Search This Blog
2.9.09
அர்ச்சகர் - ஜோசியர் சம்பாஷணை
அர்ச்சகர் - ஜோசியர் சம்பாஷணை
அர்ச்சகர்: என்ன ஜோசியரே, கோயிலுக்கு முன்போல் ஆளுகள் வருவதே இல்லையே! குடும்ப நிர்வாகம் கஷ்டமாகவல்லவா இருக்கிறது.
ஜோசியர்: என்ன காரணம்?
அர்: இந்த எழவு எடுத்த சுயமரியாதைதான்.
ஜோ: சுயமரியாதை காரணம் என்றால், சுயமரியாதைக்காரர்கள் சாமி இல்லை பூதம் இல்லை என்று சொல்லி மக்களைக் கோயிலுக்குள் போகக் கூடாது என்று பிரச்சாரம் செய்கின்றார்களே, அதனாலா?
அர்: இல்லை இல்லை. அதற்கெல்லாம் நமக்கு பயமில்லை. இன்னமும் ஆயிரந்தடவை வேண்டுமானாலும் சாமியில்லை; பூதமில்லை என்று சொல்லட்டும்; கோயிலை வேண்டுமானாலும் இடிக்க வேண்டுமென்று சொல்லட்டும். அதனால் நமக்கு ஒன்றும் கெட்டுப் போகாது.
ஜோ: மற்றென்ன காரணம் என்ன சொல்லுகிறீர்கள்?
அர்: கோயில்களுக்கு தேவதாசிகள் வருகின்றதான முக்கிய கைங்கரியத்தைப் பற்றி கண்டபடி பேசி அதை நிறுத்தி விட்டார்களல்லவா, அதனால்தான்.
ஜோ: இதற்கும் பக்திக்கும் சம்பந்தமென்ன? இதனால் எல்லாம் மக்களுக்குக் கடவுள் பக்தி குறைந்து விடுமா?
அர்: கடவுள் பக்தி என்றால் என்ன என்கிறீர்! கடவுள் தான் எங்கும் நிறைந்தவராயிற்றே; இதற்காக ஒரு மனிதன் கோயிலுக்கு வர வேண்டுமா?
ஜோ: மற்றெதற்காக வருகிறார்கள்?
அர்: இரண்டு காரியத்திற்காகத்தானே கோயிலுக்கு வருகின்றார்கள்:
1) தன்னை பக்திமான் என்று பிறர் மதிக்க வேண்டும்.
2) அங்கு வரும் நல்ல பெண்களை ஆண்கள் பார்க்கவும், ஆண்களைப் பெண்கள் பார்க்கவுமான காரியங்களுக்கு என்றாலும், இரண்டாவது விஷயத்திற்குத்தான் அதிகம் பேர் வாலிபர்கள் சற்று ஷோக் பேர் வழிகள் சிறிது வயதானவர்களாயிருந்தாலும் சபலமுடையவர்கள் ஆகியவர்கள் வருவது. இப்படிப்பட்ட ஆண்கள் தாராளமாய் வராவிட்டால் குடும்பப் பெண்களும் வருவதில்லை. ஆக, இப்படிப்பட்ட இரண்டு கூட்டம் வந்தால்தானே காணிக்கை, கட்டளை, இணைப்புத் தரகு ஆகியவை கிடைக்கும். ஆகவே, நமக்குக் கோயிலில் மணியடிப்பதில் என்ன பிரயோசனம்? கோயில் சம்பளமாகிய மாதம் 1-12-0 ரூபாய் சம்பளமா நமக்குக்கட்டும்?
ஜோ: அப்படியா சங்கதி, அவர்கள் இப்படிச் செய்தால் நமக்கு வேறு கிடைக்காதோ?
அர்: என்ன வழி?
ஜோ: நம்ம ஆளுகளே ஒன்று சேர்ந்து நாம் ஆளுக்கு இரண்டு மூன்று வீதம் பெண்டாட்டிகள் கட்டி, நன்றாய் அலங்கரித்து தினம் காலை, மாலையில் கோயிலுக்கு வரும்படி செய்தால் என்ன?
அர்: அப்படிச் செய்வது சாத்தியமாகுமா? அவர்களுக்கு நகை, புடைவை, மினுக்கு கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் சென்று அறிமுகம் செய்து கொள்ளுவது முதலாகிய இதெல்லாம் செய்ய வேண்டாமா? பிறகு நமது வீடுகளிலும் போதிய சவுகரியம் - வீடு, வாசல், கட்டில், படுக்கை முதலிய சவுகரியம் ஆகியவை வேண்டாமா? இவற்றிற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது?
நாம் ஏதோ தாசிகள் செல்வாக்கினால் கோயிலுக்கு வருகின்றவர்களில் ஒன்று இரண்டு ஆள்களைப் பிடித்து சரி பண்ணி, அதுவும் இரகசியம் என்றும் அவசரமென்றும் பயப்படுத்தி 10, 5 பெற்றுக் கொண்டு கஷ்டமில்லாமல் நஷ்டமில்லாமல் சம்பாதிப்பது நலமா? அப்படிக்கின்றி, நம்ம பெண்களையே தாசிபோல் நடக்க ஏற்பாடு செய்து கொள்ள முடியுமா?
ஜோ: என்னமோ கஷ்டகாலம் உங்களுக்கு மாத்திரமல்ல; நமக்கும்கூடத்தான் வந்துவிட்டது.
அர்: உங்களுக்கு என்ன வந்தது?
ஜோ: இப்போது எந்தத் தேவடியா மகன் நம்மிடம் ஜோசியம் பார்க்க வருகிறான்?
பிள்ளைக்கும், பெண்ணுக்கும் பொருத்தம் பார்க்கின்ற வேலையே மிகவும் குறைந்து போய் விட்டது.
அர்: ஏன்?
ஜோ: ஏன் என்ன! அத்துகளே - பெண்ணும் மாப்பிள்ளையுமே பொருத்தம் பார்த்துக் கொள்ளுகின்றன.
அர்: இருந்தாலும் கிரகதோஷம் பார்க்கவாவது வருவார்களே?
ஜோ: அதாவது வந்தாலும் பரவாயில்லை. அதற்குத்தான் எங்கு வருகின்றார்கள்! திருட்டுத் தேவடியா பிள்ளைகள் காய்ச்சல் வந்தால் - தலைவலி வந்தால் உடனே டாக்டர்கள் இடம் போய் விடுகின்றார்கள். நம்மிடம் வருவதே இல்லை. நம்மைக் கண்டால் சிரிக்கின்றார்கள்; என்னடா என்று கேட்டால், சுயமரியாதையடா என்கின்றார்கள்.
அர்: சரி, இவ்வளவு ஆனதற்கப்புறம் எனக்கு ஒன்று தோன்றுகிறது.
ஜோ: என்ன?
அர்: நாமும் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றி மெள்ள மெள்ள உள்ளே இருந்தே அதை ஒழித்து விடுவது! எப்படி என்றால், இப்பொழுது எத்தனையோ தமிழ்ப் பண்டிதர்கள் அப்படித்தான்; அதாவது, நானும் சுயமரியாதைக்காரன் என்று சொல்லிக் கொண்டு அதற்குள் பிரவேசித்து அதை ஒழிக்கப் பார்க்கின்றார்களே அதுபோல்.
ஜோ: அது நல்லவழிதான். நம்முடைய பெரியவாள் பவுத்தர்கள் காலத்திலும் இப்படித்தான் செய்தார்கள். ஆனால், இந்த சு.ம. பயல்கள் (சுயமரியாதைக்காரர்கள்) இது தெரிந்து தான் பு.ம. பயல்களை (புராண மரியாதைக்காரர்களை) அதாவது, பிராமணர்களைச் சேர்ப்பதில்லை என்று தீர்மானித்து விட்டார்களே!
அர்: அதுவும் அப்படியா! அப்படியானால் இந்தப்படி ஏழைகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் இந்த சு.ம.காரன்கள் நாசமாய் நிர்மூலமாய்ப் போகட்டும். நாம் போய் இனி காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவோம்.
-------------- சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது, குடிஅரசு 10.5.1931.
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Why you still stay in 1930. Why not you come to the reality where there is no hatred between the people except the one kindled by politicians
Post a Comment