Search This Blog

22.9.09

பெரியாரைப் புரிந்து கொள்ளாமல் பெரியார்மேல் பழிபோடுபவர்களின் சிந்தனைக்கு


பெ.சு.மணியின் நீதிக் கட்சியின் திராவிடன் நாளிதழ் -
ஓர் ஆய்வு நூல் சில வரலாற்று உண்மைகள் (2)

14.9.2009 அன்று விடுதலையில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி...

எனவே இன்னும் எவ்வளவோ சொல்லலாம். நீதிக் கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு என்று எடுத்துக் கொண்ட தலைப்பிற்குப் புறத்தே போய் ஜோதிபாபூலே பற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலனுக்குத் தந்தை பெரியார் அரசியல் வானில் அடியெடுத்து வைத்த காலத்திற்கு முற்பட்ட காலத்தவர்களின் பங்களிப்பை திராவிடர் இயக்கத்தவர் எவரும் தந்தை பெரியார் உட்பட மறுக்காத, ஒதுக்காத நிலையில் உள்நோக்கம் கொண்டு நூலை உருவாக்கியிருக்கிறார் என்பதே நம் குற்றச்சாட்டு. அதற்கு அவருடைய அரசியல், ஜாதிப் பின்னணி சான்றாக அமைகிறது.

2005 இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தொகுதி_1 இல் பெ.சு.மணியினுடைய திராவிடன் இதழ் ஆய்வுக் கட்டுரையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நூலின் பதிப்புரையில் மேற்படி நிறுவனம் பிற எந்த இயக்கங்களை விடவும் தமிழகத்தில் இதழ்களின் தாக்கத்தால் மக்களையும் தலைவர்களையும் ஒருங்கிணைத்ததில் திராவிட இயக்க இதழ்களின் பணி முதன்மையானது, முறையாகப் பதிவுக்கு உரியது எனும் கருத்து பதிப்புரையில் கூறப்பட்டுள்ளது. இதைத் பொறுத்துக் கொள்ள முடியாத பெ.சு.மணி அவர்கள் எழுதுகிறார். எவ்வளவு குறும்பு பாருங்கள். பார்ப்பனியப் பூனை பையை விட்டுத் தாவிக் குதிக்கிறது.

இதில் முறையான பதிவுக்கு உரியது என்பது ஏற்கத்தக்கதே. ஆனால் முதன்மையானது என்பது ஏற்கத்தக்கதன்று என்று கூறிவிட்டு, அரசியல் சமூக தளங்களில் நாடெங்கும் இந்திய தேசிய இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும், தலித் இயக்கமும், மற்றும் இஸ்லாம் போன்ற மத வழிப்பட்ட இயக்கங்களும், மக்களையும் தலைவர்களையும் ஒருங்கிணைப்பதில் முன்னோடிகளாகவும், தொடக்கங்களை உருவாக்கியவைகளாகவும் வரலாறு படைத்துள்ளன என்கிறார்.

இதுவரை இருநூற்றாண்டுகளில் வெளி வந்த ஏடுகள், இலக்கியங்களைப் பட்டி-யலிட்டுப் பார்ப்போம். அல்லது அ.மா. முதலானோர் தொகுத்துத் தந்துள்ள பட்டியலைப் பார்ப்போம். திராவிட இயக்க இதழ்கள் எத்தனை எத்தனை, இந்த ஏடுகளின் பயனாய் அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்ட தந்தையானார் பெரியார், அண்ணன் ஆனார் பெரியார், தலைவர் ஆனார் பெரியார் என்று தந்தை பெரியாரே செல்லமாக அழைத்த கலைஞர் கூறினார். எனவே பெ.சு.மணி அவர்கள் இது போன்ற உண்மைத் திரிபில் ஈடுபட்டிருப்பது முறையாகாது எனலாம்.

அடுத்து கருத்தரங்கத் தொடக்க உரையில் பேராசிரியர் மா. இளஞ்செழியன் கூறியுள்ள கருத்தை ஏற்கத்தக்கதன்று என்று மறுக்கிறார் பெ.சு.மணி.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் பணி புரியத் தொடங்குவதற்கு முன்னாலேயே சமதர்ம உணர்வையும் பொது உடைமைக் கருத்துகளையும் முதன் முதலில் பரப்பிவை திராவிட இதழ்களே இது மா. இளஞ்செழியன் கூறிய முதற்கருத்து.

மே தினத்தின் சிறப்புகளை முதன் முதலில் பரப்பியவை திராவிட இதழ்களே. உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்னும் முழக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மே தினத்தின் சிறப்புகளை முதன் முதலில் விளக்கிக் காட்டி தமிழ் நாடெங்கும் அந்த நாளைக் கொண்டாட வைத்தது திராவிட இயக்கங்களின் சாதனைகளில் ஒன்று. இது மா. இளஞ்செழியனின் இரண்டாவது கருத்து.

முதலாளிகள், தொழிலாளிகள், தலைவர்கள், தொண்டர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் முதலிய எத்தகைய நிலையில் இருப்பவர்களையும் தோழர் என்னும் ஒரே அடைமொழியால் அழைத்து, அனைவரும் இந்நாட்டு மன்னர் என்பதை நிலை நாட்டுவது ஒரு முக்கியமான சமதர்ம மரபு. இந்த மரபைத் தமிழகத்தில் முதன் முதலில் நடைமுறைக்குக் கொண்டு வந்தவை சுயமரியாதை இயக்க இதழ்களே.

இந்தக் கருத்துகளை மீண்டும், மீண்டும் படித்துப் பாருங்கள். இந்தக் கருத்துகளை பெ.சு.-மணி மேற்கூறப் பெற்றுள்ள கருத்து முற்றிலும் நிராகரிக்கத் தக்கதாகும்-என்கிறார். மேலும் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று வரலாற்றுப் புகழ் கொண்ட பொதுவுடைமை இயக்கச் சிற்பி தோழர் ம. சிங்கார வேலர் (1860_1946) பி.ஏ.,பி.எல்., அவர்களைச் சற்றும் நினைவில் கொள்ளாமல் கூறப்பெற்ற கருத்து என்கிறார் பெ.சு.மணி;.

பெ.சு. மணியின் கருத்துச் சரியானது-தானா?

பெ.சு.மணியின் கருத்து முறையானதா?

சிங்காரவேலரின் சிறப்புகளையோ பெருமைகளையோ திராவிட இயக்கம் இதுநாள் வரையில் பெருமைப்படுத்தி வந்திருக்கிறதே தவிர சிறுமைப்படுத்தியதில்லை. 1860 இல் பிறந்து முதல் கலப்புத் திருமணம் செய்துகொண்டது வரை, எனது கொள்கைக்கும் எனக்கும் மூத்தவர் என்று பெரியாரே சொல்லியது மறைக்கப்படவோ, மறுக்கப்படவோ இல்லை.

ராஜாஜி கூட சுதந்திரப் பித்தர், அரசியல் யோக்கியர் என்று சொல்லிப் பெருமை கொண்டார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்

போர்க்குணம் மிகுந்த முன்னோடி

பொதுவுடைமைக்கு ஓடுக அவர் பின்னாடி

என்று புகழ்ந்து பாராட்டினார் என்பதையும் அறிவோம். 1923 மே மாதம் முதல் தேதியில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள கடற்கரையில் இந்தியாவிலேயே செங்கொடியை ஏற்றினார் என்பதும் கிருஷ்ணசாமி சர்மா தலைமையில் முதல் மே தின விழா நடைபெற்றது எனும் வரலாறு இதுவரையில் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள உண்மை, விடுதலையில் ஒருபோதும் மறைக்கப்பட்டதில்லை. ஒவ்வோர் ஆண்டும் இதனைஅனைத்து திராவிடர் கழகத்தவர்களும் வலியுறுத்திக் கூறி வந்துள்ளனர்.

தொடக்கவுரையில் பேராசிரியர் மா. இளஞ்செழியன் கூறியது என்ன? மே தினத்தின் சிறப்புகளை முதன் முதலில் விளக்கிக் காட்டி, தமிழ் நாடெங்கும்அந்த நாளைக் கொண்டாட வைத்தது திராவிட இதழ்களின் சாதனைகளில் ஒன்று.

திராவிடர் கழகமாவதற்கு முன்னர் சுயமரியாதை இயக்கமாக இருந்த காலத்தில் அந்நாளைக் கொண்டாட வைத்தவர் பெரியார்தான் திராவிட இயக்கம்தான் திராவிட இதழ்கள்தாம்.

14.5.1933 இல் குடிஅரசில் தந்தை பெரியாரின் அறிக்கை வெளிவந்தது. அது நம் கருத்துக்கு முதல் ஆதாரம்.

இந்த வருஷம் பாரிஸ் பட்டணம் இந்நாளைத் தொழிலாளர் விடுமுறை நாளாகக் கொண்டாடியது. சமதர்ம நாடாகிய சோவியத் ரஷ்யாவில் 16 கோடி ஆண், பெண் குழந்தைகள் அடங்கலாக யாவரும் ரஷ்ய தேசம் முழுமையும் இத்தினத்தைக் கொண்டாடினார்கள்.



சமதர்மிகளாகிய நாமும் (கவனிக்க; பெரியார் தன்னைச் சமதர்மி என்றே அதாவது ஷிஷீநீவீணீறீவீ என்றே அழைத்துக் கொள்கிறார்.) இத்தினத்தைக் கவனிக்காமலிருப்பது பெருங்குறை யேயாகும். இம்மாதம் முதல் நாள் கடந்துவிட்ட போதிலும் வருகிற ஞாயிற்றுக் கிழமை மே மாதம் 21ஆம் தேதி சுயமரியாதை சமதர்ம சபைகள் யாவும், சமதர்மக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சங்கங்கள் யாவும், அத்தினத்தைப் பெருந்தினமாகக் கொண்டாடல் முக்கியமாகும். அன்று காலையிலும் மாலையிலும் அந்தந்த கிராமங்களிலும், பட்டணங்களிலும் சமதர்மிகள் ஊர்வலம், சமதர்ம சங்கீதங்களுடன் வருவர். ஆங்காங்கு கூட்டங்கள் கூட்டி சமதர்மம் இன்னதென்றும் தொழிலாளருக்கும் விவசாயிகளுக்கும் விளக்கமுறச் செய்யலாம். துர்ப்பழக்க வழக்கங்களை ஒழிக்குமாறு பல தீர்மானங்களைச் செய்யலாம். இவ்விதமாக ஒழுங்காகவும், நியாய முறைப்படி கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1933 இல் மே தினத்தை இப்படிப் பரவலாக்கிய தந்தை பெரியாருடையது இல்லையா? இதில் பெருமை கொள்வதில் என்ன தவறு?

1935 ஏப்ரல் 28 இல் குடி அரசில் பெரியாரின் அறிக்கை.

இந்த வருஷத்தில் மேதினத்தை மே மாதம் முதல் தேதியில் தமிழ் நாட்டில் ஒவ்-வொரு ஜில்லாவிலும் உள்ள நகரங்கள் தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுகிறேன். தேசம், மதம், ஜாதி என்கின்ற தேசிய உணர்ச்சிகளை மறந்து உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமூகமாய் ஒன்றுபட்டு எல்லா தேச, மத, ஜாதி மக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும், சமசந்தர்ப்பம் கிடைக்கும்படி கொண்டாட வேண்டும் என்றும், தொழிலாளர் சமதர்ம ராஜ்-யம் ஏற்படவேண்டும் என்றும் ஒரே அபிப்பிராயம் ஏற்படும்படி தொழிலாளர்களிடையில் பிரச்சாரம் செய்யவும் வேறு சாதகங்கள் பெறவும் இம் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்றும்தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்ய தர வர்க்கத்தினரை மட்டும் மய்யப்படுத்தாமல் தொழிலாளர் விவசாயப் பெருந்திரள் மக்களை இது மய்யப்படுத்துவதாகாதா என்பதற்கு பெ.சு. மணி அவர்கள் பதில் சொல்லட்டும்

தஞ்சை மாவட்டத்தில் 26.11.1944 முதல் 30.11.1944 முடிய பெரியார் சொற்பொழிவு ஆற்றினார். குடிஅரசு இதழில் 9-.12.1944 இல் வெளியானது. இன்று பெ.சு.மணி கூறுவது போல அன்றும் துவேஷத்தை விதைத்த விஷ விவசாயிகள் இருந்திருக்கவேண்டும்.

அதனால்தான் அன்றே பெரியார் குறிப்பிட்டார். சிலர் நம்மீது குற்றஞ்சாட்டு-கிறார்கள், நாம் பொது உடைமைக்கு விரோதிகள் என்று. இவர்களுக்குத் தெரியுமா, இந்த நாட்டில் யார் பொதுவுடைமைத் தத்துவத்தை முதலில் பேசிய-தென்று.

14.11.1935 இல் ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்தில் ஒப்புக்கொள்-ளப்பட்ட என்னுடைய 15 திட்டங்களை இவர்கள் படித்துப் பார்க்கவேண்டும்; பிறகு கூறட்டும்.இவ்வளவு அரிய பெரிய திட்டங்களுடைய பொதுவுடைமைக் கட்சி ஏதாவது உண்டா என்பதை.

திராவிடன் நாளிதழ் ஆய்வு முழுக்க, முழுக்கத் திராவிடனின் சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கை எதிர்ப்பு, ஜாதிவேற்றுமை ஒழிப்பு முதலிய செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்காது, பாரதியார், ராஜாஜி முதலானவர்களுக்கு மட்டுமே முதன்மை அளிக்கும் வகையில் ஒருதலைப்பட்சமான கண்ணோட்டத்தில் படிக்கப்பட்ட அல்லது படைக்கப் பட்ட நூல் எனலாம்.

தந்தை பெரியாரின் ஈடு இணையற்ற உழைப்பினால் தன்மான உணர்ச்சியையும், சமதர்ம உணர்ச்சியையும் தமிழர் அனைவரும் பெற்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. மனிதனுக்குப் பிறப்புரிமை தன்மானந்தான் என அறிவித்தவர் அவர். ஜீவப்பிராணிகளில் தன் இனத்தையே கொடுமைப் படுத்துகிற, அடிமைப்படுத்துகிற, சுரண்டுகிற ஜீவன் மனிதன் மட்டுமே என்று விளக்கியவர்.

ஒவ்வொரு துறையிலும் அமைப்பிலும் உள்ள பேதமே மனிதனைச் சதாகாலமும் கவலை உள்ளவனாக ஆக்குகிறது. இதை மாற்றவேண்டும் என உணர்ந்து உணர்த்தியவர் அவர்.

மானிடத்தின் கவலையைத் தீர்க்கும் மருந்து சமதர்மச் சமுதாய அமைப்புதான் என்பதைத் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் சென்று 1927 முதல் 1934 வரை இடைவிடாது முழக்கியவர். 1933 இல் தமிழகத்தில் மட்டுமே 400 சமதர்மச் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட அவரே மூலக் காரணமாக விளங்கினார்.

பெரியார் போன்ற பிற்போக்குப் பார்ப்பனத் துவேஷிகளால் தமிழகத்தில் பொதுவுடைமை வளரவில்லை எனத் தவறாக பெரியாரை உணராமல், பெரியாரின் சாதனையைப் புரிந்து கொள்ளாமல் பெரியார்மேல் பழிபோடும் கூட்டத்தைச் சேர்ந்தவராகவே பெ.சு.மணி விளங்குகிறார். 4.10.1931 இல் தன் குடிஅரசு ஏட்டில் பொதுவுடைமைக் கட்சியின் அறிக்கையைத் தமிழில் வெளியிட்டுத் தமிழர்க்கு அறிமுகம் செய்தவர் பெரியார்.

தம் வாழ்நாளின் இறுதி வரையிலும் பொதுவுடைமை ஒன்றே உலகை உய்விக்கும் சரியான வழி என்பதைத் தந்தை பெரியார் பறை சாற்றிக் கொண்டிருந்தார். இதை பெ.சு. மணி போன்றவர்களால் மறுக்க முடியுமா?

பெரியாரியம் மார்க்சியத்தோடு முரண்படவில்லை. மாறாக இதற்கு வழி, வகை செய்து தருகிறது. எப்படி? மார்க்சியத்தின் ஒரு கூறாக விளங்கும் நாத்திகத்தைப் பட்டிதொட்டிகளிலெல்லாம் பாமர மக்களிடம் பரப்பிய பெருமை பெரியாரை மட்டுமே சாரும். பெண்ணடிமைக்கு எதிரான பெரியாரின் கோட்பாடுகள் என்ன, மார்க்சியத்துக்கு முரண்பாடானவை?

சுருக்கமாகச் சொல்லப் போனால், பெரியார், திராவிட இயக்க இதழ்கள், இந்தியாவில் நிலவும் பிளவுபட்ட சமூக-அமைப்பால் பொதுவுடைமை மலரப் பெரியார் நடத்திய சிந்தாந்தப் போராட்டமே. உண்மையான மார்க்சியர்கள் சீர் திருத்தங்களைப் பெறுவதிலும், பயன்படுத்திக் கொள்வதிலும் உள்ள எந்த ஒரு சாத்தியத்தையும் இழந்துவிடாமல் கடுமையாக உழைக்கின்றனர். அவற்றைக் குறை கூறாது ஆதரிக்கின்றனர். அவற்றில் ஏற்படும் ஒவ்வோர் விளைவையும் சீர்திருத்த வாதத்திற்கு அப்பாற்பட்டதாக வளர்த்தெடுப்பதில் உடல் வருந்த உழைக்கின்றனர். இவ்வாறு லெனின் குறிப்பிடும் கருத்துப்படி பெரியார் அவர்களின் சீர்திருத்தப் போக்கை அது மக்களிடம் ஏற்படுத்தியுள்ள மன நிலையை உண்டு செரித்து அதை உரமாக்கித்தான் மார்க்சியம் வளர்ச்சியினைத் தமிழகத்தில் பெற்றுள்ளது.

(நிறைவு)


-----------------------நன்றி:-"விடுதலை" 21,22-9-2009


2 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

//தம் வாழ்நாளின் இறுதி வரையிலும் பொதுவுடைமை ஒன்றே உலகை உய்விக்கும் சரியான வழி என்பதைத் தந்தை பெரியார் பறை சாற்றிக் கொண்டிருந்தார்.//

வழிமொழிகிறேன்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி