Search This Blog

30.11.09

பெரியார் கருத்துகளை அப்படியே பிரதிபலித்தவர் அண்ணா!


குவைத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி 16.10.2009 சிறப்புரையாற்றினார்.

பெரியார் கருத்துகளை அப்படியே பிரதிபலித்தவர் அண்ணா என்று குவைத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்கி பேசினார்.

குவைத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 16.10.2009 ஆற்றிய உரையின் நேற்றையமுதல்நாள் தொடர்ச்சி வருமாறு:-

அண்ணா அவர்கள் பொதுக்கூட்டத்தில் அடுத்து எழுந்து பேசினார். நீங்கள் எவ்வளவு தூரம் இடைஞ்சல் செய்தாலும் நாங்கள் இந்த இடத்தை விட்டுப் போவதாக இல்லை.

நீங்கள் எறிகின்ற ஒவ்வொரு கல்லும்

நீங்கள் எறிகின்ற ஒவ்வொரு கல்லும் எங்களை உரத்துப் பேச வைக்கும். தந்தை பெரியார் அடுத்த படியாக என்னைவிட வேகமாகப் பேசுவார். ஆனால் ஒன்றைச் சொல்லுகின்றேன்.

பெரியாருக்கு தாடி இன்னும் முழுமையாக வெள்ளையாகவில்லை. ஆங்காங்கு சில கருப்பு முடிகளும் இருக்கின்றன. நீங்கள் அந்த சாம்பலை எங்கள்மீது வீசினால் வெண்ணிறத் தாடிதான் எங்களுக்குத் தெரியுமே தவிர, இதையே நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அண்ணா உட்கார்ந்தார் (கைதட்டல்). அந்த வசந்தம் கட்டுரையில் அண்ணா சொல்லுகிறார்.

உருட்டல் மிரட்டல்

செல்வோம், பெரியாரின் பேருரை நிகழ்த்தப்படும். வந்தவர்களில், உருட்டல், மிரட்டல் கடிதம் எழுதியவர் இருந்திருப்பின் அடுத்த கூட்டத்திற்கு அவர் அய்யாவிற்காக மாலை வாங்கிக்கொண்டுதான் வருவார். அத்தகைய தெளிவும், வாதத்திறமையும் பேச்சில் கிடைக்கும். அத்தகைய, தெளிவுரை பெற்றுப் பெற்று, தமிழரில் பலர், பலப்பலர் திருந்தினர் என்பது மட்டுமல்ல; தமிழகத்திலேயே ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது.

ஒருவர் புறப்பட்டு, ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை.

அந்த வரலாறு தொடங்கப்பட்ட போது நான் சிறுவன். அந்த வரலாற்றிலே புகழேடுகள் புதிது புதிதாக இணைக்கப்பட்ட நாள்களிலே ஒரு பகுதியில் நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன்.

என் வசந்தம்

அந்த நாள்களைத்தான் என் வசந்தம் என்று குறிப்பிட்டிருக்கிறேன். பெரியாருடன் இணைந்து பாணியாற்றியவர், பற்பலர். அவருடன் மற்ற பலரைவிட இடைவிடாது இருந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தவன் நான். அந்த நாள்கள் எனக்கு மிகவும் இனிமையான நாள்கள்; இன்றும் நினைவிலே கொண்டு வரும் போது இனிமை பெறுகின்றேன்.

எத்தனை எத்தனையோ கருத்துகளை உரையாடலின் மூலம் தந்திருக்கிறார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பதை நான் கற்றுணரும் வாய்ப்பும் தந்தார். பொதுத் தொண்டாற்றுவதில் ஓர் ஆர்வமும், அக மகிழ்வும் மன நிறைவும் பெற்றிடச்செய்தார்.

உன்னை எனக்குத் தெரியும், போ!

கோபத்துடன் அவர் பலரிடம் பேசிடக் கண்டிருக்கிறேன், கடிந்துரைக்கக் கேட்டிருக்கிறேன், உன்னை எனக்குத் தெரியும் போ என்று உரத்த குரலில் கூறியதைக் கேட்டிருக்கிறேன். ஒரு நாள் கூட அவர் என்னிடம் அவ்விதம் நடந்து கொண்டதில்லை. எப்போதும் ஒரு கனிவு, எனக்கென்று தனியாக வைத்திருப்பார். என்னைத் தமது குடும்பத்தில் பிறவாப் பிள்ளை எனக் கொண்டிருந்தார்.

கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர்

நான் கண்டதும் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான். இப்போதும் நான் உள்ள வயதில் அவர் இருந்தார். நான் அவருடன் இணைந்த போது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நேரத்தின் நெருக்கடி காரணமாக உங்களுக்கு அண்ணா அவர்கள் எழுதியதை தொட்டுத் தொட்டு காட்டுகிறேன். இதுதான் குவைத் என்று விமானத்தில் சென்று பார்த்தால் எப்படியிருக்குமோ அது போலத்தான் அண்ணா நூற்றாண்டு விழாவிலே என்னுடைய உரையும் இருக்கும். காலத்தைக் கருதி சுருக்கமாக உரையாற்றுகிறேன்.

எதற்கு அவர் பணிந்தார்

இவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழைமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எதற்கு அவர் பணிந்தார்? எந்தப் புராணம் அவரின் தாக்குதலைப் பெறாதது?

ஏ அப்பா! ஒரே ஒருவர் அவர் நம்மை அக்குவேறு ஆணிவேறாக எடுத்தெடுத்து வீசுகிறாரே என்று, இந்நாட்டை என்றென்றும் விடப்போவதில்லை. என்று எக்காளமிட்டுக்கொண்டிருந்த பழைமை அலறலாயிற்று! புதுப்புதுப் பொருள் கொடுத்தும் பூச்சு மெருகு கொடுத்தும் இன்று பழைமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றாலும், விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய் விட்டிருக்கிறது என்பதை அறியாதவர் இல்லை.

எனவேதான் பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம்; ஒரு காலக்கட்டம்; ஒரு திருப்பம் என்று கூறுவது வாடிக்கை என்று கூறுகிறார்.

இப்படி எழுத்தாளராக, பேச்சாளராக இருந்த அண்ணா பல நாடகங்களை உருவாக்கினார். நாடகங்களில் ஆரம்பத்தில் அவரே நடித்தார். தன்னுடைய தோழர்களை வைத்துக்கொண்டு நடித்தார்.

சந்திரோதயம் என்று ஒரு நாடகம் நாங்கள் எல்லாம் அந்த நாடகத்தைப் பார்க்கக் கூடிய வாய்ப்பை பெற்றோம். அந்த நாடகத்திலே ஜமீன்தார் வேடமுண்டு. அந்த வேடத்தில் அவரே நடித்து ஏராளமான மக்களை அவர் வசியப்படுத்தினார்.

அண்ணா அவர்களைப் பற்றி கலைவாணர்

அண்ணா அவர்களுடைய நடிப்பைப் பற்றி ஒரு நிகழ்ச்சியில் தலைமை தாங்கி பேசிய பொழுது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு முறை சொன்னார்.

அண்ணா அவர்கள் நடிப்புத்துறைக்கு வந்திருந்தால் நாங்கள் எல்லாம் கையில் ஓடெடுத்துக்கொண்டு போயிருக்க வேண்டும்.

நல்ல வாய்ப்பாக அவர் நிரந்தர நடிகராக வரவில்லை. அண்ணா அவர்கள் எந்தத் துறைக்குப் போனாலும் அவருடைய கொள்கை முக்கியம், பகுத்தறிவு முக்கியம், இலட்சியம் முக்கியம்; லட்சங்கள் அல்ல. இதைத் தெளிவாக எடுத்துச்சொல்ல அண்ணா அவர்கள் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கினார்கள்.

சிதம்பரத்தில் ஒரு கூட்டம்

சிதம்பரத்திலே ஒரு கூட்டம் அய்யா அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார். வேகமாக, கடுமையாக சமுதாயக் கருத்துகளை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அய்யா அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்ற பொழுது ஒரு வயதான பெரியவர் எழுந்து கேள்வி கேட்டார். நாயக்கரே! என்று ஆரம்பித்தார். அந்த காலத்தில் பெரியாரை ராமசாமி நாயக்கர் என்று தான் சொல்லுவார்கள். பெரியார் என்று சொல்லமாட்டார்கள்.

அவர் கேட்கிறார், நாயக்கரே! நீங்கள் பேசுவதில் பல நியாயங்கள் இருக்கின்றன. ஜாதி, தீண்டாமை ஒழிப்பு என்பவைகள் பற்றி சொல்வதெல்லாம் சரி. ஆனால், எனக்கு மனம் புண்பட்ட விசயம் என்னவென்றால் சாமியைப் போய் கல்லென்று சொல்லுகிறீர்களே; கடவுளைப் போய் கல் என்று சொல்லுகின்றீர்களே! அது எப்படி? அதை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொன்னார். உடனே தந்தை பெரியார் அதற்கு ஒன்றும் பெரிய விளக்கம் ஒன்றும் சொல்லவில்லை. உடனே பெரியார் சொன்ன பதில்

அய்யா அவர்கள் உடனே சால்வையை எடுத்துபோட்டுக்கொண்டு, தடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அய்யா என்னோடு வாருங்கள்.

நீங்கள் என்னை அனுமதித்தால் சிதம்பரம் கோவிலில் உள்ளது சாமி அல்ல; அது கல் என்று சுட்டிக்காட்டுவேன் என்று சொன்னார். உடனே எல்லோரும் கைதட்டினார்கள்.

உடனே அந்த பெரியவர் சொன்னார், நிறுத்துங்கள்! அது சாதாரண கல் அல்ல; மந்திரத்தை விட்டு, கும்பாபிஷேகம் நடத்தி கடவுளாக்கப்பட்டது. எனவே அது சாதாரண கல் என்று நினைக்காதீர்கள். மந்திரத்தை உள்ளே விட்டவுடனே அது கடவுள் என்று சொன்னார்.

அந்த மந்திரத்தை இங்கே விட வேண்டியதுதானே

இவர் இப்படி சொன்னவுடனே தந்தை பெரியார் கேட்டார், அப்படியா! ரொம்ப மகிழ்ச்சி. கல்லுக்குள் மந்திரத்தை விட்டால் அதை கடவுளாக்கும் சக்தி உங்களிடத்திலே இருக்கிறது என்றால், இதோ என்னுடைய தாழ்த்தப்பட்ட சகோதரன் தலையிலே அந்த மந்திரத்தை விட்டு கொஞ்சம் உயர்ஜாதிக்காரனாக ஆக்குங்களேன், பார்ப்போம்! நாட்டில் தகராறே இருக்காது என்று சொன்னார்.

அதற்கு அந்த பெரியவராலே பதில் சொல்ல முடியவில்லை. போய்விட்டார். என்ன பதில் சொல்லமுடியும்?

ஆனால், இதையே அண்ணா அவர்கள் நாடகத்திலே எப்படி சித்தரித்தார்கள்? இதைக்கேட்டால் நீங்களெல்லாம் வியப்படைவீர்கள். அண்ணா அவர்கள் எழுதிய சந்திரோதயம் நாடகம் ஜமீன்தார் வேடத்தைப் போட்டிருக்கின்றார் அண்ணா. ஜமீன்தாரின் வேலைக்காரர் பெயர் வீராச்சாமி அந்த நாடகத்திலே ஒரு காட்சி.

வீராச்சாமி சொல்லுவார்

என்னப்பா உன்னை நான்கு நாள்களுக்கு மேல் நான் பார்க்கவில்லையே, என்ன காரணம்? என்று ஜமீன்தார் வேடம் போட்டிருக்கின்ற அண்ணா வீராச்சாமியிடம் கேட்பார்.

வீராசாமி சொல்லுவார். அய்யா உங்களுக்குப் பிடிக்காது என்று சொல்லுவார். எல்லாம் அண்ணா அவர்களுடைய தோழர்கள் தான் நடிப்பார்கள். என்ன காரணம்? சும்மா சொல்லு, பரவாயில்லை என்று அண்ணா அவர்கள் சொல்லுவார்கள்.

வேலைக்காரர் வீராசாமி சொல்லுவார், அய்யா சிதம்பரத்திற்கு ஆருத்ரா தரிசதனத்தைப் பார்க்கப் போனேன் என்று சொன்னார். வேண்டுமென்றே அண்ணா அவர்கள் அடுத்த கேள்வியை கேட்பார்.

என்னப்பா விஷேசம்? எனக்குக் கொஞ்சம் சொல்லேன் என்று கேட்பார். உங்களிடம் சொன்னால் எப்படிங்க அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளப் போகிறீர்கள் ஆனால், ஒரு வேளை மாறினாலும் மாறலாம். நான் சொல்லச் சொல்ல அந்த மாறுதல் உங்களிடமே கூட வரலாம். சுயமரியாதைக்காரர்கள் சுயமரியாதைக்காரர்கள் மாறுவார்கள் என்று சொல்லி சில இடங்களில் ஏமாற்றுகிறார்கள் அல்லவா? அது போல இப்படி அவர் சொன்னார். பரவாயில்லை, நீ சொல், எப்படி இருப்பார்? என்று கேட்டார். அந்த நடராஜப் பெருமான் காலைத் தூக்கி ஆடுகிறான் பாருங்கள், அந்தக் காட்சியை எப்பொழுது பார்த்தாலும் மனம் ஈர்க்கக் கூடிய அளவிலே இருக்கும்.

எங்கே? நீயும் அப்படியே நில்

நடராஜர் பெருமான் காலைத் தூக்கி ஆடுகின்ற காட்சியைத்தான்_ அந்த ஆருத்ரா தரிசனத்தைத் தான் நான் பார்க்கச் சென்றேன். லட்சக் கணக்கான பக்தர்களும் அந்த காட்சியைக் கண்டு மகிழ்ந்தார்கள் என்று சொல்லுவார். உடனே ஜமீன்தார் வேடம் போட்டிருக்கின்ற அண்ணா கேட்பார், அவர் எப்படி காலைத் தூக்கி ஆடுகிறார் என்று கொஞ்சம் காட்டு, என்று கேட்பார்.

அப்படியா? என்று கேட்டுவிட்டு வேலைக்காரர் வீராசாமி காலைத்தூக்கி நின்று காட்டுகிறேன். நீங்களே மாறிவிடுவீர்கள் எஜமான் பாருங்கள் என்று சொல்லுவார். கையை மடக்கி ஒரு காலைத் தூக்கி நடராஜர் பெருமான் நிற்கிறமாதிரி நின்று காட்டுவார் வீராசாமி. உடனே எஜமானர் சொன்னார், வீராசாமி நீ காட்டிய காட்சி ரொம்ப அற்புதமாக இருக்கிறது. ஆனால் ஒன்று நான் சொல்லுகிற வரையிலே நீ காலைக் கீழே போடக்கூடாது. ஏனென்றால் இந்தக் காட்சி அவ்வளவு நன்றாக இருக்கிறது.

எனவே நீ காலைக் கீழே போடக்கூடாது. அப்படியே நில் என்று அண்ணா சொன்னார். இவரும் இரண்டு, மூன்று நிமிடம் நின்றார். நான்காவது நிமிடம் ஆன உடனே வீராசாமி சொல்லுவார், அய்யா காலை கீழே போடலாமா? என்று கேட்பார். போடக் கூடாது என்று பதில் சொல்லுவார். காலை இப்பொழுது வைத்திருப்பது போல் அப்படித்தான் வைத்திருக்க வேண்டும். கொஞ்ச நேரம் ஆன உடனே அய்யா! கால்வலிக்குதுங்க. காலை கீழே போடட்டுமா? என்று கேட்பார் வீராசாமி.

உடனே அண்ணா சொல்லுவார், என்னப்பா நடராஜர் எத்தனை ஆண்டுகளாக காலைத் தூக்கி அப்படியே வைத்துக்கொண்டிருக்கின்றார். நீ அவரைப் போய் பார்த்துவிட்டு வந்திருக்கிறாய் அப்படி இருக்கும்பொழுது நீ அய்ந்து நிமிடத்திற்கு மேல் நிற்க முடியவில்லை என்று சொல்லுகிறாயே, அதெல்லாம் முடியாது அப்படியே நில்! என்று சொல்லுவார்.

அது கல், நிற்கும்

நீங்கள் ஒன்று எஜமான்; அது கல்லு அதனாலே அப்படியே நிற்கிறது; நான் மனிதன் எப்படி அப்படியே காலைத் தூக்கி நின்று கொண்டிருக்க முடியும்? என்று கேட்டார். (சிரிப்பு கைதட்டல்).

ஆகவே இரண்டு கருத்துகள் ஒருவர் நேரடியாக சொல்லுகிறார். இன்னொருவர் நாடகத்தின் மூலம் சொல்லும் பொழுது நீங்கள் எப்படி சிரித்தீர்களோ அது போல வைதீகர்களும் சிரித்தார்கள்.

அதே மாதிரி நாடகத்தைப் பார்க்கின்ற மக்கள் அண்ணா அவர்களுடைய கருத்தை வரவேற்று கைதட்டி சிரிப்பார்கள்.

-------------------தொடரும்...."விடுதலை" 30-11-2009

2 comments:

Unknown said...

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!
ஒட்டகத்துக்கு ஒரு சுபாவம் உண்டு என்று சொல்வார்கள். அதன் மீது பாரத்தை மேலும் மேலும் போட்டால், பளு தாங்காமல் ஒட்டகம் முரண்டிக் கொண்டு படுத்துவிடுமாம்! உடனே, சூட்சம புத்தியுள்ள ஒட்டகக்காரன், கடைசியாக ஒட்டகத்தின் மீது ஏற்றிய சாமானை எடுத்துவிடுவானாம். எடுத்தானதும், ஒட்டகம் சரி, சரி, நம்மீது போட்ட பாரத்தைக் கீழே இறக்கிவிட்டார்கள். நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று எண்ணிக் கொண்டு, எழுந்து நிற்குமாம். பிராயணத்துக்குத் தயாராக! இந்த ஒட்டகத்தின் சுபாவத்தை ஒரு சில சமயத்திலே, நல்லவர்களிடமும் காணலாம்.
யாராவது, நல்லவர்களுக்கு மனவேதனை ஏற்படும்படியான தொல்லைகள் ஏற்பட்டால், தாங்கமுடியாத நிலை உண்டாகும்.. உண்டாகும்போது. இனிப் பொறுக்க முடியாது என்று கூறுவர், ஆனால் ஒட்டகத்தின் சுபாவ சூட்சமம் தெரிந்தவர்கள், கொடுத்த தொல்லைகளிலே, ஏதாவதொன்றை நீக்குவர்.. நீக்குவதன் மூலம் நல்லவரின் மனதிலே, சஞ்சலம் குறைந்து, சந்தோஷம் மலர்ந்து சொன்ன வண்ணம் கேட்கும் நிலை பெறுவதுண்டு!
பெரியார், நம்மை, ஒட்டகச் சுபாவம் கொண்டவர்கள் என்றே தீர்மானித்திருக்கிறார் - அதே சூட்சமத்தையும் கையாண்டு பார்க்கிறார்.
(திராவிட நாடு 10-07-1949)

Unknown said...

ஈவெரா: என்னிடம் வேலைக்கு வந்தபோது இவர் எம்.ஏ(அண்ணா) படித்ததாகக் கூறித்தான் சேர்ந்தார். ஆனால் இப்போது எனக்கு சந்தேகம் வருகிறது. இவரது எம்.ஏ. சர்ட்டிஃபிகேட்டைப் பார்க்கவேண்டும்’


அண்ணா: ‘ஹைதராபாத் நிஜாமுக்கு இருக்கவேண்டிய கவலை, ஆதினகர்த்தாக்களுக்கு இருக்க வேண்டிய கவலை, பகுத்தறிவு இயக்கத் தலைவருக்கு ஏன் ஏற்படுகிறதோ தெரியவில்லை’