Search This Blog

28.11.09

சாயிபாபா பாணியில் திருநீறு வருவித்துக் காட்டுதல்



தன்னைத்தானே அவதாரம் என விளம்பரப் படுத்திக் கொள்ளும் சாயிபாபா செய்வது போலவே சாதாரண மந்திரவாதியும் திருநீறு வருவித்துக் காட்டுகிறார்.

அவரது உள்ளங்கை கீழ்நோக்கி இருக்க, கையை இரண்டு மூன்று முறை வட்டவடிவில் அசைக்கிறார். பின் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அவரது விரல் நுனிகளில் இருந்து திருநீறு கொட்டுகிறது. இந்த திருநீற்றின் தரமும் மணமும் கூட சாயிபாபா வழங்கும் திருநீற்றின் தரத்திலேயே உள்ளது. ஏனெனில் இந்த சாமியார் திருநீறு வாங்கும் அதே கடையிலிருந்துதான் இந்த மந்திரவாதியும் திருநீற்றை விலைக்கு வாங்குகிறார்.

தேவையான பொருள்கள்: வாசனை விபூதி, அரிசிச்சோறு வடித்ததில் இருந்து பெறப்பட்ட கஞ்சி, விபூதியை வில்லைகளாக தயாரித்துக் கொள்ள ஒரு தட்டு.

செய்முறை: வாசனைத் திருநீற்றை அரிசிக் கஞ்சி நீரில் கலந்து, சிறு வில்லைகளாக செய்து காயவைக்கவும். இந்த வில்லையைக் கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையில் மறைத்துக் கொள்ளவும். விரைப்பாக வைக்காமல் கையைத் தளர்த்தி வைத்துக் கொள்ள பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.

விபூதி வில்லையைப் பார்வைக்குப் படாமல் விரலிடுக்கில் ஒளித்து வைத்திருக்கும் நிலையிலேயே வணக்கம் சொல்லவும், கை குலுக்கவும், காப்பி குடிக்கவும், சாப்பிடவும், எழுதவும் கூட விரல்களையும் கைகளையும் பயன்படுத்திக் கொள்ளப் பழகி இருக்க வேண்டும். பின் கைகளைச் சுழற்றுங்கள். உள்ளங்கை கீழே போகட்டும். விரைந்த அசைவில் விபூதிக் குளிகையை விரல் நுனிகளுக்குக் கொண்டு வாருங்கள். பொடித்தூளாக நுணுக்குங்கள். பக்தரின் கைகளில் உதிருங்கள்.

மந்திரவாதியின் இதே கைச்சால முறையைச் சாமியார் பயன்படுத்துவதில்லை என்றால் பின் ஏன் அவர் சோதனைக்கு உட்பட மறுக்கிறார்? தனது முறை கைச்சால வித்தை அல்ல என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் மெய்ப்-பிக்க வேண்டாமா? எதைக் குறித்து அவர் அஞ்சுகிறார்? தான் அம்பலப்பட்டு விடுவோம் என்றா? மோசடிக்கு இடம் தராத நிலைகளின் கீழ், அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி, அவரது சக்திகள் அறிவியலுக்கும் மனித புரிதல் திறனுக்கும் அப்பால் பட்டவை என மெய்ப்பிக்க மட்டுமே கைத்திற முறையைத் தாம் கையாளவில்லை என்பதை அவதாரங்கள் முதலில் மெய்ப்பித்தாக வேண்டும்.

இந்த வித்தையை அம்பலப்படுத்த, மனிதர் தம் கைகளை வட்டமாக ஆட்டி, அதே போது தூள் செய்வதற்காக வில்லைகளை விரல்களுக்குக் கொண்டு வரும் நேரம் பார்த்து கையைத் தட்டிவிட்டால் போதும், வில்லை கீழே விழுந்து, அவர் அம்பலப் படுவார்.

கைச்சால வித்தை

கைச்சாலம் என்றால், தம் செய்முறையைப் பிறர் அறிய முடியாத அளவுக்கு மிக வேகமாக வித்தைகளைச் செய்யும் திறன் இந்தக் காரணத்துக்காகத்தான் கைகளையும் உடலையும் அசைக்கிறார்கள். பொருள்களைப் படைத்துக் காட்டுதல், பொருள்களைத் தோற்றுவித்தல், மறைய வைத்தல், ஒன்றை இன்னொன்றாக உருமாற்றுதல் முதலிய சால வித்தைச் செயல் பாட்டை மறைக்க இந்த உடலியக்கம் உதவு கிறது.

---------------நன்றி:- பி.பிரேமானந்து "அறிவியலா, அருஞ்செயலா'

1 comments:

Anonymous said...

கடவுள் இருக்கு என்று சொல்லுகிறவனையும் நம்பலாம், கடவுள் இல்லை என்கிறவைனயும் நம்பலாம், நான் தான் கடவுள் என்கிறவனை எப்பவுமே நம்பக்கூடாது ஏதோ ஒரு திரைப்படத்தில் வந்ததாக ஞாபகம். இதில் மூன்றாவதாக வரும் நபர் தான் இந்த சாய்பாபா. சோம்பேரிகளின் வாழ்க்கை வாழ்கின்றவர்.