர்கள் அமைப்புலிருந்து விலகிக் கொள்வது தான் சரியான செயல்.

நீங்கள் குறிப்பிட்ட மூத்த தோழர்கள் அனைவரும் அன்புராஜ் நியமனத்திற்கு முழு ஆதரவு தந்துள்ளார்கள். மற்ற அமைப்புகளுக்கும் தி.க.விற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு. மற்ற அமைப்புகளில் வழங்கப் படுவது பதவி . ஆனால் தி.க.வில் வழங்கப்படுவது பொறுப்பு. அவரவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை அவரவர்கள் செய்து வருகிறார்கள் எந்த எதிர்பார்ப்புமின்றி. எதையாவது எதிர்பார்த்து செயல்படுபவர்கள் தான் ஏமாற்றத்துக்குள்ளாகுவார்கள். தி. க.வை பொறுத்தவரை அன்புராஜ் நியமனத்தில் எந்தச் சலசலப்புமில்லை.

வீரமணி அவர்களை விட மூத்தவர்கள் எத்தனையோ பேர் இருந்தபொழுதும் பொறுப்புக்களை பெரியார் ஏன் வீரமணி அவர்களிடம் வழங்கினார் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு இந்தப் பதிவே தேவைப்பட்டிருக்காது.


1963 ஆம் ஆண்டு குத்தூசி குருசாமி அவர்கள் எடுத்த தவறான நிலைப்பாட்டினை ஒட்டி பெரியார் மிக விளக்கமாக அளித்த தெளிவுரை கீழே:-

"இத்தனை நாள் பாடுபட்டு இயக்கத்தை உருவாக்கிய எனக்குத் தெரியாதா இதனை பாதுகாக்க வேண்டிய சங்கதி. நீங்கள் இந்த துரோகப் பிரச்சாரம் கண்டு கவலைப்பட வேண்டாம். எனவே கழகத் தோழர்கள் என்பவர்கள் துரோகிகளுக்கு இடமளிக்காமல் கட்டுப்பாடுடனும், நாயணத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்; எனக்கு எண்ணிக்கை முக்கியம் அல்ல; இருக்கின்றவர்கள் கொஞ்சம் பேரானாலும் யோக்கியப் பொறுப்புள்ளவர்களாகவும் கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் அவ்வளவேதான் - என்று எடுத்துரைத்தார்கள்."

----------------"நூல்:-கழகமும் துரோகமும்" பக்கம் 15

ஒரு அமைப்பு எடுக்கும் நடவடிக்கைக்ளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியதே உண்மையான தொண்டர்களின் சரியான செயல் என திரும்பத் திரும்ப பெரியார் அதையே வலியுறுத்தியுள்ளார். ஆக நானும் யோக்கியப் பொறுப்புள்ளவனாக நடந்து கொள்ளவே விரும்புகிறேன்.

தோழர் அன்புராஜ் நியமனம் தொடர்பாக கழகத்தோழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய எண்ண அலைகளை பேராசிரியர் நம். சீனிவசன் அவர்கள் ப(த)டம் பிடித்து தந்துள்ளார். அது இதோ:-

“என்னை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள், வேலை வாங்குங்கள்.
இயக்கம் வளர என்ன செய்யலாம் சொல்லுங்கள்
வெளிப்படையாக பேசுங்கள்
கூடிய விரைவில் ஒவ்வொரு மாவட்டமாய் வருகிறேன் என்று அன்புராஜ் பேசப் பேச கழகத்தின் எதிர்காலம் ஒளிமயமாய் கண்களில் விரிகிறது.

கழகத் தோழர்கள் போட்டி போட்டுக்கொண்டு கருத்து மழை பொழிந்தனர்.
அன்புராஜ் குறிப்பெடுத்துக்கொண்டார். உடனுக்குடன் மென்மையான பதில் உரையினை இதமாய் வழங்கினார்.

தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களைக் கழகத் தோழர்கள் மொய்த்த வண்ணம் இருந்தனர்.

தோழர்களின் நெஞ்சில் நினைவலைகள் எழும்பிய வண்ணம் இருந்தன.

எத்தனையோ அறக்கட்டளைகள் தோன்றி இருக்கின்றன. ஆனால் அவையாவும் குறுகிய காலத்திலேயே சிதைந்து சின்னாபின்னமாகி இருக்கின்றன. அறக்கட்டளைச் சொத்துகளை தனியார்கள் சுருட்டிக்கொண்டு கொழுத்த வரலாறு உண்டு. ஆனால் பெரியார் அறக்கட்டளை மேலும் மேலும் வளர்ந்தோங்கி
வருகிறது.அறப்பணிகளும், பிரச்சாரப் பணிகளும் செம்மையாக நடைபெற்று வருகின்றன. இதற்கெல்லாம் மூலகாரணம் தலைவர் வீரமணி அன்றோ!

எடைக்கு எடை தங்கம் உலகிலேயே பெற்ற ஒரே தலைவர் வீரமணி. தங்கத்தை வீட்டுக்கு எடுத்துச்செல்லவில்லை. இயக்கத்திற்குக் கொடுத்த தலைவர்.
பெரியார் கருத்துகளை தமிழகத்தைக் கடந்து உலகம் முழுவதும் பரப்பிய ஒப்பற்ற தலைவர் வீரமணி.

வீரமணியின் உழைப்பும், திறனும், அணுகுமுறையும் வியப்பில் ஆழ்த்தும்.

வீரமணி பேசிய பேச்சுக்கள், எழுதிய எழுத்துகள், நடத்திய போராட்டங்கள், சுற்றித் திரிந்த ஊர்கள், உருவாக்கிய கல்வி நிறுவனங்கள், நிகழ்த்திக் காட்டிய சமூகப்புரட்சிகள் யாவும் வியப்பின் உச்சிக்கே நம்மை கொண்டு செல்லும்.
இயக்கத்தை, நிறுவனங்களை, அறக்கட்டளையை காக்கும் கடமையும் பொறுப்பும் வீரமணிக்கு உண்டு.

வீரமணியின் நாணயத்தை எவரும் சந்தேகப்படமுடியாது.

அன்புராஜ் நியமனத்தை விஷமத்தனமாக எழுதும் பத்திரிக்கைகள், வீரமணி, துரை.சக்ரவர்த்தியை பொதுச்செயலாளர் ஆக்கி தம்மை ஒரு தொண்டராக அறிவித்த போது எத்தனை பத்திரிகைகள் வீரமணி படத்தைப் போட்டு தலையங்கம் எழுதி பாராட்டி மகிழ்ந்தன என்று சொல்லமுடியுமா? என்று தோழர்கள் எண்ணத்தில் நினைவலைகள் தோன்றின.

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்

வீரமணிக்குத் தெரிந்திருக்கிறது. தமிழர்களுக்கு புரிந்திருக்கிறது. காலம் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்”.

------------- ------“விடுதலை” 28-11-2009.

மேலும் செய்திகளை அறிந்து கொள்ள

1.http://thamizhoviya.blogspot.com/2009/11/blog-post_6317.html

2.http://balajikumarg.powweb.com/viduthalai/20091015/news07.html

நன்றி

22 comments:

Osai Chella said...

உங்கள் குழந்தையும் ஒர் பெரியாரிஸ்டா? அடப்பாவமே! தோழர் அப்ப ஐயர் வீட்டுக்குழந்தை கடவுளை நம்புவதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் அல்லது புரிந்துகொள்வீர்கள் தானே! நாங்கள் உங்கள் பதிவு முழுவதையும் படித்து முடித்துவிட்டோம்! பெரியார் சொன்னமாதிரி மானம் மரியாதை அதிலும் சுயமரியாதை போன்றவற்றை விற்(ட்)ட்/று விட்ட பிறகு அது என்ன ஒரு சுயமரியாதை இயக்கம் அல்லது வெளக்குமாறு இயக்கம்! சேருமுன் ஆராயலாமாம் அப்புறம் மந்தையாடு ஆகிவிட வேண்டுமாம்! பெரியார் என்ன எந்த வெங்காயம் சொல்லியிருந்தாலும் இதை ஏற்கவேண்டியதில்லை. பகுத்தறிவு என்பது கிரேக்க சுமேரிய திராவிட ஆரிய (சார்வாகர்கள்) காலத்திலிருந்து இருப்பது. ஏன், எதற்கு எதனால் என்று கேட்காமல் ஒரு இயக்கத்தில் இருப்பேன் என்பது சுயமரியாதையை அல்ல சுய அறிவையே இழத்தல் போன்றதாகும்! குழலி சொன்னது போல் பெரியார் மத ஆச்சார்யர்கள் வீரமணி, அன்புராஜ், தமிழ் ஓவியா போன்ற ஆச்சார்யார்களுக்கு புண்ணிய கோடி நமஸ்காரங்கள்!

அன்பு நண்பன்..
ஓசை செல்லா

வால்பையன் said...

விளங்கும்!

தமிழ் ஓவியா said...

//உங்கள் குழந்தையும் ஒர் பெரியாரிஸ்டா? அடப்பாவமே! தோழர் அப்ப ஐயர் வீட்டுக்குழந்தை கடவுளை நம்புவதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் அல்லது புரிந்துகொள்வீர்கள் தானே!//

எங்க வீட்டுக் குழந்தைகளிடம் உண்மையை எடுத்துச் சொல்லி வளர்க்கிறோம். இது தான் விஞ்ஞானம் (அறிவியல்) இது தான் யாதார்த்தம் (உண்மை) என்று சொல்லி வளர்க்கிறோம். அது தவறா தோழர்.

//அய்யர் வீட்டுக் குழந்தையையும் (அய்யர் வீட்டு குழந்தைகள் மட்டுமல்ல அனைத்து குழந்தைகளையும்) அறிவியல்கூறும் உண்மைகள் அடிப்படையிலே வளர்க்க வேண்டும் என்பது எங்களின் பெரு விருப்பம்.//

//சேருமுன் ஆராயலாமாம் அப்புறம் மந்தையாடு ஆகிவிட வேண்டுமாம்! பெரியார் என்ன எந்த வெங்காயம் சொல்லியிருந்தாலும் இதை ஏற்கவேண்டியதில்லை.//


பெரியாரின் கருத்தை நீங்கள் தவறாக புரிந்து கொண்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விமர்சித்துள்ளீர்கள். அதுவும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளீர்கள். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற சொலவடை உண்டு தோழர்.

அதுவும் குறிப்பாக எனது தோழர்கள் யாரும் ஆத்திரப்படாமல்,எதையும் நடுநிலையுடன் அறிந்து ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

தனி மனிதனாக நான் செயல்படுவதற்கும், ஒரு இயக்கத்தின் செயல்பாடு என்பதற்கும் வேறுபாடு உண்டு தோழர்.

பெரியார் இயக்கத் தோழர்களுக்காக இந்தக் கருத்தைச் சொல்லியுள்ளார். மீண்டும் ஒரு முறை நிதானமாகப் படியுங்கள். உண்மை புரியும்.

Osai Chella said...

முதல்முறையாக அண்ணாவை தக்கவைக்க முடியாமல் திராவிடர் இயக்கம் போனது ஏன் என்று இன்று உங்கள் கட்டுரையை படித்தபின்தான் புரிந்தது! ;-)

நன்றி...
நண்பன் ஓசை செல்லா

தமிழ் ஓவியா said...

பிற்காலத்தில் பெரியாரின் கட்டுப்பாட்டின் அவசியம் அறிந்து

அண்ணாவும்

கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு

என்ற முழக்கத்தை தந்தார் என்பதையும் தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

தமிழ் ஓவியா said...

அண்ணா வின் கட்டுப்பாடு பற்றி அறிய கீழ்கண்ட சுட்டியை சுட்டவும்.

http://www.tamilnation.org/hundredtamils/annadurai/kattupaadu.htm

Osai Chella said...

நண்பரே, நகைக்க மடியவில்லை அதிகமாக. ஒரு கூட்டம் கலைந்து போவதற்குள்ள கட்டுப்பாட்டுக்கும் ஒரு இயக்கத்தின் செயல்பாடுகளை தம் மகனிடம் ஒப்படைப்பதற்கும் முடிச்சுப்போடும் அளவிற்கெல்லாம் தாங்கள் இறங்கிவரவேண்டாம். உங்க சொத்து.. யாரிடம் வேண்டுமானலும் குடுங்க... அடுத்தவங்களை கட்டுப்படுத்துங்க... நல்லா இருங்க! எதுக்கு வெட்டியா முக்கிய விசயங்களை விட்டுவிட்டு இந்த கட்டுப்பாட்டை புடிச்சு இந்தப்பாடு படுத்தனம் இப்ப! அண்ணா சொன்னார் ஆட்டுக்குட்டி சொன்னார் நு கழகங்கள் தேஞ்சி குடும்பங்கள் ஆகி ரொம்ப நாளாச்சு. இன்னும் இந்த அவர் சொன்னார் இவர் சொன்னார்.. அன்றே சொன்னார் என்பனவெல்லாம் நடுநிலையாளர்களுக்கு நகைப்பைத்தவிர வேறு ஒன்றையும் ஏற்படுத்தப்போவதில்லை. தொடரட்டும் சுயமரியாதை பயணம்! வாழ்த்துக்கள்! உண்மை ஒரு நாள் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன்...

ஓசை செல்லா

தமிழ் ஓவியா said...

//நடுநிலையாளர்களுக்கு நகைப்பைத்தவிர வேறு ஒன்றையும் ஏற்படுத்தப்போவதில்லை//

பெரியாரின் கொள்கைளை நிலைப்பாடுகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் குழம்பிப் போய் உள்ளீர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

//தொடரட்டும் சுயமரியாதை பயணம்! வாழ்த்துக்கள்! உண்மை ஒரு நாள் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன்...//

உண்மையைப் புரிந்துகொள்ளும் அந்த நாளுக்காக நானும் காத்திருக்கிறேன்.

தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி .

பரணீதரன் said...

அய்யா ஓவியா சொல்லுவது போல தோழர் ஓசை செல்லா அவர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். கழகம் என்பது கட்டுபாடு அடங்கியது என்பது தோழருக்கு புரியாது. அவரே ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால் அந்த நிறவனத்தின் சில சட்ட திட்டங்களுக்கு அடங்கி போகவேண்டும். இது ஒரு உதரனத்திற்க்கு சொல்லுகிறேன். உடனே இது நிறுவனம் என்று ஆகிவிடாது. ஒரு தலைமை இருந்தால் அதன் படித்தான் கேட்க வேண்டும் என்பது இவரை போன்ற தோழருக்கு புரியாமல் இருப்பது கொஞ்சம் நகைப்பாகத்தான் இருக்கிறது.

இவர் கடந்து வந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை போலும், இவர் படித்த கல்லூரியில் முதல்வர் என்ற ஒருவர் இல்லை போலும். இல்லை இவர் அப்படி எதற்கும் போகாமல் நேராக வந்துவிட்டாரோ?

சரி எப்படி இருந்தாலும் இனியாவது புரிந்து கொள்ளுங்கள் தோழரே. ஒரு இயக்கம் என்பது ராணுவ கட்டுப்பாடிர்க்கும் மேலானது என்று.

Osai Chella said...

சிம்பிளா சொன்னா ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன் இயக்கத்துல சேர்ந்தபிறகு அவன் அதற்கு விசுவாசமா அடங்கி கேள்விகள் எழுப்பாமல் இருப்பான், இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் ஒரு நல்ல தொண்டனாக இருக்கமுடியும். அவனைப்போய் சிந்தி, திருந்து, கேள்வி கேள் என்றெல்லாம் சொல்லக்கூடாது! அய்யப்ப பக்தர்களுக்கும் இது பொருந்தும். குருசாமி என்ற தலமை ஆசிரியர் சொல்லுக்கு அவனும் கட்டுப்படவேண்டும். அப்பத்தான் நல்ல மாணவன் என்கிற தகுதி அவனுக்கு இருக்கு.. அப்பாடா... ரொம்பவே புல்லரிக்குதுப்பா.. உங்க தத்துவ சிந்தனைகள், கட்டுப்பாடுகள்.. சொல்லவே வெக்கமாயிருக்கு.. இருந்தாலும் நான் சொல்லிவிடுகிறேன். சுய சிந்தனைகளை ஆராய்ச்சிகளை விட்டுவிட்டு ஒரு ஆமாஞ்சாமிகள் இயக்கத்தில் சேர்வதைவிட தனியாவே நாண்டுகிட்டு சாகலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து! இனிமேலாவது சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் பிளேட்டோ என்றெல்லாம் மேடைகளில் முழங்கினால் நான் வாயில் சிரிக்கமுடியாது என்பதை பணிவுடன் கூறிக்கொள்கிறேன். உங்கள் பதிவிற்கு ஆன்மீக திருவிளையாடல் நக்கீரன் கதையே பரவாயில்லை! ஒரு மகனிடம் ஒப்படைக்க இவ்வளவு அடிபொடிகளின் சல்ஜாப்புகளா? பேசாமல் எங்கள் பெரீய இயக்கத்தில் நம்பிக்கைக்குரிய அடுத்த கட்ட தலைவர்கள் என்று யாரும் உருவா(க்)காததால் வேறு வழியின்றி தகுதி அடிப்படையில் (பிறப்பினால் அல்ல) தோழர் அன்புராசு அவர்களிடம் இப்பொருப்பை ஒப்படைக்கிறேன் என்று சொல்லிவிட்டுபோயிருக்கலாம். நம் இருவரின் நேரமும் மிச்சமாயிருக்கும்! நல்லாயிருங்க தோழர்களா!

வால்பையன் said...

//பெரியாரின் கொள்கைளை நிலைப்பாடுகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் குழம்பிப் போய் உள்ளீர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.//

முதல்ல சுயமரியாதைன்னா என்னான்னு நீங்க தெரிஞ்சிகிட்டு பிறகு அடுத்தவங்களுக்கு சொல்லி கொடுக்க வாங்க!


//உண்மையைப் புரிந்துகொள்ளும் அந்த நாளுக்காக நானும் காத்திருக்கிறேன்.//

அதுக்கு காப்பி, பேஸ்டை விட்டுட்டு சொந்தமா சிந்திக்க தெரியனும்!

வால்பையன் said...

//கழகம் என்பது கட்டுபாடு அடங்கியது என்பது தோழருக்கு புரியாது. அவரே ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால் அந்த நிறவனத்தின் சில சட்ட திட்டங்களுக்கு அடங்கி போகவேண்டும்.//

அதாவது சுயமாரியாதையை அடமானம் வச்சிடனும் சரியா!?

விளங்குமய்யா!

வால்பையன் said...

//ஒரு தலைமை இருந்தால் அதன் படித்தான் கேட்க வேண்டும் என்பது இவரை போன்ற தோழருக்கு புரியாமல் இருப்பது கொஞ்சம் நகைப்பாகத்தான் இருக்கிறது.//

ஹிட்லரின் தலைமையில் நாஜிப்படைகள் செய்ததெல்லாம் மிகச்சரி தான் இல்லையா!?

சொந்தமா யோசிக்க மாட்டிங்களா, உங்க தலைமைகிட்ட மூளையை அடமானம் வச்சிடிங்களா!?

கானக்கிளி said...

OSAI Chella said...
/*****சுய சிந்தனைகளை ஆராய்ச்சிகளை விட்டுவிட்டு ஒரு ஆமாஞ்சாமிகள் இயக்கத்தில் சேர்வதைவிட தனியாவே நாண்டுகிட்டு சாகலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து!
********/
/*****பெரியார் சொன்னமாதிரி மானம் மரியாதை அதிலும் சுயமரியாதை போன்றவற்றை விற்(ட்)ட்/று விட்ட பிறகு அது என்ன ஒரு சுயமரியாதை இயக்கம் அல்லது வெளக்குமாறு இயக்கம்! சேருமுன் ஆராயலாமாம் அப்புறம் மந்தையாடு ஆகிவிட வேண்டுமாம்! பெரியார் என்ன எந்த வெங்காயம் சொல்லியிருந்தாலும் இதை ஏற்கவேண்டியதில்லை.***/

பெரியாரின் கொள்கைகளை தவறு என்று சுட்டி காட்டும் அளவுக்கு உங்களுக்கு பகுத்தறிவு வளர்ந்து விட்டதற்கு பாராட்டுகள்.

அந்த உங்களின் எவரெஸ்ட் பகுத்தறிவை இந்த சமுதாயதிற்கு எந்த வகையில் அளிதுள்ளிகர்கள்.

இந்த பகுத்தறிவு வாதியின் வலைத்தளத்தில் பார்ப்பான்,பெண்ணியம்,பகுத்தறிவு,சமுக முன்னேற்றம்,கடவுள் மறுப்பு என்ற தலைப்புகளில் எத்துனை கட்டுரைகளை வெளிட்டுள்ளார்.இதை வைத்து தானே ஒருவனின் பகுத்தறிவை நம் கணிக்க முடியும்.

இவரின் எவரெஸ்ட் பகுத்தறிவு வீரமணியை அவரது மகனை மட்டும் பற்றி தானா சிந்திக்கும்.

இவரின் பகுத்தறிவு இந்த மக்களுக்கு எந்த வகையில் பயன் பட்டுள்ளது.

இவை எதுவுமே இல்லாமல் ஒரு சமுக தொண்டரான பெரியாரை பற்றி பேச இவருக்கு என்ன தகுதி உள்ளது என்பதுதான் எனது கேள்வி?

திராவிடர் கழகம் என்றால் வீரமணி ஒருவர் தான் முடிவு எடுபவரா?
இவர் வீரமணியோட எவ்வளவு காலம் அருகில் இருந்து பார்த்தார்.அல்லது இந்த மேதாவி எத்தனை முறை பெரியார் திடலுக்கு சென்று இந்த வினாவை வீரமணியிடம் கேட்டுள்ளார்?

பெரியார் மணியம்மை டிரஸ்ட் வீரமணி ஒருவர் தான் உறுப்பினரா?இல்லை வீரமணி நான் ஒருவன்தான் திராவிடர் கழகம்.இவை எல்லாமே என்னுடயது என்று கூறினாரா?அல்லது பெரியாரின் சொத்துகளை மாற்ற வீரமணி-மோகனா அறக்கட்டளை ஏற்படுத்தினாரா?

இரண்டு பக்கங்களில் வந்த விடுதலை இன்று 8 பக்கங்களில் வருகிறது வண்ண படங்களுடன்.இணையத்தளத்தில் விடுதலை படிக்க முடிகிறது.பல்வேறு நகரங்களில் விடுதலை பதிப்பு ஆரம்பிக்க பட்டுள்ளது.

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் 150 குழந்தைகள் இருக்கிறர்கள் .இவர்கள் அனைவரும் பெற்றோர் இல்லாதவர்கள்.இவர்களை பெரியாரின் அறகட்டளை தான் வளர்த்து திருமணமும் செய்து வைக்கிறது.

நாம் ஒரு குழந்தை பெற்றாலே பெற்றோர் இருவரும் ஓடி ஓடி உழைக்க வேண்டி இருக்கிறது.அதனுடைய எதிர்காலத்திற்கு பல லட்சங்களை சேர்க்க வேண்டி இருக்கிறது.150 குழந்தைகளை கவனிக்க யார்முன்வருவர்கள்.அதற்க்கு ஆகும் செலவு எவ்வளவு.

இதனால் இதை எல்லாம் இழுத்து மூடிவிட்டாரா வீரமணி?
புதிதாக ஆரம்பிக்க படும் ஒவொரு நிறவனமும் பெரியார்-மணியம்மை பெயரை சொல்வதாகத்தான் இருக்கிறது.

அன்புராஜ் நியமனம் குறித்து அவர் ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டார்.

முதலில் விடுதலை படியுங்கள் குறை கூறுவதற்கு முன்பு.
சிந்தனை என்பது ஒரு வழி பாதையாக இருக்க கூடாது.
இதைப்பற்றி எல்லாம் கவலை படவேண்டியது நீங்கள் அல்ல தோழர்.
ஒருவரை பற்றி விமர்சனம் எழுதும்போது அவரை முழுமையாக தெரிந்து கொண்டு எழுத வேண்டும் .

Osai Chella said...

துங்குறவனை எழுப்பிடலாம்! தூங்குற மாதிரி நடிக்கிறவங்கள??!! அதென்ன விடுதலை படிக்கச்சொல்றீங்க? அப்படீன்னா?

ரவி said...

valpaiiyan. stop stop !!!

Unknown said...

சுயமாகச்ச் சிந்திப்பதாக சொல்லி பினாத்திக் கொண்டிருக்கும் அதிபுத்திசாலிகள் அதிகமாக உங்கள் பிளாக்கில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல்ல் பெரியார் தத்துவத்தை அகிலமெல்லாம் சேர்க்கும் வேலையை செய்ய் நண்பா.

Osai Chella said...

//பெரியாரின் கொள்கைகளை தவறு என்று சுட்டி காட்டும் அளவுக்கு உங்களுக்கு பகுத்தறிவு வளர்ந்து விட்டதற்கு பாராட்டுகள். //
இதென்ன இப்படி கேட்டுப்புட்டீங்க! பெரியார் பிகர் கரெக்ட் பண்ணிக்கிட்டிருந்த வயசுலயே நாங்க அதெல்லாம் செய்யாம வோல்கா, கங்கை, லோகாயதவாதம், பொருள்முதல்வாதம், கிரேக்க தத்துவம், உளவியல் னு ஒரு 20 ஆண்டுகளை வீணடிச்சிட்டதுனால இந்த கட்டுப்பாட்டு சமாசாரத்தை ஏதோ பெரியார்தான் முதன்முதலா பகுத்தறிஞ்சு சொன்னமாதிரியெல்லாம் தூக்கணாங்குருவி பேசறது மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு! அதைவிட அவரை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி என்றெல்லாம் கேட்டா.. வாயில நல்லா வருது! கொஞ்சம் பழைய விடுதலை இதழை, இட ஒதுக்கீடு பிரச்சினை உச்சத்தில இருந்தப்ப வந்தவைகளை புரட்டினால் அதில் என் கட்டுரையும் கூட கிடைக்கலாம். ஆனால் இணையத்தில் பல ஆயிரம் பார்ப்பனர்களை பெண்டு நிமிர்த்தியிருந்தாலும் இந்த மாதிரி சின்னப்புள்ளட்தனமா பெரியாரை “அவர் எங்களுக்கு மட்டும் தான் சொந்தம்னு” குத்தகைக்கு எடுத்தமாதிரி பேசறது கொஞ்சம் ஓவராத்தான் என் சிற்றறிவிற்குப்படுது! என்னமோ போங்க சாமிகளா! உங்களுக்கு சரின்னு படறது எங்களுக்கு கொஞ்சம் அருவருப்பாத்தான் தெரியுது! பார்க்கலாம்.. நான் இங்கு பேசுவதே கூட புரிதலுக்கு இன்னும் சாத்தியம் நாம் இருவரிடமும் இருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படியிலேயே என்பதை தெரிவித்து விடை பெருகிறேன். நன்றி!

அன்புடன்,
ஓசை செல்லா

Osai Chella said...

*** முக்கிய விசயம். உண்மை ஆன் லைன் தளத்திறற்கு சென்றால் http://files.periyar.org.in/unmaionline அது ஒரு வைரஸ் தளம் என்று வருகிறது. உடனடியாக பிரின்ஸ் / சாக்ரடீஸ் வசம் தெரிவிக்கவும். இதை நிவர்த்தி செய்வது மிகவும் அவசியம்.

தோழமையுடன்...
ஓசை செல்லா

தமிழ் ஓவியா said...

//*** முக்கிய விசயம். உண்மை ஆன் லைன் தளத்திறற்கு சென்றால் http://files.periyar.org.in/unmaionline அது ஒரு வைரஸ் தளம் என்று வருகிறது. உடனடியாக பிரின்ஸ் / சாக்ரடீஸ் வசம் தெரிவிக்கவும். இதை நிவர்த்தி செய்வது மிகவும் அவசியம்.

தோழமையுடன்...
ஓசை செல்லா//

அதற்கான வேலைகள் நடந்து வருகிறது தோழர். ஏறக்குறைய அந்தப் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.

நன்றி தோழர்

தமிழ் ஓவியா said...

கட்டுப்பாடு பற்றி பெரியார் விளக்கமளித்த இன்னுமொரு செய்தி. இதன் சுட்டி இதோ:-


http://thamizhoviya.blogspot.com/2009/11/blog-post_11.html

அ.பிரபாகரன் said...

அய்யா தமிழ் ஓவியா அவர்களே,

நீங்கள் வீரமணி புகழ்பாடுங்கள். அன்புராஜ் வாழ்க என்று தினந்தோறும் 1008 பதிவுகள் போடுங்கள். உங்களையாரும் எதுவும் கேட்கமாட்டோம். தயவுசெய்து பெரியாரை விட்டுவிடுங்கள். உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து பெரியாரை விட்டுவிடுங்கள்.
அவர் பிழைத்துப்போகட்டும்.